என் மலர்
நீங்கள் தேடியது "sanitation workers strike"
- 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- 4 வழிச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருபுவனை:
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் தனியார் நிறுவனம் மூலம் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் பலமுறை அந்த நிறுவனத்திடம் சம்பள பாக்கி கேட்டு முறையிட்டனர். ஆனாலும் சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் உடனடியாக சம்பளம் வழங்கக் கோரியும் இ.எஸ்.ஐ., பி.எப். பிடிப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி திருபுவனை 4 வழி சாலையில் குப்பை வண்டிகள், குப்பை கூடைகளுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை துப்புரவு தொழிலாளர்கள் ஏற்க வில்லை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருபுவனை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா சாலை மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் குப்பை வாரும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன பொதுமேலாளர் நரேன்னிடம் தொலைபேசியில் பேசி 4 மாத சம்பள பாக்கியை உடனடியாக ஊழிகளுக்கு வழங்க அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு தனியார் குப்பை வாரும் நிறுவன பொதுமேலாளர் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் புதுவை-விழுப்புரம் 4 வழிச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
- இந்த 18 வார்டுகளிலும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த 18 வார்டுகளிலும் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக 71 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து 3 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
முற்றுகை
இதைதொடர்ந்து இன்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேரும் பணிக்கு செல்லாமல் நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க கோரி நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் வாழ்வாதாரமே இந்த சம்பளத்தை நம்பி உள்ளது. வீட்டு வாடகை, மளிகை சாமான்கள், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது தீபாவளி வருவதால் எங்களுக்கு நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என முறையிட்டனர்.
இதையடுத்து நகராட்சி ஆணையாளர், நகரமன்ற தலைவர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்தால் நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளாமல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
- 15 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என புகார்
- அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 35-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கடந்த 15 மாதமாக சம்பளம், 4 மாத போனஸ் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அவ்வப்போது துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை வைத்தும் சம்பளம் வழங்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தூய்மை பணிியாளர்கள் ஜோலார்பேட்டையில் உள்ள அரசு தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் உதவி தொடக்க கல்வி அலுவலர் ரமணனிடம் புகார் தெரிவித்தனர். அதற்கு அவர், இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து தூய்மை பணியாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தெரிவித்த போது, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பெற வேண்டும் என கூறியுள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
- பேச்சு வார்த்தைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை களை முடிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை எதிர்த்து அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் ஈரோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட அலுவலகத்தில் எல்.பி.எப். மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்ரமணியன், எல்.பி.எப். மாவட்ட பொருளாளர் தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை எதிர்த்து 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் (இன்று) 15-ந் தேதி முதல் மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை ஈரோடு, தொழிலாளர் உதவி ஆணையரின் அறிவுரை ப்படி வருகின்ற 22-ந் தேதி வரை தற்காலி கமாக ஒத்தி வைப்பது, பேச்சு வார்த்தைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை களை முடிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சங்க செயலாளர் மணியன், சி.ஐ.டி.யு. சங்க செயலாளர் மாணிக்கம், எல்.பி.எப். சங்க செயலாளர் கிருஷ்ணன், ஆதி தமிழர் தூய்மை தொழிலாளர் சங்க தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.