search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "income tax raid"

    • கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்களை திரட்டி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • தூத்துக்குடியில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிறிய ஒப்பந்ததாரர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    சென்னை:

    தமிழக அரசின் மின் வாரியத்தின் கீழ் இயங்கி வரும் மேட்டூர், தூத்துக்குடி, வட சென்னை அனல்மின் நிலையங்களுக்கு தேவையான கருவிகளை வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரின்பேரில் வருமானவரி துறையினர் நேற்று அதிரடி சோதனையை தொடங்கினார்கள். சென்னையை சேர்ந்த 3 நிறுவனங்கள் மற்றும் பொன்னேரியை மையமாக கொண்டு, செயல்பட்ட ஒரு நிறுவனம் என மொத்தம் 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த 4 நிறுவனங்களின் மூலமாகத்தான் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான கண்வேயர் பெல்ட், கேபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போலியான ரசீதுகளை போட்டு சப்ளை செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமானவரி சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். இதன் அடிப்படையிலேயே இன்று 40 இடங்களிலும் 2-வது நாளாக வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மகேந்திரா ஜெயின் என்பவரின் வீட்டிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனை காலை 11 மணி அளவில் நிறைவு பெற்றது. இதுபோன்று மேலும் சில இடங்களிலும் சோதனை முடிவுக்கு வந்துள்ளது.

    வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களிலும் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது மின் வாரியத்தின் மூலமாக அனல் மின் நிலையங்களுக்கு வாங்கப்பட்ட பொருட்கள் என்னென்ன? அவைகள் எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டுள்ளன? என்பது பற்றிய தகவல்களையும் 2-வது நாள் சோதனையின்போது அதிகாரிகள் திரட்டியுள்ளனர்.

    இப்படி கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்களை திரட்டி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடியில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிறிய ஒப்பந்ததாரர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்தும் பல்வேறு ஆவணங்களை பெற்றனர். அனல் மின்நிலையத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். இந்த விசாரணை நேற்று மாலை வரை நீடித்தது.

    இந்நிலையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இன்று 2-வது நாளாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக இன்று 11 பேர் கொண்ட அதிகாரிகள் கார் மூலம் வந்தனர். அனல் மின்நிலையத்திற்கு சென்ற அவர்கள் துணை ஒப்பந்ததாரர்களை வரவழைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்
    • ஏற்கனவே 4 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்டியுள்ளார்

    யூடியூப் மூலமாக பல லட்சங்கள் சம்பாதிப்பவர்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் தஸ்லீம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.24 லட்சம் ரொக்கம் கிடைத்திருக்கிறது.

    இந்த சேனல் நடத்தி வருபவரான தஸ்லீம், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். பல ஆண்டுகளாக யூடியூப் சேனலை நடத்தி, அவர் கிட்டத்தட்ட ரூ.1 கோடிக்கும் மேல் சம்பாதித்திருக்கிறார். தஸ்லீம் சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், அவர் குடும்பம் இதனை மறுத்துள்ளது.

    இதுகுறித்து தஸ்லீமின் சகோதரர் ஃபெரோஸ் கூறும்போது, ''டிரேடிங் ஹப் 3.0 (Trading Hub 3.0) என்ற யூடியூப் கணக்கை நிர்வகித்து வரும் தஸ்லீம், ஷேர் மார்க்கெட் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது வருமானத்திற்கு அவர் வருமான வரியும் செலுத்தி வருகிறார்.

    மொத்த யூடியூப் வருமானமாக கிடைத்த ரூ.1.2 கோடி வருமானத்திற்கு ஏற்கனவே ரூ.4 லட்சம் வரி செலுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறோம். வேறு எந்த தவறான செயலும் செய்யவில்லை. சேனலில் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதுதான் உண்மை. இந்த ரெய்டு ஒரு திட்டமிடப்பட்ட சதி."

    இவ்வாறு ஃபெரோஸ் கூறியிருக்கிறார்.

