என் மலர்
நீங்கள் தேடியது "NIA Raid"
- சையது யூசுப் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்றார்.
- சையது யூசுப்பின் செல்போன்கள், வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், ஆவணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கங்கள், அதனுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமான செயல்பாடுகள், இறையாண்மைக்கு குந்தகம் விடுக்கும் வகையிலான பயிற்சிகள் உள்ளிட்டவை தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அந்த வகையில் ராமேசுவரத்தில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகேயுள்ள மீனவ கிராமமான தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் சையது யூசுப் (வயது 30). இவரது தந்தை அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இதற்கிடையே சையது யூசுப் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு 6 மாதங்கள் வரை தங்கியிருந்த அவர் மீண்டும் சொந்த ஊர் திரும்பினார்.
துபாய் நாட்டில் சையது யூசுப் தங்கியிருந்த நாட்களில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் அவர் தொடர்பு வைத்திருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சொந்த ஊர் திரும்பிய சையது யூசுப்பை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அவரது செயல்பாடுகள், யார், யாருடன் பேசி வருகிறார் என்பது போன்ற தகவல்களை சேகரித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 5.40 மணிக்கு தங்கச்சிமடம் கிராமத்துக்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் சென்ற 7 என்.ஐ.ஏ. அதிகாரிகள் சையது யூசுப் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த அவர் மற்றும் குடும்பத்தினர் யாரையும் வெளியில் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. மேலும் சையது யூசுப்பின் செல்போன்கள், வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், ஆவணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
4 மணி நேர சோதனைக்கு பிறகு அங்கிருந்த புறப்பட்ட அதிகாரிகள் எந்தவித ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை. ஆனால் சையது யூசுப்பிடம், அவர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது, மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணைக்கு அழைக்கும்போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
மீனவ கிராமத்தில் அதிரடியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியது அப்பகுதியினரை பரபரப்புக்கு உள்ளாக்கியது.
- கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச்சேர்ந்த சீயித் நபீல்அகமது என்பவரை என்.ஐ.ஏ. போலீசார் தேடி வந்தனர்.
- சென்னை பாடி பகுதியில் பதுங்கி இருந்த அவரை என்.ஐ.ஏ. போலீசார் நேற்று அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சென்னை:
தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் இந்தியா முழுவதும் தங்கள் அமைப்பை வலுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. ஐ.எஸ். அமைப்பைச்சேர்ந்தவர்களை என்.ஐ.ஏ. போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். கேரள மாநிலம் கொச்சி என்.ஐ.ஏ. போலீசார் கடந்த ஜூலை மாதம் ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த வழக்கின் அடிப்படையில், ஏற்கனவே 2 பேரை என்.ஐ.ஏ. போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச்சேர்ந்த ஆசீப் என்பவர் ஆவார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச்சேர்ந்த சீயித் நபீல்அகமது என்பவரை என்.ஐ.ஏ. போலீசார் தேடி வந்தனர். அவர் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐ.எஸ். அமைப்புக்கு தீவிரமாக பணம் சேகரித்தல், ஆட்களை சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
அவர் சென்னையில் பதுங்கி இருந்து கொண்டு, போலி ஆவணங்கள் மூலம் நேபாள நாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சிப்பதாகவும் என்.ஐ.ஏ. போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சென்னை பாடி பகுதியில் பதுங்கி இருந்த அவரை என்.ஐ.ஏ. போலீசார் நேற்று அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஐ.எஸ். அமைப்பு தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களை என்.ஐ.ஏ. போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் கேரளா கொண்டு செல்லப்பட்டு, தீவிர விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
- தமிழகம் முழுவதும் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக சுமார் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
- கடையநல்லூருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 2 கார்களில் 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு வந்தது.
கடையநல்லூர்:
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை பிரிவு (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக சுமார் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அதன்படி தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு 2 கார்களில் 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு வந்தது.
