என் மலர்
நீங்கள் தேடியது "Omni Bus"
- ஒரு சில தனியார் பஸ் ஆபரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
- நெல்லை, தூத்துக்குடியில் இருந்து ரூ.2900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3500, ரூ.4000 வரை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட வெளியூர் சென்றவர்கள் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சென்னை திரும்புகிறார்கள்.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 5 லட்சம் பேர் பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு பஸ்களில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது தவிர சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், ரெயில் நிலையங்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பயணம் செய்தனர். மேலும் ஆம்னி பஸ்களிலும் கடைசி நேரத்தில் அதிக கட்டணம் செலுத்தி பலர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் பண்டிகை விடுமுறை முடிந்து ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதனால் 1-ந் தேதி புத்தாண்டு முடித்து விட்டு பலர் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்புகிறார்கள்.
அனைத்து ரெயில்களிலும், எல்லா வகுப்பு பெட்டிகளும் நிரம்பிவிட்ட நிலையில் சிறப்பு ரெயில்களிலும் இடமில்லை. அதனால் மக்கள் கூடுதல் பஸ் சேவைக்காக காத்து உள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 30, 31-ந் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடஏற்பாடு செய்யப்படுகிறது.
மேலும் ஆம்னி பஸ்களில் அந்த தேதியில் பயணம் செய்ய இடங்கள் நிரம்பி வருகின்றன. ஒரு சில தனியார் பஸ் ஆபரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் கோவை, திருப்பூர் நகரங் களில் இருந்து சென்னைக்கு சங்கம் நிர்ணயித்த கட்ட ணத்தை விட அதிகமாக கட்டணம் நிர்ணயித்து உள்ளனர்.
மதுரை, கோவையில் இருந்து ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.2581 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.3500 வரை வசூலிக்கிறார்கள். நெல்லை, தூத்துக்குடியில் இருந்து ரூ.2900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.3500, ரூ.4000 வரை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் அரசு நிர்ணயிக்க முடியாத நிலையில் அவர்களே நிர்ணயித்து இயக்குகிறார்கள். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் அதைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பது முறையற்ற செயல். தேவையை அறிந்து அதற்கேற்ப பல மடங்கு கட்டணம் உயர்த்துவதை அரசு தடுக்க வேண்டும்.
இதே போல பெங்களூருக்கு ரூ.2000, கொச்சினுக்கு ரூ. 2700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதை விட கூடுதலாக வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக பயணிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கின்றனர்.
- சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- கோவைக்கு ரூ.2,800, நெல்லைக்கு ரூ.3,300, பெங்களூருக்கு ரூ.2000, கொச்சினுக்கு ரூ.2,700 என கட்டணம் முடிவு செய்து இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டையொட்டி தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களிலும் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி நாளை சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் 2 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு ரூ.2,800, நெல்லைக்கு ரூ.3,300, பெங்களூருக்கு ரூ.2000, கொச்சினுக்கு ரூ.2,700 என கட்டணம் முடிவு செய்து இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோன்று பொங்கல் பண்டிகையையொட்டியும் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 13, 14-ந் தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் கட்டண விவரம் வருமாறு:-
சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.2,200, கோவை ரூ.2,500, நெல்லை ரூ.3000, பெங்களூர் ரூ.2,300, கேரள மாநிலம் கொச்சினுக்கு ரூ.2,500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்களில் இதுபோன்ற கட்டண உயர்வால் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள நடுத்தர மக்கள் திண்டாட்டத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். கட்டண உயர்வால் மிரண்டு போயுள்ள அவர்கள் சொந்த ஊருக்கு செல்லலாமா? சென்னையிலேயே பொங்கல் கொண்டாடலாமா? என்கிற சிந்தனையில் ஆழ்ந்துள்ளனர்.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் ஆம்னி பஸ்களில் பலமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- பஸ் ஐதராபாத் அடுத்த குக்கட் பள்ளி, ஜே, என்.டி.யூ மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
- பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் பஸ்சில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு இன்று அதிகாலை தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது.
20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர். பஸ் ஐதராபாத் அடுத்த குக்கட் பள்ளி, ஜே, என்.டி.யூ மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வந்தபோது என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனை கண்ட பஸ் டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கீழே இறங்கும்படி தெரிவித்தார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் பஸ்சில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர். அதற்குள் பஸ் முழுவதும் தீ மளமளவென பரவ தொடங்கியது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் தீ பிடித்து எரிவதற்கு முன்பாகவே டிரைவர் பயணிகளுக்கு தகவல் தெரிவித்து இறக்கிவிடப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 20 பயணிகள் உயிர் தப்பினர். அதிகாலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டனர்.
