என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jewelry theft"
- 3 நபர்கள் ஏறி இவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து பழகி உள்ளனர்.
- இருவரும் அணிந்திருந்த கம்மல், தாலி போன்ற நகைகளை கொள்ளையடித்தனர்.
அரக்கோணம்:
கடலூர் மாவட்டம், மதியனூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரோகினி (வயது 56), தமிழ்ச்செல்வி (44). இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.
உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் மும்பை சென்றனர்.
பின்னர் அவர்கள் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டு, விருதாச்சலத்தில் இறங்குவதற்கு ரெயில் டிக்கெட் எடுத்து மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் ஏறி பயணம் செய்தனர்.
அதே பெட்டியில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் ஏறி இவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து பழகி உள்ளனர். இதற்கிடையில், சோலாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்தது.
அப்போது, அந்த அடையாளம் தெரியாத நபர்கள் தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினிக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இதை தெரியாமல் இருவரும் வாங்கி குடித்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு, என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் இருவரும் மயக்கம் அடைந்தனர்.
இந்நிலையில், சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகு தமிழ்ச்செல்விக்கு லேசாக மயக்கம் தெளிந்து உள்ளது. அப்போது, ரெயில் சக பயணிகளிடம் என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியவில்லை.
என்னுடன் வந்த உறவினர் இன்னும் மயக்கத்திலேயே உள்ளார். அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லையே என கூறியபடி அலறி கூச்சலிட்டார்.
மேலும் அவர்கள் இருவரும் அணிந்திருந்த கம்மல், தாலி போன்ற நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, ரெயிலில் இருந்த சக பயணிகள் உதவியுடன் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றிய தகவல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர்.
அப்போது, மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் 6-வது பிளாட் பாரத்தில் வந்து நின்றது.
பின்னர் ரெயிலில் ஏறி மயங்கிய நிலையில் இருந்த தமிழ்ச்செல்வி மற்றும் ரோகினியை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர்களிடம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பிளாஸ்கில் இருந்த டீயை கொடுத்து இருவரையும் மயக்கமடையச் செய்து அவர்களிடமிருந்து சுமார் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வடமாநில ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் நிலையங்களில் உள்ள கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
- வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவர்களுக்கு நகை கொள்ளை போனது தெரியவந்தது.
- ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அரக்கோணம்:
திருவள்ளூரை சேர்ந்தவர் மணிவண்ணன் இவருடைய மனைவி பிரித்தி (வயது 26). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் ஐதராபாத் சென்றனர். அங்கிருந்து தனது தாத்தா பாட்டி ஆகியோருடன் புறப்பட்டு வந்தனர்.
அவர்கள் கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். ரெயிலில் வந்த போது மர்மநபர்கள் அவர்கள் பெட்டியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடினர்.
இதனை அறியாத மணிவண்ணன் குடும்பத்தினர் அரக்கோணம் வந்ததும் ரெயிலில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் கார் மூலம் திருவள்ளூர் சென்றனர். வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவர்களுக்கு நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்போது தங்கள் பயணம் செய்த பெட்டியில் வட மாநில வாலிபர்கள் 4 பேர் இருந்தனர். அவர்கள் எங்களோடு பேசிக்கொண்டு வந்தனர். எங்கள் கவனத்தை திசை திருப்பி அவர்கள் நகையை கொள்ளையடித்திருக்கலாம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.
கொள்ளை நடந்த ரெயில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- அன்பழகன் நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறினார்.
நாகர்கோவில்:
சென்னையை சேர்ந்தவர் சாந்தி. இவர் குடும்பத்தோடு நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக நாகர்கோவிலுக்கு வந்தார்.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் வந்தபோது சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ரெயிலை விட்டு இறங்கினார்கள். அப்போது அவர்களது கைப்பை மாயமாகி இருந்தது. அதில் 30 பவுன் நகைகள் இருந்தது.
இதையடுத்து அவர்கள் கைப்பையை அந்த ரெயில் பெட்டி முழுவதும் தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இதை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை. இந்த வழக்கை விசாரிக்க ரெயில்வே டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில், நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது சாந்தி பயணம் செய்த பெட்டியில் இருந்து இறங்கி செல்கிறார்களா என்பது குறித்த விவரங்களை சேகரித்தனர். அப்போது நெல்லை ரெயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறங்கி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் நெல்லை பாளையாங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அன்பழகன் (வயது 50) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் சாந்தியின் கைப்பையை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். அன்பழகனை கைது செய்த போலீசார் அந்த நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அன்பழகன் நகைகளை அடகு வைத்திருப்பதாக கூறினார். அந்த நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பாதியளவு நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மீதி நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
- வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி சுமதி (வயது56). இவர் கடந்த ஜூலை 1-ந் தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அப்போது கூட்டத்தில் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முருகன் (55), அவரது மனைவி அலமேலு (45) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களுடன் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்மணி (32), மாரிமுத்து (26), செல்வி (34), நாகம்மாள் (57) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி மடவார் வளாகம் கோவிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்தது, கடந்த ஜூன் மாதம் வ.புதுப்பட்டி ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் மகாலட்சுமி என்பவரிடம் 6 பவுன் செயின் பறித்தது தெரியவந்தது. கைது செய்த 6 பேரிடமிருந்து 9 பவுன் நகை மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் ஊர்களுக்கு குழுவாக சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- சுப்பிரமணி (55). விவசாயி. இவரது மனைவி செல்வி (50). செல்வி அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
- 2 மணி நேரம் கழித்து மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் உரம்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). விவசாயி. இவரது மனைவி செல்வி (50). செல்வி அவரது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
பூட்டு உடைப்பு
இதையடுத்து நேற்று காலையில் சுப்பிரமணி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். 2 மணி நேரம் கழித்து மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி, மோதிரம் உள்பட 5 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது.