    தனது மகன் தவறாக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாக தஸ்லிமின் தாய் கூறியுள்ளார்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது.
    • வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    தூத்துக்குடி:

    இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 பிராந்திய அலுவலகங்களுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அமைந்து உள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வருமானவரி சோதனை நடைபெற்றது. இதற்காக மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 16 பேர் 6 கார்களில் வந்தனர். அவர்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து வங்கி தலைமை அலுவலகத்தின் 2 கட்டிடங்களிலும் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். சோதனையின் போது, வெளியாட்கள் யாரும் வங்கி தலைமை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் வங்கி பணியாளர்கள் மட்டுமே வழக்கம் போல் உரிய அடையாள அட்டையை காண்பித்து அலுவலகத்துக்கு சென்றனர்.

    நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய வருமானவரி சோதனை இன்று காலை 6.30 மணி வரை நீடித்தது. தொடர்ந்து இரவு, பகலாக 20 மணி நேர விசாரணையை முடித்து கொண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணிக்கு வங்கியில் இருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது 5 பைகளில் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது.

    ஆனால் வங்கி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சில பரிவர்த்தனையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இந்த சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குசந்தைக்கு அனுப்பிய கடிதம் வெளியானது. அதில் 'தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சட்டம் 1961 பிரிவு 285 பி.ஏ-ன் படி சட்டரீதியான விசாரணை நடந்தது.

    இந்த விசாரணைக்கு வங்கி முழுமையாக ஒத்துழைப்பு அளித்தது. வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும். இதனால் வங்கியின் எந்த செயல்பாடும் பாதிக்கப்படவில்லை' என்று தெரிவித்து உள்ளது.

    • கே.சி.பி. நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு, துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.
    • மேலும் சந்திரபிரகாஷின் வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது அவரிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது.

    கோவை பீளமேட்டில் கே.சி.பி.நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இங்கும் வருமானவரித்துறை சோதனை நடந்தது. இதில் கே.சி.பி நிறுவனம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சோதனை முடிவடைந்தது.

    தொடர்ந்து கே.சி.பி நிறுவனம் மற்றும் கொடிசியாவில் உள்ள அதன் இயக்குனர் சந்திரபிரகாஷின் வீட்டிலும் 4-வது நாளாக சோதனை நடைபெற்றது. காலையில் தொடங்கிய சோதனையானது, விடிய, விடிய நடந்தது.

    கே.சி.பி. நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு, துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் சந்திரபிரகாஷின் வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது அவரிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இன்று 5-வது நாளாக பீளமேட்டில் உள்ள கே.சி.பி.நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 5 நாட்களாக நடந்து வரும் சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே குனியமுத்தூரில் உள்ள வசந்தகுமார் என்பவரது வீட்டிற்கு நேற்றிரவு 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் காரில் வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை அடைத்து விட்டு, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று காலையும் தொடர்ந்து வசந்தகுமாரின் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. வீட்டில் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    வசந்தகுமார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் உதவியாளராக இருக்கும் சந்தோஷ் என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரக்கோணம், திருப்பத்தூரில் அதிமுக பிரமுகர் வீடுகளில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1¼ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #ITRaids

    வேலூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரது வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடைபெற்றது.

    அப்போது தி.மு.க. பிரமுகரின் சிமெண்டு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை மற்றும் நாமக்கல்லில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.11 கோடி பிடிபட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பணமா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் வருமானவரித் துறை அதிகாரிகள் தங்களது சோதனையை மேலும் தீவிரப் படுத்தி உள்ளனர்.

    அரக்கோணம், திருப்பத்தூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.1¼ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் அ.தி.மு.க. பிரமுகரான இவர், பைனான்ஸ், சீட்டு, நடத்தி வருகிறார்.

    இவரது வீட்டில் வருமான வரி துறை இணை கமி‌ஷனர் அபிநயா தலைமையில், 9 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

    நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணியளவில் முடிந்தது. இதில் ரூ.26 லட்சம் பணம் சிக்கியது.

     


    இந்த பணத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கண்ணன் வைத்திருந்தாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    அரக்கோணத்தை அடுத்த மின்னல் அருகே உள்ள நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் தீனதயாளன். தொழிலதிபரான இவர் லுங்கி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    பல்வேறு மாநிலங்களில் இருந்து லுங்கிகளை வாங்கி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது உறவினர் மாதவன் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார்.

