search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school students"

    • பள்ளி மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும்.
    • ஆசிரியர்கள் நியமனத்தை தாமதிக்கும் முயற்சியாகவே பார்க்கவேண்டி உள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட இருப்பதாகவும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை திட்டமிட்டே தாமதப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டுதான் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக ஆள் தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்படாத நிலையில் 2024-ம் ஆண்டு மே மாதத்தில் ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே மாதம் முடிவடைந்து ஆறு மாதங்களாகியும் ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படவில்லை.

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் வரைவுப் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படுவதற்கு குறைந்தது ஓராண்டு ஆகும். அதன் பின்னர் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மேலும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அதன்படி பார்த்தால் 2021 முதல் 2026 வரை காலியான இடங்களுக்கு புதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படமாட்டார்கள். இது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும்.

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதை பாட்டாளி மக்கள் கட்சி குறைகூறவில்லை. மாறாக பாடத்திட்டத்தில் திருத்தம் செய்யப்படும் காலத்தைத்தான் விமர்சிக்கிறது. கடைசியாக 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு இன்றுவரை மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளில் பாடத்திட்டத்தை மாற்றியிருக்கலாம். அதை விடுத்து அடுத்த போட்டித்தேர்வு அறிவிக்கப்படவிருக்கும் வேளையில் பாடத்திட்டத்தை மாற்ற இருப்பதாக கூறுவதை ஆசிரியர்கள் நியமனத்தை தாமதிக்கும் முயற்சியாகவே பார்க்கவேண்டி உள்ளது.

    ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் முடங்கி கிடக்கின்றன. இப்போது பாடத்திட்ட மாற்றத்தை காரணம் காட்டி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தையும் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது. எனவே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு அனைத்து காலியிடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள்து.

    • மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் கைது.
    • உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள புனித ஜான்போஸ்கோ பள்ளி மாணவியை நடுரோட்டில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உடற் கல்வி ஆசிரியர் ஒருவர் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவியை கன்னங்களில் ஆக்ரோஷமாக அரைகிறார். பின்னர், தலையிலும் தாறுமாறாக அடித்து துன்புறுத்துவது பதிவாகியுள்ளது.

    மாவட்ட அளவிளான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது கை கடிகாரத்தை மாணவி திருடியதாக கூறி ஆசிரியர் தாக்கியுள்ளார். ஆனால், கீழே கிடந்த கை கடிகாரத்தையே மாணவி எடுத்து கொடுத்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால், உடற்கல்வி ஆசிரியர் மாணவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், பள்ளி மாணவியை அடித்து துன்புறுத்திய வீடியோ வெளியான நிலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை பாகலூர் போலீசார் கைது செய்தனர்.

    மேலும், உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜனை ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்து ஓசூர் புனித ஜான்போஸ்கோ பள்ளி தாளாளர் உத்தரவிட்டுள்ளார்.

    • எலக்ட்ரிக் ரிக்ஷா கூரையின் மீது அமர்ந்து பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    உத்தரபிரதேசம் முசாபர் நகரில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் எலக்ட்ரிக் ரிக்ஷா கூரையின் மீது உட்கார்ந்த படி பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    ஆபத்தான முறையில் இம்மாதிரி பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து கோரிக்கை வைத்தனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி. போலீசார் தெரிவித்தனர்.

    • திரிச்சூரில் இருந்து பள்ளி மாணவர்களை மூணாறுக்கு பள்ளி நிர்வாகம் சுற்றுலா அழைத்து வந்துள்ளது.
    • மாணவர்களிடம் இருந்து 5 கிராம் கஞ்சா பறிமுதல்.

    கேரளாவில் கஞ்சா புகைக்க தீப்பெட்டி கேட்க போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்நிலையத்திற்கு வந்த மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திரிச்சூரில் இருந்து பள்ளி மாணவர்களை மூணாறுக்கு பள்ளி நிர்வாகம் சுற்றுலா அழைத்து வந்துள்ளது. மூணாறுக்கு முன்பாக உணவு ப்ரேக்கிற்காக பள்ளி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது 4 மாணவர்கள் தீப்பெட்டி தேடி அழைத்துள்ளனர்.

