என் மலர்
நீங்கள் தேடியது "price hike"
- மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்படுகிறது.
- பொலிரோ மற்றும் பொலிரோ நியோ என இரு எஸ்யுவி மாடல்களின் புதிய விலை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு எஸ்யுவி-க்கள் புதிய RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படுவதால் இவற்றின் விலை ஏப்ரல் 1, 2023 முதல் உயர்த்தப்படுகிறது. பொலிரோ மாடலின் விலை ரூ. 31 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. பொலிரோ நியோ மாடலின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்கிறது.
புதிய விலை விவரங்கள்:
பொலிரோ நியோ ரூ. 9 லட்சத்து 63 ஆயிரத்தில் துவங்கி ரூ. 12 லட்சத்து 14 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. பொலிரோ மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 78 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 79 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பொலிரோ நியோ மாடலின் N10 லிமிடெட் எடிஷன் வேரியண்ட் தவிர அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. பொலிரோ B4 வேரியண்ட் விலை ரூ. 25 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. இதன் டாப் எண்ட் B6 (O) விலை ரூ. 31 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பொலிரோ B6 விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 10 லட்சம் என்றே விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 100 பிஎஸ் பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பொலிரோ மாடலில் 75பிஎஸ் பவர், 210 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு எஸ்யுவி-க்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
- தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
- பீன்ஸ் ஒரு கிலோ ரூ.130-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து கடந்த சில நாட்களாக அதன் விலை கிடு, கிடுவென அதிகரித்து உள்ளது.
பீன்ஸ் ஒரு கிலோ ரூ.130-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது. இதேபோல் பச்சை மிளகாய், இஞ்சி விலையும் எகிறி உள்ளது. பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.100-க்கும், இஞ்சி ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்து உள்ளதால் வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. இதனால் காய்கறிகளை குறைத்து இல்லத்தரசிகள் வாங்குகிறார்கள். காய்கறி விலை அதிகரிப்பால் குடும்ப தலைவிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கடந்த சில நாட்களாக விலை குறைந்து இருந்த தக்காளியின் விலையும் உயரத்தொடங்கி உள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கர்நாடகா, ஆந்திராவில் பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று வியாபாரிகள் கூறினர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் காய்கறி விலை (கிலோவில்) வருமாறு:-
உஜாலா கத்தரிக்காய்-ரூ.40, வரி கத்தரிக்காய்-ரூ.25, பன்னீர் பாகற்காய்-ரூ.50, சுரக்காய்-ரூ.20, நைஸ் கொத்தவரங்காய்-ரூ.80, பட்டை கொத்த வரங்காய்-ரூ.35, வெண்டைக்காய்-ரூ.35, முருங்கைக்காய்-ரூ.30, பீன்ஸ்-ரூ.100, ஊட்டி கேரட்-ரூ.60, முட்டை கோஸ்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.17.
- ஒரு கிலோ தக்காளி விலை ரூ.110ஆக உயர்ந்துள்ளது.
- விலை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர்.
மதுரை
மதுரையில் தக்காளி, மிளகாய், முருங்கைக்காய், கேரட் பீன்ஸ், உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி யில் ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாகம் அமைந்துள் ளது. தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக இங்கு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது சமையலில் அத்தியா வசியமாக பயன்படுத்தப் படும் தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ. 110 ஆக அதிகரித்துள்ளது. கிலோ ரூ. 60-க்கு விற்ற மிளகாய் ரூ.160 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் முருங்கைக்காய் கிலோ ரூ.50, கேரட் கிலோ ரூ.60, முருங்கை பீன்ஸ் கிலோ ரூ.120, பட்டர் பீன்ஸ் கிலோ ரூ. 120, சோயா பீன்ஸ் கிலோ ரூ.120, முட்டைக்கோஸ் ரூ.25, பூண்டு கிலோ ரூ.210, உருளைக்கிழங்கு கிலோ ரூ.70, பீட்ரூட் கிலோ ரூ. 60 ஆகிய விலைகளில் விற்கப் படுகிறது.
சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர்.
- விலை உயர்வால் தக்காளி வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்கின்றனர்.