கோவை
கோவை மாவட்டத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ- மாணவிகளும் கோவையில் தங்கி படித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல ரெயில் நிர்வாகம சிறப்பு ரெயில்களையும் அறிவித்து இயக்கியது.
வெளியூர்களுக்கு செல்ல வேண்டியவர்கள் நேற்று மாலை பஸ் நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் திரண்டதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. கோவை சிங்கா நல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி போன்ற தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இங்கு தான் நேற்று ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் பஸ் நிலையமே திணறியது.
இதேபோல சூலூர் பஸ் நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக இயக்கப்பட்ட பஸ்கள் புறப்பட்டுச் சென்றன. காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அங்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொரு பஸ்கள் வந்தபோதும் பயணிகள் முண்டியடித்து ஏறினர்.
இதுபற்றி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெளியூர் செல்லும் பயணிகள் நெரிசலில் சிக்காமல் செல்ல மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து 300 போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் வழிப்பறி திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. வெளியூர் செல்பவர்களின் வீடுகளில் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் ரோந்து பணி செலல உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பஸ்கள் கட்டணம் அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் புகார் தரும் பட்சத்தில் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்காக ரூ.3,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
- குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல வந்தவர்கள் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.
சென்னை:
தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.
அவர்கள் கோடை விடுமுறையை சொந்த ஊரில் கழித்து விட்டு பள்ளிகள் ஆரம்பிக்கும் போது சென்னைக்கு வருவது வழக்கம். இதனால் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. மே மாதம் முழுவதுமே ரெயில்கள் நிரம்பிவிட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களையே நம்பி உள்ளனர்.
இன்று மே தின விடுமுறை என்பதால் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
முன்பதிவு செய்த பயணிகள் திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு சிரமம் இன்றி பயணம் செய்தனர்.
ஆனால் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் முன்பதிவு செய்யாமல் வந்த பயணிகள் பஸ்களில் இருக்கை கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால் அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ் நிலையங்களுக்கு படையெடுத்தனர்.
இதன் காரணமாக ஆம்னி பஸ் நிலையங்களில் பயணிகளின் வருகை திடீரென்று உயர்ந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு அதிகரிக்கப்பட்டது.
குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்காக ரூ.3,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல வந்தவர்கள் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.
இந்த திடீர் கட்டண உயர்வு தொடர்பாக பயணிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-
மே மாதம் பள்ளி விடுமுறையில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விரைவு பஸ்களுடன், பிற போக்குவரத்து கழக பஸ்களையும் சேர்த்து போதுமான அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை வரவழைத்து அவர்களை அதில் ஏற்றி உடனுக்குடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம்.
ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக புகர்கள் வருகிறது. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் தலைமையில், பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அதன் மூலம் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஆம்னி பஸ் மோதி வியாபாரி பலியானார்.
- நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜாங்கம் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள குரண்டிபட்டியை சேர்ந்த வர் ராஜாங்கம் (வயது 65), கோழி வியாபாரம் செய்து வந்த இவர், இன்று அதிகாலை மேலூருக்கு தனது மொபட்டில் வந்து கொண்டி ருந்தார். அதே சாலையில் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி ஒரு ஆம்னி பஸ் சென்றது.
அந்த பஸ் எதிர்பாராத விதமாக ராஜாங்கத்தின் மொபட் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜாங்கம் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி, தனிபிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அவர்கள் ராஜாங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அவர்கள் விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த டிரைவர் சங்கரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு சேலம் மாவட்டம் வாழப்பாடி வழியாக கோவைக்கு சென்றது. அந்த பஸ்சில் 27 பயணிகள் பயணம் செய்தனர்.
- எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது.
வாழப்பாடி:
சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் நேற்றிரவு சேலம் மாவட்டம் வாழப்பாடி வழியாக கோவைக்கு சென்றது. அந்த பஸ்சில் 27 பயணிகள் பயணம் செய்தனர். ஆம்னி பஸ்சை கேரள மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் நெப்போலியன் ரமேஷ் ஓட்டிச் சென்றார்.
