என் மலர்
நீங்கள் தேடியது "Paddy"
- தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
- உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும்.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடைகால நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
அதிலும் குறிப்பாக கண்டிதம்பட்டு, புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கருக்கும் மேல் கோடைகால நெற்பயிர்கள் வயலிலே தண்ணீர் தேங்கி சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் சாய்ந்த நெற்பயிர்களின் ஏக்கர் அளவு அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் குறைந்தது மூன்று நாட்களுக்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை ஓரளவாது காப்பாற்ற முடியும். தற்போது தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
- அமராவதி அணை பாசனத்தின் வாயிலாக நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.
- நெல்லை உலர வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது.
உடுமலை :
உடுமலை அருகே கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் அமராவதி அணை பாசனத்தின் வாயிலாக நெல் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. சீசன் சமயங்களில் அரசு கொள்முதல் மையம் அமைக்கப்படுவதில்லை.எனவே நெல்லை உலர வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அப்பகுதியில் போதிய உலர்கள வசதியில்லை. விளைநிலங்களிலுள்ள சிறு பாறைகள் மற்றும் இணைப்பு ரோடு பாலங்களில் நெல்லை காய வைக்க வேண்டிய நிலையில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.
கல்லாபுரத்தில் நெல்லை காய வைக்க உலர்களமும், இருப்பு வைக்க குடோன் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த அரசுத்துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
- இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும்
- 174 வகையான பாரம்பரிய நெல் ரக அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் 16-வது பாரம்பரிய நெல் திருவிழா ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்று தொடங்கியது.
இதனை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி உழவர் சந்தை பகுதியில் இருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு நெல் கோட்டை வைத்து மாட்டு வண்டியில் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு விவசாயிகள் ஊர்வலமாக வந்து இத்திருவிழாவில் பங்கேற்றனர்.
இந்த நெல் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, நாகை, திருச்சி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட விவசாயிகளும் இந்த நெல் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய நெல் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் அரங்கங்கள் அமைக்கப்பட்டு அவற்றை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டனர்.
நெல் திருவிழாவின் முக்கிய நோக்கமான இயற்கை பாரம்பரிய நெல் ரகங்களை பங்கேற்றுள்ள அனைத்து விவசாயிக ளுக்கும் 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு அவற்றை சாகுபடி செய்து அடுத்த ஆண்டு நான்கு கிலோவாக விவசாயிகள் திருப்பி அளிக்க உள்ளனர். இதன் மூலமாக பாரம்பரிய இயற்கை நெல் ரகங்கள் சுழற்சி முறையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- மத்திய அரசு திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
- புதிய நெல் ரகங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் கிசான் மேளா வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வேளாண்மை துறை மூலம் இடுபொருள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார்.
முன்னதாக வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்று வேளாண்மை துறை திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் இடுபொருட்கள் மானிய திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, வேளாண்மை துணை இயக்குனர் விஜயலட்சுமி ஆத்மா திட்டம், மத்திய அரசு திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் தலைவர் ராதாகிருஷ்ணன் தற்போது உள்ள தட்பவெப்ப நிலைக்கு நெல், பருத்தி பயிர்களுக்கு வரக்கூடிய பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
இணை பேராசிரியர் அருட்செல்வி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய நெல் ரகங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
வலங்கைமான் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் திருச்செல்வன் தோட்டக்கலை துறை திட்டங்கள் பற்றி விளக்கத்துடன், ஊட்டமேற்றிய தொழு உரம் தயார் செய்தல் குறித்து பயிற்றுவித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் உழவன் செயலியின் பயன்பாடு பற்றியும், அதன் சிறப்பியல்புகள் பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தார்.
முடிவில் வலங்கைமான் வட்டார வேளாண்மை அலுவலர் சூரியமூர்த்தி கூறினார்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலை அலுவலர் ரம்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவலிங்கம், ஏழுமலை, சரவணன், சிரஞ்சீவி, சிவானந்தம் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சதீஷ்குமார், பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.
- சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
- நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- கடந்த 2 ஆண்டுகளாக அமராவதி அணையின் நீர் இருப்பு தொடர்ந்து திருப்திகரமாக உள்ளது.
- வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ரக உளுந்து விதைகள் 3 டன் இருப்பு உள்ளது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நெல், கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. போதிய விலையின்மை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இந்த பகுதிகளின் மிக முக்கிய பயிர்களாக விளங்கிய நெல், கரும்பு ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு குறைந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அமராவதி அணையின் நீர் இருப்பு தொடர்ந்து திருப்திகரமாக உள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் மீண்டும் நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பாசனத்துக்காக அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கொழுமம், குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு, சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாற்றங்கால் அமைத்து நெல் நடவு செய்வது மட்டுமல்லாமல் ஒருசில விவசாயிகள் நேரடி நெல் விதைப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நேரடி நெல் விதைப்பு எந்திரங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விதைகள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் கோ 51 ரக நெல் விதைகள் 12 டன் அளவுக்கு இருப்பு உள்ளது. மேலும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற வகையில் வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ரக உளுந்து விதைகள் 3 டன் இருப்பு உள்ளது. இதுதவிர நிலக்கடலை விதைகள் 3 டன் அளவுக்கு தயாராக உள்ளது.
உரிய பரிசோதனைகள் முடிந்து சான்று பெற்ற பிறகு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும். மேலும் நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கான நுண்ணூட்டச் சத்துகள் போன்றவையும் இருப்பில் உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தையோ அல்லது தங்கள் பகுதி வேளாண்மை அலுவலரையோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறினர்.
- சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் தண்ணீர் இன்றி இளம் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
- ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது போதிய தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் தான் பிரதான பயிராக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த ஆண்டு குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கரில் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியான ஜுன் 12-ந் தேதி திறந்து விடப்பட்டது.
இருந்தாலும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சரியாக சென்று சேரவில்லை என விவசாயிகள் கூறி வருகின்றனர். இதனால் கடைமடை பகுதியில் நெல் சாகுபடி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிகள், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கல்லணையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. குறிப்பாக திருவையாறு அருகே உள்ள மேலதிருப்பூந்துருத்தி, கண்டியூர், நடுக்காவேரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு நடவு செய்து 30 நாட்களே ஆன நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைப்பட்டனர்.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது போதிய தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது :-
பாசன வாய்க்காலில் போதிய தண்ணீரும் வரவில்லை. தலைமடை பகுதிக்கு தண்ணீர் இல்லை என்றால் இதை விட வேதனை வேறு என்னவாயிருக்கும். தண்ணீரின்றி கருகி வரும் பயிர்களை பார்க்க வேதனையாக உள்ளது. தற்போது ஆடி மாத காற்றும் பலமாக வீசி வருவதால் வயலில் உள்ள ஈரப்பதமும் காய்ந்து வருகிறது. இதனால் வயல்களில் ஆங்காங்கே பாலம் பாலமாக வெடிப்பு விட்டு வருகின்றன.
எனவே கர்நாடக அரசு காவிரியில் உரிய தண்ணீர் திறக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணையில் இருந்து முறை வைக்காமல் தண்ணீர் திறந்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும் இனிமேல் பயிர்களை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. எனவே எங்கள் பகுதியில் உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 92,214 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறுவை நெல்பயிர் நேரடி விதைப்பின் கீழ் சுமார் 28,569 ஏக்கரிலும், நெல் தீவிரப்டுத்தல் முறையின் கீழ் 46,720 ஏக்கரில் பயிடப்பட்டுள்ளது. சாதாரண நாற்று நடவு முறையில் குறுவை பயிர் சுமார் 14,680 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் அதிலிருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடி விதைப்பு செய்த நெற் பயிர்கள் முற்றிலுமாக கருகி வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் அருகே உள்ள பழையவலம், செங்கமேடு, ஓடாச்சேரி, கேக்கரை, கள்ளிக்குடி, தென் ஓடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 3000 ஏக்கர் நேரடி விதைப்பு செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் தண்ணீர் இன்றி இளம் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக வெட்டாறு பாசனத்தில் இருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்காலில் இதுவரை ஒரு முறை மட்டுமே தண்ணீர் வந்ததாகவும் அந்த தண்ணீரும் விவசாய நிலங்களுக்கு பாய்ச்ச முடியாத நிலையில் குறைந்த அளவு தண்ணீராக வந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வசதியான விவசாயிகள் மட்டும் என்ஜின் வைத்து தண்ணீரை தங்களது நெற் பயிர்களுக்கு பயன்படுத்தி கொண்டனர். மற்ற விவசாயிகளின் நெற் பயிர்கள் கருகும் நிலை உருவாகி வருகிறது. ஒரு ஏக்கருக்கு ரூபாய் 10000 வரை செலவு செய்துள்ளோம். இந்நிலையில் தற்போது பயிர்கள் கருகி வருகிறது. மூன்றாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையில் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் வருகிற 27-ந்தேதி தஞ்சாவூருக்கு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
- ஈரப்பதத்துடன் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நடப்பாண்டு காலத்தோடு திறந்துவிடப்பட்ட காவிரி நீர் காரணமாக மகிழ்ச்சியோடு சாகுபடி தொடங்கிய விவசாயிகளுக்கு அடுத்த சில நாட்களிலேயே துயரம் காத்திருந்தது.
மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை வரை சீராக வந்து சேராத காரணத்தால் குறுவை சாகுபடி பெருமளவு பாதிக்க தொடங்கியது.
தண்ணீர் கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் விவசாயிகள் நடத்திய நிலையில் பயிர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்து அவர்கள் டீசல் இன்ஜின் வாடகைக்கு எடுத்து கூடுதல் செலவு செய்து குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து குறுவைப் பயிர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட அவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 மூட்டை வரை கிடைக்க வேண்டிய நிலையில் 10 முதல் 15 முட்டை வரையே தண்ணீர் இல்லாத காரணத்தால் அறுவடையில் கிடைத்ததாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
ஒரத்தூர், அகர ஒரத்தூர், வேர்க்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு காலத்தோடு நேரடி நெல் கொள்முதல் திறக்க வேண்டும் என கடந்த 10 கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது பெய்த கனமழை காரணமாக ஒரத்தூர், வேர்க்குடி, அகர ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் ஆயிரம் மூட்டை குருவை நெல்கள் நனைந்து பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பதோடு ஈரப்பதத்துடன் குருவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.
- ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர்,சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, அணையிலிருந்து கடந்த ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனையடுத்து விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியை துவக்கினர். தற்போது இப்பகுதிகளில் நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.கணியூர், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து கடத்தூர், கண்ணாடிபுத்தூர் பகுதிகளிலும் அறுவடையை துவக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்கள் பற்றாக்குறையால் எந்திர அறுவடைக்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், மடத்துக்குளம் வட்டார பகுதிகளில் பருவ மழையும் துவங்கியுள்ளது.
இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் பாதித்து வருகின்றன. நெல் வயல்களில், தாள்கள் தலைசாய்ந்து, நெல் மணிகள் வயல்களிலேயே உதிர்ந்து, பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
எனவே பருவ மழைக்கு முன், விளைந்த நெல் அறுவடை செய்யும் வகையில் தேவையான அளவு நெல் அறுவடை எந்திரங்களை கொண்டு வர வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது.இங்கு நெல்லுக்கான ஆதார விலை சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ. 2,203 மற்றும் ஊக்கத்தொகை ரூ.107 என ஒரு குவிண்டால் 2,310 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.அதே போல் பொது ரகம் ஆதார விலை, ரூ.2,183, ஊக்கத்தொகை ரூ.82 என ஒரு குவிண்டால் நெல் 2,265 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது, அறுவடை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் கொள்முதல் மையத்தில் பதிவு செய்து வருகின்றனர். கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, சோழமாதேவி பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- புதுக்கோட்டை மாவட்டம் நெல் சாகுபடியில் இலைசுருட்டு புழு தாக்குதல்
- கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குனர் ஆலோசனை
புதுக்கோட்டை,
தற்பொழுது நிலவும் தட்பவெப்பநிலை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனை விவசாயிகள் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இலைச்சுருட்டு புழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றிலுள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும். இவ்வாறு பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்ட நிலையில் பயிர் காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும் அதிகமாக தழைச்சத்து யூரியா உரம் இடப்பட்ட பகுதிகளிலும் மிகுந்து காணப்படும். புரட்டாசி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரை தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.
இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வரப்புகளை புல், புண்டுகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தழைச்சத்தினைப் பரிந்துரை அளவுக்கு மேல் இடாமல், தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இட வேண்டும்.
விளக்குப்பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒளிரவிட்டுத் தாய் அந்துப்புச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஏக்கருக்கு இரண்டு சி.சி. அளவு, நடவு செய்த 37, 44 மற்றும் 51ம் நாட்களில் காலை நேரத்தில் வயலில் விட்டு இப்புழுவின் முட்டைக் குவியலை அழிக்கலாம்.
இலைச்சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்திட ஒரு கூடைத் தவிட்டில் 100 மி.லி. மண்ணெண்ணெய்யைக் கலந்து வயலில் விசிறுதல் வேண்டும். பின்னர், ஏறத்தாழ எட்டடி நீளமுள்ள வைக்கோல் பிரிகயிறு மூலம் வயலின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கொருவர் பிடித்துக்கொண்டு நெற்பயிரின் மேல் நன்கு படுமாறு இழுத்துச்செல்ல வேண்டும்.
இதனால் நெல்லின் இலைப்பகுதி வைக்கோல் பிரியில் பட்டு நிமிரும்போது மடக்கப்பட்ட இலைப்பகுதி விரிந்துவிடும்.
இதனால் இப்புழுக்கள் கீழே விழுந்து மண்ணெண்ணெய் கலந்த நீரில் விழுந்து இறந்துவிடும். மேலும், மூன்றடி உயரம் கொண்ட குச்சிகளைப் பறவை இருக்கையாக அமைத்துப் பறவைகளைக் கவர்ந்து அவை தாய்ப் பூச்சிகளைக் பிடித்துண்ண வழிவகை செய்யலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் இப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
விவசாயிகள் தங்கள் பயிர்சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால்
உடன் உழவன் செயலி மூலம் படம் பிடித்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் தங்களுடைய அலைபேசிக்கு உரிய பரிந்துரை அனுப்பி வைக்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திடவும் கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.
எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் நெற்பயிரினை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தி டுமாறு வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
- குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
- பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
நாங்குநேரியான் கால்வாயில் இருந்து படலையார்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறும் மறுகால் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.
இதனைதொடர்ந்து மறுகால் புதர் மண்டி கிடக்கிறது. குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறுகாலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் களக்காடு பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் படலையார்குளம் நிரம்பியது. குளத்தின் மறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உபரிநீர் வெளியேற வழியின்றி அருகில் உள்ள வட்டமொழி பத்து, மாணிக்கம்குளம் பத்து, மாவநேரி பத்து விளைநிலங்களுக்குள் குளத்து நீர் புகுந்தது.
இதனால் அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல், வாழைகள் நீரில் மூழ்கியது. 150 ஏக்கர் பரப்பளவிலான நெல், வாழைகள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே படலையார்குளத்தின் மறுகாலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரவும், தண்ணீர் வெளியேறவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
- சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது.
இது தவிர கோடைகால சாகுபடியும் நடைபெறும்.
இங்கு விளைவிக்கப்படும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படுகிறது.
அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து 1000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
பின்னர் சரக்கு ரயிலின் 21 வேகன்களில் 1000 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.