என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mystery fever"
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜனனிக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- கல்லூரி மாணவி மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கள்ளியம்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அலமுலு (38). இவர்களது மகள் ஜனனி (19). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜனனிக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் பாதித்த ஜனனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.
- ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பம், ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் புவியரசன். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்தி சரவணன் (வயது9). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக சக்தி சரவணன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரை கடந்த 8-ந்தேதி வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவரது உடல் நிலை மேலும் மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சக்தி சரவணனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை சிறுவன் சக்தி சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவமுகாம் அமைத்து காய்ச்சல் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்து வருகிறார்கள். ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கை இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலர் அரூரில் உள்ள சேலம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
- 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சூரம்பட்டியைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரிகளின் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் சிலர் அரூரில் உள்ள சேலம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிரியின் உறவினர்களான சூரம்பட்டியைச் சேர்ந்த சம்பத், அரசு, அழகு, குமார், ரமேஷ், அழகேசன், கண்ணையன், வினோத் குமார், தாமோதரன், சீனிவாசன் மற்றும் ஜடையம்பட்டியைச் சேர்ந்த ரவி உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலை மறியலின் போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- தகவலறிந்த வட்டாட்சியர் பெருமாள் இறந்து போன கிரியின் தந்தை மற்றும் உறவினர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகரசன் மகன் கிரி (வயது22) என்பவர் கடந்த சிலதினங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அவர் சிகிச்சைக்கு வந்தபோது உடல் நலிவுற்று இருந்ததை பார்த்து தனியார் மருத்துவமனை டாக்டர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தார்.
உடனே கிரியை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, அங்கு கிரியை பரிசோதனை செய்த போது இறந்து விட்டதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து உறவினர்கள் கிரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியும் தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உடலை வாங்க மறுத்து அரூரில் உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் ஆகாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலின் போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த வட்டாட்சியர் பெருமாள் இறந்து போன கிரியின் தந்தை மற்றும் உறவினர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு கிரியின் இறப்பிற்கு மருத்துவர்கள் தான் காரணம் என தெரிய வந்ததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததார்.
இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கிரியின் தந்தை அழகரசன் கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் கிரிக்கு சிகிச்சை அளித்த 2 தனியார் மருத்துவமனையின் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலுக்காக அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிரி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் கிரி எந்தவிதமான உணர்வு இல்லாமல் இருந்ததால் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சூரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகரசன். இவரது மகன் கிரி (22). இவர் அரசு ஐ.டி.ஐ முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலுக்காக அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து நேற்று காலை வீடு திரும்பியுள்ளார். மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இன்று மாலை ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்த போது இளைஞர் கிரிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
சிகிச்சை அளித்த சிறிது நேரத்தில் இளைஞர் கிரி எந்தவிதமான உணர்வு இல்லாமல் இருந்ததால் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.
பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் அளித்துள்ளனர். மர்ம காய்ச்சலால் ஐடிஐ மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.
சிவகிரி:
சிவகிரியை அருகே உள்ள தாண்டாம்பாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர்கள் சுகுமார். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 9 வயதில் ஒரு ஆண் குழந்தையும், எட்டு மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த பெண் குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. மர்ம காய்ச்சலால் அந்த குழந்தை இறந்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து தாண்டாம்பாளையத்தின் உள்ள அந்த குழந்தையின் வீடு அமைந்துள்ள 13-வது வார்டு முழுவதும் பொதுமக்களுக்கு பரிசோதனைகளை நடத்தி தடுப்பு மருந்துகளை சுகாதாரத்துறையினர் வழங்கினர்.
தாண்டாம்பாளையத்தில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
- ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே பனியின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சீதோஷண நிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி மட்டுமல்லாது பாவூர்சத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் அறிகுறியாக வெள்ளையனுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படும் ஏராளமான சிறுவர்கள்-சிறுமியர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நகரங்களை விட கிராமங்களில் அதிக அளவு பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை அறியமுடியாமல் சுகாதாரத்துறையினர் தவிக்கின்றனர்.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முரளி சங்கர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட உடையாம்புளி, ஓடைமறிச்சான், மருதம்புத்தூர், மாறாந்தை, நாலாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்தது. இதையடுத்து காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதிகளில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். கொசு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் அனைத்து யூனியன்களின் வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தி காய்ச்சல் பாதிப்புள்ள இடங்களில் கூடுதல் பணியாளர்கள் நியமித்துள்ளோம்.
ஆலங்குளம் யூனியனில் 60 பணியாளர்களும், பேரூராட்சியில் 30 பணியாளர்களும் கூடுதலாக நியமனம் செய்து வீடு வீடாக சென்று குடிநீரை ஆய்வு செய்தல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருகிறது. சமீபத்தில் 2 சிறுமிகள் உயிரிழந்தது மூளை காய்ச்சலால் தான். நேற்று கடையம் பகுதியில் இறந்த 8 மாத சிறுவன் சமீபத்தில் 4 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுவந்துள்ளான். அதன்பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.
