search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motor cycle theft"

    • போலீசார் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவது போல் சமூகவலைதள விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணில் பேசினர்.
    • கூட்டாளிகள் யார்?யார்? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி, ஸ்ரீபத்மா அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக். கல்லூரி மாணவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அப்துல்ரசாக்கின் மோட்டார் சைக்கிள் அதே பதிவு எண்ணுடன் விற்பனைக்காக சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதனை அறிந்த அப்துல்ரசாக் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவது போல் அந்த சமூகவலைதள விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணில் பேசினர். அப்போது அதில் பேசிய வாலிபர் மோட்டார் சைக்கிள் விற்பனைக்காக மன்னார்குடியில் இருப்பதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மன்னார்குடிக்கு விரைந்து சென்று அப்பகுதியை சேர்ந்த முனீஸ் (23), என்பவரை கைது செய்தனர். அவர் மோட்டார் சைக்கிளை திருடி இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய அதே பதிவு எண்ணுடன் படத்தை வெளியிட்டதால் அவர் சிக்கிக்கொண்டார். கைதான முனீஸ் இதுபோல் வேறு எந்தெந்த இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார். கூட்டாளிகள் யார்?யார்? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாட்டியாலாவில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.
    • போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்களே கொள்ளையர்களை பிடிக்க ரோந்து சென்றனர்.

    குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் திருடர்கள் கையில் அகப்பட்டால் அவர்களுக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பஞ்சாப்பில் மோட்டார் சைக்கிள் திருடர்களுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பாட்டியாலாவில் உள்ள கிராமங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.

    இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்களே கொள்ளையர்களை பிடிக்க ரோந்து சென்றனர். அவ்வாறு சென்றபோது அங்குள்ள ஒரு கிராமத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். உடனே அவருக்கு கழுத்தில் மாலை அணிவித்து கைத்தட்டி மரியாதை செய்ததோடு, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் இவ்வாறு செய்தால் திருடர்கள் மீண்டும் திருட மாட்டார்கள் என்றனர்.

    • மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபர்களை போலீசார் வழிமறித்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் படப்பை அருகே உள்ள சிறுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (வயது 37), ஆத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (29) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியது தெரியவந்தது.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.

    • கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள டூவீலர் பட்டறைக்கு சென்றபோது, அங்கு பட்டறை உரிமையாளர், வேலுவின் டூவீலரில் கிளச் போன்றவற்றை சரி செய்து கொண்டிருந்தார்.
    • ராஜாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் தனது நண்பரை பார்க்க, நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் வந்தார். கேன்டீன் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு சென்ற அவர், சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, அவரது வண்டியை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், எனது வண்டியே மிகவும் பழையது. அதையும் திருடிச்சென்று விட்டார்களா? என்ற வேதனையுடன் வண்டியை தேடினார். சாவி தன்னிடம் இருப்பதால், யாராவது தள்ளிக்கொண்டு தான் சென்றிருக்க வேண்டும் என முடிவு செய்த அவர், நீண்ட தூரம் வண்டியை தள்ளிச் சென்றிருக்க முடியாது என கருதி, தனது நண்பருடன் வண்டியை தேடத் தொடங்கினார்.

    அப்போது, கலெக்டர் அலுவலகத்தின் பின் பகுதியில் உள்ள டூவீலர் பட்டறைக்கு சென்றபோது, அங்கு பட்டறை உரிமையாளர், வேலுவின் டூவீலரில் கிளச் போன்றவற்றை சரி செய்து கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த வண்டியை கொண்டு வந்து ரிப்பேர் பார்க்க சொன்னது யார்? என கேட்டார். அப்போது, அங்கிருந்த மற்றொரு நபரை கடை உரிமையாளர் கைகாட்டினார்.

    இதற்கிடையில், அந்த நபர் பட்டறையின் எதிர்பகுதியில் உள்ள கோவிலில் இருந்து, எலுமிச்சை பழத்தை எடுத்து வந்து, திருடி வந்த வண்டிக்கு சிறிய பூஜையும் போட்டிருந்தார். இதுகுறித்து வேலு விசாரித்த போது, அவர் மன்னார்பாளையத்தை சேர்ந்த ராஜா (49) என்றும், அது தன்னுடைய வண்டி எனக் கூறினார்.

    இதனையடுத்து, அவரை நண்பர் உதவியுடன் மடக்கிப் பிடித்த வேலு, டவுன் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவர், 'என்னை திருடன்னு சொல்லாதீர்கள். எனது நண்பன் தான் வண்டியை கொடுத்தான்.