இதுபற்றி மங்களபுரம் போலீசில் சுப்பிரமணி புகார் அளித்தார். அதன்பேரில் மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கேமராவில் பதிவான நபருக்கு வலை வீச்சு
- அடகு வைத்த நகையை மீட்டு வந்தபோது துணிகரம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசன் (வயது 33), டிரைவர். இவர் நேற்று தனக்கு சொந்தமான 3 பவுன் நகையை தெள்ளாரில் உள்ள தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்தார்.
அதில் கிடைத்த ரூ.93 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள மற்றொரு வங்கியில் ஏற்கனவே அடகு வைத்த பவுன் நகையை மீட்டார்.
பின்னர், நகையை தனது பைக்கின் சீட் அடியில் வைத்துக் கொண்டு தெள்ளார் வந்தார். அங்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்த நகைக்கான ரசீது பெற வங்கி முன்பாக பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
அங்கு ரசீது வாங்கிக் வெளியே வந்தார். அப்போது, பைக் சீட்டின் லாக் உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணியரசன் தெள்ளார் போலீசில் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ் பெக்டர் ரேகாமதி, எஸ்ஐ சக்திவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் தொப்பி அணிந்தபடி முகம் தெரியாமல் இருக்க மாஸ்க் அணிந்து கொண்டு பைக்கில் இருந்த நகையை திருடியது தெரிந்தது. நகை திருடி சென்ற நபர் பைக்கில் வந்தவாசி சாலை நோக்கி சென்றது கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து வந்தவாசி, தேசூர், ஏம்பலம், ஜப்திகாரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- நகையை பறிகொடுத்து படுகாயம் அடைந்த லதா மதுரை கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தார்.
- வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மதுரை:
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தபால் தந்தி நகர் வைகை நதி தெருவைச் சேர்ந்தவர் திலக்குமார் என்பவரது மனைவி லதா (வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் லேசான மழை பெய்துகொண்டிருந்த நிலையில் லதா பணியை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். ஆனால் அதனை லதா கவனிக்கவில்லை. லதாவின் அருகில் நெருங்கி வந்த மர்மநபர்கள் திடீரென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை இழுத்து பறித்தனர்.
இதனை சற்றும் எதிர்பாராத அவர் தனது வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். மொபட்டில் இருந்து லதா கீழே விழுந்த நிலையிலும் அதனை சற்றும் கண்டுகொள்ளாமல் தரதரவென அவரை சாலையில் இழுத்தபடி செயினை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
நகையை பறிகொடுத்து படுகாயம் அடைந்த லதா மதுரை கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் லதாவை தரதரவென்று சாலையில் இழுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமிஷனர் ஜமால், இன்ஸ்பெக்டர் சுந்தரி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
மதுரையில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் இதுபோன்று சென்று பெண்ணிடம் ஈவு இரக்கமின்றி தரதரவென இழுத்துச் சென்று தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள எல்.ஆர்.மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் சிவராம கிருஷ்ணன். இவர் ஓய்வுபெற்ற விலங்கியல் நிபுணர் ஆவார். இவரது மனைவி சாய் சரோஜா. இவர் அரசு பள்ளியில் உதவி உடற்பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சிவராமகிருஷ்ணன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் அவர்கள் கர்நாடாக மாநிலம் மைசூருவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இன்று திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்த போது, சிவராமகிருஷ்ணன் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், டிஎஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
இதேபோல் சிவராமகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியரான சிவக்குமார் என்பவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, சிவக்குமார் திருமணம் நிகழ்ச்சிக்காக மைசூருக்கு சென்று உள்ளதாலும், அவரது வீட்டில் இருந்து தங்க நகைகளை சிவக்குமார் குடும்பத்தினர் எடுத்து சென்றதாலும், கொள்ளையர்களுக்கு எதுவும் கிடைக்காததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது.
மேலும், சிவக்குமார் மற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளில் நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி நகர் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என கூறி பிளம்பிங் வேலை செய்வதற்காக வீட்டு சாவி வேண்டும் என சென்னையில் இருந்த ஓய்வுபெற்ற ஆசிரியை செல்வியிடம் கேட்டுள்ளனர்.
