என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Premalatha vijayakanth"
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
- அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லை.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை நிலவி வரும் அளவிற்கு, நிர்வாகச் சீர்கேடு இந்த ஆட்சியில் நிலவுகிறது. எனவே சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாதது மிகவும் கண்டனத்திற்குரியது.
அதேபோல் பன்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி நேரடியாக சென்று ஆய்வு செய்து, அப்பள்ளிகளில் நடக்கும் அவலத்தை உடனடியாக சீர்படுத்த வேண்டும். பள்ளிகளில் ஏற்படும் இந்த அவலங்கள் அந்த துறைக்கே மிகப்பெரிய வெட்கக் கேடாக அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து இன்று தமிழ்நாடே கேள்விக்குறியாக இருக்கிறது.
- எதிர்வரப்போகும் மழை வெள்ளத்திற்கு எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடும் இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?
திருவள்ளூர் மாவட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் படுகொலைகள், பலாத்காரங்கள், கொலை, கொள்ளை என்று சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து இன்று தமிழ்நாடே கேள்விக்குறியாக இருக்கிறது. அதில், மாற்றுக் கருத்தே இல்லை.
பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் போன்று பல்வேறு விஷயங்கள் தமிழகத்தில் நடக்கிறது. இவை அனைத்தையும் கண்டிக்க வேண்டும். ஆனால், இதை தடுக்க வேண்டிய அரசு வெறும் வாய்வார்த்தைகளை சொல்லிக்கொண்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
எதிர்வரப்போகும் மழை வெள்ளத்திற்கு எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடும் இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று மக்கள் கேட்கின்ற கேள்வியை நானும் கேட்கிறேன்.
யார் வருவதற்காகவும் இன்னெரு கட்சி வேலை செய்ய வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அவரவர்களின் கட்சி பணிகளை அவரவர்களின் கட்சிகள் செய்துக் கொண்டிருக்கின்றனர். எங்கள் கட்சிகளின் பணிகளை நாங்கள் செய்துக் கொண்டிருக்கிறோம். அதுபோன்று, திமுக, அதிமுக மற்றும் தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளும் அவரவர்களின் பணிகளை செய்துக் கொண்டிருக்கின்றனர்.
தேமுதிக- அதிமுக இடையே கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்.
- தமிழகத்தில் சொத்து வரியை உடனே திரும்ப பெற வேண்டும்.
சென்னை:
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைந்து வருகிற 28-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதற்கு ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்துவோம்
* கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும். மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும்.
* கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமையை தடுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும் மழை பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும்.
* தமிழகத்தில் சொத்து வரியை உடனே திரும்ப பெற வேண்டும்.
* கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு விட்டு, ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறும்.
* உயர்த்திய மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.
* ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றை எதிர்கொண்டு, வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை அமைத்து 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்றும், நம் தமிழ்நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காகவும் கேப்டன் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும் என உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறு தே.மு.தி.க. கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தமிழைத் தவிர மாற்று மொழியை பேசாதவர் நமது கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும்.
- தமிழ் தான் நமது தெய்வம், அன்னை, அதில் மாற்று கருத்து கிடையாது.
மதுரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான். எங்கள் கட்சிதான் அதற்கான பதில்.
* கட்சியிலேயே தேசியமும் இருக்கிறது. திராவிடமும் இருக்கிறது. தமிழகமும் இருக்கிறது. அதை முற்போக்கு சிந்தனையோடு கொண்டு செல்வதுதான் தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
* தமிழை நேசித்தவர் நம்முடைய கேப்டன் என்று எல்லோருக்கும் தெரியும். எத்தனையோ படங்களில் நடித்தாலும் தமிழை தவிர மற்ற எந்த மொழிகளிலும் நடிக்காமல் சரித்திர சகாப்தத்தை படைத்தவர் கேப்டன்.
* 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று அத்தனை இடத்திலும் தமிழைப் பற்றி பேசியவர் கேப்டன்.
* தமிழைத் தவிர மாற்று மொழியை பேசாதவர் நமது கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும்.
* அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியையும் கற்போம் என்று தான் இளைஞர்களுக்கு கேப்டன் சொன்னார்.