    அப்போது பக்கத்தில் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு காவல் நிலையத்திற்கு வெளியே பழைய கார், பைக் நிறுத்தப்பட்டிருந்ததை மாணவர்கள் பார்த்துள்ளனர். 'கலால்துறை அலுவலகம்' என்ற பெயர்ப் பலகையை பார்க்காமல் இந்த இடத்தை ஒர்க் ஷாப் என நினைத்து வந்த மாணவர்கள் உள்ளே சென்று மப்டியில் இருந்த ஒரு போலீசாரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர்.

    அப்போது உள்ளே சீருடையில் போலீஸ் இருப்பதை பார்த்து 2 மாணவர்கள் பயந்து ஓடியுள்ளனர். மற்ற 2 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது ஒரு மாணவரிடம் இருந்து 5 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனையடுத்து பள்ளி ஆசியர்களை அழைத்து விசாரித்து, பள்ளி வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர் . அப்போது 1 கிராம் அளவுள்ள 'ஹாசிஸ் ஆயில்' என்ற போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர்.

    பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 6 முதல் 14 வயதுடைய 15 மாணவிகளை யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • வார்டனால் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்

    அருணாச்சலப்பிரதேசத்தில் 21 பள்ளி மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி வார்டன் யும்கென் பக்ராவிற்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

    விடுதி வார்டனுக்கு உதவி செய்த முன்னாள் தலைமை ஆசிரியர் சிங்துங் யோர்பென் மற்றும் இந்தி ஆசிரியர் மார்போம் நகோம்டிர் ஆகியோருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளியில் படிக்கும் தனது 12 வயதான இரட்டை மகள்களை வார்டன் யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை ஒருவர் புகார் அளித்தார்.

    இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது. அப்போது தான் 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 6 முதல் 14 வயதுடைய 6 சிறுவர்கள் மற்றும் 15 மாணவிகளை யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு அவர்களுக்கு வார்டன் போதைப்பொருட்கள் கொடுத்துள்ளார் என்றும் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மாணவர்களை அவர் மிரட்டியுள்ளார். வார்டனால் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    விடுதி வார்டனின் அத்துமீறல் குறித்து பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதால் மாணவர்களை அமைதியாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

    • சோனுசூட்டின் 51 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • ஒரு ரசிகர் சோனுசூட்டிற்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு வழங்க முடிவு செய்தார்.

    பிரபல இந்தி நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் செய்து புகழ்பெற்றார். ஏழைகளுக்கு உணவு, மாணவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் உதவிகள் செய்ததால் அவரை 'ரியல் ஹீரோ' என மக்கள் கொண்டாடினர்.

    இன்று நடிகர் சோனுசூட்டின் 51 ஆவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    சோனுசூட்டின் ரசிகர்களில் ஒருவரான புருஷோத்தம், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் ஹாக்கிங்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த ரசிகர் சோனுசூட்டிற்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு வழங்க முடிவு செய்தார். அதன்படி அவரது பள்ளியில் படிக்கும் 1200 மாணவர்களை சோனுசூட் உருவத்தில் அமரவைத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதில் HBD REAL HERO என்று மாணவர்கள் அமர்ந்து சோனு சூட்டிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    • மாணவர்கள் 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.
    • மாணவர்கள் உருவாக்கிய ஏவுகணையை பள்ளி நிர்வாகிகள் பார்வையிட்டு வாழ்த்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு அப்துல் கலாமை நினைவு கூரும் விதமாக வைத்தீஸ்வரன் கோவில் முத்துராஜம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 210 மாணவ-மாணவிகள் அப்துல் கலாமின் உருவப்படத்தினை தனித்தனியே ஏ4 பேப்பரில் வரைந்து, வண்ணமிட்டு அவற்றை இணைத்து 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.

     

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    இதனை பள்ளியின் தாளாளர் சிவசங்கர் தலைமையில் நிர்வாகிகள் கீர்த்திமதி மனோஜ் நிர்மல், மதன், வரலட்சுமி தேவேந்திரன் ஆகியோர் மாணவர்கள் வரைந்து உருவாக்கிய 83 அடி நீளம் கொண்ட அப்துல் கலாம் ஏவுகணையை பார்வையிட்டு, வாழ்த்தினர். இதில் பள்ளி முதல்வர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டனர்.
    • வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் ரூட்டு தல தகராறில் கல்லூரி மாணவர்களிடைய பஸ், ரெயில்களில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஆபத்தான நிலையில் பஸ்களில் தொங்கிய படி சாகச பயணம் செய்து வருகிறார்கள்.

