search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadamadai"

    • கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் நள்ளிரவு தண்ணீர் வந்தடைந்தது.
    • இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும்.

    குத்தாலம்:

    டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ம் தேதி தண்ணீரை திறந்து வைத்தார்.

    இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், காவிரி நீர் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் நல்லிரவு தண்ணீர் வந்தடைந்தது. அதிகாலை 3 மணி அளவில் பொதுப்பணித்துறையினர் 782 கன அடி நீரை பாசனத்திற்காக திறந்து விட்டனர்.

    மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.

    இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நிகழாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிட த்தக்கதாகும்.

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் நாகை விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
    நாகப்பட்டினம்:

    கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் இன்று வரை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைமடை வரை செல்லவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே விவசாயிகள் மறியல், ஆர்ப்பாட்டம் என நடத்தி வருகின்றனர்.

    கடைமடை பகுதியில் உள்ள வாய்க்கால், ஏரி- குளங்களை தூர் வாராததால் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. காவிரியில் வெள்ளம் வந்தும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. வறட்சி காலத்தை போல பம்புசெட் மூலம் தான் சம்பா சாகுபடி செய்ய வேண்டியது உள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியில் பிடியில் சிக்கிய விவசாயிகள் தற்கொலை செய்த சம்பவம் டெல்டா மாவட்டங்களில் அதிகமாக நடந்தது.

    தற்போது மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்தது விவசாயிகளிடையே மீண்டும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டம் கீழையூர் அருகே தலையாமழை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது48). விவசாயியான இவர் குத்தகைக்கு நிலம் எடுத்து நெல் சாகுபடி செய்து வந்தார்.

    இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான தலையாமழை பகுதிக்கு வந்து சேரவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகின. இந்தநிலையில் கருகிய நெற்பயிர்களை கண்டு மனமுடைந்த ராமமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன் வி‌ஷத்தை குடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார்.

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் பயிர்கள் கருகியதால் நாகை விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் நாகை மாவட்ட விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தற்கொலை செய்த ராமமூர்த்திக்கு, ரேவதி என்ற மனைவியும் கருணாகரன், கதிர்வேல் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
    காவிரி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பட்டுக்கோட்டை, பேராவூரணியில் விவசாயிகள், வர்த்தக சங்கங்கள் இன்று கடையடைப்பு, மறியல் போராட்டம் நடத்தினர்.
    பட்டுக்கோட்டை:

    கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக தமிழகத்துக்கு உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து ஜூலை 22-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் தூர்வாராததால் கடைமடை வரை தண்ணீர் வரவில்லை. இதனால் காவிரியில் வெள்ளம் வந்தும் விவசாயிகளுக்கு பயன் இல்லையென்று புகார் தெரிவித்து வருகின்றனர்.

    தடுப்பணைகள் இல்லாததாலும், ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாராததாலும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதனால் கடைமடை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் கடைமடைக்கு தண்ணீர் வராமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இதனால் பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறந்து விடக்கோரி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் இன்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.

    விவசாயிகளின் போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும், மற்றும் மருந்து கடை சங்கம், வர்த்தக சங்கம், தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதனால் பட்டுக்கோட்டை நகர் முழுவதும் இன்று காலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் பட்டுக்கோட்டை நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் அனைத்து விவசாய சங்கத்தினர், அனைத்து கட்சியினர், மற்றும் வியாபார சங்கத்தினர் நூற்றுக்கணக்கானோர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடைமடைக்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் தரையில் அமர்ந்தப்படியும், படுத்தப்படியும் கோ‌ஷமிட்டனர். பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு தான் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் தரமறுக்கிறார்கள் என்று விவசாயிகள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

    இதேபோல் பேராவூரணியிலும் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. விவசாயிகளின் போராட்டத்துக்கு அனைத்து கட்சிகள், வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

    பேராவூரணியில் பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ‘பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

    இதேபோல் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத கிராம மக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகளின் போராட்டத்தையொட்டி பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து நீடாமங்கலத்தில் வருகிற 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #ttvdinakaran
    மன்னார்குடி:

    காவிரியில் நீர் கரை புரண்டோடும் நிலையிலும் டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள்,குளங்கள் வறண்டு கிடக்கிறது. மேலும்  பலலட்சம் ஏக்கர் பாசனப்பகுதி இன்னும் பாலைவனமாக உள்ளது. ஆறு, குளங்கள், ஏரிகளில் தூர்வாரும் பணி நடைபெறாததால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்தும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் காவிரி எஸ்.ரெங்கநாதன், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் குறித்த முன்னேற்பாடுப் பணிகள் குறித்து நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில பொருளாளர் எம்,ரெங்கசாமி , திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், கட்சியின் அமைப்புச்செயலாளர் சிவா.ராஜ மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கு.சீனிவாசன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.சங்கர், நகர செயலாளர் எஸ்.சங்கர்  மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேடை அமைக்கும் பணி , வாகனங்கள் நிறுத்து மிடங்களையும் தேர்வு செய்து பார்வையிட்டனர். #ttvdinakaran 
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், காவிரியில் தற்பொழுது வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைமடைப்பகுதிகளான கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் உள்ள பெரும் பகுதியான வாய்க்கால்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்தக்தின் கறம்பக்குடி ஒன்றியத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். மாநிலச்செயலாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார்.

    கோரிக்கைகளை விளக்கி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் ராமையன், உடையப்பன்,  ஸ்ரீதர், துரைச்சந்திரன், அய்யாவு, அன்பழகன்,  பாலசுந்தரமூர்த்தி, தங்கப்பா, மணிவேல், இளவரசு, பிரபாகர், சின்னத்துரை உள்ளிட்டோர் பேசினர்.
    பேராவூரணி அருகே கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர்.