லாரி மீது மோதல்
ஆம்னி பஸ் இன்று அதிகாலை, வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் மேம்பாலத்தில், சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சின் இடது புறம் முழுவ துமாக சேதம் அடைந்தது. பஸ்சில் தூங்கியவாறு பயணம் செய்து கொண்டி ருந்த கோவையை சேர்ந்த பிரபு(38), ரித்திக், சிவகங்கை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த உதயா(19), கோவை ஆலடிப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மனைவி பார்வதி(51) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த வர்களை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விபரங்கள் குறித்து வாழப்பாடி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு விடுமுறை வருவதால் பஸ், ரெயில்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்யவும் ஆர்வமாக உள்ளனர்.
- பக்ரீத் விடுமுறை வருவதால் நாளைய பயணத்திற்கு அனைத்து ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
சென்னை:
பக்ரீத் பண்டிகையையொட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அரசு விடுமுறையாகும். இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன.
பொதுவாக வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வெளியூர் பயணம் அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வருவதால் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக நாளை (புதன்கிழமை) மாலையில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது. அரசு விரைவு பஸ்கள் கூடுதலாக 100 இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல விழுப்புரம், மதுரை, சேலம், கோவை போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அரசு விடுமுறை வருவதால் பஸ், ரெயில்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்யவும் ஆர்வமாக உள்ளனர். அரசு பஸ்களில் வழக்கத்தைவிட நாளை (புதன்கிழமை) பயணம் செய்ய முன்பதிவு அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையை போல் முன்பதிவு கூடி உள்ளது.
குறிப்பாக தென்மாவட்ட பஸ்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் 300-ஐ தாண்டியுள்ளது. தக்கல் முன்பதிவு காத்திருப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் விடுமுறை தினத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வார நாட்களில் பொதுவாக குறைந்த அளவில் தான் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் பக்ரீத் விடுமுறை வருவதால் நாளைய பயணத்திற்கு அனைத்து ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் தென்காசி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரித்துள்ளது.
கூட்ட நெரிசலை குறைக்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நள்ளிரவு வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- தொடர் விடுமுறையையொட்டி விடப்பட்ட சிறப்பு ரெயில்களும் நிரம்பி விட்டன.
- வழக்கமாக இயக்கப்படும் தென் மாவட்ட ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 300ஐ தாண்டி உள்ளன.
சென்னை:
பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் பஸ், ரெயில்களில் இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதுமட்டுமல்லாமல் தொடர் விடுமுறை நாட்கள் வந்தாலும் வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் கூட்டம் அதிகரிக்கிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு சிறப்பு பஸ்களை இயக்கினாலும் கூட தனியார் ஆம்னி பஸ்களில் கூட்டம் குறையவில்லை. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 2-வது சனிக்கிழமை நாளை விடுமுறையாகும். அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் (13-ந் தேதி), 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழாவையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
14-ந்தேதி திங்கட்கிழமை மட்டும் வேலைநாளாக இருப்பதால் வெளியூர் செல்ல கூடியவர்கள் அன்று விடுப்பு கொடுத்து விட்டு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறையை கழிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் சென்றாலும் பஸ், ரெயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்து உள்ளனர்.
தொடர் விடுமுறையையொட்டி விடப்பட்ட சிறப்பு ரெயில்களும் நிரம்பி விட்டன. வழக்கமாக இயக்கப்படும் தென் மாவட்ட ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 300ஐ தாண்டி உள்ளன.
வெளியூர் செல்லக் கூடியவர்கள் இன்று பயணத்தை தொடங்குகிறார்கள். சென்ட்ரல், எழும்பூர், ரெயில் நிலையங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
அரசு பஸ்களில் பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்து இருக்கிறார்கள். அனைத்து அரசு விரைவு பஸ்களும் நிரம்பி விட்டன.
கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 400 பஸ்கள் இன்று இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மதுரை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, தென்காசி, திருப்பூர், கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், ஓசூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாளை (சனிக்கிழமை)யும் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதலாக பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.
இதே போல் தாம்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இருந்தும் 100 சிறப்பு பஸ்கள் இன்று விடப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு பஸ்களில் 4 நாட்களும் பயணம் செய்ய அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதே போல் 15-ந்தேதி அன்று நெல்லை, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி பகுதியில் இருந்து சென்னை திரும்புவதற்கு முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.
ஆம்னி பஸ்களிலும் பயணம் செய்ய கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் பெரும்பாலான ஆம்னி பஸ்கள் நிரம்பி விட்டன.
கோவை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்கள் 90 சதவீதம் நிரம்பி விட்டன. இன்று பயணம் செய்வதற்கு இடங்கள் கிடைக்கவில்லை.
