என் மலர்
நீங்கள் தேடியது "Kumbabishekam"
- 2006-ம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.இதற்கிடையே பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. சிதிலமடைந்த மண்டபங்கள், தூண்கள் சீரமைக்கப்பட்டன.
கோபுரங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி நடந்தது. தற்போது கும்பாபிஷேக பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கோபுரங்களில் வர்ணம் பூசும் பணி முடிவு பெற்றுள்ளன. இந்தநிலையில் தங்க கோபுரத்தை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் பணியாளர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரத்தை சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த பணிகள் முடிவு பெற்றவுடன், அடுத்த கட்ட பணிகள் நடைபெறும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மேற்பனைக்காடு அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது
- 3 நாட்களாக நான்குகால யாகபூஜை நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணபுஷ்பகலா அய்யனார், ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்காக யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் விழாதொடங்கியது.அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நான்குகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம்புறப்பாடானது
கோயிலை வலம் வந்து பின்பு கோபுரக் கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து பிரபாகர சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்காண திரண்டிருந்த அப்பகுதியைச்
சுற்றியுள்ள கிராம பொதுமக்கள்,ஆன்மீக மெய்யன்பர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ பத்ரகாளியம்மனின் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.30க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- இன்று முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
- நாளை 2-ம் மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது.
சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவில் உள்ள ராதா சமேத வேணுகோபால் சாமி கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற 11-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) கோபூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜையும், நாளை(சனிக்கிழமை)2-ம் மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது. நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், அதைத்தொடர்ந்து 7.30 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
- கும்பாபிஷேக கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
- கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.
பூதப்பாண்டியில் பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி ஜூலை மாதமும், பாலாலயம் செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14-ந் தேதிகளில் நடந்தது.
அதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு கோவிலை சுற்றி பார்த்து கோவில் பராமரிப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்த ரூ.1 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் ஜனவரி மாதம் 26-ந்தேதி கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று காலை 7.30 மணி அளவில் கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக கால் நாட்டு நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது.
இதற்கான பூஜைகளை தந்திரிகள் கே.ஜி.எஸ்.மணி நம்பியார், சிவசுப்பிரமணியம் நம்பியார் ஆகியோர் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ஆறுமுகம் நயினார், திருப்பணி மற்றும் கும்பாபிஷேக உபயதாரர்கள் நாகமணி, நாகராஜன் பக்தர் சங்கத்தை சேர்ந்த பாக்கியம் பிள்ளை, ராஜேந்திரன், செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை புதுகை சாலையில் செட்டி ஊரணி குளக்கரையில் தென்புறம் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் மற்றும் வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் அருகில் யாகசாலை அமைத்து மூன்று கால பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரத்தின் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர் .பக்தர்களுக்கு விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.
- வருகிற 25-ந்தேதி முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
- ஜனவரி 18-ந்தேதி பூர்வாங்கு பூஜைகள் நடைபெற உள்ளன.
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் 2023-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி நடைபெற உள்ளது என கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், பழனி தண்டாயுதபாணிசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 18-ந்தேதி காலை 9 மணிமுதல் பூர்வாங்கு பூஜைகள் நடைபெற உள்ளன. ஜனவரி 23-ந்தேதி முதல்கால வேள்வி பூஜைகளும், ஜனவரி 26-ந்தேதி காலை 9.05 முதல் 11 மணிக்குள் அனைத்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையடுத்து ஜனவரி 27-ந்தேதி காலை 8.30 மணிக்குமேல் 9.30 மணிக்குள் தங்ககோபுரம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார். கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் அறங்காவலர் குழுவினர் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.
- 80 சதவீத கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்துள்ளன.
- கோவில் ராஜகோபுரத்தில் கலசம் பொருத்தி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு பாலாய பணிகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் திருப்பணிகளுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கோவிலில் உள்ள கோபுரங்கள், மண்டபங்கள், சேதமடைந்த சிற்பங்கள், சன்னதிகளின் விமானம் ஆகியவற்றை புனரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
கோவில்ராஜகோபுரத்தில் கலசம் பொருத்தி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளைமறுநாள்(25-ந்தேதி) காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார். கும்பாபிஷேகத்திற்கு ஒருமாதமே உள்ளதாலும், அதனைதொடர்ந்து தைப்பூசத்திருவிழா தொடங்க உள்ளதாலும் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் இருந்து பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்துவர தொடங்கி உள்ளனர். கடும் பனி நிலவி வரும் போதிலும் இரவு பகலாக பக்தர்கள் அதிகளவில் பழனியை நோக்கி நடந்து செல்கின்றனர்.
- மூலவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
- ஜனவரி 26-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு 2018-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது.
பக்தர்களின் கோரிக்கையை தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 ஆண்டுகளாக திருப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் குழு சார்பில், அடுத்த மாதம் (ஜனவரி) 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக மலைக்கோவில் பாரவேல் மண்டபத்தில் காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலசபூஜை, முகூர்த்தக்கால் பூஜை, வேதபாராயணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து வேத உபசாரங்கள், திருமுறை பாடப்பட்டு கலசங்கள், முகூர்த்தக்கால்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பாரவேல் மண்டபத்தில் இருந்து உட்பிரகாரம் வந்து நவவீரர் சன்னதி முன்பு ஒரு முகூர்த்தக்காலும், யாகசாலை பூஜைக்காக கார்த்திகை மண்டபத்தில் உள்ள ஈசான மூலையில் மற்றொரு முகூர்த்தக்காலும் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு முகூர்த்தக்கால்களை நட்டனர்.
