என் மலர்
நீங்கள் தேடியது "shiva temple"
- சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது.
- நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் ஒரு மாடக்கோவில்.
தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் நல்லூரில் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்தது.
மகாமகம்
சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது. இதை விளக்கும் வகையில் வடபாற் கயிலையும், தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே' என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா நடைபெறும். அப்போது நாடு முழுவதும் இருந்து மக்கள் அனைவரும் கும்பகோணத்துக்கு வந்து மகாமக குளத்தில் புனித நீராடுவது வழக்கம்.
கும்பகோணம் மகாமக குளத்துக்கு இணையாக திருநல்லூா் கல்யாண சுந்தரர் கோவிலில் உள்ள சப்தசாகரம் என்ற குளம் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, 'மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்' என்ற பழமொழி உணர்த்துகிறது.
மாடக்கோவில்
நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் ஒரு மாடக்கோவில். யானை ஒன்று பெருமான்(மூலலிங்கம்) இருப்பிடத்தைச் சென்று அடையாத வண்ணம் பல படிக்கட்டுகளுடன் இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு மூலவர் கல்யாண சுந்தரர் லிங்கத்திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார்.
அம்பாளின் பெயர் கிரிசுந்தரி. இந்த பெரிய மாடக்கோவிலை திருஞானசம்பந்தர் 'மலை மல்கு கோவில் வானமருங்கோவில், வான் தேயும் கோவில் என பாடி உள்ளார். இரண்டு திருச்சுற்றுகளையுடைய இந்த கோவில் 316 அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது.
7 மாதர்கள்
இந்த கோவிலின் முன்கோபுரத்தில் ஒரு மாடத்தில் அதிகாரநந்தி, பிள்ளையார் கொடி மரம், பலிபீடம், இடபதேவர் ஆகியவையும் சற்று தெற்கில் அமர்நீதி நாயனாரது வரலாற்றில் தொடர்புடைய 4 கால்களுடன் கூடிய அழகிய தராசுமண்டபமும் உள்ளன. தெற்கு வெளிச்சுற்றில் அஷ்டபுஜமாகாளி தேவியின் சன்னதி அமைந்துள்ளது.
மாகாளி 8 கைகளுடன் சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலத்தில் உள்ளார். இரண்டாவது கோபுர வாசலை கடந்து சென்றால் இத்தலத்து விநாயகரான காசிப் பிள்ளையார் உள்ளார். தென்மேற்கு மூலையில் 7 மாதர்களாகிய அபிராமி, மகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி ஆகியோருடன் விநாயகர் அருள்பாலிக்கின்றார்.
குந்தி தேவி
உள்வடக்கு திருச்சுற்றில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் பெருமானை வணங்கும் கோலத்தில் பாண்டவர்களின் தாய் குந்திதேவியும், அடுத்து இத்தலத்துக்கு வந்து முக்தி பெற்ற அமர்நீதியார் சிலை வடிவங்கள் உள்ளன. இவர்களுக்கு எதிரில் சண்டேஸ்வரர், துர்க்கை அம்மன் சன்னதிகள் உள்ளன.
வடகிழக்கு மூலையில் நடராஜ பெருமானை அடுத்து சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் மற்றும் அம்பிகையுடன் இரு சிவலிங்கத் திருமேனிகளும் இடம் பெற்றுள்ளன.
5 நிறங்களில்....
மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார். இவர் தினமும் 5 நிறங்களில் தோன்றுவதால் பஞ்சவர்ணேசுவரர் என்றும் அமர்நீதியார், அப்பர் ஆகியோருக்கு அருள்புரிந்ததால் ஆண்டார் என்றும், அகத்தியருக்கு தன் திருமணக் கோலத்தை காட்டி அருளியதால் கல்யாணசுந்தரர் என்றும், பேரழகுடன் விளங்குவதால் சுந்தரநாதன், சவுந்தரநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.
கருவறையில் சுதை வடிவில் அமர்ந்த நிலையில் கல்யாண கோலத்தில் இறைவனும், இறைவியும் இருக்க இருபுறமும் திருமாலும், பிரம்மனும் நின்ற திருக்கோலத்தில் உள்ளனர்.
நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும் இந்த கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலையை சிவபெருமானுக்கு சூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம் வந்து வழிபட்டு சென்றால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.
7 கடல்கள்
ஒரு முறை பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நாள் என்பதால் கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். இதைக்கேட்ட குந்திதேவி, சிவபெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான், குந்தி தேவிக்காக கோவில் எதிரில் உள்ள தீர்த்தக்குளத்தில் உப்பு, கரும்புச்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய 7 கடல்களையும் வருமாறு செய்தார். அதில் குந்திதேவி நீராடி பேறு பெற்றார்.
இந்த 7 கடல்களை குறிக்கும் 7 கிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தீர்த்தவாரி
பிரம்மதேவன் இத்திருக்குளத்தின் கீழ்திசையில் ரிக் வேதத்தையும், தென்திசையில் யஜுர் வேதத்தையும், மேற்குத்திசையில் சாம வேதத்தையும், வடதிசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்தகோடி மகா மந்திரங்களையும் பதினெண் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது. திருநல்லூர் கல்யாண சுந்தரப்பெருமானுக்கு மாசிமகம், வைகாசி விசாகம், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகள், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் இந்த குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.
நரசிம்ம வடிவம்
கொடிய அரக்கனாகிய இரணியனை கொல்ல நரசிம்ம வடிவம் வேண்டி திருமால் இத்தலத்துக்கு வந்து தவம் இருந்தார். அப்போது இத்தல இறைவன் தோன்றி நரசிம்ம வடிவத்தை திருமாலுக்கு அளித்தார். இரணியன் மாய்ந்த பின் தன் கருவறை விமானத்தின் உச்சியில் மேற்கு முகமாக இருக்கவேண்டும் என்று பணித்தார். இந்த வடிவத்தை இன்றும் இந்த விமானத்தில் காணலாம்.
பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில்(சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை. இருப்பினும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
இக்்கோவிலில் வைகாசி விசாக சப்தஸ்தான விழா, ஆனி மாதம் அமர்நீதியார் விழா, மார்கழி மாதம் 10 நாள் திருவெம்பாவை விழா, திருவாதிரை தரிசனம், மாசிமக விழா ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான கோவில் ஆகும்.
5 நிறங்களில் காட்சி அளிக்கும் கல்யாணசுந்தரர்
நல்லூர் கல்யாண சுந்தரர் தினமும் 6 நாழிகைக்கு ஒரு தடவை பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறார். முதல் 6 நாழிகையில் தாமிர நிறத்திலும் அடுத்த 6 முதல் 12 நாழிகையில் இளஞ்சிவப்பு நிறத்திலும், அடுத்த 12 முதல் 18 நாழிகையில் தங்க நிறத்திலும், 18 முதல் 24 நாழிகையில் நவரத்தின பச்சை நிறத்திலும் அடுத்த 24 முதல் 30 நாழிகையில் என்ன நிறம் என்று கூற இயலாத தோற்றத்தில் நிறம் மாறி, மாறி பஞ்சவர்ணமாக காட்சி தருகிறார். இந்த அதிசய சம்பவம் இன்றும் கோவிலில் நடந்து வருகிறது.
கோவிலுக்கு செல்லும் வழி
தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் பாபநாசம் அருகே நல்லூர் பகுதியில் கல்யாணசுந்தரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் பாபநாசம் அருகே உள்ள நல்லூருக்கு வந்து கல்யாண சுந்தரரை தரிசனம் செய்யலாம். தென் மாவட்டங்களில் இருந்து நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சை வந்து அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் பாபநாசத்துக்கு வந்து கோவிலை அடையலாம்.
- இங்கு நவக்கிரக சன்னதி இல்லாதது சிறப்பாக கருதப்படுகிறது.
- தீர்த்தமாக அமிர்தபுஷ்கரணி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் எமபயம் போக்கி நீண்ட ஆயுளை பக்தா்களுக்கு அருளும் சிவாலயமாக மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவில் இறைவனாக அமிர்தகடேஸ்வரரும், இறைவியாக அபிராமி அம்மையும் உள்ளனர்.
தன்னை நாடி வந்த பக்தன் மார்க்கண்டேயனின் உயிரை எமனிடம் இருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதனால் எம பயம் போக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
அபிராமி அந்தாதி
தன்னை தஞ்சம் அடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக காலனை சம்ஹாரம் செய்ததோடு 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்.
காலசம்ஹாரமூர்த்தி
தருமபுரம் ஆதீனம் மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் கட்டுப் பாட்டில் இந்த கோவில் உள்ளது. இங்கு நவக்கிரக சன்னதி இல்லாதது சிறப்பாக கருதப்படுகிறது. இக்கோவில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர். காலசம்ஹாரமூர்த்தியின் அருகில் அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்ட பாபஹரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கோவிலின் தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. மேலும் தீர்த்தமாக அமிர்தபுஷ்கரணி உள்ளது. முற்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர முயன்ற போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட மறந்தனர். இதனால் சினம் கொண்ட விநாயகர் இக்கோவிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை மறைத்து வைத்ததாகவும் இந்த அமிர்தம் நிறைந்த குடமே சிவலிங்கமாக மாறியதால் இக்கோவில் அமிர்தகடேஸ்வரர் கோவில் என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் கள்ள விநாயகர் என அழைக்கப்பட்டு தனி சன்னதியில் இக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.
பாசக்கயிற்றின் தடம்
மார்க்கண்டேயன் தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை இறுகப்பற்றி வழிபட்டபோது எமன் தனது பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீச பாசக்கயிறு மார்க்கண்டேயனோடு சேர்த்து சிவபெருமானையும் இறுக்கிறது. இதனால் சினம் கொண்ட சிவபெருமான் எமதா்மனை தனது காலால் உதைத்து தள்ளினார். எமதர்மன், சிவபெருமான் மீது வீசிய பாசக்கயிற்றின் தடம் தற்போதும் சிவலிங்க திருமேனியில் உள்ளது. அமிர்தகடேஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடக்கும்போது இந்த பாசக்கயிற்றின் தடத்தை காணலாம்.
கங்கை தீர்த்தம்
59 வயது முடிந்து 60 வயதை தொடங்குபவர்கள் இக்கோவிலில் உக்ரரத சாந்தி பூஜை செய்து வழிபடுகிறார்கள். 60 வயது முடிந்து 61 வயது தொடங்குபவர்கள் சஷ்டியப்தபூர்த்தி பூஜை செய்கின்றனர். 70 வயது முடிந்து 71 வயதை தொடங்குபவர்கள் பீமரத சாந்தி பூஜையும், 75 வயதை கடந்தவர்கள் விஜயரத சாந்தி பூஜையும், 81 வயது தொடங்குபவர்கள் சதாபிஷேகமும், 85 வயதை கடந்தவர்கள் கனகாபிஷேகமும் செய்து அமிர்த கடேஸ்வரரை வழிபடுகிறார்கள். கோவிலின் மேற்கு திசை நோக்கி அமிர்தகடேஸ்வரரும், கிழக்கு திசையில் தனிக்கோவிலில் அபிராமி அம்மனும், அமிர்தகடேஸ்வரர் அருகில் காலசம்ஹாரமூர்த்தியும், உள்பிரகாரத்தில் முருகன், மகாலட்சுமி, நடராஜர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். கோவிலின் பின்புறம் உள்ள திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கங்கை தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீரைக்கொண்டு தான் இன்றும் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் நடக்கிறது.
சங்காபிஷேகம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. கார்த்திகை சோமவார நாட்களில் இந்த கோவிலில் 1008 சங்குகளை வைத்து நடைபெறும் சங்காபிஷேக விழா பிரசித்தி பெற்றது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹார பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் பங்குனி அசுவதி நட்சத்திர தீர்த்தவாரி விழாவும் தற்போது வரை பக்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
கோவிலுக்கு செல்வது எப்படி?