அங்கு ரசாலிபுரம் தெருவை சேர்ந்த முகமது இத்ரிஸ்(வயது 25) என்பவரது வீட்டுக்குள் என்.ஐ.ஏ. குழு நுழைந்தது. என்ஜினீயரான இவர் சென்னையில் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று அதிகாலை 5.30 மணி முதல் அவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையின்போது, முகமது இத்ரிசின் செல்போனுக்கு அடிக்கடி தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்து குறுந்தகவல்கள் வந்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் இன்று என்.ஐ.ஏ. குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது.
- காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கும் தொடர்பு இருப்பது குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. சேகரித்துள்ளது.
புதுடெல்லி:
கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கனடாவில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு, இந்தியா மீது கனடா குற்றம் சுமத்தியதால் இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது. மேலும் கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜாருக்கு சொந்தமான பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சொத்துகள், சீக்ஸ் பார் ஜஸ்ட்டிஸ் அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங்குக்கு சொந்தமான சண்டிகர் வீடு ஆகியவற்றை என்.ஐ.ஏ. முடக்கியது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 19 பேரின் சொத்துகளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஸ்பான்சர் விசாக்கள் மூலம் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து கனடாவுக்கு அழைத்துச் சென்று காலிஸ்தான் படையை உருவாக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஞ்சாப், அரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை இல்லாமல் பரிதவித்து வரும் இளைஞர்களைக் குறிவைத்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் பணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித செலவும் வைக்காமல் ஸ்பான்சர் விசாக்களை தயார் செய்து, கனடாவுக்கு அழைத்துச் சென்று குருத்வாராக்களில் பணி, நடுத்தர திறன் படைத்த வேலை போன்றவற்றில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேர்த்து விட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கை இந்தியாவில் தொடர்வதை தடுக்கும் வகையில் இன்று அதிகாலை முதல் 6 மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் 30 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்கள், அரியானாவில் 4 இடங்கள், உத்தரகாண்டில் 2 இடங்கள், டெல்லி-என்சிஆர் மற்றும் உ.பி.யில் தலா 1 இடங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன.
பயங்கரவாதிகளுக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும் இடையிலான உறவை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் என்.ஐ.ஏ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்பினர், ஹவாலா மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் பயங்கரவாதிகள் மற்றும் கும்பல்களுக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை சப்ளை செய்கின்றனர்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கும் தொடர்பு இருப்பது குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. சேகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே சோதனை நடைபெற்று வருகிறது.
காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் மீதான கனடா அரசின் மென்மையான போக்கின் காரணமாக அவர்கள் அங்கு அதிக வளர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் கனடாவில் வசிக்கும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை மிரட்டுவதற்கும், அங்குள்ள குருத்வாராக்களை சேதப்படுத்தி அச்சுறுத்துவதற்கும் இளைஞர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளாகவே கனடா மண்ணில் பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைளில் காலிஸ்தான் ஆதரவு சக்திகள் ஈடுபட்டு வருகின்றன என்கின்றனர் இந்திய அதிகாரிகள்.
- திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிரடி சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.
- திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.
திருப்பதி:
ஆந்திராவில் இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திரா முழுவதும் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிரடி சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பல்வேறு இடங்களை சேர்ந்த தலைவர்களின் வீடுகள், வக்கீல்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புகுந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சோதனையின்போது அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுலகங்களின் வெளிப்புற கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனை நடத்தினார்கள். சோதனை நடத்தியபோது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்களை அதிகாரிகள் வெளியே அனுமதிக்கவில்லை.
அதேபோல் வெளியில் இருந்தும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
- முகம்மது தாஜூதீனின் செல்போனில் பதிவான பல்வேறு தகவல்கள் ஆய்வுக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ளூர் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மதுரை:
மதுரையில் இஸ்லாமிய இளைஞரிடம் தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி அவரது செல்போன் மற்றும் சிம் கார்டை பறிமுதல் செய்தனர்.
நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய அமைப்புகள் மற்றும் நபர்களிடம் தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்
தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள காஜிமார் தெரு பகுதியைச் சேர்ந்த முகம்மது தாஜூதீன் (வயது 26) என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை சந்தேகத்தின்பேரில் அழைத்து சென்று போலீஸ் கிளப்பில் வைத்து விசாரணை நடத்தினர். அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பீகாருக்கு சென்றபோது சந்தேகத்துக்குரிய சிலரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக முகமது தாஜூதீனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
2 மணிநேர விசாரணை முடிவடைந்த நிலையில் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டை பறிமுதல் செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
முகம்மது தாஜூதீனின் செல்போனில் பதிவான பல்வேறு தகவல்கள் ஆய்வுக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தாஜூதீன் யார், யாரிடம் அடிக்கடி பேசி உள்ளார் என்ற விபரத்தையும் சேகரிக்க திட்டமிட்டுள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள் தேவைப்படும்பட்சத்தில் மீண்டும் தாஜூதீனிடம் விசாரனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை தொடர்பாக முகமது தாஜூதீன் கூறியதாவது:-
நான் பீகாருக்கு செல்லாத நிலையில் பீகார் வழக்கு தொடர்பாக என்னிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி எனது செல்போன், சிம் கார்டை எடுத்துச் சென்றுள்ளனர். இது போன்று இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ளூர் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து, அதனை பனியன் நிறுவனங்களில் கொடுத்து பணியாற்றி வருகின்றனர்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தும் பனியன் நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். மேலும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து, அதனை பனியன் நிறுவனங்களில் கொடுத்து பணியாற்றி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி போலி ஆதார் அட்டை மூலம் பணிபுரியும் தொழிலாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் பல்லடம் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றும் 3 பனியன் நிறுவனங்களில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரி பார்த்து சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் வங்கதேச தொழிலாளர்களை திருப்பூருக்கு வேலைக்கு அழைத்து வரும் முகவர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தும் பனியன் நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
- கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி எல்லை பிள்ளை சாவடியில் 100 அடி சாலையில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே ஆசிரமத்துக்கு சொந்தமான பகுதி உள்ளது.
இதன் காம்பவுண்டு சுவரையொட்டி ஒரு சிறிய கேட் உள்ளது. இதற்குள் பழைய பொருட்கள் போட்டு வைத்துள்ள குடோன் உள்ளது.
இதன் மாடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் போலீசார் உதவியோடு இன்று சோதனை செய்தனர்.
அங்கு தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.கே. பாபு (வயது 26) என்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். காலை 8 மணி முதல் 11 மணி வரை 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது, பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து காரில் ஏற்றி அழைத்துச்சென்றனர். கோரிமேட்டில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அவரை கொண்டுசென்று விசாரணை நடத்தினர். அவர் வெளிநாட்டிலிருந்து நபர்களை கடத்தி வந்து புதுவை உட்பட வெளி மாநிலங்களில் கொத்தடிமையாக விற்பனை செய்துள்ளாரா?
எத்தனை பேரை அழைத்து வந்தார்? எங்கு விற்றுள்ளார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு தொடர்புள்ளதா? ஏதேனும் சதி செயலில் ஈடுபட்டனரா? பயங்கரவாத செயல்களுக்கு துணை போனாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுவையில் அவர் கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் எண்ணை உள்ளூர் போலீசார் சோதனையிட்டதில் எந்த தகவலும் காட்டவில்லை. இதனால் அவரது பெயர், ஆதார் எண் அனைத்தும் போலியாக இருக்கக்கூடும் என தெரிகிறது.
புதுவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வடமாநில வாலிபர் ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருப்பூர் குமார்நகரை அடுத்த வலையங்காடு பகுதியில் உள்ள நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
- கைதானவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:
வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர்.
அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை போல போலியான ஆதார் அட்டை தயாரித்து சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் பணிக்கு அமர்த்தி உள்ளனர். இது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.
அதன் அடிப்படையில் போலி அடையாள அட்டை தயாரித்து வெளிநாட்டினரை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்த கும்பலை கைது செய்ய என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
இதேபோல் புதுச்சேரி, திரிபுரா, காஷ்மீர், அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகம், தெலுங்கானா, அரியானா மற்றும் ராஜஸ்தான் என மொத்தம் 10 மாநிலங்களில் 55 இடங்களில் நேற்று ஒரே நாளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இந்த சோதனையின்போது அதிகாரிகளுடன், அந்தந்த மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் நேற்று அதிகாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வேலை பார்த்து வந்த சகாபுதீன் (வயது 28) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வங்காளதேசத்தை சேர்ந்த அவர், போலி ஆதார் அட்டை மூலம் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.
இவர் கடந்த சில மாதங்களாக அதே கடையின் மாடியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 10 பேர் நேற்று காலை ஒரு வீட்டில் திடீரென சோதனையில் இறங்கினர். அப்போது அங்கு தங்கியிருந்த முன்னா, மியான் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் வங்காளதேசத்தை சேர்ந்த முன்னா திரிபுரா மாநிலத்தில் வசிப்பது போல ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகளை போலியாக தயாரித்து வைத்திருந்ததும், கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முன்னாவை கைது செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியிலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் திருப்பூர் குமார்நகரை அடுத்த வலையங்காடு பகுதியில் உள்ள நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வங்காளதேச நபரின் புகைப்படத்தை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் காண்பித்து அந்த நபர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. ஆனால் வங்காளதேச நபர் தங்கியிருக்கும் இடம் மற்றும் அவர் வேலை செய்யும் நிறுவனம் குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்காததால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
அதேபோல் பல்லடம் அறிவொளிநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் பெயர் பதிவு கொண்ட பட்டியலை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் தேடி வந்த வங்காளதேச நபர் சில மாதங்களுக்கு முன்பே வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வங்காளதேசம் சென்று விட்டாரா? அல்லது வேறு நிறுவனங்களில் வேலை செய்கிறாரா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
அதன்பின்னர் ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு சென்ற அதிகாரிகள் வங்காளதேசத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரை சொல்லி அவர் வேலை செய்கிறாரா? என்று ஆய்வை மேற்கொண்டனர். ஆனால் அவரும் பணியில் இருந்து நின்றுவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட நபர்கள் மீண்டும் அந்த பகுதியில் நடமாடினால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்திச்சென்றனர்.
புதுச்சேரி 100 அடி ரோட்டில் எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள பழைய பொருட்கள் வைக்கும் குடோனுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் போலீசார் உதவியுடன் நேற்று சென்றனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்தார். உடனே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் வைத்திருந்த ஆதார் அட்டையை கைப்பற்றி சோதனை செய்தபோது, கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.கே.பாபு (வயது 26) என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அவர் புதுச்சேரியில் கட்டிட வேலை செய்ததும் தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் பயன்படுத்திய செல்போன், 3 சிம் கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பலவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவரை கைது செய்து போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏற்றி கோரிமேட்டில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். புதுச்சேரியில் அவருடன் வேறு யாராவது தொடர்பில் உள்ளனரா? வெளிநாடுகள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருவி துருவி விசாரித்தனர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தஞ்சம் அடைந்தவர்களுக்கு, போலியான அடையாள அட்டை தயாரித்து தென் இந்தியாவில் யாராவது கட்டுமான வேலைகளில் ஈடுபடுகிறார்களா? என்றும் விசாரணை நடத்தினர்.
