என் மலர்
நீங்கள் தேடியது "organ donation"
- இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.
- ஹுசைனி வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
1986-ம் ஆண்டு வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டரும் ஆவார். பல படங்களில் நடித்துள்ள ஹுசைனிக்கு, விஜய்யின் 'பத்ரி' படம் திருப்புமுனையாக அமைந்தது. கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு கவனம் ஈர்த்தது.
சினிமா தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு அதுதொடர்பான பயிற்சிகளை அளித்து வந்தார். இந்த நிலையில் ஹுசைனி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
வீடியோவில், 'தனக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவும், தினசரி 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப்படுகிறது. இப்படித்தான் தினமும் தனது வாழ்நாள் சென்று கொண்டிருக்கிறது', என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வந்தனர்.
இதற்கிடையில் தனது உடலை தானம் செய்வதாக ஹுசைனி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஹுசைனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக எனது உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன்.
இந்த கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீ ராமசாமி உடையார், எனது இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருந்தவர். எனது 'சினேக் பைட் வேர்ல்டு ரெக்கார்ட்' உலக சாதனை நிகழ்வுக்கும் தலைமை தாங்கியவர். என்னுடைய இதயத்தை மட்டும் பாதுகாப்பாக கராத்தே மற்றும் வில் வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதைப் படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனே வந்து, என்னுடைய அதிகாரப்பூர்வ ஒப்புதலையும், எனது கையெழுத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஹுசைனியின் இந்த உருக்கமான பதிவு நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. உடல் தானம் செய்வதாக அறிவித்துள்ள ஹுசைனிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் கனத்த இதயத்துடன் ஆறுதலையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.
- இரு கிட்னியும் செயலற்ற 19 வயது நோயாளிக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டது. கல்லீரல் 4 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
- 1½ வயது குழந்தை மூலம் 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
சென்னை:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது டி.வி. சாய்ந்து அந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.
இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தையை ஆந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் குழந்தை மூளைச்சாவு அடைந்தது. அந்த குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது. கூலித் தொழிலாளர்களான அந்த குழந்தையின் பெற்றோரும் அதற்கு உடன்பட்டனர்.
இதையடுத்து உடல் உறுப்புகளை ஆபரேசன் செய்து அகற்றுவது தொடர்பாகவும், தானம் தேவைப்படுபவர்கள் பற்றிய பட்டியலும் தயாரிக்கப் பட்டது.
மிகவும் சிறிய வயது குழந்தையின் உறுப்புகள் என்பதால் பொருத்தும் தகுதி உடையவர்கள் கிடைப்பதற்கு சில மணி நேரங்கள் ஆனது.
இரு கிட்னியும் செயலற்ற 19 வயது நோயாளிக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டது. கல்லீரல் 4 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
அந்த 1½ வயது குழந்தை மூலம் 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
- பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம், கருப்பு நிறுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
- புதிய வகை மாற்றம் தமிழகம் முழுவதும் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று ஆகியவை ஒரே மாதிரியாக வழங்கப்படும் என இந்திய அரசு 2019-ல் அறிவித்தது. அதன்படி 12 சரகங்களாக செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.), 54 பகுதி அலுவலகங்களில் புதிய வகை ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னை, சோழிங்கநல்லூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சேலம், வேலூர் சரகத்தை அடுத்து திருப்பூர் சரகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் சரகத்தில் கடந்த 11-ந்தேதி தொடங்கி, 23-ந்தேதி வரை 11 அலுவலகங்களில் மொத்தம் 2,063 புதிய வகை ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது, இந்த உரிமத்தில், தமிழ்நாடு அரசு என்பதை டி.என் என ஒரு வட்டத்துக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பொன்னிறத்தில் பொறிக்கப்பட்ட அசோக சக்கரம், கருப்பு நிறுத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
யூனியன் ஆப் இந்தியா என்பதை மாற்றி இந்தியன் யூனியன் டிரைவிங் லைசென்ஸ் என்றும், இஸ்யூடு பை கவர்மெண்ட் ஆப் தமிழ்நாடு என தெளிவாக பொறிக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமா? இல்லையா? என்பதும், அவசர கால தொடர்பு எண் , உரிமம் பெற்றவரின் கையெழுத்து என 16 வகை மாற்றம் இடம்பெற்றுள்ளது.
அதுபோல் பதிவுச்சான்றிதழில் (ஆர்.சி) சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை மாற்றம் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும்,பகுதி அலுவலகங்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விபத்தில் மூளைச்சாவு அடைந்தார்
- கல்லீரல், கிட்னி வேலூர் சி.எம்சி. ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டது
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 39) ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை போளூர் ஆரணி ரோட்டில் உள்ள எட்டி வாடி அருகே பைக்கில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் சரவணன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சரவணனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
அவருடைய இதயம் ஒரு கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும்.கல்லீரல், ஒரு கிட்னி, ஆகியவை வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.