    இதனை கண்டிக்கும் டிரைவர், கண்டக்டரிடம் மோதலில் ஈடுபட்டு தாக்குல் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வேப்பேரியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் நோக்கி சென்ற மாநகர பஸ்சில் (தடம் எண் 159ஏ) கும்பலாக ஏறினர். அவர்கள் பஸ்சுக்குள் செல்லாமல் படிக்கட்டிலும், ஜன்னல் கம்பியிலும் தொங்கியபடி பயணம் செய்தனர்.

    சில மாணவர்கள் பசின் மேற்கூரையின் மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ஆனால் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்க மறுத்து தொடர்ந்து பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டனர்.

    டிரைவரும், கண்டக்டரும் மாணவர்களை எச்சரித்தும் கேட்டகாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர். பஸ் நடுரோட்டில் நின்றதால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கியதும் மீண்டும் பஸ் புறப்பட்டு சென்றது.

    இந்த பஸ் புரசைவாக்கத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது பள்ளி மாணவர்கள் மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்து உள்ளனர். இதனை அவ்வழியே சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.

    புரசைவாக்கம் பகுதியில் ஏராளமான தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள அனைத்து பஸ்நிலையங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களிலும் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    எனவே இந்த இருவேளைகளிலும் பள்ளி அருகே உள்ள பஸ்நிறுத்தங்களில் போலீசார் கண்காணிபில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சாதி கலவரத்தைத் தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல், மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
    • முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கடந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனையும் அவரது தங்கையையும் வீடு புகுந்து சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதலும் வன்முறையும் தலைதூக்கியிருப்பது ஆபத்து வாய்ந்தது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற மோதல்களை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்த்ரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற சில மாதங்களிலேயே திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுதொடர்பாக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

    திருநெல்வேலியில் மாணவர்களிடையே சாதி கலவரத்தைத் தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல், மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது போன்ற நிகழ்வு அதே பள்ளிகூடத்தில் ஏற்கனவே நிகழ்ந்ததுள்ளது. இன்றைக்கு மாணவர்களிடையே காணப்படும் சாதி மோதல் என்பது தொடர்கதையாக மாறினால், அவர்களின் எதிர்காலமும் வருங்கால சமுதாயமும் பாதிக்கூடிய வகையில் அமைய வாய்ப்பு இருக்கிறது.

    மாணவர்களுக்குள் எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஒரே மாதிரியான சீருடைகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், எத்தனை பாரதியார், பெரியார் வந்தாலும், சாதிகள் இல்லை என்று சொன்னாலும், இந்த சாதி வெறி என்பது. இளம் வயதிலேயே, அதுவும் பள்ளிக்கூடங்களிலிருந்து தொடங்குவது, எதிர்காலத் தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும். எனவே முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.

    • முதல் மாற்றமாக தேர்வுக்கான பாடங்களில் எண்ணிக்கை 6-ல் இருந்து 10-ஆக மாற்றப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு மாணவரும் குறைந்த பட்சம் 3 மொழிகளில் பாடங்களை கற்ற வேண்டும்.

    தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் உத்திரபிரதேசத்தில் 9, 10- ம் வகுப்பு பாடத்திட்டங்களில் 2025-26-ம் ஆண்டு முதல் சில மாற்றங்களை அந்த மாநில அரசு கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த வகையில் முதல் மாற்றமாக தேர்வுக்கான பாடங்களில் எண்ணிக்கை 6-ல் இருந்து 10-ஆக மாற்றப்பட்டுள்ளது.

    இதில் ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் 3 மொழிகளில் பாடங்களை கற்ற வேண்டும் என அமல்படுத்தப்பட்டுள்ளது.

    வாரியத்துடன் தொடர்புடைய 27 பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகளில் படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு இந்த திட்டம் படிபடியாக செயல்படுத்த அனைத்து பங்குதாரர்களிடம் வாரியம் ஜூன் 29-ந் தேதிக்குள் ஆலோசனைகளை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.