அப்போது அங்கிருந்த பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா' என சரண கோஷம் எழுப்பினர். அதையடுத்து முகூர்த்தக்கால்களுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோவில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி ஆகியோர் ராஜகோபுர கலசத்துக்கு ரூ.22 லட்சத்தில் தங்க 'ரேக்' ஒட்டும் பணி மற்றும் ரூ.1 கோடியே 12 லட்சத்தில் கோவில் நீராழிபத்தி மண்டபத்தை சுற்றிய பகுதி, மகா மண்டப பகுதி, தங்க விமானத்தை சுற்றிய பகுதிகளில் பித்தளையால் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடுத்த மாதம் ஜனவரி 18-ந்தேதி கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 26-ந்தேதி பழனி கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 27-ந்தேதி பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்க விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக திருப்பணிகளை கோவில் அலுவலர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
- 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- தினமும் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தலில் மக்களின் குறைதீர்த்து அருள்பாலித்து வரும் இசக்கியம்மன் (கிழக்கு) கோவில் உள்ளது. மூவேந்தர்கள் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை ஒற்றுமையாக்க தமிழ் மூதாட்டியான அவ்வை மன்னர்களை அழைத்து ஒரே இடத்தில் மூன்று பந்தல் அமைத்து அவர்களுக்குள் இருந்த வேற்றுமையை அகற்றி ஒரு சேர விருந்துண்ண வைத்து அளவளாவிய மகிழ்ச்சி பெற்ற சிறப்பு தலமே முப்பந்தல் ஆகும். அவ்வையின் வேண்டுகோளை ஏற்று பராசக்தியின் மறு உருவான இசக்கி என்ற இசக்கியம்மனை இங்கு அமர வைத்து கோவில் கொண்டதால் முப்பந்தல் சிறந்த புண்ணிய தலமானதாக கூறப்படுகிறது.
இங்கு வந்து அம்மனை வழிபட்டால் தடைபட்டு வரும் திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும், பகைமை விலகும், தீராத பிணி தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இக்கோவிலுக்கு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கிறார்கள்.
இந்த கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு பூஜையும், தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. ஆடி மாத கொடை விழா இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவில் ஒன்று. ஆரம்பத்தில் ஓட்டு கட்டிடத்தில் இருந்த இக்கோவில் கடந்த 2006-ம் ஆண்டு திருப்பணிகள் நடைபெற்று பெரிய அளவிலான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது மீண்டும் அடுத்த கும்பாபிஷேகம் எப்போது? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
நாகர்கோவில் வடசேரி தேவி சுப்பிரமணியம்:-
நான் 30 ஆண்டுகளாக கோவில் திருவிளக்கு பூஜை மகளிர் குழு தலைவராக உள்ளேன். தமிழ் மாத கடைசி செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடப்பது வழக்கம். இந்த திருவிளக்கு பூஜை கொரோனாவிற்கு பிறகு தடைபட்டு விட்டது. அது தொடர்ந்து நடைபெற திருக்கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகிறது. எனவே விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் செருப்புகளை பாதுகாக்கும் வசதியும், வெளியூர் பக்தர்களுக்காக தங்கும் வசதியும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னதானம் பெற வரிசையில் நிற்பவர்களுக்கு வெயில், மழை படாமல் இருக்க அப்பகுதியில் மேற்கூரை அமைக்க வேண்டும்.
ஆரல்வாய்மொழி முருகேசன்:-
நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் அருகே ஓட்டல் நடத்தி வருகிறேன். கோவிலுக்கு தினமும் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் செவ்வாய், வெள்ளிகிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் எண்ணம்.
இதற்கிடையே கோவிலில் இதுதொடர்பாக வந்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதனால் விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தங்குவதற்கு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்தால் கோவிலுக்கு இன்னும் கூட்டம் அதிகமாக வரும். பூஜை நேரங்களில் கூட்டம் கோவில் முன்பு நிற்பதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரி விளக்கம்
கோவில் செயல் அலுவலர் பொன்னி கூறுகையில், "இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு திருப்பணிகள் முடிவடைந்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது தமிழக அரசின் உத்தரவுபடி கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிந்த கோவில்களுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான ஆயத்த பணிகள் நடந்துள்ளன. திருப்பணிகள் தொடர்பான மண்டல ஆய்வு குழு, மாநில ஆய்வு குழு களின் அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேக திருப்பணிக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி பெற்றவுடன் கும்பாபிஷேகம் நடைபெறும்" என்றார்.
- வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது.தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு பழனியில் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக பணி தொடங்கியது. ஆனால் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தொய்வடைந்தது. இந்நிலையில் வருகிற 27-ந்தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலையை பாதுகாத்து பலப்படுத்தவும், ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன், ஸ்தபதி மற்றும் ஆன்மிக சான்றோர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த சிலை பாதுகாப்பு குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவில் அர்த்த மண்டபத்துக்குள் சென்று மூலவர் சிலையை பார்வையிட்டனர். தற்போது பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் மூலவருக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு பழனி முருகன் கோவிலுக்கு திடீரென்று வந்தனர். பின்னர் கருவறை பகுதியில் உள்ள மூலவர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கோவில் அலுவலகத்தில் சிலை பாதுகாப்புக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் சிலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பழனியில் நடந்த இந்த திடீர் ஆய்வால் மூலவருக்கு மருந்து சாத்துவது குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள், ஆன்மிக பெரியோர்களிடையே நிலவுகிறது.
- வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது.
பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய், போலீஸ், சுகாதாரம், போக்குவரத்து என அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களுக்கான அனுமதி, முன்னேற்பாடு வசதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது எனவும், இதில் கோவில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பக்தர்களில் 3 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளனர் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, அடிவார பகுதியில் உள்ள தங்கும்விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு அமைத்து சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 7.15 மணி வரை ரோப்கார், மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதை வழியே அனுமதிக்கப்படுவர். பின்னர் கருப்பணகவுண்டன்வலசு அருகே பைபாஸ் சாலையில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கவும், அங்கிருந்து பழனி நகருக்கு வர சிறப்பு பஸ்கள் இயக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் கும்பாபிஷேகம் குறித்து கோவில் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ந்தேதி மாலை பூர்வாங்க பூஜைகள் தொடங்குகிறது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் மலைக்கோவிலில் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடைபெறும். மேலும் 23-ந்தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜை தொடங்கி, கலசத்தில் ஆவாஹணம் செய்து யாகசாலையில் எழுந்தருளியுள்ள சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிவடைந்து மகா தீபாராதனைக்கு பின்பு வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம்.
23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது. 28-ந்தேதிக்கு பிறகு வழக்கம்போல் நடைபெறும். அதேபோல் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான சேவை 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வடக்கு கிரிவீதியில் உள்ள குடமுழுக்கு நினைவரங்குகளில் நடைபெறும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு நடைபெறும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வின்போது சொர்ணபந்தனத்தில் அனைத்து பக்தர்கள் சார்பாக கோவில் நிர்வாகத்தில் விலை உயர்ந்த தங்கம், நவரத்தின கற்கள் வைக்கப்படும்.
இந்தவகைக்கு பக்தர்கள் பங்களிப்பு செய்ய விரும்பினால் கோவிலில் உரிய ரசீது பெற்று கொள்ளலாம். கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கம், கிரிவீதிகளில் 18 பெரிய டி.வி.க்கள் மற்றும் கிரிவீதி, மத்திய பஸ்நிலையம், கோவில் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் 8 எல்.இ.டி. வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் திருப்பணி வங்கி கணக்கில் நன்கொடை செலுத்திவிட்டு அதன் விவரம், ரசீது வழங்க வேண்டிய முகவரியை குறிப்பிட்டு கோவில் jceomdu 32203.hrce@tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும், மேலும், மின்பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்கும் பக்தர்கள் ரசீது வழங்க ஏதுவாக குறிப்பு காலத்தில் தங்களது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடவும்.
அதேபோல் கும்பாபிஷேக யாகசாலை பூஜைப்பொருட்கள், அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் வழங்க விரும்பும் பக்தர்கள் தண்டபாணி நிலைய தங்கும் விடுதியில் ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் புண்ணிய தீர்த்தங்களான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதை, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, அமராவதி, பவானி, தாமிரபரணி, வைகை, கோடி தீர்த்தம் மற்றும் இதர புண்ணிய தீர்த்தங்களை உரிய விரத நியமத்துடன் எடுத்து வந்து மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு பதிவு செய்யும் அலுவலகத்தில் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவருக்கு தனி சன்னதி இங்குதான் உள்ளது
- கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் கோவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14-வது தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள்
அமைந்துள்ளன. இந்த தலத்தில் சாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு
அருள்பாலிக்கிறார். மேலும் காசிக்கு அடுத்தப்படியாக அஷ்ட பைரவருக்கு தனி சன்னதி இங்குதான் உள்ளது என்பது சிறப்பு
அம்சமாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று
வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் தரிசனம்
செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீர்காழியில் சட்டை நாதர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து வருகிற மே மாதம் 24-ந்தேதி
குடமுழுக்கு விழா நடக்கிறது. முன்னாக 20-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22-ந் தேதி பரிவார மூர்த்திகளுக்கு
குடமுழுக்கும், 24-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கும் நடைபெற உள்ளது. இதில்
18 ஆயிரம் பக்கம் 16 தொகுப்புகளாக திருமுறையும், 14 சாஸ்திரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து சீர்காழி தமிழ்ச் சங்கத்தை ஆதீனம் தொடங்கி வைத்தார். பேட்டியின் போது தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத
தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாகி செந்தில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர்
சரண்ராஜ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து, பாலசுப்பிரமணியன், கோவி நடராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான பூச்செடிகளை ஆதீனம் நட்டு வைத்தார்.