    எனது செல்போனும் அவனிடம் தான் இருக்கிறது. எனது 2 பிள்ளைகள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் திருடல, என்னை திருடன் என சொல்லாதீர்கள்,' என்றார்.

    இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, என்னை திருடன்னு சொல்லாதீர்கள் என்று அவர் கூறும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • பரமசிவன் என்பவரது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தங்கினார்.
    • ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க சென்றனர்.

    களக்காடு:

    கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள ஈத்தவிளையை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது40). இவர் கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவில் இவர் களக்காடு அருகே உள்ள வடமலை சமுத்திரத்திற்கு வாழைத்தார்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்குள்ள பரமசிவன் என்பவரது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தங்கினார். இரவில் மோட்டார் சைக்கிளை இயக்கும் சத்தம் கேட்டு, அவர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நந்து (19), காருக்குறிச்சியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் வேல்சாமி (18), சேரன்மகாதேவியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்த ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க சென்றனர். அப்போது நந்து உள்பட 3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி விட்டு, மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம்அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக நந்து உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • விஜயகுமார் மோட்டார் சைக்கிள்களை திருடி குறைந்த விலைக்கு விற்று உல்லாச செலவு செய்து வந்து உள்ளார்.
    • கைதான விஜயகுமார் மீது கடலூர், விழுப்புரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளன.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் மதுராந்தகம், மேல் மருவத்தூர், சித்தாமூர் திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.

    இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் போலீசாருக்கு வந்தன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சித்தாமூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அவர் கோயம்புத்தூரை சேர்ந்த விஜயகுமார் என்பதும் அச்சரப்பாக்கத்தில் உள்ள மலை மாதா கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடி வருவதும் தெரிந்தது. இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மோட்டார் சைக்கிள்களை திருடி குறைந்த விலைக்கு விற்று உல்லாச செலவு செய்து வந்து உள்ளார். அவரிடம் இருந்து மொத்தம் 54 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான விஜயகுமார் மீது கடலூர், விழுப்புரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளன.

    ஒரு இடத்தில் பிடிபட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் வேறு மாவட்டங்களுக்கு சென்று கைவரிசை காட்டுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மாயாண்டி தனது செல்போனை பார்த்த போது அதில் ஒரு ‘வாட்ஸ்-அப்’ குரூப்பில் அவரது மோட்டார் சைக்கிளின் படத்தை பதிவிட்டு விற்பனைக்கு என கூறப்பட்டிருந்தது.
    • போலீசார் விசாரணை நடத்திய போது மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தூத்துக்குடி மாவட்டம் அகரத்தை சேர்ந்த சிதம்பரம் சிவா என்பது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மானூர் ரஸ்தாவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 25). இவர் சம்பவத்தன்று நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு சென்றார்.

    அப்போது தனது மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இதுதொடர்பாக அவர் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் மாயாண்டி மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது.

    இந்நிலையில் மாயாண்டி தனது செல்போனை பார்த்த போது அதில் ஒரு 'வாட்ஸ்-அப்' குரூப்பில் அவரது மோட்டார் சைக்கிளின் படத்தை பதிவிட்டு விற்பனைக்கு என கூறப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்திய போது மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தூத்துக்குடி மாவட்டம் அகரத்தை சேர்ந்த சிதம்பரம் சிவா (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பஸ் ஸ்டாண்ட் எதிரே மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனை நடத்தினார்.
    • அப்போது அவ்வழியே வந்த நபர் போலீசாரை கண்டதும் மோட்டார்சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பியோட முயன்றான். போலீசார் அவனை மடக்கிப்பிடித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் அரசு மருத்துவமனை, சட்டபேரவை, கடற்கரை, பூங்கா, விடுதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடந்த 3 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருடுபோனது.

    ஒரே நாளில் 4,5 இடங்களில் வாகனங்கள் திருடப்பட்டது. கோரிமேடு, முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, பெரியகடை, ஒதியஞ்சாலை என நகரின் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வாகனங்கள் திருடப்பட்டதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    ஒரே நபரே இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து திருடுபோன இடங்களுக்கு அருகில் இருந்த கண்காமிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது அரசு மருத்துவமனை அருகே 40 வயதுடைய ஒரு நபர் முன்வாசலில் செல்வதும், பின்னர் பின்வாசல் வழியாக வந்து நோட்டமிட்டு, ஒரு வாகனத்தை திருடி செல்வதும் பதிவாகியிருந்தது.

    இதே நபர் பல்வேறு இடங்களில் வாகன திருட்டிலும் ஈடுபட்டது கேமரா பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த நபரின் போட்டோவை வைத்து போலீசார் ரகசியமாக புதுவை முழுவதும் சோதனை நடத்தினர்.

    உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பஸ் ஸ்டாண்ட் எதிரே மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனை நடத்தினார்.

    அப்போது அவ்வழியே வந்த நபர் போலீசாரை கண்டதும் மோட்டார்சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பியோட முயன்றான். போலீசார் அவனை மடக்கிப்பிடித்தனர். அப்போது அவன்தான் பலே வாகன திருடன் என தெரியவந்தது. விசாரணையில், அவன் வேலூர் மாவட்டம் ஆற்காடை சேர்ந்த சேகர் என்ற தனசேகர் (43) என்பதும், 3 மாதம் முன்பு வாகன திருட்டு வழக்கில் வேலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியவந்ததும் தெரியவந்தது.

    நாள்தோறும் வேலூரில் இருந்து புதுவைக்கு பஸ்சில் வரும் இவன், மக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்வான். எளிதில் திறக்க கூடியது, கூடுதல் பூட்டு போடாத வாகனங்களை தேர்வு செய்து திருடுவான். அதனை ஓட்டிச்சென்று புதுவை மாநில எல்லைகளில் நிறுத்தி விட்டு மீண்டும் பஸ்சில் ஏறி புதுவைக்கு வந்து மற்றொரு வாகனத்தை திருடுவான்.

    அதுபோல் ஒரே நாளில் 4 அல்லது 5 வாகனங்களை திருடிச் செல்வான். தமிழக பகுதியில் சாராயம் கடத்துவோரிடம் இந்த வாகனங்களை கிடைத்த விலைக்கு விற்று விட்டு இரவு சொந்த ஊருக்கு சென்று விடுவதை தினசரி வாடிக்கையாக வைத்திருந்த விசாரணையில் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையின்படி, தமிழகத்தில் பதுக்கிய 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    போலீசாரிடம் பலே திருடன், அனைத்து வாகன திருட்டையும் ஒரே வழக்காக பதிவு செய்து, விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யுங்கள். அப்போதுதான் நான் வழக்கை முடித்துவிட்டு வேறு ஊருக்கு செல்ல முடியும் என கூறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    தக்க ஆதாரங்களுடன் பிடிபட்டுள்ள பலே மோட்டார்சைக்கிள் திருடன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    அதேவேளையில் திருடனுக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் தகுந்த ஆதாரங்களை சமர்பித்து தண்டனை வாங்கித்தர வேண்டும் என்பது வாகனங்களை பறிகொடுத்தவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

    கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், ஆண்டியப்பன் தெருவை சேர்ந்தவர் சாந்தாராமன் மகன் பிரவீன் (27). இவர் கடந்த 14-ந்தேதி வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த 14 ந்தேதி மர்ம நபர்கள் அதனை திருடி சென்றனர்.

    இதே போல் கும்பகோணம், செம்போடையை சேர்ந்தவர் ஞானசம்பந்தம் மகன் வைரவேந்தன் (26), இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார் கடந்த 14 ந்தேதி இரவு மர்ம நபர்கள் அதனை திருடி சென்றனர்.

    இது குறித்து பிரவீன் மற்றும் வைரவேந்தன் ஆகியோர் மேற்கு போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, தாராசுரம், எலுமிச்சங்கா பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தீனதயாளன் (28), மாரி முத்து மகன் தாமோதரன் (24) மற்றும் மதுக்கூர், ராமானந்தபுரத்தை சேர்ந்த ரவி மகன் சிவபாரதி (20) ஆகியோரை கைது செய்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி கருவலூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை கோவிலின் அருகே நிறுத்திவிட்டு சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து 2 பேரும் அவினாசி போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சம்பங்கி தலைமையில் போலீசார் நேற்று காலை 5 மணி அளவில் கருவலூர் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் திரும்பி தப்பிக்க முயன்றனர். உடனடியாக போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர் .

    விசாரணையில் அவர்கள் 2 பேரும் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்த ஆசிக் (வயது 21), ரைஸ்தீன் (20) என்பதும் கருவலூர் மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் உள்பட 4 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளை திருடியதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    நீலாங்கரையில் 4 மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை நீலாங்கரை, சோழ மண்டல தேவி நகர், முதல் தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவரின் மோட்டார்சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் அக்கரை சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவருடைய பெயர் நந்த குமார் என்பதும் நீலாங்கரையைச் சேர்ந்த இவன் பல இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவனை போலீசார் கைது செய்து அவனிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    போடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மூலம் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாயனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தேவர் காலனி, கிருஷ்ணாநகரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நகர் பகுதியில் வரும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டனர்.

    அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி சோதனை போட்டனர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் 150 மதுப்பாட்டில்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக போடி சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த கருப்பையா, சின்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ×