என் மலர்
நீங்கள் தேடியது "hindi"
- தமிழ்நாடு வானிலை மையத்தின் இணையதளத்தில் புதிதாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது
- தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது ஒன்றிய அரசு
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தில் இந்தி சேர்க்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வானிலை அறிக்கை ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மும்மொழிக்கொள்கை குறித்து சர்ச்சையாகவுள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம்பெறும். இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது ஒன்றிய அரசு. இந்த செயல் ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது.
இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. ஆனால், வலுக்கட்டாயமாக திணிப்பதைத்தான் எதிர்க்கின்றோம். எந்தவகையிலாவது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ள ஒன்றிய அரசுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
- தமிழ்நாடு வானிலை மையத்தின் இணையதளத்தில் புதிதாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவின் வானிலை மைய இணைய பக்கத்தில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
மும்மொழி கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு இந்தி திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
- வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை
- வடஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா?
இந்தியை தவிர வேறுமொழி தெரியாதவர்கள், எங்களை 3 மொழிகள் கற்றுக் கொள்ள சொல்கிறார்கள் என்று திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய கலாநிதி வீராசாமி, "நாடு முழுவதும் உள்ள வறுமையின் நிலையை நீங்கள் கணக்கிட்டு பார்த்தால் தென்னிந்திய மாநிலங்களின் வறுமை குறியீடு 0.5 முதல் 2% வரை தான் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் பல ஆண்டுகால முயற்சியினால் வறுமை ஒழிக்கப்ட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வறுமை குறியீடு 9 -10% ஆகவும் பீகாரில் 20% ஆகவும் உத்தரபிரதேசத்தில் 15 -20% ஆகவும் உள்ளது.
தமிழ்நாட்டின் கடந்த 50 ஆண்டுகளை எடுத்து பாருங்கள். 1967 பேரறிஞர் அண்ணா ஆட்சியில் இருந்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியும் எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி தான் செயல்பட்டு வருகிறது.
நாங்கள் வறுமை என்று பேசுவது நீங்கள் சொல்வது போல வருடத்திற்கு ரூ.27,000 சம்பாதிப்பவர்கள் பற்றி அல்ல. வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மாதா மாதம் ரூ.1,000 வழங்குகிறோம்.
அரசுப்பள்ளியில் இருந்து கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குகிறோம். இதனால் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் விகிதம் (GER) 25%. ஆனால் தமிழ்நாட்டில் தற்போதைய GER விகிதம் 52%.
10 ஆண்டுகளில் ரூ. 8 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது தமிழ்நாடு, ஆனால் எங்களுக்கு திரும்ப கிடைத்தது ரூ. 2.4 லட்சம் கோடிதான்.
தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது கூட மத்திய அரசு பேரிடர் நிதி வழங்குவதில்லை.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் ரூ.2,157 கோடி கல்வி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு மிரட்டுகிறது.
எங்களுக்கு அந்த ரூ.2,157 கோடி வேண்டாம் என்றும் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தால் கூட மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எங்களது முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 3 மொழி கொள்கையை அமல்படுத்தியதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படி இருக்க வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை. வடஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா?
அவர்கள் 3 மொழியை கற்பதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. ஆனால் தென்னிந்திய மக்கள் 3 மொழிகளை கற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
இருமொழி கொள்கை தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளது. சுதந்திரம் அடையும்போது இந்தியாவின் ஏழ்மையான 3 ஆவது மாநிலத்தில் இருந்து தற்போது 2 ஆவது பணக்கார மாநிலமாக உயர்ந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
- முதலில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- டெல்லியை தொடர்பு கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சி செய்கிறது என தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. சில மாநிலங்களும் பிற மொழிகள் திணிக்கப்படுவதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
முதலில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் அதேவேளையில் இந்திய கற்றுக் கொள்வது தேவையானதாகும். டெல்லியை தொடர்பு கொள்ள பயனுள்ளதாக இருக்கும். வாழ்வாதாரத்திற்காக மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளலாம். இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழியாகும்.
வாழ்வாதாரத்திற்காக எத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். தாய்மொழியை நாம் மறந்து விடக்கூடாது. மொழிகள் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும்தான். அதிக மொழிகளை கற்றுக்கொள்ளவது சிறந்தது. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இந்தி தேசிய மொழி கிடையாது. இந்தி, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை
- மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் மத்திய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. அருண் நேரு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒன்றிய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்பது PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (முன்னர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்) மூலம் மீண்டும் தெளிவாகிறது.
திருச்சிராப்பள்ளியில் உள்ள PM Shri கேந்திரிய வித்யாலயா எண் 2, 2025-26 கல்வியாண்டிற்கான ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்காக நேர்காணல் அறிவிப்பை 16-03-2025 அன்று வெளியிட்டுள்ளது.
இதில்: PGT (பட்டதாரி ஆசிரியர்): பொருளாதாரம், ஆங்கிலம்
TGT (பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்): இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்
PRT (முதன்மை ஆசிரியர்): பொது மற்றும் இசைபோன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆனால், தமிழ் மொழிக்கு எந்த பணியிடமும் குறிப்பிடப்படவில்லை. இது தமிழ்நாட்டின் மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கற்பிக்க விருப்பமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், RTI தகவல்களின்படி, தமிழ் ஆசிரியர்கள் இல்லை, ஆனால் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த பள்ளிகள் தற்போது PM Shri என்ற பெயரில் மறுபெயரிடப்பட்டு, தேசிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) மற்றும் அதன் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், இந்த பள்ளிகள் இன்னும் இருமொழி கொள்கையை (இந்தி மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றுகின்றன, தமிழ்நாட்டின் மொழியான தமிழை கூட அவர்கள் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால் இப்பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது.
சமீபத்திய நிகழ்வுகளில் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்கள் NEP 2020 வலியுறுத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றி செயல்படும் PM Shri பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடவில்லை என்ற காரணத்தால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (SSA) மூலம் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 2000 கோடி அளவிலான நிதியை நிறுத்தி வைத்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இது தமிழ்நாட்டின் மொழியியல் அடையாளத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் புறக்கணிப்பதாகும். தமிழ்நாடு இரு மொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றுகிறது, மற்றும் இந்தியை திணிக்கும் முயற்சியாக NEP 2020-ஐ எதிர்க்கிறது. ஆனால் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் ஒன்றிய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் பண்பாட்டையும் மொழியையும் மதிக்க வேண்டும். PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் SSA நிதிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை?
- தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?
ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், "இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?
அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன வகையான தர்க்கம்?" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பவன் கல்யாணின் கருத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.
அவரது பதிவில், "இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்' என்பது அந்த மொழி மீதான வெறுப்பல்ல, 'எங்கள் தாய்மொழியையும், நம் தாயையும் பெருமையுடன் பாதுகாப்போம்' என்பதாகும். இதை யாராவது பவன் கல்யாணிடம் சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவிற்கு 2 மொழி மட்டுமின்றி, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை.
- சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
ஐதராபாத்:
ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல் மந்திரியும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பேசியதாவது:
இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். தமிழ்நாட்டிலும் எங்களுக்கு அரசியல் ஆதரவாளர்கள் உள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலும் எங்கள் கட்சிக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.
தமிழ் மக்கள் எனது தெலுங்கு உரைகளைக் கேட்கிறார்கள் என்பதை அறிந்தேன். தமிழ் மக்கள் காட்டிய அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?
அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்-இது என்ன வகையான தர்க்கம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பவன் கல்யாண் இந்தி, தமிழ் மராத்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார்.
- மகாராஷ்டிராவில் ஏர்டெல் பெண் ஊழியர் மராத்தி மொழியில் பேச மறுத்து இந்தியில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
- மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தேவையில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியது சர்ச்சையானது.