    நேற்று மாலை 4 மணியளவில் தீனதயாளன் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது. அவரது அலுவலகம், தொழிற்சாலை ஆகியவற்றிலும் சோதனையில் ஈடுபட்டனர். மாதவன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இரவு முழுவதும் நடந்த சோதனை அதிகாலை 2 மணியளவில் முடிந்தது. தீனதயாளன் வீடு, அலுவலகம், தொழிற்சாலை ஆகியவற்றில் இருந்து ரூ.1 கோடியே 1 லட்சமும், மாதவன் வீட்டில் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இந்த நிலையில் பஸ்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.54 லட்சம் பணமும் பிடிபட்டுள்ளது.

    விழுப்புரத்திலிருந்து மேல்மலையனூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஸ்கூல் பேக் கேட்பாரற்று கிடந்தது. அதில் கட்டுக்கட்டாக 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. அனைத்தும் ரூ.500, 200 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.

    அந்த பணத்தை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இந்த பணத்தை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக யாரேனும் எடுத்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    விளாத்திகுளம் அருகே பஸ்சில் பயணம் செய்த ராமராஜ் என்பவரின் துணிப் பையில் கட்டுக்கட்டாக ரூ.31 லட்சம் பணம் இருந்தது.

    ராமராஜிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ராமராஜ், அ.தி.மு.க. புதூர் ஒன்றிய செயலாளர் ஞானகுருசாமியின் உறவினர் ஆவார்.

    இதற்கிடையே அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    இதில் நெமிலி முன்னாள் பேரூராட்சி தலைவரான காங்கிரஸ் பிரமுகர் வினோபா, தி.மு.க. உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று வரையில் ரூ.182 கோடி பணம் பிடிபட்டுள்ளது. 991 கிலோ தங்கமும், 611 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.284.67 கோடி ஆகும்.  #LokSabhaElections2019 #ITRaids

    சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து 13.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #IncomeTaxRaid
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.

    இதற்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில் பலகோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது.

    இதேபோல், வருமான வரித்துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து 13.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சென்னையிலுள்ள நிறுவனத்தின் 3 இடங்கள் மற்றும் நாமக்கல்லில் உள்ள 4 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

    கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #IncomeTaxRaid
    வழக்குகளை கண்டு அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல என்று பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #Loksabhaelections2019 #DuraiMurugan #Kathiranand
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து காட்பாடி பள்ளிகுப்பத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சீனிவாசன், தாமோதரன் வீடுகளில் வருமான வரிதுறை சோதனை நடத்தியதில் ரூ.11 கோடி 48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக கதிர்ஆனந்த் உள்பட 3 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து வேலூரில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-

    தி.மு.க.வில் தலைவர் ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு அடுத்ததாக பொருளாளராக நான் உள்ளேன். வழக்கு பதிவு செய்வதன் மூலம் என்னை பயமுறுத்தினால் தி.மு.க.வினர் பயந்து விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டனர்.

    வழக்குகளுக்காக அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல. பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வர நீண்ட நாட்களாகும். அப்போது அதை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.

    தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, யாரையோ கேட்க வேண்டிய கேள்வியை இடமாறி என்னிடம் கேட்டுவிட்டீர்கள் என்றார்.


    வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த் குடியாத்தம் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது வேட்பாளர் கதிர்ஆனந்திடம், வருமானவரி சோதனை தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கேட்ட போது தான் பிரசாரத்தில் இருப்பதால் வழக்கின் முழுவிபரம் குறித்து தெரியவில்லை. வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.

    தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உறுதிமொழி பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சீனிவாசன் மீது வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் வைக்க இடம் கொடுத்ததாக தாமோதரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 6 மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்குபதிவு செய்யப்பட்ட விவரம் குறித்த அறிக்கை வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை அவர் தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்யும். #Loksabhaelections2019 #DuraiMurugan #KathirAnand
    தி.மு.க.வில் இணைய உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.  அவைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் இருந்து வருகிறார். இவருக்கும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. வருகிற 11-ந் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வடலூர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அய்யப்பன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டுக்கு இன்று மதியம் 1 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகளும் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் கீதா மற்றும் பறக்கும் படையினரும் ஜீப்பில் வந்தனர். இதனை தொடர்ந்து கடலூர் போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டுக்கு வந்தனர்.

