search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hidden camera"

    • ரகசிய கேமரா பொருத்தியதாக வீட்டு உரிமையாளர் மகன் கைது.
    • வீட்டில் இருந்த கனெக்டெட் சாதனங்களைச் சரிபார்த்துள்ளார்.

    டெல்லி ஷகர்பூர் பகுதியில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் பெண் ஒருவரின் படுக்கையறை மற்றும் குளியலறையில் கேமராக்களை ரகசியமாக பொருத்தியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

    அந்தப் பெண் டெல்லியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கரண் அந்த பெண் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகன். தான் வசித்து வந்த வீட்டு சாதனங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கேமராக்களை அந்த பெண் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து விசாரணை செய்த காவல் துறையினர் வீட்டு உரிமையாளர் மகன் கரணை கைது செய்தனர்.

    யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் பெண், தனது வாட்ஸ்அப் கணக்கில் வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டைக் கண்டு சந்தேகமடைந்தார். இதைத் தொடர்ந்து தன் வீட்டில் இருந்த கனெக்டெட் சாதனங்களைச் சரிபார்த்துள்ளார்.

    அப்போது, அறியப்படாத லேப்டாப்பில் இருந்து அவளது கணக்கு பயன்படுத்தப்பட்டதைக் கண்டாள். இது அவளது குடியிருப்பைத் தேடத் தூண்டியது, அவளது குளியலறையின் பல்ப் ஹோல்டருக்குள் ஸ்பை கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டார். அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினார்கள். சோதனையின் போது, அவரது படுக்கையறையின் பல்ப் ஹோல்டரிலும் கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

    விசாரணையில், மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த பெண் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, கேமராக்களை பொருத்தியதை கரண் ஒப்புக்கொண்டார். மேலும் கரண் வசமிருந்த ஒரு ஸ்பை கேமரா மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் அடங்கிய இரண்டு லேப்டாப்களை போலீசார் கைப்பற்றினர்.

    • விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாணவிகள் கழிவறையில் வேறு கேமரா பொருத்தி இருக்கிறார்களோ என்பதால் கழிவறைக்கு செல்ல பயமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் மண்டலம், குட்ல வல்லேருவில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர மந்திரி கொள்ளு ரவீந்திரன், கலெக்டர் பாலாஜி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கங்காதரராவ் ஆகியோர் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    கல்லூரி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ரகசிய வீடியோ கேமரா பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரகசிய கேமரா பொருத்தியதாக பிரகாசம் மாவட்டம், புல்லல செருவு, அடுத்த கனிகரியை சேர்ந்த பி.டெக் இறுதி ஆண்டு மாணவரும் அவருக்கு உதவி செய்ததாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.


    அவர்களிடம் இருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது அதில் 300-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் நீங்களா கேமராக்களை பொருத்தினீர்கள் என கிண்டல் அடித்து கோஷமிட்டனர்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கழிவறையில் வேறு கேமரா பொருத்தி இருக்கிறார்களோ என்பதால் கழிவறைக்கு செல்ல பயமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவிகளின் பெற்றோர்களுடன் கல்லூரி முழுவதும் அதே நவீன கேமராக்களை கொண்டு பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் எந்த கேமராக்களும் பொருத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு நிம்மதி பெருமூச்சுடன் விடுதிக்கு சென்றனர்.

    • கல்லூரியில் நடந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது.

    ஆந்திர பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவிகள் விடுதி கழிவறையில் (Washroom) ரகசிய கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேமராவில் மாணவிகள் வீடியோக்கள் ரகசியமாக பதிவாகி இருந்ததாகவும், பின்னர் அவை கசிந்து சில மாணவர்களுக்கு விற்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விடுதி கழிவறையில் (Washroom) இருந்த கேமராவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது. தங்களுக்கு நீதி வேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக, பிடெக் இறுதியாண்டு படிக்கும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

    பெண்கள் விடுதி கழிவறையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்ததாகவும், சில மாணவர்கள் இந்த வீடியோக்களை கைதான மாணவனிடம் இருந்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இச்சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் கழிவறைக்கு செல்லவே பயப்படுகின்றன. அங்கே செல்வதையே தவிர்த்து விடுகின்றன. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பது யார்? என்பதுதான் மாணவிகளின் கேள்வியாக உள்ளது.

