search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marriage stopped"

    கொடைக்கானல் மலை கிராமத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே உள்ள மலை கிராமமான புளியன்கோம்பையில் 9-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் 37 வயதுடைய ஆணுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இது குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சைல்டு லைன் குழுவினர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஞ்சனா, கிராம சேவகர் சந்திரா, குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஆகியோர் புளியன்கோம்பை கிராமத்துக்கு சென்றனர்.

    மாணவியின் பெற்றோரிடம் 18 வயதுக்கு குறைந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் குற்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எடுத்துரைத்து அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.

    18 வயது நிரம்பாமல் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் சைல்டு லைன் அமைப்பின் துணை மைய இயக்குனர் ராஜா முகமது தெரிவிக்கையில் சிறுமிக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு 18 வயது வரை சைல்டு லைன் பாதுகாப்பில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி இடை நிற்றல் குழந்தைகளால்தான் பெரும்பாலும் இளம் வயது திருமணங்கள் நடக்கிறது. இது குறித்து மலைகிராமங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

    ஆரணி அருகே தி.மு.க. பேனர் வைக்கப்பட்டதால் தகராறு ஏற்பட்டு தாலிகட்டும் நேரத்தில் திருமணம் நின்றது. இதனால் மணப்பெண் உறவினரை மணந்தார்.

    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள ராந்தம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். தி.மு.க. பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மகள் சந்தியா. இவருக்கும் அரையாளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். மாப்பிள்ளை வீட்டார் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். மணமக்களை வாழ்த்தி ராஜகோபால் தரப்பினர் தி.மு.க. பேனர் வைத்தனர். தி.மு.க. கட்சி கொடி கட்டியிருந்தனர்.

    நேற்று இரவு மணமக்கள் அழைப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


    இன்று அதிகாலை திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்தது. அப்போது மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த தி.மு.க. பேனரால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. திருமண செலவு எங்களுடையது அதில் மணப்பெண் வீட்டார் எப்படி தி.மு.க. பேனர் வைக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். இது பின்னர் மோதலாக மாறியது. கைக்கலப்பும் ஏற்பட்டது.

    இதனால் திகைத்து போன மணப்பெண் சந்தியா திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பிரச்னை என்றால் இன்னும் பின்னர் என்ன பிரச்னை எல்லாம் ஏற்படுமோ என பயந்தார். இதனால் எனக்கு இந்த திருமணத்தில் விரும்பமில்லை என்று கூறினார்.

    இதனால் மணமகன் வீட்டார் கோபித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

    திகைத்து போன மணப்பெண் வீட்டார் எப்படியும் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என எண்ணினர். ராஜகோபாலின் தங்கை மகன் ஏழுமலை (27) என்பவரிடம் திருமணம் குறித்து பேசினர். அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து ஏழுமலைக்கும் சந்தியாவுக்கும் அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மயிலாடுதுறை அருகே 10-வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழன் பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அதே பகுதியை சேர்ந்த 10-வகுப்பு மாணவிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று காலை திருமண நடைபெற இருப்பதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவகுமாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை குழந்தைகள் நலக்குழுவை சேர்ந்த ரம்யா, கிரிஜா மற்றும் மயிலாடுதுறை மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமணத்துக்கு தயாராக இருந்த மாணவியை மீட்டனர்.

    மேலும் சிறுமியை திருமணம் செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த சண்முகம் மகன் சுரேஷ் (வயது 30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் டிரைவராக பணி புரிந்து வருவது தெரியவந்தது.

    மீட்கப்பட்ட சிறுமி போலீசாரின் பாதுகாப்பில் உள்ளார். இந்த குழந்தை திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் யார்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவெறும்பூர் அருகே மாப்பிள்ளை வீட்டினர் கூடுதல் வரதட்சணை கேட்டதால் நாளை நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
    மணப்பாறை:

    இதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி ராவுத்தான்மேட்டை சோந்தவர் சரவணன். இவரது மகன் மகேந்திரன். திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் கொள்முதல் பிரிவு அதிகாரியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை திருமணம் நடைபெற இருந்தது. மாப்பிள்ளை வீட்டினர் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் காருக்கு பதில் ரூ. 5 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் நாளை காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மகேந்திரன் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் . அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதராணி இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசினார்.