    இதையடுத்து வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடியாக அய்யப்பன் வீட்டுக்குள் சென்றனர். அப்போது வீட்டின் முன்பு திரண்டு இருந்த அய்யப்பன் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை பார்த்து, என்ன காரணத்திற்காக இங்கே வந்து உள்ளீர்கள்? என கேட்டனர். அதற்கு, நாங்கள் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம் என கூறினார்கள். இதனை பார்த்த முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், அதிகாரிகளிடம் வீட்டை சோதனை செய்யலாம் என்றார். 

    இதன் பின்னர் அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்ய தொடங்கினர். அப்போது வீட்டின் முன்புற கதவு மூடப்பட்டது. மேலும் நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமல் இருக்க வெளிப்புற கதவையும் போலீசார் மூடினார்கள். அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் தி.மு.க.வுக்கு செல்ல உள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாஜக தோல்வி பயத்தால் எதிர்க்கட்சியினரை குறி வைத்து வருமானவரி சோதனை நடத்தியதாக கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளார். #kamalnath
    போபால்:

    மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் அலுவலகம் மற்றும் வீடு என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ. 11 கோடி பணம் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

    இது சம்பந்தமாக கமல்நாத் கூறியதாவது:-

    மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக தனது எந்திரத்தை எதிர்க்கட்சியினரை பழிவாங்க பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

    5 ஆண்டு காலத்தில் இவர்கள் செய்த சாதனையை மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.

    இந்த தோல்வி பயத்தால் தான் வருமான வரித்துறையினரை ஏவி எதிர்க்கட்சியினரை குறி வைத்து சோதனை நடத்துகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலின் போதும் இதைத்தான் செய்தார்கள். இப்போதும் அது தொடர்கிறது.



    பா.ஜ.க. அரசின் இது போன்ற நடவடிக்கைகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை. இவர்கள் என்னவெல்லாம்  செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது. எதையும் சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதன் மூலம் எங்களை நீக்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம்.

    மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். அவர்கள் தக்க பதில் சொல்வார்கள்.

    இவ்வாறு கமல்நாத் கூறினார்.

    இது சம்பந்தமாக பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கூறும் போது ‘மம்தா பானர்ஜி வழியில் கமல்நாத்தும் செயல்பட ஆரம்பித்துள்ளார். வருமான வரித்துறை கடமையை செய்கிறது. அதை விமர்சிப்பது ஒரு முதல்-மந்திரிக்கு அழகல்ல. வருமான வரி சோதனையில் பணமும், ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதற்கு கமல்நாத் பதில் சொல்ல வேண்டும்’ என்றார். #kamalnath
    வேலூரில் பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக, தங்கள் மீது வீண்பழி சுமத்த முயற்சி நடப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். #Duraimurugan #DMK #ITRaid
    சென்னை :

    திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்தநிலையில், துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடுகளில் கடந்த மாதம் (மார்ச்) 30-ந் தேதி வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

    மேலும், திமுக பிரமுகரான சீனிவாசன் வீடு உள்பட 6 இடங்களில் நடைபெற்ற சோதனையில், சிமெண்ட் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கப் பணம் மூட்டை மூட்டையாக சிக்கியது.

    இதனால், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அ.திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அ.திமுக சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் மனுவில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இதனால், வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-



    தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருத்துபோர் புரிவதும் உண்டு. அது தான் அரசியல். எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைப்பதும், வீண்பழி சுமத்தி அவமானத்துக்கு உள்ளாக்க முயற்சிப்பதும் இன்றைய அரசியலில் ஆளுங்கட்சி தரப்பில் மேலோங்கி நிற்பது.

    இதற்கோர் எடுத்துக்காட்டு தான் வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு - கல்லூரியை வருமான வரித்துறையின் சோதனை நடத்திய செயல். இத்தோடு நிற்கவில்லை மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள். எங்களைச் சுற்றி ஒரு கண்காணிப்பு வளையத்தையே உருவாக்கி எங்களை கண்காணித்து வருகிறார்கள்.

    இதுவும் போதாது என்று மேலும் சில செயல்களில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபடப்போவதாக எங்களுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் வீடு - கல்லூரி சோதனைகளில் சட்டத்துக்கு புறம்பான பொருள்கள் எதுவும் கைப்பற்ற முடியவில்லை என்பதால், எங்களை எப்படியும் பழிவாங்கி தீர்வதே என்ற முடிவோடு தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்கு சொந்தமான இடங்களில், அவர்களாகவே ஏதாவது பொருட்களை வைத்துவிட்டு, இவர்கள் புதியதாக கண்டுபிடித்து விட்டதாக, அவைகளைக் காட்டி, எங்கள் மீது வீண்பழி சுமத்த ஒரு முயற்சி நடப்பதாக அறிகிறோம்.

    இதன் மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியை சீர்குலைத்து விடலாம் என்று இந்த அரசுகள் பெருமுயற்சி எடுப்பதாக தகவல். இத்தகைய போக்கு ஜனநாயகத்துக்கு புறம்பானது மட்டுமல்ல, கடைந்து எடுத்த பாசிச முறையாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Duraimurugan #DMK #ITRaid
    எதிர்க்கட்சியினர் மீது வருமானவரி சோதனை, சிபிஐயை பயன்படுத்துவதால் மோடிக்கு சாதகமான நிலை ஏற்படாது என்று கடலூரில் தி.க. தலைவர் வீரமணி கூறியுள்ளார். #veeramani #pmmodi #incometaxraid
    கடலூர்:

    கடலூரில் திராவிட கழக தலைவர் வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய மற்றும் மாநில அரசுகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக வருகிற மே 23-ந் தேதி இந்த ஆட்சிகள் கண்டிப்பாக மாறக் கூடிய நிலையில் உள்ளது. பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்வி என்பது அறவே மறுக்கப்படும் என்று கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற துணை வேந்தர்கள் கூறி வருகின்றனர்.

    சிறு, குறு வியாபாரிகள், மாணவர்கள் விவசாயிகள் என அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த தேர்தலில் தப்பித்தவறி மீண்டும் மோடி வந்தால் தேர்தலே இருக்காது என வெளிப்படையாக அனைவரும் கூறி வருகிறார்கள்.

    இந்திய அளவில் மோடிக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு கூறினாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஆகையால் மக்கள் மனநிலை என்பது மோடிக்கு எதிர்ப்பு அலை என்பது நன்கு தெரிகிறது. தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படவில்லை என அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிந்து வருகிறது. தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் அங்கமாக இருந்து வருவது வருத்தத்துக்குரியது.

    எதிர்க்கட்சிகளையே குறிவைத்து வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மோடி தன்னுடைய ஆயுதமாக வருமான வரித்துறை, சி.பி.ஐ.யை பயன்படுத்தி வருகிறார். இதன்மூலம் மோடிக்கு சாதகமான நிலை ஏற்படாது. அதற்கு மாறாக எதிர் நிலை தான் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #veeramani #pmmodi #incometaxraid
    வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். #Duraimurugan #DMK #Raid
    வேலூர்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீடு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ளது.

    சென்னையில் அவருக்கு கோட்டூர்புரத்தில் வீடு இருக்கிறது.

    சென்னையில் அரசியல் பணிகள் இல்லாத நாட்களில் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வது வழக்கம். தற்போது பாராளுமன்ற தேர்தலில் அவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    கதிர்ஆனந்துக்கு ஆதரவாக துரைமுருகன் வேலூர் தொகுதியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இரவு அவர் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு காந்திநகரில் உள்ள வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    இதற்கிடையே வேலூர் தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து வருமானவரித்துறையினரும், பறக்கும் படையினரும் வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

    இரவு 11.30 மணியளவில் மனோஜ், முரளிதரன், சதீஷ் ஆகியோர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டுக்கு வந்தனர். அப்போது, துரைமுருகன் வீட்டில் இல்லை.