ஒருசில பஸ்களில் மட்டுமே சில இடங்கள் காலியாக உள்ளன. தேவை அதிகரித்து வருவதால் தீபாவளி, பொங்கல் பண்டிகையை போல கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தினர். ஏ.சி. பஸ்களில் உட்கார்ந்து பயணம் செய்யவே ரூ.2000 வரை வசூலிக்கிறார்கள். மதுரை, திருநெல்வேலிக்கு படுக்கை வசதி ரூ.3000 முதல் ரூ.4000 வரை வசூலிக்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் பொதுவாக வெளியூர் பயணம் குறைவாக இருக்கும் என்பதால் கட்டணத்தை குறைத்து விடுவார்கள். ஆனால் தற்போது தொடர் விடுமுறை வருவதால் அதை பயன்படுத்தி டிக்கெட் கட்டணத்தை கூட்டி விட்டனர்.
கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து இன்றும், நாளையும் பெரும்பாலான பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் கட்டணத்தை மேலும் உயர்த்தி வருகின்றனர். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களிலும் கட்டணம் அதிகரித்து உள்ளது.
பொதுமக்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் தனியார் ஆம்னி பஸ்களின் செயல்பாட்டை அரசு கட்டுப்படுத்தவில்லை என்ற ஆதங்கம் பயணிகள் மத்தியில் உள்ளது.
கட்டணத்தை இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட்டு முன்பதிவு செய்வதை ஏன் போக்குவரத்து துறையால் தடுக்க முடியவில்லை. ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் இது போன்ற நிலை நீடித்து வருவதற்கு நிரந்தர தீர்வு கிடைக்காதா? என கேள்வி எழுப்புகின்றனர்.
ஒரு தனிநபர் சொந்த ஊர் சென்று வர ரூ.5000, 6000 வரை செலவிடும் நிலையில் குடும்பமாக எப்படி போக முடியும். ஏழை, நடுத்தர மக்கள் ஆம்னி பஸ் பயணத்தை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு கட்டணம் அதிகமாக உள்ளது என மனம் குமுறுகின்றனர்.
- திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திருச்செந்தூர் நகரில் உள்ள 30 ஆம்னி பஸ்களில் சோதனை செய்தார்.
- இதில் விதிகளை மீறியதாக 6 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கூடுதல் கட்டணம்
திருச்செந்தூர் நகரில் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதனை முறைப்படுத்தி நியாயமான கட்டணங்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திருச்செந்தூர் நகரில் உள்ள 30 ஆம்னி பஸ்களில் சோதனை செய்தார்.இதில் விதிகளை மீறியதாக 6 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.7 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
மேலும், ஆம்னி பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது. குறிப்பாக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் நியாயமான கட்டணம் தான் பயணிகளிடம் வசூலிக்க வேண்டும், விதிகளை மீறும் ஆட்டோக்கள், ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சட்டப்படி வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
- வால்வோ ஏ.சி. பஸ் டிக்கெட்டுகள் ரூ.4,460 வரை விற்பனையாகிறது.
நெல்லை:
தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை முடி வடைந்து பெரும்பாலானோர் தங்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்தும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.இதனால் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டது.
வால்வோ ஏ.சி. பஸ் டிக்கெட்டுகள் சாதாரண நாட்களில் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இரு மடங்கு விலை உயர்வு ஏற்பட்டு ரூ.4,460 வரை விற்பனையாகிறது. இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பஸ் டிக்கெட் விலை சாதாரண நாட்களில் ரூ.1,600 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.2,200 முதல் ரூ. 2500 வரை விற்பனை ஆகிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- செப்.27 முதல் அக்.3-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களில் சோதனை நடைபெற்று உள்ளது.
- 8 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆம்னி பஸ்கள் மீது வரும் புகார்களை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது. அண்மையில் தொடர் விடுமுறை விடப்பட்டதையொட்டி, செப்.27 முதல் அக்.3-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களில் சோதனை நடைபெற்று உள்ளது.
இதில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது, அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தியிருந்தது, அதிக ஒளி வீசும் முகப்பு விளக்கு பொருத்தியது, ஓட்டுநர் 'சீட்' பெல்ட் அணியாதது, முதலுதவி பெட்டி இல்லாதது, பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டாதது, உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்பட்ட ஆம்னி பஸ்கள், வரி செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 7,446 பஸ்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் விதிமீறி இயக்கப்பட்ட 1,244 பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.23.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதில், ரூ.18.26 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதோடு, 8 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்ட தாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.