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கருவி ஆக்கூர் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோவில், ஆக்கூர் வழியாகவும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்து அங்கிருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலை அடையலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, போன்ற பகுதிகளில் இருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் மயிலாடுதுறையை அடைந்து திருக்கடையூர் கோவிலை அடையலாம். திருக்கடையூர் மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
- இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
- அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை திருத்தலத்தில் அமைந்துள்ளது, மங்களநாத சுவாமி கோவில். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
* இத்தலத்தில் உள்ள மூலவரான சுயம்பு லிங்கம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.
* உத்தரகோசமங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
* கயிலாயத்தை வசிப்பிடமாகவும், காசியை சிறப்பிடமாகவும் கொண்டு சிவபெருமான் வாழ்ந்ததாக புராணங்கள் கூறினாலும், அவர் அவதரித்த தலமாக உத்தரகோசமங்கை திருத்தலம் பார்க்கப்படுகிறது.
* திருவிளையாடல் புராணத்தில் வரும் 'வலை வீசி மீன் பிடித்த படலம்' நடந்த இடம் இது.
* ஆதி காலத்தில் இந்த தலம் 'சிவபுரம்', 'தட்சிண கயிலாயம்', 'சதுர்வேதி மங்கலம்', 'இலந்தி கைப் பள்ளி', 'பத்ரிகா ஷேத்திரம்', 'பிரம்மபுரம்', 'வியாக்ரபுரம்', 'மங்களபுரி', 'பதரிசயன சத்திரம்', 'ஆதி சிதம்பரம்' என வெவ்வேறு பெயர்களில் போற்றப்பட்டுள்ளது.
* இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
* இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாகவும் உள்ளார்.
* மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.
* இத்தலத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.
* மங்களநாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
* இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.
* இந்தக் கோவிலில் உட்பிரகாரத்திற்குள் நுழையும் இடத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய யாளி சிலைகள் உள்ளன. இவற்றின் வாயில் கல்லால் செய்யப்பட்ட பந்து உள்ளது. இதனை நாம் கையால் நகர்த்த முடியும். ஆனால் யாளியின் வாய்க்குள் இருந்து கல் பந்தை வெளியே எடுக்க இயலாது.
* பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்தக் கோவிலில் சிவனுக்கும் அம்பாளுக் கும் தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.
* இங்கு ஆதி காலத்து வராகி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகு காலத்தில் தொடர்ந்து பூைஜ செய்தால் தீராத பிரச்சினைகள், திருமணத்தடை போன்றவை விலகுகின்றன.
* இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் வைத்து முருகப்பெருமானுக்கு அளித்ததாக 'ஆதி சிதம்பர மகாத்மியம்' கூறுகிறது.
* இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னிதி, மங்களேசுவரி சன்னிதி, மரகதக்கல் நடராஜர் சன்னிதி, சகஸ்ரலிங்க சன்னிதி நான்கும் தனித்தனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடிமரத்துடன் தனித்து இருக்கின்றன.
* சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம், வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பத்துநாள் சிவ உற்சவம், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா, மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் ஆகும்.
* உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.
* பரத நாட்டிய கலை, சிவபெருமானால் உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலம் இது.
* உத்தரகோசமங்கை திருத்தலமானது, ராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.
- இறைவி பய அட்சயாம்பிகை மற்றும் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
- இங்கு மட்டும்தான் விநாயகரை மனித குழந்தை வடிவத்தில் பார்க்க முடியும்.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது.
இங்குள்ள இறைவன் மகாகாளநாதர் என்றும், இறைவி பய அட்சயாம்பிகை மற்றும் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவிலில் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை அம்மனுக்கு அணிவித்து பூஜை செய்த பின்னர் அந்த மாலைகளில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மாகாள வாவி என்ற தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும் முருகப்பெருமானையும் வழிபட்டால் விரைவில் மக்கட்பேறு பெறலாம் என்பதும் காலம், காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
கோவில் அமைப்பு
இந்த கோவிலுக்கு நாம் சென்றவுடன் நம்மை வரவேற்பதுபோல அமைந்துள்ளது உயர்ந்த ராஜகோபுரம். கோபுரத்தை வழிபட்டு உள்ளே சென்றால் பெரிய முற்ற வெளி உள்ளது. இதன் வலது புறத்தில் கல்யாண மண்டபமாகிய அலங்கார மண்டபம் உள்ளது. அதற்கு எதிரில் இறைவன் சன்னதிக்கு எதிரில் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளது. வழிபட வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கும் வகையில் அமர்ந்துள்ளார் வார விநாயகர்.
அடுத்து இரண்டாவது கோபுரம். பெரும்பாலும் ராஜகோபுரத்தை விட மிகவும் சிறிய வடிவில் தான் இந்த கோபுரம் இருக்கும். ஆனால் இந்த கோவிலில் ஓரளவு பெரிய அளவில், அழகிய சிற்பங்களுடன் அழகாக உள்ளது. கர்ப்பக்கிரகத்தில், மூலவர் நாகநாத பெருமான், சிவலிங்க திருமேனியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். அவரது இடப்பக்கத்தில் அம்பாள் எழுந்தருளி இருக்கிறார்.
மூலவர் சன்னதிக்கு வடக்கு பக்கம் காட்சி கொடுத்த நாயகரும், நடராச பெருமானும், ஏனைய உற்சவர்களும், காட்சி தருகிறார்கள். மேலும், தியாகராஜப் பெருமான் சன்னதியில், நீலோத்பாலாம்பாளும், குழந்தை வடிவில் முருகப்பெருமானும், விநாயகரும் உள்ளனர். பெரும்பாலும் விநாயகப் பெருமானை பானை வயிற்றுடன், தும்பிக்கையுடனும் நாம் பார்த்து இருப்போம். ஆனால் இங்கு மட்டும்தான் விநாயகரை மனித குழந்தை வடிவத்தில் பார்க்க முடியும். அம்பாளின் பெயர் பயட்சயாம்பிகை(ராஜ மாதங்கி, அதாவது தன்னை வணங்குபவர்களின் பயத்தை எல்லாம் போக்குவதால் இந்த பெயர் ஏற்பட்டது.
