என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy Procurement Station"

    • மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.
    • கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக புகார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் தேசமாணிக்கம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.

    அடங்கல் ஆவணம் தாமதம்

    அதனை அப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக அவருக்கு அடங்கல் ஆவணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டதாகவும், அதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அந்த விவசாயி கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பே அடங்கல் வாங்குவதற்காக எங்களது வயல் பட்டாவை கொடுத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். அதன்பின்னர் வருவாய் ஆய்வாளரிடம் நான் அளித்த புகாரை அறிந்து, தற்போது அடங்கல் ஆவணம் தயார் செய்து கொடுத்துள்ளார்.

    நெல் மூட்டைகள்

    தற்போது நெல் கொள்முதல் நிலையத்தில் அடங்கல் ஆவணம் சமர்ப்பித்துள்ளேன். அவர்களது நடைமுறைகள் முடிக்க 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் எனது நெல் மூட்டைகள் முளைத்துவிட்டன. நேற்று பாதிமூட்டைகளை மட்டுமே நெல்லை கொள்முதல் செய்தனர். அதற்குள் மழை வந்து மீதமுள்ள மூட்டைகளை நனைத்துவிட்டது.

    இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காலதாமதம் ஏற்பட்டு நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.

    • சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • கலெக்டர் ஆகாஷ், தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த நிலையில் சுரண்டையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தருவதாக பழனி நாடார் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டரிடம் உறுதி அளித்திருந்தார்.

    இந்த நிலையில் தென்காசி கலெக்டர் ஆகாஷ், பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் வீ.கே.புதூர் தாசில்தார் தெய்வ சுந்தரி ஆகியோர் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அதேபோல் சுரண்டையில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மண்டல நிலைய வட்டார அலுவலர் முருகன்,வருவாய் அலுவலர் கண்ணன்,கிராம நிர்வாக அலுவலர் ராஜ லட்சுமி,நில அளவையர் பஷீர் அகமது, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தென்காசி வடக்கு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி அமைச்சர் சக்கரபாணியிடம் ராஜா எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    • 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைத்ததற்காக அமைச்சருக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவ நல்லூர், புளியங்குடி, திருவேங்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் மிகப் பிரதான தொழிலாகும். இங்கு அனைத்து பகுதிகளிலும் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

    தற்போது நெல் உற்பத்தி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், தென்காசி வடக்கு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்துக் கொடுத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதை வலியுறுத்தி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் தனது தொகுதியில் 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைத்ததற்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார். மேலும் ராஜா எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சக்கரபாணி விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

    • நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்

    திருவாரூர்: 

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கு 35 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். தனியார் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு அறுவடை செய்ய ரூ.3 ஆயிரம் வசூல் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் வேளாண்மை பொறியியல் துறைக்கு ஆலோசனை வழங்கி போதிய அளவு அறுவடை எந்திரங்களை குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

    அதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திருவாரூர் மாவட்டத்தில் உடனடியாக திறந்து விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை காலதாமதம் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் என கலெக்டருக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கந்தர்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
    • அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அண்டனூர் ஊராட்சியில் மஞ்சம்பட்டியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பரமசிவம், மாவட்ட பிரதிநிதி முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகேசன், ராஜேந்திரன், ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, துணைத் தலைவர் மலர்விழி சிவானந்தம், ஊராட்சி செயலர் இளவரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபட்டது
    • விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கறம்ப விடுதி ஊராட்சியில் உள்ள சொக்கம்பேட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.விடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. சின்னதுரை சொக்கம்பேட்டை பட்டவன் கோவில் திடலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த பகுதியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்மணிகளை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனும்மான முத்துகிருஷ்ணன், கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மங்களா கோவில் பரமசிவம், கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஜினி இளங்கோவன், சங்கன் விடுதி தங்கராசு, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


    • வியாழக்கிழமைதோறும் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறுகிறது.
    • விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஏலத்தில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

     வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது.இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைேதாறும் தேங்காய் பருப்பும், வியாழக்கிழமைதோறும் சூரியகாந்தி விதை ஏலமும் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையமும் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கரூர், திருச்சி, தஞ்சாவூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இதில் வெள்ளகோவில், மூலனூர், காங்கயம், முத்தூர், கொடுமுடி, ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஏலத்தில் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    தற்போது நெல் அறுவடை காலம் என்பதால் திருப்பூர் கலெக்டர் எஸ்.வினீத் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு திடீரென நேரில் வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து எவ்வாறு இந்த நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது என்பதை தொழிலாளர்களிடம் கேட்டறிந்து நெல் சுத்தம் செய்வது, எடை போடுவது, மூடை போடுவதை செய்து காண்–பிக்க சொல்லி நேரில் பார்த்து விவரம் கேட்டறிந்தார். அப்போது ஒழுங்குமுறைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள், போலீசார் உடன் இருந்தனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் மேலும் 9 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கபட உள்ளது
    • வரும் 6-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால்,விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கரீப் கேஎம்எஸ் 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 4 ஆம் கட்டமாக அரியலூர் வட்டத்தில் மஞ்சமேடு, தூத்தூர், கள்ளுர், முடிகொண்டான், திருவெங்கனூர், திருமானூர், கரைவெட்டி, குந்தபுரம் மற்றும் செந்துறை வட்டத்தில், படைவெட்டிகுடிகாடு, ஆகிய 9 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் வரும் 6-ந் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • பாலாமடையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • சாலையில் படுத்து உருளும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.

    நெல்லை பாலாமடையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல் கொள்முதல் நிலையம்

    எங்கள் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொது கழிப்பிடம், சாலைகள் உள்ள பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதனை வேறு இடத்தில் அமைக்க கோரி ஊர் பொது மக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்திலும், நுகர்பொருள் வாணிப கழக மண்டல பொது மேலாளரிடமும் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம்.

    மேலும் இதனால் இரு தரப்பினருக்கிடையே பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைவில் மாற்று இடத்தில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மோசமான சாலைகள்

    ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளிலும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.

    குறிப்பாக பாளை மார்க்கெட் முதல் சீவலப்பேரி, தச்சநல்லூர் முதல் நயினார்குளம் மார்க்கெட், டவுன் மவுன்ட் ரோடு முதல் குன்னத்தூர், பழைய பேட்டை முதல் டவுன் ஆர்ச் வரை மேலும் பால் கட்டளை, அழகநேரி, முக்கிய பஸ் நிலையங்களை சூழ்ந்துள்ள பகுதிகள் என முக்கிய இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.

    மேலும் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் போதுமானதாக இல்லை. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலையில் படுத்து உருளும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • விவசாயிகள் குற்றச்சாட்டு
    • 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனில் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் விஜயகீர்த்தி தலைமையில் 15 கோரிக்கை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணி அண்ணா சிலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, பழைய பஸ் நிலையம், ஆற்றுபாலம் வழியாக சென்று மா மரம் பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது.

    கூட்டுறவு சங்கத்தின் கடன் தவனை நீட்டிக்க வேண்டும். நேரடி கொள்முதல் நிலையம் இல்லாத ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரத்தை வேளாண்மை கூட்டுறவு மூலம் விற்பனை செய்ய வேண்டும் . கரும்பு டன்னுக்கு 6000 ரூபாய் ஆக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தினர்.

    நெல் கொள்முதல் நிலையங்களில் 1 கிலோவிற்கு 1 ரூபாய் கட்டாயம் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குகின்றனர். இதனை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும் கோஷமிட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அரிகிருஷ்ணன், மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் பெருமாள் மாவட்ட பொருளாளர் வேலு, ஆரணி வட்டார தலைவர் வேலப்பாடி கோபி, நெசல் கிளைத் தலைவர் மணிவண்ணன், கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கிளைச் செயலாளர்கள் வெற்றி வேந்தன் வெங்கடேசன் சக்திவேல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    • போலீசார் விசாரணை
    • யார்? என்று அடையாளம் தெரியவில்லை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பின்புறம் இருந்த கழிவு நீர் குட்டையில் ஆண் பிணம் தண்ணீரில் மிதந்து கிடப்பதாக கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவுநீர் குட்டையில் இறந்து கடந்த பிணத்தை வெளியே எடுத்து பார்த்தபோது பிணம் அழுகிய நிலையில் இருந்தது. இறந்து கிடந்தவருக்கு சுமார் 37 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.

    பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதே குட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது உடைய வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இன்றுவரை அடையாளம் காணப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போத இரண்டாவதாக ஒரு வாலிபர் அதே குட்டையில் இறந்து கிடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன.

    இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் இறந்த நபர் முன்விரோதம் காரணத்தால் யாராவது அடித்து கொலை செய்துவிட்டு இங்கு போட்டு விட்டு சென்று உள்ளார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    கடந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 2 பேர் மர்மமான முறையில் இறந்த கிடப்பது சந்தேகத்தி ற்குரியதாக உள்ளது. இதனை போலீசார் உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து இங்கு வந்து இரவு நேரங்களில் லாரியில் வந்து ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு தங்கி விடுகின்றனர். இப்பகுதியில் பலமுறை கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளன.

    இதனைத் தொடர்ந்து தற்போது மர்மமான முறையில் வாலிபர்கள் இறந்து கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர்.

     தாராபுரம் :

    தாராபுரம் அலங்கியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரிந்து வந்த கொள்முதல் நிலைய அதிகாரி ஏழுமலை என்பவர் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் விவசாயிகளிடம் நீங்கள் வாங்கும் ரூ.15 உடன் எங்களுக்கும் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாங்கி தர வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரிடம் செல்போனில் லஞ்சம் கேட்டு பேசியதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரி ஏழுமலை என்பவரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார். அதற்கு பதிலாக புதிய அலுவலராக இளவரசன் என்பவரை அதிரடியாக அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    ×