- பெரும்பாலான ஓட்டல்களில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னியை வைப்பதை தவிர்த்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைவால் விலை அதிகரித்த நிலையில், வாங்க பொதுமக்கள் தக்காளி வாங்க தயாராக இல்லை. இதனால் மாலை நேரத்தில் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.120-க்கு விற்பனை செய்யப் பட்டது. நேற்று காலை ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்றது. இதன் காரணமாக மக்கள் தக்காளியை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
இதனால் தக்காளிகள் விற்பனை ஆகாமல் அதிக அளவில் குவித்து வைத்தி ருந்தனர். பழங்கள் அழுகும் நிலைக்கு சென்றதும் மாலையில் ரூ.100-க்கு விற்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் தெரிவித்தனர்.
தக்காளி விலை உயர்வால் பெரும்பாலான ஓட்டல்களில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னியை வைப்பதை தவிர்த்துள்ளனர்.
- மதுரை காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
- இஞ்சி விலை ரூ.300, சின்ன வெங்காயம்-ரூ.90..
மதுரை
மதுரையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தக்காளி, இஞ்சி உள்ளிட்டவற்றின் விலைகள் பொதுமக்களை தொடர்ந்து மிரட்டி வருகின்றன.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படு கிறது. இதனால் ஒட்டன் சத்திரம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு வரும்.
மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்ப னைக்கு வருவது வழக்கம். வெளி மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தற்போது காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மதுரை மார்க்கெட்டு களில் தக்காளியின் விலை கடந்த 2 வாரங்களாக உச்சத்தில் இருந்து வருகிறது உழவர் சந்தைகளில் ரூ.100-ஐ தாண்டி விற்கப்படும் தக்காளி வெளி மார்க்கெட்டுகளில் ரூ.140 வரை விற்பனையாகி வருகிறது. பச்சை மிளகாய் கடந்த சில நாட்களாக கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை சற்று குறைந்து ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது.
இஞ்சியை பொறுத்த வரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.220-க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து ரூ.270-க்கு உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் வெளி மார்க்கெட்டுகளில் இஞ்சியின் விலை ரூ.300-ஐ தாண்டி உள்ளது. தற்போது இஞ்சி சீசன் இல்லை என்பதாலும் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை என்பதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.
காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அசைவ உணவிற்கு அதிக முக்கியத்து வம் தருவதாகவும், அதற்காக இஞ்சியின் தேவை அதிகரித் துள்ளதாலும் விலை உயர்ந்து வருவதாகவும் சில வியாபாரிகள் கூறுகின்ற னர்.
மதுரையில் உள்ள உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகள் விலை விவரம் வருமாறு:-
கத்திரிக்காய்-ரூ.36, முருங்கைக்காய்-ரூ.50, உருளை-ரூ.50, கேரட் -ரூ.70, பட்டர் பீன்ஸ் -ரூ.120, முட்டைக் கோஸ்-ரூ.30, பச்சை மிளகாய்-ரூ.110, சின்ன வெங்காயம்-ரூ.90, பெரிய வெங்காயம்-ரூ.30, பூண்டு-ரூ.200, மல்லி-ரூ.90, கறிவேப்பிலை-ரூ 36 ஆக உள்ளது.
தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றின் திடீர் விலை உயர்வுக்கு பதுக்கலும் ஒரு காரணம் என்று தெரிய வந்துள்ளது. விலை ஏற்றம் காரணமாக அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இந்த காய்கறிகளை சில வியாபாரிகள் தங்களது குடோன்களில் அதிக அளவில் பதுக்குவதாகவும் அதனால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுவ தாகவும் புகார் எழுந்துள்ளது.
எனவே காய்கறிகளின் விலை மேலும் உயராமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி குடோன்களில் தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகள் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை சோதனை செய்து கண்டறிய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
- விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.
சென்னை:
தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் ஜான் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் சங்க தலைவர் ஜான் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திலுள்ள சுமார் 7000 திருமண மண்டபங்களுக்கு தொடர்ச்சியாக சொத்து வரி, மின் கட்டணம், வணிக உரிம கட்டணம் என்று அனைத்து வகையிலும் கட்டணங்களை 100 முதல் 200 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
கொரோனா கால நஷ்டத்திலிருந்து இன்றளவும் மீள முடியாமல் திணறிக்கொண்டு இருக்கும் திருமண மண்டபங்கள் இவ்வாறான வரிகளால் திருமண மண்டப உரிமையாளர்கள் மண்டபங்களை பராமரிக்க முடியாமல், வங்கி கடனை செலுத்த முடியாமலும் மண்டபங்களை மூடும் தருவாய்க்கு வந்துவிட்டார்கள். இந்த விலை உயர்வுகள் அனைத்தும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.
மேலும் திருமண மண்டபங்கள் மூடப்பட்டால் திருமண நிகழ்ச்சிகளில் ஈடுபடும் கேட்டரிங், நடேஸ்வரன், புகைப்படம், அலங்காரம், புரோகிதர்கள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும். எனவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
- மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல் சீட்டா பிளஸ், ஆல்ஃபா பிளஸ் வேரியன்ட்களில் கிடைக்கிறது.
- மாருதி கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வெர்ஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வேரியன்ட்களில் புதிய அம்சம் வழங்கி வருகிறது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களில் "அகௌஸ்டிக் வெஹிகில் அலெர்டிங் சிஸ்டம்" எனும் அம்சம் வழங்கப்பட இருக்கிறது.
புதிய அம்சம் சாலையில் வாகனம் செல்வது பற்றிய தகவலை ஓட்டுனர் மற்றும் பாதசாரிகளுக்கு எச்சரிக்கை செய்யும். இதற்கு இந்த சிஸ்டம் பாதசாரிகளுக்கு சவுன்ட் அலெர்ட் கொடுக்கும். இது வாகனத்தில் இருந்து அதிகபட்சம் ஐந்து அடி தூரம் வரை கேட்கும். இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், அனைத்து ஹைப்ரிட் வேரியன்ட்களின் விலையும் ரூ. 4 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மாடல் சீட்டா பிளஸ் மற்றும் ஆல்ஃபா பிளஸ் வேரியன்ட்கள் மற்றும் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 18 லட்சத்து 49 ஆயிரம் மற்றும் ரூ. 19 லட்சத்து 84 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மாருதி கிரான்ட் விட்டாரா மாடலின் ஹைப்ரிட் வெர்ஷனில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 91 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 79 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.
- தக்காளி பயிரிட்ட விவசாயிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- விவசாய உற்பத்தி செலவு எகிறி விட்டது.
புனே
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வு ராக்கெட் வேகம் கண்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில், தக்காளி பயிரிட்ட விவசாயிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் பலர் லட்சாதிபதிகளாகி விட்டனர். இந்தநிலையில் மகாராஷ்டிராவில் தக்காளி விவசாயி ஒருவர் கோடீசுவரர் ஆகி விட்டார்.
புனே மாவட்டம் ஜூன்னார் தாலுகா பஞ்கர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வர் கெய்கர் (வயது 36) என்ற விவசாயி தான் அந்த அதிர்ஷ்டசாலி. இவர் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு இருந்தார். இதில் தக்காளி அறுவடை மூலம் அவருக்கு ஒரே மாதத்தில் ரூ.3 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
தக்காளி அடிமாட்டு விலைக்கு போகும் செய்தியை அடிக்கடி கேட்டு இருப்போம். அப்போது விரக்தி அடையும் விவசாயிகள் அறுவடை செய்த தக்காளியை சாலையில் கொட்டுவதையும், தக்காளி பயிரை அழிப்பதையும் வழக்கமாக வைத்து இருந்தனர். இதேபோன்று தான் ஈஸ்வர் கெய்கரும் கடந்த 2 மாதங்களுக்கு முன் விலை போகாத தக்காளியை வீணடித்து இருக்கிறார். இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் தக்காளி பயிரிட்ட அவருக்கு தற்போது ஜாக்பாட் அடித்து இருக்கிறது.
இதுபற்றி விவசாயி ஈஸ்வர் கெய்கர் கூறியதாவது:-
எனக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 12 ஏக்கரில் தக்காளி பயிரிட்டேன். கோடை வெயிலில் இருந்து பயிரை பாதுகாக்க கடின முயற்சி மேற்கொண்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
கடந்த ஜூன் 11-ந் தேதி எனக்கு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.37 கிடைத்தது. கடந்த 18-ந் தேதி கிலோ ரூ.110-க்கு விற்றேன். ஜூன் 11-ந் தேதி முதல் இதுநாள் வரை 3 லட்சத்து 60 ஆயிரம் கிலோ தக்காளி அறுவடை செய்து அதன் மூலம் ரூ.3 கோடி சம்பாதித்துள்ளேன். இன்னும் ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
தக்காளி சாகுபடி மற்றும் போக்குவரத்து என சுமார் ரூ.40 லட்சம் செலவு ஆனது.
கடந்த காலங்களில் தக்காளியால் நஷ்டங்களை சந்தித்தேன். 2011-ம் ஆண்டு ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஆண்டில் உற்பத்தி செலவு அளவுக்கு தான் வருமானம் கிடைத்தது. கடந்த மே மாதம் கூட கிலோவுக்கு ரூ.2.50 மட்டுமே விலை போனதால் தக்காளியை சாலையில் கொட்டினேன். தற்போது நல்ல லாபம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை தந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தக்காளி விலை உயர்வு பற்றி புனே பகுதி ஏ.பி.எம்.சி. மார்க்கெட் வியாபாரி சஞ்சய் காலே கூறுகையில், "நான் கடந்த 15 ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் உள்ளேன். இதுபோன்ற தக்காளி விலை உயர்வை ஒருபோதும் பார்க்கவில்லை. விவசாய உற்பத்தி செலவு எகிறி விட்டது. கோடைக்காலங்களில் தக்காளி பயிரை கடுமையாக நோய் தாக்கியது. எனவே தக்காளி பயிரிடுவதை விவசாயிகள் பலர் கைவிட்டனர். இதுபோன்ற காரணங்களால் தான் தக்காளி அதிகப்படியான விலை உயர்வு கண்டுள்ளது" என்றார்.
- அ.தி.மு.க சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கோவில் இடங்களில் காலம் காலமாக வீடு கட்டி வாழ்ந்தவர்களிடம் தகுதியான குத்தகை வரி வசூலிக்காமல் லட்ச கணக்கில் வசூலிக்கின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைசர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவுரை காலம் தொடங்கி விட்டது. முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை பற்றி துரைமுருகன் கூறிய பாடலை சுட்டிக்காட்டி பேசினார். தற்போது தமிழகத்தில் நடைபெறும் காவல்துறை தமிழக ஏவல்துறையாக நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலத்தில் என்ன அடிப்படை திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்கள் என கூற முடியுமா? இந்து சமய அறநிலைத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகிறது. தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு, வீட்டுவரி உயர்வு, பதிவுகட்டணம், கோவில் இடங்களில் காலம் காலமாக வீடு கட்டி வாழ்ந்தவர்களிடம் தகுதியான குத்தகை வரி வசூலிக்காமல் லட்ச கணக்கில் வசூலிக்கின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, அனிதா ராதா கிருஷ்ணன், அனைவரும் கூடிய விரைவில் புழல் சிறைக்கு செல்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
- விவசாயி மல்லேஷ் ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பெங்களூரு :
நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளிக்கு மவுசு கூடி உள்ள நிலையில், தற்போது அவற்றை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி மல்லேஷ் என்பவர் தான் விளைவித்த 2 டன் தக்காளியை கடந்த 8-ந்தேதி சரக்கு வாகனத்தில் கோலார் மாவட்டத்திற்கு விற்பனைக்கு எடுத்து சென்றார்.
அந்த சரக்கு வாகனம் பெங்களூரு எலகங்கா அருகே ஹெப்பால் சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்மகும்பல் வழிமறித்தது. பின்னர் காரில் இருந்து இறங்கிய கும்பல், விவசாயி மல்லேஷ் மற்றும் டிரைவரை தாக்கி கீழே தள்ளினர். இதையடுத்து 2 டன் தக்காளியை சரக்கு வாகனத்துடன் அவர்கள் கடத்தி சென்றனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மல்லேஷ், ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். அப்போது போலீசார் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கர் (வயது 38) மற்றும் அவரது மனைவி சிந்துஜா(36) என்பது தெரிந்தது. அவர்கள் தங்கள் கூட்டாளிகள் உதவியுடன் தக்காளி பாரத்துடன் வந்த சரக்கு வாகனத்தை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அதை விற்பனை செய்வது குறித்து ஆலோசித்துள்ளனர்.
அதன்படி அவர்கள் சென்னைக்கு கொண்டு வந்து 2 டன் தக்காளியையும் விற்று ரூ.1½ லட்சம் சம்பாதித்து உள்ளனர். மேலும் அந்த பணத்தை தம்பதி உள்பட 5 பேரும் பங்குபோட்டு கொண்டு மீண்டும் சரக்கு வாகனத்தை பெங்களூருவுக்கு எடுத்து வந்துள்ளனர். போலீசிடம் இருந்து தப்பிக்க, அவர்கள் சரக்கு வாகனத்தை தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தியது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், போலீசார் காலி சரக்கு வாகனத்தை மீட்டனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக கிடைப்பதால் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகிறது.
- சென்னையில் உள்ள ஆவின் ஏஜென்சிகள் பார்லர்களில் இந்த விலை உயர்வு இன்றே நடைமுறைக்கு வந்தது.
சென்னை:
தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனமான ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக கிடைப்பதால் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகிறது.
கடந்த ஆண்டு பால் பொருட்களின் விலையை உயர்த்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாதாம் பவுடர் மற்றும் பன்னீர் விலை கிலோவுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டது. தற்போது மேலும் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வருவாய் இழப்பு கூடி வருகிறது. இதனால் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆவின் பன்னீர், பாதாம் விலை இன்று முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு கிலோ பன்னீர் ரூ.450-ல் இருந்து ரூ.550 ஆக உயர்ந்துள்ளது. அரை கிலோ பன்னீர் ரூ.300 ஆகவும் (ரூ.50 அதிகரிப்பு) 200 கிராம் பன்னீர் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் கூடியுள்ளது. இதேபோல பாதாம் மிக்ஸ் 200 கிராம் பாட்டில் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள ஆவின் ஏஜென்சிகள் பார்லர்களில் இந்த விலை உயர்வு இன்றே நடைமுறைக்கு வந்தது.
- ஓமலூர் வட்டார தோட்டக்கலை அதிகாரிகள், கிராமங்களில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறு, குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி குறுகிய கால பயிர்களான காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்ய ஊக்கபடுத்தி வருகின்றனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் தோட்டக்கலை துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஓமலூர் வட்டார தோட்டக்கலை அதிகாரிகள், கிராமங்களில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறு, குறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி குறுகிய கால பயிர்களான காய்கறிகள், கீரைகளை சாகுபடி செய்ய ஊக்கபடுத்தி வருகின்றனர்.
காய்கறி சாகுபடி குறைந்தது
ஆனால் கடந்த ஓராண்டாக ஓமலூர் வட்டார விவசாயிகள் பணப் பயிர்களையே அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். அதனால் தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் காய்கறி சாகுபடி குறைந்து, விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பயிற்சி
இந்த நிலையில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள், கீரைகள் சாகுபடி செய்வதற்கான பயிற்சி முகாமை ஓமலூர் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை நடத்தியது. இந்த முகாமில் பொது மக்கள் தங்களது வீடுகளில் மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து காய்கறிகள் சாகுபடி செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் இயற்கையான முறையில் சாகுபடி செய்து நஞ்சில்லாத காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிடலாம் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைக்க தேவையான பைகள், விதைகள், நார் கழிவுகள், செடிகளின் நாற்றுகள், உயிர் உரங்கள் ஆகிய அனைத்தும் அடங்கிய ஒரு தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், மாடி தோட்ட தொகுப்புகளை வாங்கி சென்று வீடுகளில் காய்கறிகள் சாகுபடி செய்து, வீட்டிற்கு தேவையான காய்கறிகளை விளைவித்து பயனடையலாம். மேலும் அதிகளவில் சாகுபடி செய்து விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதவிகள்
மாடி தோட்டம் மற்றும் வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து பொதுமக்கள் தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் கேட்கப்பட்டது. அப்போது அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.