திருமண தடை நீக்கும் தேவி
திருமாளத்தில் திருமண கோலத்தில் சிவனும், பார்வதி தேவியும் வீற்றிருந்தனர். அப்போது இறைவன், பார்வதி தேவியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்று கேட்டார். அதற்கு பரமேஸ்வரி, இப்போது நாம் திருமண கோலத்துடன் காட்சி தருகிறோம். நம்மை தரிசிக்க வரும் பக்தர்களில் திருமணம் ஆகாத ஆண், பெண்கள் பலர் வருவார்கள். அவர்கள் வரும்போது இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலை கட்டி வந்து, நமக்கு அணிவித்து அர்ச்சனை செய்த பின்னர், அவற்றில் ஒன்றை அவர்களது கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்க அருள் பாலிக்க வேண்டும் என்று கேட்டார்.
உனது விருப்பம் நிறைவேறுவதாக! என்று கூறி இறைவன் வரம் கொடுத்தார். இதனால்தான் இக்கோவிலுக்கு வரும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை வாங்கி வந்து அம்மனுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து பின்னர் ஒன்றை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். இவ்வாறு வழிபாடு நடத்தும் பக்தர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது
தல வரலாறு
அம்பர் என்னும் ஊரில் அந்தணர் குளத்தில் அவதரித்தவர் சோமாசி மாறர் என்ற முனிவர். அவரது மனைவி சுசீலா தேவியார். இவருக்கு நீண்ட நாட்களாக சோமயாகம் நடத்த வேண்டும் என்று விருப்பம் இருந்து வந்தது. அந்த யாகத்தில் தியாகராஜப் பெருமானே நேரில் வந்து கலந்து கொள்வதோடு அவியை(தினைமாவு) பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார் ஆனால் திருவாரூரில் இருக்கும் தியாகராஜப்பெருமானை கோவிலுக்கு வரவழைப்பது என்பது மிகவும் சிரமம். அதில் இறைவனையே அவியை பெற்றுக்கொள்ள செய்வது சற்று சிரமமான விஷயம் என்று கருதினார்.
இருப்பினும் இறைவனை வரவழைத்தாக வேண்டும் என்று உறுதியோடு சோமாசி முனிவர் இருந்தார். அப்போது சுந்தரர் பெருமானை அணுகினால், தியாகராஜரை அழைத்து வருவார் என்று சிலர் கூறினர். இதற்கிடையே சுந்தரருக்கு இருமல் நோய் இருந்ததால் தூதுவளை கீரையை விரும்பி உண்டு வந்தார். இதனால் சோமாசி முனிவர் சுந்தரருக்கு தினமும் தூதுவளை கீரையை பறித்துக் கொடுத்து வந்தார்.
அதுவும் சுந்தரருக்கே தெரியாமல் அவருடைய மனைவி பறவை நாச்சியாரிடம் கொடுத்து வந்தார். இதற்கிடையே ஒரு நாள் பறவை நாச்சியாரிடம் சுந்தரர், தினமும் யார் கீரையை கொடுப்பது? அவரை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சோமாசி முனிவர் என்பவர் கொடுக்கிறார் என்று பறவை நாச்சியார் கூறியுள்ளார்.
சோமயாகம்
இதனையடுத்து, சுந்தரரை நேரில் சந்தித்த சோமாசி முனிவர், தான் நடத்த உள்ள சோமயாகத்தில் தியாகராஜப் பெருமான் கலந்து கொள்ள நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். உடனே இருவரும் திருவாரூருக்கு வந்து தியாகராஜப் பெருமானிடம் தங்களது விருப்பத்தை கூறினர் அதற்கு பதில் அளித்த சுவாமி, உங்களது விருப்பத்தை ஏற்று நான் சோமயாகத்தில் கலந்து கொள்கிறேன்.
ஆனால் நான் எந்த உருவத்தில் வருவேன் என்பதை கூற மாட்டேன். ஏதோ ஒரு உருவத்தில் வருவேன். நீங்கள்தான் என்னை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். உடனே சோமாசி முனிவர், கோவிலுக்கு நேராக வந்து சோமயாகத்தை தொடங்கினார். வைகாசி மாசம் ஆயில்ய நட்சத்திர நாள் வந்தது. பூர்ணாகுதி செய்து அவி வழங்க வேண்டிய நேரமும் வந்தது
இறைவனின் நீச திருக்கோலம்
அப்போது திருவாரூரில் இருந்து தியாகராஜர், நீச கோலத்துடன் திருமாளத்துக்கு புறப்பட்டார். அப்போது நான்கு வேதங்களையும் 4 நாய்களாக்கி தோளில் இறந்த கன்றுக்குட்டியை போட்டுக்கொண்டு, தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு விநாயகரையும், முருகனையும், மனித குழந்தைகளாக்கி, அம்பாளின் தலையில் சாராய கலயத்தை வைத்து நடந்து வந்தார். இதைக்கண்டதும் சோமயாகத்தில் கலந்து கொண்ட வேத விற்பனர்கள் பயந்து ஓடி விட்டனர்.
சோமாசி மாறர், பூர்ணாகுதி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார். அப்போது பூமியில் இருந்து திடீரென விநாயகப் பெருமான் தோன்றி எனது தாயும், தந்தையும் தான் இப்படி வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறி, அனைவரின் பயத்தையும் போக்கினார். (யாகம் நடந்த இடத்தில் இன்னும் ஐயம் தீர்த்த விநாயகர் என்ற தனி கோவில் ஒன்று இருப்பதை காணலாம்).
தியாகராஜப் பெருமானும், நீலோத்பலாம்பாளும் யாகத்தில் கலந்து கொண்டு அவி பெற்றவுடன் சோமயாகி முனிவர் மகிழ்ச்சி அடைந்தார். இறைவன் வந்திருப்பதை அறிந்த வேத விற்பன்னர்கள் மீண்டும் யாகத்திற்கு வந்து தியாகராஜரை மனம் உருக வேண்டினர்.
சோம யாக பெருவிழா
இதனால்தான் வருடம்தோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் சோமயாக பெருவிழா இந்த கோவிலில் நடத்தப்படுகிறது. பாவங்களை போக்க காசிக்கு சென்று நீராட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த காசியில் பிறந்த விமலன் என்ற அந்தணர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை செல்வம் இல்லாமல் இருந்தது.
தென்னாட்டை நோக்கி தல யாத்திரை சென்று தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று கருதி ஒவ்வொரு கோவிலாக சென்றார். கோவில், கோவிலாக சுற்றியும் பலனில்லை. அவரது பக்தியால் மகிழ்ந்த இறைவன் அவர் முன் தோன்றி எங்கு செல்கிறாய்? என்று கேட்டபோது அவர் தன் குறைகளை சொன்னார்.
அப்போது இறைவன், விமலனிடம் நீ கோவில் திருமாளம் சென்று மகா காளநாதரையும் அக்கோவிலில் எழுந்தருளி உள்ள குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும், முருகனையும் வழிபட்டால் உனக்கு ஒரு மகன் பிறப்பான். அந்த மகனுக்கு மகாதேவன் என்று பெயர் சூட்டுவாய் என்று கூறினார். இறைவனின் ஆணைப்படி அந்தணர் இந்த ஆலயத்துக்கு வந்து இறைவனை வழிபட்டு மகா தேவனை பெற்றெடுத்தார்.
தோஷம் நீக்கிய தலம்
அஷ்ட நாகங்களில் 2-வது நாகம் வாசுகி. இந்த நாகத்திற்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தை போக்க என்ன வழி என்று சிவபெருமானை தரிசித்து கேட்டது வாசுகி. கோவில் திருமாளம் மாகாளநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், தோஷம் போகும் என்று இறைவன் கூறியதையடுத்து இங்கு வந்து வழிபாடு நடத்தி தோஷம் நீக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், புத்திரபேறு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கி, ராகு தோஷம், நாக தோஷம், பிரம்மஹத்தி தோஷங்களை நிவர்த்தி செய்ய விரும்புவோர் அவசியம் தரிசிக்க வேண்டிய கோவில் இது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் திருவாரூருக்கு செல்லும் ரெயிலில் பயணம் செய்து பேரளம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.
தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் தஞ்சைக்கு ரெயிலில் வந்து தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயிலில் பயணித்து பேரளம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவிலை அடையலாம்.
- மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது
- அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்!!!
* திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.
* நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.
ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.
மூன்று இளையனார்!
இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.
கோபுரம் அருகிலேயே பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.
காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.
திருவண்ணாமலை வரலாறு
திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சி அளிக்கிறார்.
மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார்.
இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது. சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம்.
ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர்.
இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை.
இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.
ஒன்பது கோபுரங்கள்!
கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).
சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.
கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.
மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.
திருவண்ணாமலை கோவில் கட்டமைப்பு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இந்த கட்டமைப்பானது உலகளவில் போற்றும்படி அமைந்துள்ளது.
கடந்த 1000 ஆண்டு காலமாக நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் இக்கோயிலை மிக சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த கோயிலை பற்றி தமிழ் இலக்கணத்தில் முன்னணி கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ள காவியங்கள் இன்றும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது.
மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பற்றி ஒரு தமிழ் மகாகவியான அருணகிரிநாதர் அவருடைய படைப்பில் சிறப்பாக எழுதியுள்ளார். திருப்புகழ் ' என்ற மகா கவிதை இங்கு தான் எழுதி அற்பணிக்கப்பட்டது.
மற்றொரு தமிழ் கவிஞர் மகாகவி முத்துசாமி தீட்சிதர் இங்குதான் அவருடைய படைப்பான கீர்த்தி அருணாச்சலம் என்ற கவிதையை எழுதி வெளியிட்டார். இக்கோயிலில் இன்றைய காலகட்டத்தில் மொத்தமாக 5 பிரகாரங்கள் உள்ளன.
இந்த ஐந்து பிரகாரங்களிலுமே நந்திகள் அருணாச்சலேசுவரரை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பிரகாரத்தில் நான்கு திசைகளில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அவை வருமாறு:-
திருமஞ்சன கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், பேய் கோபுரம், மற்றும் ராஜ கோபுரம். ராஜகோபுரம் 217 அடி உயரம் மற்றும் 11 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாகும். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியுடன் கட்டப்பட்ட இக்கோபுரம் தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகும்.
இத்துடன் ஐந்தாவது பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் அத்துடன் சேர்ந்த சிவகங்கா தெப்பகுளம் இவை யாவும் மன்னர் கிருஷ்ணதேவராயர் புகழ்பாடும். குறிப்பாக இங்கு இருக்கும் ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் சிறந்த கைவினைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இம்மண்டபம் திருவாதிரை நட்சத்திரம் தோன்றும் நாள் அன்று திருமஞ்சனம் நடைபெறுவதற்காக உபயோகிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சேவிக்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள்.
இந்த மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது. இங்கு சிவா லிங்கம் உள்ளது. பாதாளலிங்கம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் ஸ்ரீரமண மகரிஷி தியானத்தில் அமர்ந்திருந்தார்.
இந்த பிரகாரத்தின்மற்றுமொரு சிறப்பம்சம் இங்கிருக்கும் கம்பாட்டு இளையநார் சன்னதி. இந்த சிறப்பான சன்னதியை மன்னர் கிருஷ்ணதேவராயர் கட்டினார். இங்கே நான்கு அறைகள் உள்ளன. பிரார்த்தனை செய்வதற்காக முன்றாவது அறை பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காவது அறையில் முருக கடவுளின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.
முதலாவது அறையில் பல அரிய வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் இரண்டாவது அறைக்கு செல்ல முடியும். மேலும் சிவாகங்கா, விநாயகர் சன்னதி, கம்பாட்டு இளையநார் சன்னதிக்கு பின்புறமும் ஆயிரம்கால் மண்டபம் முன்புறமும் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விமானம் மிகவும் சிறப்பாக பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அருணகிரிநாதர் நின்றபடி முருக பெருமானை பிரார்த்தனை செய்கிறார். இந்த சன்னிதி கோபுரதில்லையனர் சன்னதி என்று அழைக்கப்படுகிறது.
இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சன சன்னதியாகும். இச்சன்னதி தெற்குபுரத்திலிருந்து பல்லால மகாராஜா கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது. இங்கு ஒரு கல்யாண மண்டபம் கல்யாணம் நடத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சன்னதியில் லிங்கம், நந்தி, மற்றும் தேவியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்லாலா மகாராஜா கோபுரம் மன்னர் பல்லாலாவால் கட்டப்பட்டது. அதனால்தான் பல்லாலா மன்னர் இறந்த பின்னர் சிவனடியாரே இறுதி சடங்குகள் செய்தார் என புராணம் கூறுகிறது. இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அருணாச்சலேஸ்வரரே பல்லாலாவின் மகனாக உருவெடுத்து கடமைகளை செய்தார்.
கோயிலின் நாலாவது பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பல்லாலா கோபுரத்தின் கிழக்குப்புறத்தில் மன்னர் பல்லாலாவின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரகாரத்தில் 12ம் நூற்றாண்டு காலத்து லிங்கம், சிலைகள், நிறுவப்பட்டுள்ளது. இத்துடன் கோபுர நுழைவாயிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு புறத்தில் கொடிகம்பமும் வடக்கு புறத்தில் உண்ணாமலை அம்மன் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் சிவலிங்கத்தை பிரதிபலிக்கும் அனைத்து உருவங்களும் மற்ற தெய்வங்களும் இருக்கிறது. இந்த பிரகாரம் தான் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.
- இந்த ஆலயம் சுமார் 80 ஆண்டுகளாக எந்த வழிபாடும் இன்றி மண்மூடிக் கிடந்துள்ளது.
- இத்தல இறைவனுக்கு ‘ஆவுண்டீஸ்வரர்’ என்று பெயர்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே உள்ளது, நேமம் என்ற ஊர். இங்குள்ள அமிர்தாம்பிகை உடனாய ஆவுண்டீஸ்வரர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மகம் மற்றும் பூரம் நட்சத்திரக் காரர்களுக்கு பரிகாரத் தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.
இந்த ஆலயம் 11-ம் நூற்றாண்டில், சோழப் பேரரசின் அடையாளமாக விளங்கும் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்த போன இந்த ஆலயம், சுமார் 80 ஆண்டுகளாக எந்த வழிபாடும் இன்றி மண்மூடிக் கிடந்துள்ளது.
காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில், 1999-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் இந்த ஆலயத்தின் திருப்பணி நடைபெற்று, மீண்டும் வழிபாட்டிற்கு வந்தது.
மணல் மூடிக்கிடந்த இந்த ஆலய சிவலிங்கத்தின் மேல், பசு ஒன்று தினமும் பால் சுரந்தது. இதனால் கோபம் கொண்ட உரிமையாளர், அந்த பசுவை சாட்டையால் அடிக்க, அந்த அடியை இத்தல இறைவன் வாங்கிக்கொண்டார். பசுவை காத்தருளியதால், இத்தல இறைவனுக்கு 'ஆவுண்டீஸ்வரர்' என்று பெயர்.
ஒரு பிரளய காலம் முடிந்ததும், பிரம்மதேவன் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடங்கும் முன்பாக, இத்தலத்தின் மீது அமிர்தத்தை தெளித்ததாக தல வரலாறு சொல்கிறது. தேவர்களும் இத்தல அம்பிகை மீது அமிர்தம் தெளித்தனர். இதனாலேயே அம்பிகைக்கு 'அமிர்தாம்பிகை' என்ற திருநாமம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அமிர்தம் போன்ற இன்பமான வாழ்க்கையை வழங்குபவர் என்பதால், இத்தல இறைவிக்கு 'அமிர்தாம்பிகை' என்று பெயர்.
திருமணத் தடை, குழந்தைபேறு இல்லாமை போன்ற வேண்டுதல்களுக்கு, இந்த ஆலயம் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் மனதார வேண்டிக்கொண்டு அர்ச்சனை செய்தால், கோரிக்கைகள் நிறைவேறும்.
மனதிற்குப் பிடித்த வரன் வேண்டும் பெண்கள், இத்தல அம்பிகைக்கு வெள்ளிக்கிழமைகள் மற்றும் நவராத்திரி தினத்தில் வளையல் அர்ச்சனை செய்து வழிபட்டால், விரும்பியபடியே திருமணம் நடந்தேறும்.
திருவள்ளூரில் இருந்து திருமழிசை செல்லும் சாலையில் நேமம் என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், திருமழிசையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் இருக்கிறது.
- இங்கு வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் திருமுக்கீச்சுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும்.
தல வரலாறு
சோழ அரசர்களில் ஒருவர் பட்டத்து யானை மீது உலா வருகின்றபோது, யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் ஒரு கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் மத்தகத்தின் மீது மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது. அக்கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினான்.
தலபெருமை
உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.
சிறப்புக்கள்
* நாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தார். இவருடைய சிலை இச்சிவாலயத்தில் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.
* மூவேந்தர்களும் சேர்ந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.
* இச்சிவாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் சோழர் கல்வெட்டுகளாகும். அக்காலத்தில் நிலக்கொடை, ஆபரணக்கொடை, திருவிழா கட்டளைகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது.
* இச்சிவாலயம் கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.
- இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க சுமார் 39 ஆண்டுகள் ஆனது.
- 100 படிக்கட்டுகளுடன் அமைந்த மலைப்பாதையின் இந்த கோவில் அமைந்திருக்கிறது.
இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் சோலன் என்ற இடத்தில் உள்ளது, ஜடோலி சிவன் கோவில். இந்த ஆலயத்தைக் கட்டி முடிக்க சுமார் 39 ஆண்டுகள் ஆனதாக கூறுகிறார்கள். 100 படிக்கட்டுகளுடன் அமைந்த மலைப்பாதையின் நுழைவுப் பகுதியில் இந்த கோவில் அமைந்திருக்கிறது.