மகாராஷ்டிராவில் இந்தி Vs மராத்தி என்ற பிரச்சனை வெடித்துள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனிடையே மகாராஷ்டிராவில் ஏர்டெல் பெண் ஊழியர் மராத்தி மொழியில் பேச மறுத்து இந்தியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி அம்மாநிலத்தில் மொழி பிரச்சனையை பெரிதுபடுத்தி உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டசபையில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், "அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஏற்கனவே மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படுகின்றன. இருப்பினும், சில வேளாண் பொறியியல் தொடர்பான சில தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது தான் இந்தப் பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் மராத்தியில் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது. மராத்தியில் பொறியியல் படிப்புகளை நடத்த மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த தேர்வுகள் இனிமேல் மராத்தியிலும் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
- மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பர வீடியோ வைரலாகியுள்ளது.
- தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளது.
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்மொழி கொள்கையின் மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் தெற்கு Vs வடக்கு மொழி பிரச்சனையை மையப்படுத்தி கேட்பரி டைரி மில்க் சாக்லேட் நிறுவனம் இந்தியில் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த விளம்பரத்தில், இந்தி பேசும் பெண்கள் மொட்டைமாடியில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களது பக்கத்து வீட்டில் குடியேறியுள்ள சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் அவர்களுடன் இணைகிறார். அப்போது அந்த பெண்கள் இந்தியில் பேசுவதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் பெண் திணறுகிறார். இதனை உணர்ந்த ஒரு இந்தி பேசும் பெண் தனது தெரிந்த ஆங்கிலத்தில் பேசி உரையாடுகிறாள்.
மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பரம் வெளியாகி வைரலாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. 1967 இல் முதல்வராக பொறுப்பேற்ற அண்ணாதுரை, 1968 ஆம் ஆண்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார்.
- மும்மொழிக்கொள்கை என்பதை அரசின் கொள்கையாக, இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீது திணிப்பது கூடாது.
- இந்தியை படித்தால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெற முடியும் என்ற மாயத்தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இருமொழிக்கொள்கையே போதுமானது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருமொழிக் கொள்கையில் இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் ஏற்புடையதாக இருக்கும்.
ஆகவே, மும்மொழிக்கொள்கை என்பதை அரசின் கொள்கையாக, இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீது திணிப்பது கூடாது என்பது தான் நம்முடைய தமிழ்நாட்டு அரசின், தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு ஆகும்.
ஆனால், பா.ஜ.க.வை சார்ந்தவர்கள் இந்தியை படித்தால் உடனே வேலைவாய்ப்பு கிடைத்துவிடும், இந்தியை படித்தால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெற முடியும் என்ற மாயத்தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.
இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தி பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்படி இருக்க ஒரே தேசம் ஒரே மொழி என்கிற நிலையை எதிர்காலத்தில் உருவாக்குகிற உள்நோக்கத்தோடு பா.ஜ.க.வினர், பா.ஜ.க. ஆட்சியாளர்கள் செய்வதை அம்பலப்படுத்துகிறோம். அதை எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
- ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி அன்று மாலை 6மணியளவில் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் வாலிபாளையம் யூனியன் மில் சாலை ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6மணியளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மற்றும் தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா சிறப்புரையாற்றுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை 3-ந்தேதி இந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும் என்கின்ற தலைப்பில் தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வீடு வீடாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கவுள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமெனவும், நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
- தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.

பரமக்குடி நகர் பகுதியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி தலைமையில் இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் தி.மு.க. நகர செயலாளர்கள் சேது.கருணாநிதி, ஜீவரத்தினம் ஆகியோர் தலைமையில் 36 வார்டுகளில் இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. அரசு கொண்டு வந்த தீர்மானங்கள் மற்றும் இந்தி திணிப்பால் தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் தெருக்களில் தி.மு.க.வினர் கொடிகளை ஏந்தி தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் செந்தில் செல்வானந்த் மற்றும் கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
போகலூர் மேற்கு ஒன்றியம் பொட்டிதட்டி கிராம சாலையில் போக லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் அவைத் தலைவர் அப்பாஸ் கனி பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் முதலூர் ரவி, மஞ்சூர் கனகராஜ், கலைச்செல்வி முன்னிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உறுப்பினர் தனிக்கொடி, ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பங்கேற்று நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்.