சரவணனுக்கு ரேகா என்ற மனைவியும் ஹயந்திகா என்ற மகளும், துஷ்யந்த் என்ற மகனும் உள்ளனர்.
- மருத்துவர்கள் ஆலோசனைப்படி உறவினர்கள் சம்மதம் வழங்கினர்
- கண்ணமங்கலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதுப்பேட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா, தனது மகள்கள் லத்திகா (13),கோபிகா (10) ஆகியோர் படிப்புக்காக திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சத்யா சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சத்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.இதனால் அவரது உடல் உறுப்புகளை மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவரது உறவினர்கள் தானமாக வழங்கினர்.
அவரது சத்யாவின் உடல் கண்ணமங்கலம் கொண்டு வந்து நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
- தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
- மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன.
கோவை:
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). இவர் கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தபோது அவினாசிசாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகே விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த சீனிவாசனுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கு கடந்த 9-ந் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையறிந்த சீனிவாசனின் பெற்றோர் இளமுருகன், கனகவல்லி ஆகியோர் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன.
இதில் கல்லீரல், ஒரு சிறுநீரகம், இதயம், ஒரு சிறுநீரகம், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், நுரையீரல் சென்னையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.
சென்னை:
சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 5 குழந்தைகள். மாரிமுத்துவின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் பஞ்சந்திருத்தி இருளர் குடியிருப்பு ஆகும்.
மாரிமுத்து தனது மூத்த மகன் முத்துக்குமரன்(13) என்பவனை திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு மற்ற 4 குழந்தைகளுடன் சென்னை யில் வசித்து வந்தார். கடந்த 27-ந்தேதி முத்துக்குமரன், தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 12 வயது நண்பனுடன் வெளியில் சென்றார்.
திருப்பாச்சூர் அருகே திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது திருத்தணி நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கடந்த 30-ந்தேதி முத்துக்குமரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர். அதன்படி சிறுவனின் உடல் உறுப்புகள் மற்ற நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
மேலும் விபத்து தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
- விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கண்தானம் செய்த 30 குடும்பங்களுக்கு பாரட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் கண்தானத்திற்கு சிறப்பாக செயல்பட்ட தற்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சங்குமணிக்கு, பார்வை யிழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்டமேலாளர் பொன்னுசாமி, கண் மருத்துவத்துறைத்தலைவர் பாரதிராஜன், சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் சீதாலட்சுமி ஆகிேயாருக்கு நினைவு நினைவு பரிசு வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.
பின்னர் அவர் பேசிய தாவது:-
கருவிழி கண் தானம் மட்டுமல்லாமல் நம் உடலின் மிகமுக்கியமான பகுதிக ளான சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல்கள் போன்ற உறுப்புகளையும் தானம் அளிக்கலாம். இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் வைக்கிறது. நுரையீரல், சிறுநீரகம், கண்கள் போன்ற உடல் உறுப்புகளை சரியான நேரத்தில் தேவைப்படு வோருக்கு மாற்றம் செய்யும் போது, அவரது வாழ்க்கை யையும், உயிரையும் காப்பாற்ற முடிகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து வதன் மூலமாக ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடல் உறுப்புகளை தான மாக வழங்குவது பல உயிர்களை காப்பாற்று வதற்கான வாய்ப்பாக அமைகிறது என்பதை அறிந்து கொள்ள செய்ய முடியும்.
இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் வெங்கடேஷ் பிரஜ்னா, அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி மேலாளர் சரவணன், அரசு மருத்துவர்கள், கண் தானம் செய்த குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உயிருடன் இருப்பவர்கள் தங்களின் ஒரு பக்க நுரையீரலை கொடையாக வழங்க முடியும்.
- கல்லீரலைப் போல நுரையீரலுக்கு மீண்டும் வளரும் தன்மை கிடையாது.
ஒரு மனிதன் உறுப்புக் கொடை செய்ய விரும்பினால் அவன் இறந்த பிறகு அதன் மூலம் ஒன்பது பேர் நன்மை அடைவர்.
1. சிறுநீரகங்கள் : அதிகமாகத் தேவைப்படும் உறுப்பு. அதிகமாக கொடை அளிக்கப்படும் உறுப்பும் இதுவே. மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து பெறப்படும் இரண்டு சிறுநீரகங்களும் தலா ஒரு நபருக்கு என இருவரின் வாழ்வை மேலும் நீட்டிக்க உதவும். டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து விடுபட உதவும்.
உயிருடன் இருப்பவர்கள் தங்களின் குடும்பத்தாருக்கு ஒரு சிறுநீரகத்தை கொடையாக வழங்க முடியும். இறந்த நபரிடம் இருந்து வெளியே எடுக்கப்பட்ட சிறுநீரகம் 30 மணிநேரங்கள் உயிரோடு இருக்கும்.