தென்னக கட்டிடக்கலை பாணி இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடா்ந்து மூன்று பிரமிடுகளால் ஆனது போல் கோவிலின் மேற்புற அமைப்பு இருக்கிறது. முதல் பிரமிடின் மேற்பகுதியில் கணபதி உருவமும், இரண்டாம் பிரமிடு மேற்பகுதியில் ஆதிசேஷன் உருவமும் காணப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தின் எழில் கொஞ்சும் மாவட்டமாக திகழ்ந்து வரும் சோலனில் முக்கிய தெய்வமாக வழிபடப்படும் சோலொனி தேவி என்னும் இந்து தெய்வத்தின் பெயரை அடிப்படையாக கொண்டு இந்த இடம் இப்பெயரைப் பெற்றது. இந்த இடம் முழுவதையும் அடர்ந்த காடுகளும், உயர்ந்த மலைகளும் சூழ்ந்து காட்சியளிக்கின்றன. யுங்ட்ரங் திபெத்திய மடம், சோலொன் தேவி கோவில், கூர்க்கா கோட்டை மற்றும் ஜடோலி சிவன் கோவில் ஆகியவை சோலன் நகரின் முக்கிய சுற்றுலா தளங்களில் சில.
ஹிமாச்சல்பிரதேஷ்,சோலோனின் பிரபலமான புனிதத் தலங்களில் ஒன்றாக ஜடோலி சிவப்பரம்பொருள் திருக்கோவில் அமைந்துள்ளது. நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஏராளமான யாத்ரீகர்களை அற்புதமான வடிவமைப்பு கொண்ட இத்திருக்கோவில் ஈர்க்கிறது. இத்திருக்கோவிலின் கலை மற்றும் கட்டடக்கலை அற்புதத்தை அங்கு செல்லும் எவரும் புறக்கணிக்க முடியாது.
ஆசியக் கண்டத்தில் உள்ள சிவபெருமானின் மிக உயரமான கோவில்.சோலனில் உள்ள ஜடோலி திருக்கோவில். ஜடோலி கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தெய்வீக சந்நிதி. இந்தக் கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.அதன் நுழைவாயிலுக்கு பல நூறு படிக்கட்டுகள் ஏறிச் செல்லவேண்டும். கோவிலின் பெயர் 'ஜடோலி'. இச்சொல், சிவப்பரம்பொருளின் ஜடாமுடியைக் குறிக்கிறது.அதாவது 'நீண்ட ஜடா ' என்பதன் அர்த்தத்திலிருந்து பெறப்பட்டது.
இந்த கோவில் கட்டடக்கலை பலரும் வியந்து போற்றும் சிறப்பாகும். திராவிடர் கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கோவிலில் மூன்று விமானங்கள் உள்ளன, மிக உயர்ந்த விமானம் சிகரம் என்றும், இரண்டாவது மிக உயர்ந்த விமானம் விமான என்றும், மூன்றாவது உயரமான விமானம் திரிசூல் என்றும் அழைக்கப்படுகின்றன. விநாயகர் திரிசூல் விமானத்திலும் பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் விமானத்திலும் உள்ளனர்.
கோவிலின் மூன்று சிகரங்களில் பிரமிடுகளிலும் செதுக்கப்பட்ட பல பிரபலமான தெய்வங்களும் உள்ளன. சிவப்பரம்பொருள் கோவிலுக்குள் ஒரு குகை உள்ளது, அங்கு பார்வையாளர்கள் சென்று இறைவனின் ஆசீர்வாதம் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு காலத்தில் சிவப்பரம்பொருள் தங்கியிருந்த இடம் இதுதான் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். குகையில் அன்னையின் திருமேனியும் உள்ளது.
கோவிலிலிருந்து சில மீட்டர் தொலைவில், கருப்பு நிற சிவலிங்கத் திருமேனியும் வெண்விடையின் திருமேனியும் உள்ளன. ஜடோலி சிவன் கோவிலில் மரம் மற்றும் கற்களால் ஆன ஒரு பெரிய சிவன் சிலை உள்ளது. கோவிலின் கூரையில் தங்கத்தால் ஆன ஒரு மிக நீண்ட கம்பியும் உள்ளது. ஜடோலி கோவிலுக்குள் தண்ணீர் ஊற்று உள்ளது.இதனை 'ஜல் குண்ட்' என்று அழைக்கிறார்கள். உள்ளூர்வாசிகள்.திருக்கோவிலுக்கு வருபவர்கள்,அதிலிருந்து நீர் எடுத்து அங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
- தரங்கம்பாடியில் வாய்ந்த மாசிலாமணிநாதர் கோவில் இருக்கிறது.
- இந்த ஆலயத்தின் பழைய கோவில் கடலை ஒட்டி அமைந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில், கடற்கரையோரமாக அமைந்துள்ளது, தரங்கம்பாடி என்ற ஊர். இங்கு பழம்பெருமை வாய்ந்த மாசிலாமணிநாதர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் சுந்தரரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமாகும். கடல் அலைகள் இசைபாடுவதுபோல் அமைந்த இடம் என்பதால் 'தரங்கம்பாடி' என்ற பெயர் வந்தது.
இந்த ஆலயத்தின் பழைய கோவில் கடலை ஒட்டி அமைந்துள்ளது. கடல் அலைகள் கோவிலுக்கு நெருக்கமாக வந்து செல்லும். இந்த ஆலயத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காண முடியாத அண்ணல் (லிங்கோத்பவர்) ஆக உள்ளனர். விநாயகருக்கும் சன்னிதி உள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை தற்போது பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறது. ஆலயத்தின் முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளது.
இக்கோயிலில் உள்ள மூலவர் மாசிலாமணிநாதர் ஆவார். இறைவி அகிலாண்டேஸ்வரி ஆவார். கடல் அலைகள் மோதி மூலவர் கருவறையைத் தவிர அனைத்தும் இடிபாடான நிலையில் இருந்த கோயில் தற்போது திருப்பணி பெற்றுள்ளது. மூலவரை மாசிலாமணீசுவரர் என்றும், மாசிலாநாதர் என்றும் கூறுகின்றனர்.
2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதியதாக கோவில் அமைக்கப்பட்டது.மூலவருக்கு இடதுபுறம் தனிச்சன்னிதியில் அம்பாள் வீற்றிருக்கிறார். ஆலய பிரகாரத்தில் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. சந்திரன், சூாியன், பைரவர் திருமேனிகளும் காணப்படுகின்றன.
- சிவன் கோவில்களில் பைரவ வழிபாடு நடைபெற்றது
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது
கரூர்:
கரூர் தவிட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சியில் சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய் பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல், வேலாயுதம் பாளையம் பகுதிகளில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் உள்ள காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம்.