    அதிகாரிகளின் அறிக்கைப்படி, 2025-26 முதல் 9-ம் வகுப்பிலும், 2026-27 முதல் 10-ம் வகுப்பிலும் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். இந்த கொள்கையில் கீழ், அனைத்து மாணவர்களுக்கும் ஹிந்தி கட்டாயமாக இருக்கும்.

    கூடுதலாக, மாணவர்கள் சமஸ்கிருதம், குஜராத்தி, உருது, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, அஸ்ஸாமி, ஒரியா, கன்னடம், காஷ்மீரி, சிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், நேபாளி, பாலி, அரபு, பாரசீகம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இரண்டு மொழிகளைத் தேர்வு செய்வார்கள்.

    கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களும் கட்டாயப் பாடங்களாக இருக்கும் என்று உத்தரப் பிரதேச வாரியச் செயலர் திவ்யகாந்த் சுக்லா தெரிவித்தார்.

    வீட்டு அறிவியல், மானுடவியல், வணிகம், என்சிசி, கணினி, வேளாண்மை அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றிலிருந்து ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கலைக் கல்வித் துறையில் ஓவியம், இசை, பாடுதல் அல்லது இசை வாசித்தல் ஆகியவை அடங்கும்.

    உடற்கல்வி மற்றும் சுகாதாரக் கல்வியில் நீதிநெறி கதைகள், யோகா, விளையாட்டு மற்றும் உடற்கல்வி மற்றும் சமூகப் பயனுள்ள உற்பத்திப் பணிகள் ஆகியவை அடங்கும். தொழிற்கல்விக்கு, மாணவர்கள் 31 பாடங்களில் இருந்து தேர்வு செய்யலாம்.

    30 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், உடற்கல்வி, கலை, தொழிற்கல்வி ஆகிய பாடங்களில் 70 மதிப்பெண்களுக்கு உள்மதிப்பீடும் நடத்தப்படும். மற்ற பாடங்களுக்கு 80 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 20 மதிப்பெண்களுக்கு உள்மதிப்பீடும் இருக்கும்.

    உயர்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியலின் மொத்த மதிப்பெண்கள், முந்தைய 600 மதிப்பெண்களிலிருந்து இப்போது 1,000 ஆக இருக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் 100 மதிப்பெண்கள், இறுதித் தேர்வுக்கு 80 மதிப்பெண்கள் மற்றும் உள் மதிப்பீட்டிற்கு 20 மதிப்பெண்கள்.

    புதிய பாடத்திட்ட மாற்றங்களுடன் தர நிர்ணய முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும் வினாத்தாள் வடிவமும் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வரும் 6-ம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
    • மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    பள்ளிகள் திறக்கும் நாளிலேயே இலவச நோட்டு, பாடப்புத்தகங்களை வழங்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

    இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அன்றைய தினமே மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாமா அல்லது புதிய பாஸ் தரும் வரை டிக்கெட் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

    இதுகுறித்து போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு பஸ்களில் மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்க மாட்டோம். பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம். அவர்கள் சீருடை அணிந்து இருந்தாலே இலவசமாக பயணிக்கலாம். இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக கல்வித்துறையில் இருந்து மாணவர்களின் விவரங்கள் பெற்று, ஆன்லைன் மூலம் புதிய பாஸ் விரைந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
    • கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்காக அச்சடிக்கப்பட்ட விலையில்லா பாடநூல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இதேபோன்று தமிழ்நாடு காகித நிறுவனம் மூலம் நோட்டு புத்தகங்களும் முழுமையாக மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

    இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 2 கோடியே 68 லட்சம் விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், மாணவா்களுக்கு விற்பனை செய்ய ஒரு கோடியே 32 லட்சம் பாடப்புத்தகங்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

    கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை அரசு வெளியிடும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு முதல் பருவத்துக்கான பாட நூல்களையும், 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர் களுக்கான முழுமையான பாடநூல்களையும் வழங்க தயாா் நிலையில் இருக்கு மாறும், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவா்கள் தெரிவித்தனா்.

    ×