2. கல்லீரல் : வெளியே எடுக்கப்பட்ட கல்லீரல் 6-12 மணிநேரங்கள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். இறந்தவரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலை இரண்டாகப் பிரித்து இருவருக்கு வழங்க முடியும்.
உயிருடன் இருப்பவர்களும் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தங்கள் கல்லீரலின் சிறு பகுதியை கொடையாக வழங்க முடியும். கொடை வழங்கிய பகுதி மீண்டும் வளர்ந்துவிடும்.
3. நுரையீரல் : இறந்தவிரிடம் இருந்து பெறப்படும் நுரையீரல் - வலது இடது பகுதிகள் தலா இருவருக்கோ அல்லது இரண்டு பகுதிகளும் சேர்த்து ஒருவருக்கோ தேவைக்கேற்ப பொருத்தப்படும்.
உயிருடன் இருப்பவர்கள் தங்களின் ஒரு பக்க நுரையீரலை கொடையாக வழங்க முடியும். எனினும் கல்லீரலைப் போல நுரையீரலுக்கு மீண்டும் வளரும் தன்மை கிடையாது. வெளியே எடுக்கப்பட்டு 4-6 மணிநேரங்கள் உயிர்ப்புடன் இருக்கும்
4. இதயம் : இறந்தவரிடம் இருந்து பெறப்பட்டு 4-6 மணிநேரங்களில் தேவைப்படுபவருக்கு பொருத்தப்பட வேண்டும்.
5. கணையம் : இறந்தவரிடம் இருந்து 6 மணிநேரங்களுக்குள் பொருத்தப்பட வேண்டும். உயிருடன் இருப்பவர்களும் தங்கள் கணையத்தின் சிறு பகுதியை தானமாக வழங்க முடியும்.
6. குடல்: இறந்தவரிடம் இருந்து எடுத்த ஆறு மணிநேரங்களுக்குள் தேவைப்படுபவர்களுக்கு பொருத்த வேண்டும். இவையன்றி இறந்த நபர்களின் கண்களில் இருந்து கார்னியா எனும் விழிப்படலம் . விழிப்படலம் சார்ந்த கண் பார்வையிழப்பில் இருக்கும் நபர்களுக்கு உதவும்.
கொடையாக வழங்கப்படும் தோல் தீக்காயம் அடைந்தவர்கள், அமில தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும்.
தானம் வழங்கப்படும் எலும்புகள், இதய வால்வுகள் போன்றவையும் பலர் வாழ உதவுகின்றன.
- டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா
- பைக்கில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த தகர குப்பம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் மனைவி ஜெபக்குமாரி (வயது 33) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ராபர்ட்டும், ஜெபகுமாரியும் தனியார் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராபர்ட் மற்றும் ஜெபக்குமாரி ஆகியோர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் வந்தனர்.
பொன்னை சாலையில் உள்ள அணைக்கட்டு சர்ச் அருகே வந்தபோது ஜெபகுமாரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபக்குமாரி நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார்.
இதை தொடர்ந்து ஜெபக்குமாரியின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்து தானம் வழங்கியுள்ளனர்.
விபத்து தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றும் வகையில் அறிவிப்பு.
இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.
- அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
தருமபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது40) என்பவர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.
இதனால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளை செயல் இழந்தது தெரிய வந்தது.
பின்னர் உறுதி செய்து கொண்ட மருத்துவ குழுவினர் அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.
இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவி னர், உடல் உறுப்புக்கள் தானமாக பெற்றனர். முதலில் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் முதலில் இருதயம் பிரத்தேயகமாக தயார் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல் துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரது உடலில் இருந்து 2 சிறுநீரகங்களில், ஒன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் கோவை மருத்துவமனைக்கும், கல்லீரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் 2 கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கண் பார்வை வேண்டி பதிவு செய்தவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கோவிந்தராஜன் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது பிரேத பரிசோதனை கூடம் அருகே மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உடலுக்கு மலர் மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து அமரர் ஊர்திக்கு எடுத்துச் செல்கின்ற வரை, சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேப்போல் பயின்று வருகின்ற மருத்துவ, செவிலியர் மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, இறந்தாலும், சில உயிர்களை வாழ வைக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த கோவிந்தராஜனின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செய்து, வழி அனுப்பி வைத்தனர்.
மேலும் இதயம் அறுவை சிகிச்சை செய்துவுடன், போதிய பாதுகாப்பு வசதிகள், ஏற்படுத்தப்பட்டு, காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டது.
தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெளியிட்ட அறிவிப்புகள் இனி வரும் காலங்களில் பல உயிர்களை காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கோவிந்தராஜின் உடல் அவரது சொந்த ஊரான போச்சம்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு உடல் உறுப்பு தானம் செய்த கோவிந்தராஜூக்கு அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.