    ஆனால் மகேந்திரன் தரப்பினர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் வரதட்சணை, பெண் வன்கொடுமை மற்றும் மிரட்டியது என 3 பிரிவின் கீழ் மகேந்திரன், அவரது தாய் பாப்பாத்தி, தந்தை சரவணன், தங்கை மகாலட்சுமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மகேந்திரனை கைது செய்தனர். மேலும் பாப்பாத்தி, சரவணன், மகாலட்சுமி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    திருச்சியில் நாளை நடைபெற இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியர் திருமணம் ரூ.15 லட்சம் வரதட்சணை பிரச்சனையால் நிறுத்தப்பட்டது. #Dowryharassment
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் துவ ரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சூரியகலா. இவருக்கும் மணப்பாறை அருகே சாம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது 32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் நாளை (12-ந்தேதி) மணப்பாறையில் நடைபெறுவதாக இருந்தது. அருண்குமார் மணப்பாறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.



    இந்த நிலையில் அவர், சூரியகலாவிடம் தனக்கு ரூ.15 லட்சம் வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், இல்லையென்றால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று கூறினாராம்.

    இதனால் மனம் உடைந்த சூரியகலா, இது தொடர்பாக அருண்குமாரின் தாய் மல்லிகா, மாமா கிருஷ்ணன், சகோதரி ஜெயபிரபா ஆகியோரிடம் கூறியுள்ளார். அவர்களும் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சூரியகலா ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். இருப்பினும் ரூ.15 லட்சத்தை முழுமையாக தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட சூரியகலா, மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், அருண்குமார் மற்றும் மல்லிகா, கிருஷ்ணன், ஜெயபிரபா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் அருண்குமார் தரப்பில் சப்-இன்ஸ்பெக்டர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    நாளை நடைபெற இருந்த திருமணம் வரதட்சணையால் நிறுத்தப்பட்டு விட்டது. #Dowryharassment
    அஞ்சுகிராமம் அருகே பெண் என்ஜினீயர் திடீரென மாயமானதால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.
    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான இளம்பெண் ஒருவருக்கு, அவரது பெற்றோர் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

    அப்போது நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பற்றி அவர்களுக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து பெண் வீட்டார் அவரை தங்கள் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இரு வீட்டாரும் கலந்து பேசி உறவினர்களுடன் சென்று அது பற்றி பேசினார்கள். இருவீட்டாருக்கும் அதில் பூர்ண திருப்தி ஏற்பட்டதால் இந்த திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டது.

    மேலும் பெண் என்ஜினீயருக்கும் அந்த வாலிபருக்கும் மிகவும் சிறப்பாக நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் திருமணத்தை இன்று நடத்து வது என்றும் நாள் குறிக்கப்பட்டது. இதனால் இரு வீட்டாரும் திருமண வேலைகளை தொடங்கினார்கள். திருமண அழைப்பிதழ்களும் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இரவு வீட்டில் இருந்த மணப்பெண் திடீரென்று மாயமானார். திருமணம் நடைபெற நாள் நெருங்கிவிட்ட நிலையில் அவர் மாயமானது அந்த குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்கள் தங்கள் மகளை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். நேற்று வரை தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்றும் தெரியவில்லை.

    இதைதொடர்ந்து அவர்கள் மணப்பெண் மாயமானது பற்றி மாப்பிள்ளை வீட்டாருக்கு தகவல் தெரிவித்தனர். மாப்பிள்ளை வீட்டில் திருமணத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட வந்த நிலையில் உறவினர்களும் அவர்களது வீட்டிற்கு வந்திருந்தனர்.

    மணப்பெண் மாயமானது குறித்து அதிர்ச்சி தகவல் கிடைத்ததும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார்கள். மகிழ்ச்சியாக காணப்பட்ட திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. உடனடியாக திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

    இதற்கிடையில் திருமணம் நிறுத்தப்பட்டது பற்றிய தகவல் தெரியாத உறவினர்கள் பலர் இருவீட்டிற்கும் வந்தனர். அதன்பிறகே அவர்களுக்கு மணமகள் மாயம் காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர்களும் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.
    காதலியுடன் ஏற்பாடு செய்த திருமணத்தை தள்ளி வைத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் பிள்ளையார் குப்பம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 28). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு லாஸ்பேட்டையில் தற்காப்பு கலை பயிற்சி, நடன வகுப்பு நடத்தி வருகிறார்.

    இவர் முத்தியால் பேட்டையில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் இவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இருவர் வீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். மேலும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

    இந்த நிலையில் பெண் வீட்டில் சில வருடம் கழித்து திருமணம் செய்யலாம் என கூறி அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தினர். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த ராமதாஸ் சில நாட்கள் வீட்டுக்கு செல்லாமல் பயிற்சி மையத்திலேயே தங்கினார்.

    நேற்று வீட்டுக்கு வந்த ராமதாஸ் உடனே கிளம்பினார். அவரது சித்தப்பா புகழேந்தி (52) ஏன் உடனே செல்கிறாய்? என கேட்டார்.