* எனவே நிச்சயமாக தமிழ் தான் நமது தெய்வம், அன்னை, அதில் மாற்று கருத்து கிடையாது.
* எங்களைப் பொறுத்தவரை தேசியத்தில் தான் திராவிடம் இருக்கு திராவிடத்தில் தான் தமிழகம் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
* அது இன்றல்ல நேற்றல்ல நூற்றாண்டு காலமாக இருக்கின்ற விஷயம். இனிமேல் அதுபற்றி புதிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பது எனது கருத்து என்று தெரிவித்துள்ளார்.
- மாநாட்டு பணிகளை விஜய் கட்சியினர் முன்னெடுத்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக பணி செய்து வந்தார்கள்.
- விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது.
வெற்றிக் கொள்கை திருவிழா என்று பெயர் குறிப்பிட்டு இந்த மாநாட்டு பணிகளை விஜய் கட்சியினர் முன்னெடுத்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக பணி செய்து வந்தார்கள்.
85 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு செல்வதற்கு 5 நுழைவு வாயில்களும், வெளியே செல்வதற்கு 15 வழிப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக அதிகாலை முதலே குவிய தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு!
மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது!
உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்!
மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்!
உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது! என்று கூறியுள்ளார்.
இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு!
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) October 26, 2024
மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது!
உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்!
மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்!
உலக சாதனை… pic.twitter.com/DLfRmzS8hO
- செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
- மதுரை மாநகராட்சியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் காக்க வேண்டியது அரசியல் கடமையாகும்.
சென்னை:
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
குறிப்பாக, செல்லூர், புதூர், கூடல்புதூர், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மதியம் 2½ மணி முதல் மாலை 5½ மணி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் 3 மணி முதல் 3.15 மணி வரை 15 நிமிடத்தில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் (44.5 மில்லி மீட்டர்) மழைப்பொழிவு இருந்ததாகவும், காலை முதல் மாலை வரை 9.8 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரையில் ஓரிரு நாள் பெய்த மழைக்கே ஏன் இந்தளவு பாதிப்பு என்பதை ஆராய்ந்து மாநகராட்சி தெளிவுப்படுத்த வேண்டும்.
மதுரை மாநகராட்சியில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் காக்க வேண்டியது அரசியல் கடமையாகும்.
மதுரையில் மழை பாதிப்பு குறித்து தமிழக அரசு விளக்கம் தர வேண்டுமென தெரிவித்துள்ளார்.
- முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
- முரசொலி செல்வம் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
முரசொலி செல்வம் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முரசொலி செல்வம் மறைவுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் வலைதளத்தில், விஜயகாந்த் உடன் நல்ல நட்புடன் பழகியவர் முரசொலி செல்வம். முரசொலி செல்வம் மறைவு தி.மு.க.வுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது.
- ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை.
மதுரை:
மதுரையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அமெரிக்காவில் முதலமைச்சர் சைக்கிள் ஓட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுக்கிறார். முடிவில் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை அவர்கள் ஈர்த்தனர், இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என தெரியவில்லை.
மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனுமில்லை. அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகும். அவற்றிற்கு மாற்றாக தமிழ்நாட்டிலேயே அணைகளை கட்ட திட்டமிட வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது. சினிமா துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களை தவறாக பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும். பசுத்தோல் போர்த்திய புலிகள் போல பெரிய மனிதர் போர்வையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். சில ஆண்களின் தவறான செயல்களால் மொத்த ஆண்களுக்கும் தலைகுனிவாக உள்ளது.
நடிகர் விஜயின் கோட் படத்திற்கு எனது வாழ்த்துக்கள். விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சனை? கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது.
ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை. பல ஊழல்கள் நடக்கிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டியது அரசாங்கம். ஆனால் தடுக்காமல் தவறிவிட்டது
முதலமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும். ஒரே இரவில் ரூ.5000 கோடிகள் செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன்? அந்த பணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
விஜய் மாநாடு நடத்தி, கட்சி துவங்கி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர்தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜயகாந்த் மரணம் அடைந்த நாளில் இருந்து தினமும் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
- விஜயகாந்த் மனைவி பிரேமலதா நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி மறைந்தார். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கோவில் போன்ற தோற்றத்தை உருவாக்கி கேப்டன் கோவில் என்றே கட்சியினர் அழைத்து வருகிறார்கள்.
விஜயகாந்த் மரணம் அடைந்த நாளில் இருந்து தினமும் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. யார் சந்திக்க வந்தாலும் அவர்களை நன்றாக சாப்பிட வைத்து விட்டே விஜயகாந்த் பேச தொடங்குவார். இப்படி அவர் பசியாற்றியதை நினைவு கூறும் வகையிலேயே கடந்த 8 மாதங்களாக தொடர்ச்சியாகவே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விஜயகாந்த் பிறந்தநாள் நாளை (25-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. விஜயகாந்த்தின் மரணத்துக்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் கட்சியினர் கனத்த இதயத்துடனேயே இந்த பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது பிறந்தநாள் அன்று விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவார்.
இந்த ஆண்டு விஜயகாந்த் மனைவி பிரேமலதா நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா செய்து வருகிறார். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விஜயகாந்த் பிறந்தநாளை கட்சியினர் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த்திற்கு நாளை சிலை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மார்பளவு மற்றும் முழு உருவசிலை ஆகியவை வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த இரண்டில் ஒரு சிலை நாளை நிறுவப்பட உள்ளது.
சென்னை மாவட்ட செயலாளர் வி.சி.ஆனந்தன், இ.ஆர்.எஸ்.பிரபாகரன், எஸ்.கே.மாறன், செந்தில் குமார் , செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை.முருகேசன் ஆகியோரும் தங்களது பகுதியில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர்.
- விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது.
- கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு டாட்டூ போடுகின்றனர்.
சென்னை:
விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது.
71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது.
கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு 71 டாட்டூ கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடத்தில் டாட்டூ போடுகின்றனர்.
டாட்டூ போடும் நிகழ்ச்சியை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைக்க உள்ளார்.
- இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.
- இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்ப செய்துள்ளது.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விவசாய மக்களுக்கு தேவையான தண்ணீரை கேட்டபோது கொடுக்காத கர்நாடகா, தானாக முன்வந்து அணைகளை திறந்து தண்ணீரை தந்துள்ளது.
இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது. ஒரு டி.எம்.சி. தண்ணீரை தினந்தோறும் தமிழகத்திற்கு தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், உடன்படாத கர்நாடக அரசு இயற்கை அன்னையின் முன் மண்டியிட்டு உள்ளது. ஒரு டி.எம்.சி. தண்ணீர் தர மறுத்தபோது, ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழலை உருவாக்கி, இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்ப செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் சென்றும் காவிரி விவகாரத்தில் எதையும் சாதிக்க முடியாத நிலையில், தமிழக அரசு இனிமேலாவது இயற்கை அன்னை நமக்கு கொடையாக வழங்கி வரும் தண்ணீரை சேமிக்க வேண்டும். யாருடைய தயவையும் எதிர்பாராமல் தொலைநோக்கு பார்வையோடு நமக்கு கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் தடுக்க, தடுப்பணைகளை அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். விவசாயத்திற்கும், தொழில்களுக்கும், குடி தண்ணீருக்கும் யாரிடமும் இனிவரும் காலங்களில் மண்டியிடாத தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாட்டை இந்த அரசு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது.
- தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை:
மின் கட்டண உயர்வு, ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது ஆகியவற்றை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மின் கட்டண உயர்வும், மின் வெட்டும் வழக்கமாகி விடுகிறது. ரேசன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் சரியான முறையில் கிடைப்பது இல்லை. மாதம் தோறும் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக கூறிவிட்டு ஒரு சிலருக்கு மட்டுமே கொடுத்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக தே.மு.தி.க. இதுபோன்ற போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவோம்.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், சூரியா, பிரபாகரன், மாறன், செந்தில் குமார், பழனி, வேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் செழியன், மகாதேவன் மற்றும் தே.மு.தி.க.வினர் கலந்து கொண்டனர்.
கோவையில், துணை செயலாளர் பார்த்தசாரதி, தர்மபுரியில் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்