பெரும்பாலும் டெங்குவில் இருந்து மீள ஒவ்வொருவரின் உடலிலும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 2.50 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலும் இருந்தால் போதுமானது. பொதுமக்கள் தங்களது பகுதியில் கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியை நாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுமிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
- காய்ச்சல் வந்த மூன்றே நாட்களில் மகளை இழந்து தவிக்கிறோம் என்று பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர்.
போரூர்:
மதுரவாயல் வேல்நகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மனைவி சுஜிதா. இவர்களது மூத்த மகள் பூஜா (வயது 13). விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பூஜாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்து சென்றனர். அப்போது பூஜாவுக்கு லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பூஜாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பூஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, மகளுக்கு டெங்கு காய்ச்சலா? பன்றி காய்ச்சலா ? அல்லது எச்1 என் 1 ப்ளூயன்சா வைரஸ் பாதிப்பா? என எந்தவிதமான உரிய விளக்கமும் டாக்டர்கள் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை. காய்ச்சல் வந்த மூன்றே நாட்களில் மகளை இழந்து தவிக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமி வசித்த பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மண்டல சுகாதார அதிகாரி பிரபாகரன் கூறும்போது:-
சிறுமியின் மருத்துவ அறிக்கை இதுவரை எங்களுக்கு வரவில்லை. அதன் பின்னரே சிறுமி இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவரும் மேலும் 144-வது வார்டுக்கு உட்பட்ட அந்த பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் வழக்கமாக கொசு மருந்து அடிப்பது, மற்றும் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவது ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு சிறுமிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் மர்ம காய்ச்சல் அவர்களுக்கு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் கீழ தெருவை சேர்ந்தவர் பழனி. கூலி தொழிலாளி. இவரது மகள் சுப்ரியா(வயது 7). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சொரிமுத்து.
இவரது மகள் பூமிகா(6). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த 2 சிறுமிகளுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பாதிப்பு தீவிரம் அடைந்ததால் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பூமிகா உயிரிழந்தார். மிகவும் கவலைக்கிடமாக இருந்த சிறுமி சுப்ரியாவும் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் காசிநாதபுரம் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு சிறுமிகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் மர்ம காய்ச்சல் அவர்களுக்கு ஏற்பட்டதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவியது.
இதையடுத்து அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு செய்ததில், வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் காசிநாதபுரத்தின் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளது. அதில் ஏற்பட்ட உடைப்பில் இருந்து வெளியேறும் நீரை அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் எடுத்து பயன்படுத்தியது தான் மர்ம காய்ச்சலுக்கு காரணம் என கண்டுபிடித்தனர். தொடர்ந்து அங்கு தெருக்கள் தோறும் பிளீச்சிங் பவுடர் தூவினர். ஆலங்குளம் சுற்றுவட்டார கிராமங்களான மருதம்புத்தூர், கண்டபட்டி, புதுப்பட்டி, காசிநாதபுரம், காத்தபுரம், உடையாம்புளி, இலந்தகுளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாரத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இருந்து 10 கிலோமீட்டருக்கும் குறைவாகவே இந்த கிராமங்கள் உள்ளன. வற்றாத ஜீவநதி ஓடும் எங்கள் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. எங்களை கடந்து சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல கிலோமீட்டர் தூரம் கடந்து குடிதண்ணீர் செல்கிறது. ஆனால் எங்களுக்கு வாரம் ஒரு முறை குடிநீர் வருவதே கடினமாக உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட அனைவரிடமும் முறையிட்டாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே துயர நிலை தான் நீடிக்கிறது என்றனர்.
கோவை மாவட்டம் கஞ்சம்பட்டி அருகே உள்ள கே.நாகூரை சேர்ந்தவர் ஜெசன். இவரது மகன் ஜெரீன் (வயது 16). இவர் புளியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜெரீன் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை அவரது பெற்றோர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெரீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள ஓடைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் மேகா (வயது 7). இவள் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக மேகா காய்ச்சலால் அவதிப்பட்டார். இதற்காக சிகிச்சை எடுத்தபோதும், காய்ச்சல் குணமாகவில்லை. இதனைத் தொடர்ந்து வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மேகா பரிதாபமாக இறந்தார்.
மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலியான சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கே. முத்துகவுண்டனூரை சேர்ந்தவர் சேகர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மதுஸ்ரீ (வயது 5).
இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
நேற்று மாலை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியின் உடல் நிலை திடீரென மோசமானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு சிறுமியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மதுஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்