    அவர் வருவதற்குள், அதிகாரிகள் உள்ளே சென்று அறையில் அமர்ந்தனர். வருமானவரி சோதனை நடத்த வந்திருப்பதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து துரைமுருகன் காந்திநகரில் உள்ள வீட்டுக்கு விரைந்து வந்தார். அவரிடம் வீட்டுக்குள் இருந்த அதிகாரிகள், “நாங்கள் வருமானவரித் துறை அதிகாரிகள், உங்கள் வீட்டில் சோதனை நடத்த வந்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இதைக்கேட்ட துரைமுருகன் உடனடியாக தன்னுடைய வக்கீல்களை வரவழைத்தார். அவர்கள் அதிகாரிகளிடம் இருந்த அடையாள அட்டைகளை வாங்கி சரி பார்த்தனர். அதில், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் என்று குறிப்பிட்டு இருந்தது.

    இதையடுத்து தேர்தல் பார்வையாளர்கள் எப்படி வீட்டுக்குள் சோதனையிட முடியும் என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து வக்கீல்களுக்கும், வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.



    சிறிது நேரத்தில், வருமானவரித் துறை அதிகாரி விஜய் தீபன் அங்கு வந்தார். என்னுடைய தலைமையிலான குழுவினர்தான் அவர்கள் என்று வக்கீல்களிடம் கூறினார்.

    ஆனாலும், வீடுகளில் சோதனை செய்யலாம் என்று அதில் குறிப்பிடப் படவில்லையே என்று தெரிவித்த வக்கீல்கள், துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்த அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் நீடித்தது.

    இதற்கிடையே துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்திருக்கும் தகவல் தி.மு.க. நிர்வாகிகளிடையே பரவியது. ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் துரைமுருகன் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    துரைமுருகன் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் சோதனை நடத்தாமல் செல்லமாட்டோம் என்று வருமானவரித்துறையும், பறக்கும் படையினரும் உறுதியாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு 4 பேர் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர்.

    காலை 5.45 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் 3 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் வீட்டிற்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    துரைமுருகன் வீட்டில் உள்ள அறைகள், மாடியில் உள்ள அறைகள், தண்ணீர் தொட்டி, துரைமுருகனுக்கு சொந்தமான கார்கள் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. வீட்டுக்குள் இருந்த சில ஆவணங்களை வருமானவரித்துறையினர் கைப்பற்றி விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

    அதற்கு துரைமுருகன் பதில் அளித்தார். இதுபற்றிய முழுமையான விவரங்களை வருமானவரித்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    காலை 8.30 மணிக்கு சோதனையில் ஒரு பகுதி முடிந்தது. சோதனையில் ஈடுபட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் 7 பேரில் 3 பேர் வெளியே வந்தனர். அவர்கள் துரைமுருகன் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை காரில் எடுத்து சென்றனர். 4 அதிகாரிகள் வீட்டில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.



    காலை 9 மணியளவில் அவர்களும் தங்களது சோதனையை நிறைவு செய்தனர். சுமார் 6 மணி நேரம் துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையின் போது பாதுகாப்பு கருதி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், சங்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் துரைமுருகன் மகனுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளி உள்ளது. வாக்காளர்களுக்கான பணப்பட்டு வாடா புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகளும், பறக்கும் படையினரும் அங்கும் சோதனை நடத்தினார்கள்.

    இன்று காலை 6 மணிக்கு 7 பேர் கொண்ட குழுவினர் கல்லூரிக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு சோதனை நீடித்து வருகிறது.

    வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர். இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் சென்னை வருமான வரித்துறை அதிகாரி நாராயணன் சவுடா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்த அதிரடியாக நுழைந்தனர்.

    அங்கு வீட்டில் இருந்த தேவராஜின் மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவலை தெரிவித்து சோதனையை உடனடியாக மேற்கொண்டனர். நள்ளிரவு 1 மணி வரை நடத்திய சோதனையில் எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொதியில் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    காலை 10 மணியளவில் பிரசாரம் தொடங்கும் அவர் மாலை 5 மணியளவில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற் கொள்கிறார். இரவு வேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை யாற்றுகிறார்.

    தொடர்ந்து 1-ந் தேதி அரக்கோணம் மக்களவை தொகுதியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த நிலையில் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #Duraimurugan #DMK #Raid
    ×