    பேராவூரணி:

    பேராவூரணியை அடுத்த சொர்ணக்காடு கடைவீதியில் சொர்ணக்காடு, வீரக்குடி மணக்காடு, ரெட்டவயல் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் விடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கடைமடை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அண்ணாதுரை தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

    விவசாய சங்க பொறுப்பாளர் கருப்பையன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர்வேலுச்சாமி, ராஜாமுகமது, நெல்லியடிக் காடு சேகர், மணக்காடு ஜெகநாதன், கருப்பையா, ரவிச்சந்திரன், ரெட்டவயல் கண்ணன், சின்ன ரெட்டவயல் ராஜேஷ் கண்ணா, கீழ மணக்காடு, கோவிந்தராஜ் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் எல்.பாஸ்கரன், பட்டுக்கோட்டை போலீஸ் உதவி சூப்பிரண்டு செங்கமலக் கண்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் பிரசன்னா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வீரக்குடி, சொர்ணக்காடு கிளை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து, முழு கொள்ளளவான 50 கன அடி தண்ணீர் முறை வைக்காமல் வழங்குவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    கடைமடைக்கு காவிரி தண்ணீர் வராததை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் வாய்க்கால் பாசன பகுதிகளை ஆய்வு செய்வதற்காக வந்த அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். #CauveryWater #Kadamadai
    திருச்சி:

    கர்நாடகாவில் பெய்த கன மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் மேட்டூர் அணை இந்த ஆண்டு 3-வது முறையாக நிரம்பி உள்ளது.

    அங்கிருந்து திறந்து விடப்படும் உபரி நீரால் திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் அதிகபட்சமாக வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது.

    காவிரி, கொள்ளிடம் ஆறுகள் திருச்சி மாவட்டத்தின் வழியாகவே சீறிப்பாய்ந்து சென்றாலும் இந்த ஆறுகளால் திருச்சி மாவட்டம் பாசன வசதி பெறுவதில்லை. கரூர் கதவணையில் இருந்து திருச்சி முக்கொம்பு வரை காவிரியில் இருந்து பிரிந்து செல்லும் 17 கிளை வாய்க்கால்கள் மூலம் மட்டுமே திருச்சி மாவட்டம் பாசன வசதி பெற்று வருகிறது.


    உய்யக்கொண்டான், பழைய கட்டளை, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், புள்ளம்பாடி, பெருவளை, அய்யன் வாய்க்கால்கள் இவற்றில் முக்கியமானவையாகும். திருச்சி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் விவசாயிகள் வாய்க்கால் பாசனம் மூலம் நெல், வாழை, கரும்பு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த வாய்க்கால்களின் மூலம் பல ஏரி, குளங்களிலும் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான், பழைய கட்டளை, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்களின் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாய பணிகளை தொடங்க முடியவில்லை என விவசாயிகள் குறை கூறி வந்தனர்.

    இந்நிலையில் தமிழக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை மற்றும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் நேற்று திருச்சி அருகே உள்ள தாயனூர், புங்கனூர், நவலூர் குட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் வாய்க்கால் பாசன பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சென்றனர்.

    அவர்களுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி, பொதுப்பணித் துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட பொறியாளர் கணேசன், உதவி செயற் பொறியாளர் கண்ணன், ஸ்ரீரங்கம் தாசில்தார் கனக மாணிக்கம் உள்பட அதிகாரிகளும் சென்று இருந்தனர்.

    தாயனூர் சந்தை அருகே அமைச்சர்கள் இருவரும் காரை விட்டு இறங்கி பழைய கட்டளை வாய்க்காலை பார்வையிட்டனர். இந்த வாய்க்காலில் தண்ணீர் பெயரளவிற்கு தான் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த விவசாயிகள் அமைச்சர்களை முற்றுகையிட்டு மாயனூரில் இருந்து பழைய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் கடைமடை பகுதியான இங்கு தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை.

    அதிகாரிகள் வருகிறார்கள் என்பதால் இன்று (நேற்று) தண்ணீர் வந்துள்ளது. இந்த தண்ணீரை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி சாகுபடி பணியை தொடங்க முடியும்? என கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு அமைச்சர்கள் உங்களுக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக தான் நேரில் வந்துள்ளோம் என்றார்கள். ஆனாலும் விவசாயிகள் சமாதானம் அடையவில்லை. மாயனூரில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டாலும் இங்கு இப்படித்தான் வந்து சேரும். தலைப்பு பகுதியான நச்சலூரில் உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், வாய்க்கால் நீரை திருடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும், வாய்க்காலை முழுவதுமாக தூர்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் பஸ் மறியல் போராட்டம் நடத்துவோம் என ஒரு விவசாயி ஆவேசமாக பேசினார்.

    அப்போது கலெக்டர் ராசாமணி உங்கள் கோரிக்கையை நேரில் கேட்டு நடவடிக்கை எடுப்பதற்காக தான் அமைச்சர்கள் நேரில் வந்து இருக்கிறார்கள். உங்கள் கோரிக்கையை தெரிவித்து விட்டீர்கள், அதனை பரிசீலிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்த பின்னரும் பஸ்சை மறிப்போம் என்றால் எப்படி? நீங்கள் எத்தனை மறியல் போராட்டம் நடத்தினாலும் அதனை சமாளிக்க நான் தயார் என்று சவால் விடும் வகையில் பதில் அளித்தார்.

    விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊர் பிரமுகர்கள், போலீசார் தலையிட்டு சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அரியாறு தடுப்பணை, பாப்பான்குளம், நவலூர் குட்டப்பட்டு, புங்கனூர் குளம், ஆகியவற்றையும் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்தபடி செல்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். #CauveryWater #Kadamadai
    ×