அவர் வைத்திருந்த ஆதார் அட்டை எண்ணை போலீசார் சரிபார்த்தபோது, அதுபற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. எனவே அது போலியான ஆதார் அட்டையா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது உண்மையான பெயர் பாபு என்பது தானா? என்ற கோணத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கைதானவர் வங்காளதேசத்தை சேர்ந்தவரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே மேல் விசாரணைக்காக அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று மாலை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று நடந்த சோதனை தொடர்பாக என்.ஐ.ஏ. சார்பில் மாலையில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
ஆள்கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 10 மாநிலங்களில் 55 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாட்டில் 2 பேரும், புதுச்சேரியில் ஒருவரும், திரிபுராவில் 21 பேரும், கர்நாடகாவில் 10 பேரும், அசாமில் 5 பேரும், மேற்கு வங்காளத்தில் 3 பேரும், தெலுங்கானா, அரியானாவில் தலா ஒருவரும் என மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள், ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இவ்வாறு என்.ஐ.ஏ. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது.
- கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.
பெங்களூரு:
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சர்வதேச அளவில் மிக பயங்கரமான தீவிரவாத இயக்கமாக கருதப்படுகிறது.
அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் சிலர் ரகசியமாக செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து அடிக்கடி என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய நாசவேலைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கலவரத்தை தூண்டவும் அந்த இயக்கத்தினர் சதி செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் உளவுத்துறைக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இரு மாநிலங்களிலும் 44 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் 31 இடங்களில் அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள்.
புனேயில் 2 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பயாந்தர் நகரிலும் ஒரு இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். மத்திய துணை நிலை ராணுவ பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.
உள்ளூர் போலீசாரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக சென்றுள்ளனர்.
44 இடங்களில் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது அங்கிருந்த 15 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். பிறகு அவர்களை மேலும் விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர். அவர்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைதான 15 பேரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் ரகசிய தொடர்பில் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான ஆவணங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இது தவிர சோதனை நடந்த இடங்களில் இருந்து லேப்டாப்புகள், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இந்த 15 பேர் மூலம் இந்தியாவின் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் நடத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இன்று நடந்த சோதனை மூலம் மிகப்பெரிய நாச வேலை சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம்தான் புனே நகரில் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
அவர்கள் இந்தியாவில் நாசவேலை செய்ய நிதி திரட்டியதும், பயிற்சி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் இன்றைய சோதனை நடத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் தானே மாவட்டத்தில் நடந்த சோதனையிலும் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்துள்ளார்.
சென்னை:
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், நிதி திரட்டி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையிடுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தனர்.
என்.ஐ.ஏ. சோதனை தொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்துள்ளார்.
- முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம்.
- நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டு வருவதற்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் 'மாலை மலர்' நிருபர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தங்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்கள் மீது மத்திய அமைப்புகளை ஏவிவிட்டு விசாரணை நடத்துவது புதிது அல்ல. அந்த வகையில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்கு தேசிய புலனாய்வு அமைப்பை ஏவி விட்டுள்ளனர்.
முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம். சட்ட விரோதமாக பணம் வருவதாக கூறியே இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற பொய்யான விஷயங்களை கூறி எங்களை மிரட்ட வேண்டும் என்கிற எண்ணத்திலேயே என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றுள்ளது.
இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழர் விரோத நடவடிக்கையில் இதுவும் ஒன்று என்றே கருத வேண்டியுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவே இந்த சோதனையை பார்க்கிறோம்.
நாங்கள் சரியான திசையில் பயணிப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
எங்கள் கட்சி பிள்ளைகளை தொந்தரவு செய்வதன் மூலமாக அவர்களின் அரசியல் பணிகளை முடக்கிப் போட்டுவிடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏதாவது தகவல்கள் வேண்டும் என்றால் என்னிடமே கேட்கலாம்.
நேரடியாக என்னை அழைத்து விசாரணை நடத்த வேண்டியதுதானே? அதில் என்ன தயக்கம் என்றும் தெரியவில்லை. இதுபோன்ற சோதனைகளால் நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைத்தால் அது பாரதிய ஜனதா கட்சி போடும் தப்புக்கணக்காகவே அமையும். நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.