    • பக்ஸீ'ஸ் பெட்ரோல் நிலையங்களின் ஒப்பனை அறைகளின் தூய்மை பிரபலமானது
    • சைபர் செக்யூரிட்டி துறை அதிகாரிக்கு ப்ளக் பாயின்டில் ஏதோ வித்தியாசமாக இருப்பது தெரிந்தது

    அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள க்ளூட் (Clute) நகரில் 1982ல் தொடங்கப்பட்டு பல மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட பல்பொருள் அங்காடி நிறுவனம், புகழ் பெற்ற பக்ஸீ'ஸ் (Buc-ee's). இந்நிறுவனம் மின்சார வாகன சார்ஜர்கள், பெட்ரோல் நிலையங்கள், மளிகை கடைகள், குளியலறை சாதனங்கள், உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் என பல்வேறு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    பக்ஸீ'ஸ் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் பெட்ரோல் நிலையங்களில் உள்ள ஒப்பனை அறைகளின் சுத்தமும், பராமரிக்கப்படும் முறையும், தூய்மையும் உலக புகழ் வாய்ந்தது. இதன் நிறுவனர் ஆர்ச் ஆப்லின் (Arch Aplin).

    இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் டான் வாசெக் (Don Wasek). இவரது மகன், 28 வயதான மிட்செல் வாசெக் (Mitchell Wasek).

    டான் வாசெக்கிற்கு டெக்ஸாஸ் மாநிலத்தில் ட்ராவிஸ் எனும் ஏரிக்கரையில் மிக பெரிய பங்களா உள்ளது. அங்கு ஒரு அழைப்பின் பேரில் ஆண்கள் பெண்கள் நிறைந்த ஒரு குழு சென்றது. அவர்களை மிட்செல் வாசெக் உபசரித்தார். அவர்கள் அங்கு பல இடங்களை சுற்றி பார்த்தனர்.

    அக்குழுவில் ராணுவத்தில் சைபர் செக்யூரிட்டி துறையில் பணிபுரியும் ஒருவரும் உடனிருந்தார். தனது செல்போனை சார்ஜ் செய்ய ப்ளக் பாய்ன்ட்டுகளை தேடிய அவருக்கு அதில் வித்தியாசமாக ஏதோ ஒன்று தெரிந்தது. அவர் அதனை ஆய்வு செய்த போது அதிர்ச்சியடைந்தார். அதன் வழியாக குளியலறையில் ஒரு கேமிரா மறைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. 

    இதனையடுத்து அவர், அந்த கேமிராவை யாருக்கும் தெரியாமல் தன்னுடன் எடுத்து சென்றார். அதனை வெளியில் சென்று ஆய்வகத்தில் பரிசோதனை செய்த போது அதில் மைக்ரோ கார்டு எனப்படும் வீடியோக்களை பதிவு செய்து சேமித்து வைக்கும் சாதனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் ஆய்வு செய்ததில் அவரும் அவருடன் வந்த பெண் உட்பட அந்த இல்லத்திலும், டல்லாஸ் நகரில் மிட்செல்லின் வீட்டிலும் எடுக்கப்பட்ட 13க்கும் மேற்பட்ட விருந்தினர்களின் குளியலறை, படுக்கையறை மற்றும் ஒப்பனை அறை நடவடிக்கைகள் குறித்த காட்சிகள் இருந்தன.

    இதையடுத்து, டல்லாஸ் நகர காவல்துறையிடம் இது குறித்து புகார அளிக்கப்பட்டது. அவர்கள் கேமிரா மற்றும் மைக்ரோகார்டு ஆகியவற்றை மீண்டும் ஆய்வு செய்தனர். அதில் 2021லிருந்து பல முறை இத்தகைய சம்பவங்களை மிட்செல் படம் பிடித்து பதிவு செய்துள்ளார் என தெரிய வந்தது.

    இதனையடுத்து, மிட்செல்லை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது அந்நாட்டு சட்டப்படி 28 குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தூய்மைக்கு பெயர் பெற்ற நிறுவனத்தின் அதிபரின் மகன் ஈடுபட்ட கீழ்தரமான செயல் டெக்ஸாஸில் பரபரப்பாக விமர்சிக்கப்படுகிறது.

    ×