- கொள்ளை குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாதா கோவில் அருகே தெற்கு பீச் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் திருமணி (வயது 65). இவரது மனைவி செல்வி, ஓய்வுபெற்ற ஆசிரியை.
இவர்களது மகளுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் சென்று விட்டனர்.
இந்நிலையில் அவர்களது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த ஜெய்ஸ் (32), அவரது மனைவி ஆஷா (29) ஆகியோர் வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என கூறி பிளம்பிங் வேலை செய்வதற்காக வீட்டு சாவி வேண்டும் என சென்னையில் இருந்த ஓய்வுபெற்ற ஆசிரியை செல்வியிடம் கேட்டுள்ளனர்.
இதனால் பக்கத்து வீட்டில் இருந்த சாவியை கொடுக்க சொல்லி அவர்கள் கூறியதும் அதனை வாங்கிக் கொண்டு பிளம்பிங் வேலை பார்த்துள்ளனர். அந்த சமயத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு வீட்டு உரிமையாளர் ஆசிரியை வீட்டில் இருந்த 27 பவுன் தங்க நகைகளை திருடி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் தூத்துக்குடிக்கு வந்த திருமணி, செல்வி தம்பதியினர் வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த ஆஷா,ஜெய்ஷ் ஆகிய இருவரும் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் இன்று கைது செய்த போலீசார், 27 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சுப்புலட்சுமியிடம் விசாரித்தனர்.
- பீரோவை திறக்க முடியாததால் அதன் சாவி தொலைந்து விட்டதாக கூறி பீரோவை பழுது பார்க்கும் நபரை வரவழைத்து நகையை திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை, புச்சம்மாள் தெருவை சேர்ந்தவர் பூமாதேவி. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தமிழரசி. இவரை சந்திக்க தண்டையா ர்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் அவரது மருமகள் சுப்புலட்சுமி (28) அடிக்கடி வந்து சென்றார். அப்போது பூமாதேவியுடன், சுப்புலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி பூமாதேவி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 10 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. ஆனால் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்படவில்லை. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சுப்புலட்சுமியிடம் விசாரித்தனர். அப்போது அவர் பூமாதேவி வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். பூமாதேவியின் வீட்டுக்கு சென்ற போது கதவு பூட்டு சாவியை சுப்புலட்சுமி திருடி வைத்து கொண்டார். பின்னர் பூமாதேவி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற நேரத்தை நோட்டமிட்டு கதவை திறந்து சென்று உள்ளார். ஆனால் பீரோவை திறக்க முடியாததால் அதன் சாவி தொலைந்து விட்டதாக கூறி பீரோவை பழுது பார்க்கும் நபரை வரவழைத்து நகையை திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சுப்புலட்சுமியை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
- பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார்.
- போலீசார் 3 பெண்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
பரமத்திவேலூர்:
சென்னை மேற்கு வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உமாகனகராஜ்( 58). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் வீட்டு திருமணத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை கரூரிலிருந்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார். அப்போது பஸ்சில் அவருடன் நோட்டமிட்டு வந்த 3 பெண்கள் சில்லறை காசுகளை கீழே போட்டு உமாகனகராஜ் கவனத்தை திசை திருப்பி உள்ளனர்.
அப்போது கைப்பேக்கில் மணிபர்சில் உமாகனகராஜ் வைத்திருந்த 25 பவுன் தங்க செயினை திருடி கொண்டனர். உமாகனகராஜ் திடீரென கை பேக்கில் இருந்த மணிபர்ஸை பார்த்தபோது 25 பவுன் தங்கச் செயின் இருந்த மணி பர்சை காணவில்லை. திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த உமா கனகராஜ் இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 25 பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் திருடிச் சென்ற 4 ரோடு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நகை திருட்டுகளில் ஈடுபடும் பெண்களின் பழைய குற்றப்பதிவுகளை ஆராய்ந்தனர். பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர்களை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள ஒரு கடைக்கு அருகில் 3 பெண்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மூன்று பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து உமா கனகராஜ் பேக்கில் இருந்த 25 பவுன் தங்க நகையை திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருடைய மனைவிகள் அமுதா (36), நந்தினி( 30), மற்றும் தேவா என்பவரது மனைவி பூமிகா என்கிற பரிமளா (25) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் தற்பொழுது கிருஷ்ணகிரி ராயக்கோட்டை ரோடு பெத்தனப்பள்ளி பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் 3 பேரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- மர்ம கும்பலுக்கு வலை வீச்சு
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மும்முனி புறவழி சாலையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ பச்சையம்மன் கோவில் உள்ளது.
இங்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக உண்டி யலில் பணம் மற்றும் நகை களை செலுத்து கின்றனர்.
இக்கோவிலில் சண்முகம் என்பவர் பூசாரியாக உள்ளார். வழக்கம் போல் இருந்து பூஜைகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை கோவிலின் நடை சாத்தி விட்டு வீட்டிற்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் கோவிலில் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து 2 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.
இன்று காலை கோவில் திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம கும்பல் உண்டியலில் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்