    அதற்கு பதில் சொல்லாமல் பயிற்சி மையத்துக்கு சென்று சித்தப்பாவுக்கு போன் செய்தார். எதுவும் பேசாமல் வைத்து விட்டார்.

    அவரது சித்தப்பா மீண்டும் போன் செய்து பார்த்தார். மறுமுனையில் போனை எடுக்கவில்லை. எனவே, சந்தேகத்தில் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கு ராமதாஸ் மின் விசிறி கொக்கியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ராமதாஸ் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், எனது சாவுக்கு நான் தான் காரணம். எனக்கு வாழ பிடிக்கவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.

    அரச்சலூர் அருகே மணமகன் வராததால் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கோப்பம் பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் பொன்மணிகண்டனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று அரச்சலூரில் உள்ள கோவிலில் நடப்பதாகவும், பின்னர் விருந்து வைபவங்கள்அரச்சலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடப்பதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    திருமணத்துக்காக நேற்று இரவே மணமகன் திருமண மண்டபத்துக்கு வந்து விடுவார் என மணமகன் வீட்டார் தெரிவித்து இருந்தனர். அதன்படி மணமகன் வீட்டை சேர்ந்த பலரும் திருமண மண்டபத்துக்கு வந்து விட்டனர்.

    ஆனால் மணமகன் வர வில்லை எனவே மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். திருமண மண்டபத்துக்கு வந்திருந்த மணமகன் வீட்டாரிடம் இதுபற்றி கேட்டனர். ஆனால் அவர்களிடம் சரியான பதில் கிடைக்கவில்லை.

    மணமகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். போன் ரிங் ஆனது. ஆனால் போனை மணமகன் எடுக்கவில்லை. மணமகன் திடீரென மாயமானதால் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் செய்வதறியாது விழித்தனர்.

    நேற்று இரவு நடக்க வேண்டிய திருமண நிகழ்ச்சிகள் ஏதும் நடக்க வில்லை. இதனால் திருமண கனவில் இருந்த மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.

    மணமகன் வரவில்லை என்ற தகவல் அறிந்த அவர் திருமண மண்டப அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணமகளை மீட்டனர்.

    இதற்கிடையே இன்று காலை திருமணம் நடக்க இருப்பதால் மணமகன் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் காலையிலும் மணமகன் திருமண மண்டபத்துக்கு வரவில்லை. இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றது.

    திருமண நிகழ்ச்சிக்காக நேற்று இரவு சாப்பாடு தயார் செய்யப்பட்டிருந்தது. மணமகன் மாயமானதால் விருந்து நிகழ்ச்சி நடைபெற வில்லை. இன்று காலை சாப்பாடு தயார் செய்யப்படவில்லை.

    திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணமகள் மற்றும் மணமகன் உறவினர்கள் திருமண மண்டபத்துக்கு வந்தனர். திருமணம் நின்றுபோன தகவல் அறிந்து அவர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அரச்சலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    கும்பகோணம் அருகே 10-ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சுவாமிமலையை அடுத்த நாககுடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது ஆன 10-ம் வகுப்பு மாணவி தேவிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணம் செய்ய அவர்களது உறவினர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் இன்று (20-ந்தேதி) சுவாமிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    திருமணத்தையொட்டி இருவீட்டாரும் உறவினர்களுக்கு திருமண பத்திரிக்கை விநியோகித்து வந்தனர்.

    இதற்கிடையே மணமகள் தேவிக்கு 15 வயது ஆகிறது என்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவி என்றும் சுவாமிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரகசியமாக சிலர் போலீசுக்கு தெரியபடுத்தினர்.

    மாணவியின் திருமணத்தை தடுத்த நிறுத்த போலீசார் முடிவு செய்தனர். அதன் படி இன்று அதிகாலை 4 மணியளவில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையில் போலீசார் திருமண மண்டபத்திற்கு சென்றனர். மண்டபத்தில் இருவீட்டார் உறவினர்களும் திரண்டு இருந்தனர்.

    அப்போது மணமக்களின் பெற்றோரை அழைத்து இன்ஸ்பெக்டர் ரேகாராணி பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவிக்கு சட்டபடி திருமண வயதை எட்டவில்லை. திருமணம் செய்து வைத்தால் சட்டபடி குற்றம். எனவே திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூறினார். இதை ஏற்று இரு வீட்டாரும் திருமணத்தை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

    திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதால் வந்திருந்த உறவினர்கள் சோகம் அடைந்தனர். அவர்கள் மணமக்களை வாழ்த்த முடியவில்லை என ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ×