என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramzan Festival"

    • பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
    • பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர்.

    பெங்களூரு:

    தெலுங்கு வருட பிறப்பான யுகாதி நாளை கொண்டாடப்படுகிறது. இதே போல் ரம்ஜான் பண்டிகை நாளை மறுநாள் (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யுகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக பெங்களூரு பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    குறிப்பாக பெங்களூருவில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை இணைக்கும் நகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஹூப்ளி, தார்வாட், பெலகாவி, பீதர், ராய்ச்சூர், கொப்பல், பெல்லாரி, கலபுரகி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெங்களூரு மெஜஸ்டிக் கெம்பேகவுடா பஸ்நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் திரண்டனர். அவர்கள் அனைத்து ரெயில்கள் மற்றும் பஸ்களிலும் ஏறி இடம்பிடித்துக் கொண்டனர். இதனால் முன்பதிவு செய்தவர்கள் இடம் கிடைக்காமல் தவித்தனர்.

    சாளுக்யா வட்டம், ஆனந்த்ராவ் வட்டம், மைசூரு சாலை, யஷ்வந்த்பூர், ஆர்.எம்.சி. யார்டு, தும்கூர் சாலை மற்றும் ஓசூர் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மெதுவாக நகர்ந்தன.

    பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பொதுமக்கள் தவித்தனர். மேலும் தனியார் பஸ்களும் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி சென்றது. குறிப்பாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்த 17 பஸ்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரூ.9 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர். 

    • கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.
    • வியாபாரிகள் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். அதன்படி நேற்று காலை ஆட்டுச்சந்தை தொடங்கியது.

    இதற்காக பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெள்ளாடு, செம்மறியாடு உள்பட சுமார் 800-க்கும் மேற்பட்டவவை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.

    மேலும் சிலர் ஆட்டுக்குட்டிகளையும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ரம்ஜான் பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுவதால், பொள்ளாச்சி சந்தையில் சுமார் 800 முதல் 1000 வரையிலான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.

    மேலும் அவற்றை வாங்கி செல்வதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதன்காரணமாக பொள்ளாச்சி சந்தையில் ஆடுகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

    தொடர்ந்து அங்கு 8 கிலோ முதல் 25 கிலோ வரையிலான ஆடுகள் எடைக்கு ஏற்ப தரம் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதாவது 8 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5500 வரையும், 20 கிலோ ஆடு ரூ.16-17 ஆயிரம் வரையும், 25 கிலோ ஆடு ரூ.22 ஆயிரம் வரையும் விலை போனது.

    பொள்ளாச்சி சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகளின் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் அவற்றின் விலையில் சிறிதும் சரிவு ஏற்படவில்லை. இருந்தபோதிலும் வியாபாரிகள் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.

    இதன் காரணமாக பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில் நேற்று மட்டும் ரூ.80 லட்சம் வரை ஆடுகளின் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    • தாம்பரத்தில் இருந்து வரும் 28-ந்தேதி மாலை புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
    • திருச்சியில் இருந்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் காலை புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில், அதேநாள் மதியம் தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தாம்பரம்-கன்னியாகுமரி, திருச்சி-தாம்பரம், இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தாம்பரத்தில் இருந்து வரும் 28-ந்தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037), மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 31-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06038), மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * திருச்சியில் இருந்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06048), அதேநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 29,30,31 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06047), அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22, 26, 29, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.
    • ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வருகிற 31-ந்தேதி, எப்ரல் 7-ந்தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனுாரை அடையும். மறுமார்க்க ரெயில் வருகிற 31-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்னையை வந்தடையும்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22, 26, 29, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அடுத்த 3-வது நாளில் காலை 7.15 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் சந்திரகாச்சிக்கு செல்லும்.

    சந்திரகாச்சியில் இருந்து வருகிற 24, 28, 31, ஏப்ரல் 4-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் மாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்.

    இதேபோல் ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வருகிற 31-ந்தேதி, எப்ரல் 7-ந்தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    • ரம்ஜான் சீசனில் எப்போதும் இல்லாத வகையில் பேரீச்சம் பழங்களின் விற்பனை களை கட்டும்.
    • ஈரான், சவுதி, ஓமன், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கப்பலில் பேரீச்சம் பழங்கள் பெட்டி பெட்டியாக வந்து குவிந்துள்ளன.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் விரதம் கடைபிடித்து வருகிறார்கள்.

    இந்த விரத நாட்களில் அவர்கள் பேரீச்சம் பழங்களை சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் ரம்ஜான் பண்டிகை நேரத்தில் பேரீச்சம் பழங்கள் விற்பனை முழுவதும் அதிகமாகவே இருக்கும்.

    சூரியன் உதயமாவதற்கு முன்பு அதிகாலையில் சாப்பிட்டு விட்டு நாள் முழுவதும் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் மாலையில் நோன்பை முடிக்கும் நேரத்தில் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிப்பார்கள்.

    இதனால் ரம்ஜான் சீசனில் எப்போதும் இல்லாத வகையில் பேரீச்சம் பழங்களின் விற்பனை களை கட்டும். அந்த வகையில் இந்த ஆண்டும் பேரீச்சம் பழங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.

    வழக்கமாக விற்பனையாவதை விட ரம்ஜான் காலத்தில் 50 சதவீதம் அளவுக்கு பேரீச்சம் பழங்களின் விற்பனை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக பேரீச்சம் பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமே பேரீச்சம் பழங்களின் தேவை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு ரம்ஜான் கால கட்டத்தில் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

    ஈரான், சவுதி, ஓமன், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு கப்பலில் பேரீச்சம் பழங்கள் பெட்டி பெட்டியாக வந்து குவிந்துள்ளன. பல்வேறு வகைகளில் காணப்படும் வெளிநாட்டு பேரீச்சம் பழங்கள் இரும்பு சத்து நிறைந்ததாக இருப்பதால் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிடுகிறார்கள்.

    ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கு 2 மாதத்திற்கு முன்பில் இருந்தே அதிக அளவில் பேரீச்சம் பழங்களை தமிழக வியாபாரிகள் கொள்முதல் செய்து வைத்துக்கொள்கிறார்கள். அப்போதில் இருந்தே வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கி விடுகிறது.

    இதன்மூலம் தமிழகத்தில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு பேரீச்சம் பழங்கள் விற்பனையாகி இருப்பதாக மொத்த வியாபாரி ஒருவர் தெரிவித்தார். உலக சந்தையிலும் பேரீச்சம் பழங்களின் வியாபாரம் அதிகரித்து உள்ளது. வியாபாரிகள் பல கோடி மதிப்பிலான பேரீச்சம் பழங்களை விற்பனை செய்துள்ளனர்.

    தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் வழியாக பேரீச்சம் பழங்களை கப்பலில் வியாபாரிகள் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
    • ஆடுகள் அதிக அளவில் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேலை சாலையில் ஆட்டு சந்தையில் நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இங்கு வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

    குறிப்பாக ஆயக்கரம்பலம், வேதாரண்யம், கட்டிமேடு ஆலத்தம்பாடி, துளசிப்பட்டணம் வடபாதி ஆதிரங்கம் கச்சனம் மணலி வேலூர் முத்துப்பேட்டை ஆலங்காடு மருதவனம் கலப்பால் பல்லாங் கோயில் மேட்டுப்பாளையம் விளக்குடி கோட்டூர் போன்ற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் சுமார் ரூ. 25 லட்சத்துக்கு மேல் ஆடுகள் வியாபாரம் ஆனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • விவசாயிகள் மேச்சேரி வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • செம்மறி ஆட்டு குட்டிகள் ரூ. 1500-க்கு விற்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரியில் வார சந்தை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இங்கு வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

    விவசாயிகள் மேச்சேரி வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் செம்மறி ஆடுகள் விலை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ செம்மறி ஆடு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.

    செம்மறி ஆட்டு குட்டிகள் ரூ. 1500-க்கு விற்கப்பட்டது. வெள்ளாடு ரூ.15 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இந்த சந்தையில் ரூ.20 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் 10 கிலோ செம்மறி ஆடு ரூ.5,500 முதல் ரூ.6,500 வரை விற்பனையானது. ஆனால் இந்த வாரம் கிடுகிடுவென விலை உயர்ந்தது.

    ரம்ஜானை முன்னிட்டு பிரியாணி ருசிக்கு செம்மறி ஆடுகளே அதிகம் விற்பனையாகும். தேவை அதிகரித்த நிலையில், செம்மறி ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ரமலான் என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான காலமாகும்.
    • இறை நம்பிக்கையுடன் நபிகள் நாயகத்தின் தியாகம், நன்மை, ஒழுக்கநெறி உள்ளிட்ட நற்செயல்களை அனைவரும் கடைபிடித்து நல்வழியில் பயணிப்போம்

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்பமுடன் கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, இந்த இனிய திருநாளில், என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், எனது உளமார்ந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி:-

    இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு 'சதக்கத்துல் பித்ர்' என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடனும் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

    இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிலைநிறுத்தி; உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி; தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டு, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.

    இந்த இனிய திருநாளில் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ந்து கொண்டாடி மகிழ்ந்திடும் இந்த நன்னாளில் மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, வாஞ்சை, நேர்மை, பொறுமை, திறமை, ஒற்றுமை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட இனிய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    இஸ்லாம் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கிறது.

    இறை நம்பிக்கையுடன் நபிகள் நாயகத்தின் தியாகம், நன்மை, ஒழுக்கநெறி உள்ளிட்ட நற்செயல்களை அனைவரும் கடைபிடித்து நல்வழியில் பயணிப்போம். இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    உலககெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

    நன்மைக்கான போதனைகளை யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் தேவையில்லை. இதை உணர்ந்து உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

    கடந்த ஒரு திங்களாக பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமிய பெருமக்கள் இன்று 'ஈதுல் பித்ர்" என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    டி.டி.வி.தினகரன்

    சமாதானம், சகோதரத்துவம் சிறக்கட்டும், சமூக நல்லிணக்கம் என்றும் நம்மிடம் தழைக்கட்டும் என இறைவனை வேண்டி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கின்றேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இஸ்லாமிய நாட்காட்டியின் 9 வது மாதமான புனித ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளுள் ஒன்றான ரமலான் நோன்பினை மெய்வருத்தி கடைபிடித்து, "இல்லாரும், இருப்போரும் ஒன்றே" என்ற தத்துவத்தை வெளிப்படுத்தும், இஸ்லாமிய சொந்தங்களுக்கு ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், உதவி செய்யும் மனப்பான்மையுடனும் இஸ்லாமியர்களின் கடமைகள் 5-ஐயும் தவறாமல் கடைப்பிடித்து வாழ்ந்து உலக மக்கள் அனைவரிடத்திலும் சமத்துவம் மற்றும் சகோதரத்துடனும் பாசத்துடனும் இயன்றதை செய்வோம் இல்லாதோருக்கு என்று லட்சியத்தோடு வாழ்ந்திட இந்த புனிதமான ரமலான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    ரமலான் என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான காலமாகும். எவ்வித ஜாதி, மத, பேதமில்லாமல் அனைவருக்கும் இந்த ரமலான் பண்டிகையில் உதவி செய்து வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பு ஓங்குக, அறம் தழைத்திடுக! சமாதானம் நிலவிடுக, சகோதரத்துவம் வளர்ந்திடுக! என்று கூறி என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் யாதவ்:-

    நபிகள் நாயகத்தின் போதனைகள், கோட்பாடுகளை ஜாதி மதங்களை கடந்து நாம் அனைவரும் என்றென்றும் கடைபிடிக்க ரமலான் திருநாளில் உறுதியோம். சமய நல்லிணக்கத்தை கட்டிக்காக்க அனைவரும் உறுதி கொள்வோம். அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது:-

    சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், சமய நல்லிணக்கம் மலர்ந்து, மக்கள் அனைவரும் பொருளாதார தன்னிறைவு அடைந்து, நாட்டில் என்றும் அமைதி நிலவ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரர்கள் சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன்:-

    சகோதரத்துவத்துடன் 1 மாதம் நோன்பிருந்து ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் இனிய ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் காலத்தில் இருந்து, தி.மு.க. எப்போதுமே இஸ்லாமிய மக்களுக்கு துணையாக நின்று கொண்டு இருக்கிறது.
    • இஸ்லாமிய மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது தி.மு.க தான்.

    சென்னை:

    சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பாரிமுனையில் ரம்ஜான் பண்டிகை பெருநாள் விழா சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 2 ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்களுக்கு பிரியாணி அரிசி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மற்ற இயக்கங்களுக்கும் தி.மு.க.வுக்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கே புரியும். தேர்தல் நடக்க இருப்பதால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யும் இயக்கமல்ல தி.மு.க. வருடம் முழுவதும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். எப்போதுமே மக்களுடன் இருக்கும் இயக்கம். குறிப்பாக இஸ்லாமிய மக்களுடன் நெருக்கமாக இருக்கும் இயக்கம்.

    கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் காலத்தில் இருந்து, தி.மு.க. எப்போதுமே இஸ்லாமிய மக்களுக்கு துணையாக நின்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வது என்னுடைய குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் உணர்வை தருகிறது. நம்முடைய தமிழ்நாடு என்பது திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட மண். இஸ்லாமிய மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது தி.மு.க தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தயாநிதிமாறன் எம். பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றி அழகன், மேயர் பிரியா, பேராசிரியர் அப்துல் காதர், துறைமுகம் பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, கவுன்சிலர் பரிமளம், வட்ட செயலாளர்கள் பார்த்திபன், கவியரசு, பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், 4 முதல் 9 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை, அனைத்து பள்ளிகளுக்குமாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    • ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன.
    • சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையிலும் இன்று முதல் ஆடுகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. பண்டிகை காலங்களில் சென்னை மக்களின் இறைச்சி தேவையை வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் ஆடுகளே பூர்த்தி செய்கின்றன.

    அந்த வகையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரம்ஜான் பண்டிகைக்காக 30 ஆயிரம் ஆடுகள் வரவழைக்கப்படுகின்றன. இன்று முதல் சென்னையில் 4 இடங்களில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளரான ராயபுரம் அலி கூறியதாவது:-

    ரம்ஜான் பண்டிகையையொட்டி ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக வர தொடங்கியுள்ளன. ரெட்டேரி, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, புளியந்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை நடைபெறும். வருகிற 9-ந்தேதி வரையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். ஒரு ஆடு ரூ.7 ஆயிரம் முதல் 7500 வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் சென்னையில் மட்டும் ரூ.21 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 4 சந்தைக்கும் இன்று காலை முதல் ஆடுகள் விற்பனைக்காக வந்து கொண்டிருக்கின்றன. இந்த சந்தைகளுக்கு வரும் ஆடுகளை வியாபாரிகள் தரம் பார்த்து வாங்கிச் செல்கிறார்கள்.

    இதனால் வெளி மாவட்டங்களை போன்று சென்னையிலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடு வியாபாரம் சூடுபிடித்து உள்ளது.

    • மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார்.

    இதற்கிடையே கோவை- சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் இரக்கம், ஒற்றுமை மற்றும் அமைதியின் உணர்வை மேலும் பரப்பட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ரமலான்! " என குறிப்பிட்டுள்ளார்.

    ×