- ‘திருவிரிஞ்சை மதிலழகு’ என்பது சொல் வழக்கு.
இறைவன் : மார்க்கபந்தீஸ்வரர், மார்க்க சகாயர், வழித்துணைநாதர்.
இறைவி : மரகதாம்பிகை.
தல மரம் : பனை மரம்
தீர்த்தம் : பாலாறு, சிம்மதீர்த்தம்
வேலூர் அருகே உள்ளது விரிஞ்சிபுரம் என்ற திருத்தலம். இங்கு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 'திருவிரிஞ்சை மதிலழகு' என்பது சொல் வழக்கு. திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் என்பது தல புராண சிறப்பாகும்.
பிரம்மா, இந்த ஆலயத்தின் அர்ச்சகரின் மகனாகப் பிறந்து, ஆலய இறைவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றாராம். பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. எனவே தான் இந்த ஆலயம் 'விரிஞ்சிபுரம்' என்றானது. அருணகிரிநாதர், திருமூலர், பட்டினத்தார், கிருபானந்த வாரியார், எல்லப்பா தேசிகர் உள்ளிட்டோர் பாடல் பெற்ற திருத்தலம் இது. விரிஞ்சிபுரம் ஈசனுக்கு பூஜை செய்து வந்த, சிவநாதன்- நயனாநந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், பிரம்மதேவன். சிவசர்மன் எனப் பெயரிடப்பட்ட அவர், தன் ஐந்தாம் வயதில் தந்தையை இழந்தார்.
சிறுவனாய் இருந்ததால் ஆலயத்திற்கு பூஜை செய்யும் உரிமையை, உறவினர் பறித்துக்கொண்டனர். இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார், இத்தல ஈசனிடம் வேண்டினார். அவர் கனவில் சிவபெருமான் தோன்றி, 'ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சிவசர்மனை நீராட்டிக் காத்திரு. நான் வந்து உனக்கான வழியைக் காட்டுகிறேன்' என்றார். நயனா நந்தினி கனவு கண்ட மறுநாள், கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும்.
அந்த நாளில் ஒரு முதியவர் உருவில் வந்த ஈசன், சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து வேத சாஸ்திரங்கள் புகட்டி, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்தார். பிரம்மனுக்கு, சிவபெருமானே சிவ தீட்சை அளித்த திருத்தலம் என்ற பெரும் சிறப்புடையதாக இந்த ஆலயம் திகழ்கிறது. பின்னாளில் சிறுவன் சிவசர்மன் பூஜை செய்யும் பொருட்டு ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவும் திறந்துகொண்டது. பின்பு சிறுவன் சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதருக்கு அபிஷேகம் செய்ய எண்ணினான். ஆனால் சிறுவனான அவனது உயரம் குறைவு என்பதால் வருந்தினான்.
சிறுபாலகனின் வருத்தம் அறிந்த ஈசன், சிவலிங்கத்தின் மேல் பகுதியான பாணத்தைச் சாய்த்து, சிவசர்மன் செய்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். ஆம்! சிருஷ்டி கர்த்தாவாக விளங்கும்போது, திருஅண்ணாமலையில் பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, அதே பிரம்மன் சிறுவனாக வந்து விரிஞ்சிபுரத்தில் வருந்தியபோது ஈசன் தலை சாய்த்து காட்டியருளினார். அந்த சிறப்பு மிக்க நாள் கார்த்திகை கடைசி ஞாயிறு ஆகும். பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில், சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
எனவே அடியவர்கள் சிவதீட்சை பெற இதனைக் விட உயரிய தலம் வேறில்லை எனலாம். இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.
இதனால் வெளிமாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம்.
அல்லது கனவில் மலர்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றைத் தாங்கியபடி முதியவர் காட்சி தந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படி வேண்டிக்கொண்டு குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தை பிறந்த பிறகு, மரகதாம்பிகை அம்பாள் சன்னிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். இங்கு கார்த்திகை கடை ஞாயிறு விழா, முதல் நாளான சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஞாயிறு இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. சிம்மக்குளத்தில் நீராட உள்ளவர்கள், சனிக்கிழமை மாலை மூன்று மணிக்குள் ஆலயம் வர வேண்டும். அப்போதுதான் அன்று நள்ளிரவில் நீராட வசதியாக இருக்கும்.
வழித்துணை நாதர் : மைசூரைச் சேர்ந்த ஒரு வணிகர், இத்தலம் வழியாக காஞ்சீபுரம் சென்று மிளகு வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு முறை வியாபாரத்திற்காகச் சென்றபோது, வணிகர் இந்த ஆலயத்தில் தங்க நேரிட்டது. அவர் திருடர்களிடம் இருந்து தன்னைக் காத்து உதவும்படி வேண்டினார். இறைவனும் வேடன் உருக்கொண்டு, வணிகருக்கு வழித்துணையாக வந்ததாக தல வரலாறு சொல்கிறது. எனவேதான் இத்தல இறைவனுக்கு 'வழித்துணை நாதர்' என்றும் பெயர் வந்தது.
போக்குவரத்து வசதி :
தொடர்வண்டி மூலம் வருபவர்கள் காட்பாடி சந்திப்பிலிருந்து இறங்கி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.
பேருந்து மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் இத்தலத்திற்கு நேரடியாக இயக்கப்படுகின்றன. ஆனால் அவை குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகின்றன.
- திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும்.
- இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரை யோரத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும்.
கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார். கோவிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.
திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள். இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.
புனித தீர்த்தங்கள்
இந்த கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன.
தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி உற்சவம்
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் வெகுவிமர்சையாக விழா நடந்து வருகிறது. அதிகாலையில் 2 மணிக்கு பெருமாள் விஷ்வரூப தரிசனம் நடக்கிறது. சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மாலையில் சாமி வீதி உலா நடைபெறும்.
கோவில் நடை திறக்கும் நேரம்
இந்த கோவிலில் புரட்டாசி மாதம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும். மற்ற மாதங்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு சாற்றப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும்.