search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட்"

    • ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டது.
    • ஸ்டெர்லைட் ஆலை வழக்கு பல ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

    புதுடில்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கின் விசாரணையை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறி தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

    வழக்கினை உடனடியாக விசாரிக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்த போது ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த வழக்கின் விசாரணையை நிறைவு செய்து விடலாம் என தலைமை நீதிபதி உறுதி கூறியிருந்தார்.

    ஆனால், அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டதால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாமல் போனது.


    பின்னர் ஆலை நிர்வாகம் சார்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்விடம் மீண்டும் முறையிட்டபோது விசாரணைக்கான தேதியை குறிப்பிட்டு சொல்ல சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்து இருந்தார்.

    அதன் பிறகு 4 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாததன் காரணமாக காலை நிர்வாகம் சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் முறையிடப்பட்டது. ஆலை மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆலை நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ்சிங் தெரிவித்தார்.

    இந்த மாதமும் அடுத்த மாதமும் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுகள் பல வழக்குகளை விசாரிக்க உள்ள நிலையில் இடைப்பட்ட காலத்தில் தங்களது மனுவை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வழக்கை விசாரணைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி அளித்தார்.

    • தமிழகத்தில் முதன் முறையாக ஐந்திணைப் பூங்கா (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்பட உள்ளது.
    • தொடர்ந்து மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல் மற்றும் இன்னும் பிற தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    தூத்துக்குடி:

    சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 'முத்து நகர் பல்லுயிர் பூங்கா' என்ற பெயரில் பல்லுயிர் பூங்கா ஒன்றை அமைக்க ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான தொடக்க விழா ஸ்டெர்லைட் அனல்மில் நிலைய பகுதியில் நடைபெற்றது. புதுச்சேரி அருகே 100 ஏக்கர் தரிசு நிலத்தை காடுகளாக மாற்றிய தமிழகத்தின் காடு மனிதர் என்று அழைக்கப்படும் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ஆலை ஊழியர்களிடம் காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் சாமிநத்தம் ஊராட்சியை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி கலந்து கொண்டு பேசுகையில், இந்த பல்லுயிர் பூங்கா தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பெருமையாக விளங்கும். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்படப்பட்டிருக்கும் தாவரங்களை மீட்டெடுத்து ஒரு பூங்காவை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

    மேலும் தமிழகத்தில் முதன் முறையாக ஐந்திணைப் பூங்கா (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்பட உள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் 'டை-மெத்தில்-சல்பைடு' என்ற ரசாயனத்தை காற்றில் கலக்கும் பெரிய இலை மகோகனி மரங்களை அதிகளவில் நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் மற்றும் இன்னும் பிற தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பித்த நாள் முதல் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காலவாய்களை புணரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் சேவை செய்து வருகிறது. 10 லட்சம் மரங்களை நடும் வகையில் 'பசுமை தூத்துக்குடி' என்ற திட்டம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 1.25 லட்சம் மரங்களை நட்டுள்ளோம். சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மரங்களை நடுவதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக வளர்ச்சி அடையும்.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளில் 35 சதவீதம் காடுகளை உருவாக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராமப் ஊராட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் 8870477985 என்ற செல்போன் எண்ணிலும், Sterlite.communication@vedanta.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தன்னார்லர்கள், கிராம மக்கள், ஸ்டெர்லைட் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு வடிவத்தில் செயல்பட வந்தாலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது.

    தஞ்சாவூா்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 2018 -ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 5-ம் ஆண்டு நினைவு நாள் மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சாவூர் ரெயிலடி முன்பு மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் நடைபெற்றது.

    இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், எழுத்தாளர் சாம்பான், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்வில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு வடிவத்தில் செயல்பட வந்தாலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்த ப்பட்டன.

    இதில் ஆதித்தமிழர் பேரவை இளைஞர் இயக்க நிர்வாகி பிரேம்குமார்நிவாஸ், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க ஏ. ஐ .டி .யு.சி பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஜோசப், சேகர், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிர் இழந்த பின்னரே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
    • மாணவர்கள் மத்தியில் பேசுவது, உண்மைக்கு மாறானதும், அவதூறு என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பலரும் உயிரிழந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் பலகாலம் போராடினர். துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிர் இழந்த பின்னரே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அப்படிப்பட்ட போராட்டம், வெளிநாட்டு நிதியால்தான் கட்டமைக்கப்பட்டது என்று கவர்னர் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்ட விதியின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநர், எதிர்க்கட்சியினர் போலப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆளுநர் கூறிய தகவல் உண்மையாக இருக்குமானால், மத்திய உள்துறையிடம் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே? அதைவிடுத்து, மாணவர்கள் மத்தியில் பேசுவது, உண்மைக்கு மாறானதும், அவதூறு என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.

    வெளிநாட்டு நிதி தொடர்பாக தான் குறிப்பிட்ட விவரங்களை, தமிழக காவல் துறைக்கோ அல்லது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கோ பகிர்ந்துள்ளாரா என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்.

    அறவழியில் போராடும் மக்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையிலும், மக்கள் உணர்வுகளை மதிக்காமலும் ஆளுநர் பேசியிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் இருப்பது ராஜ்பவன், ''ரவி பவன்'' அல்ல என்பதை மாண்புமிகு ஆளுநர் நினைவில்கொள்ள வேண்டும்.

    • மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
    • 2019-2021 காலகட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு ரூ.3.54 கோடி வெளிநாட்டு நிதி வந்துள்ளது.

    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுக் கழிவால் மக்களுக்கு உடல்நலப் பாதிப்பு உண்டாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையடுத்து, ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். 2018-ம் ஆண்டு நடந்த தொடர் போராட்டத்தின் 100-வது நாளில் கலவரம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என கூறி வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் ஆலையை திறக்க தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களுக்குப் பின்னால், அந்நிய சதி இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு நிதி வழங்கியது தொடர்பாக 'தி அதர் மீடியா' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மீது புகார்கள் வந்துள்ளனவா என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நரன்பாய் ரத்வா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு நேற்றுமுன்தினம், மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    "தன்னார்வத் தொண்டு நிறுவனமான 'தி அதர் மீடியா', ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    2019-2021 காலகட்டத்தில் அந்த நிறுவனத்துக்கு ரூ.3.54 கோடி வெளிநாட்டு நிதி வந்துள்ளது. இதில் ரூ.2.79 கோடியை அந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தின் நிதிப் பயன்பாடு குறித்து விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மீதான குற்றாச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டி ருந்த, வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும்".

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும்.
    • 8 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் நெய்வேலி சுரங்கங்களால் இப்போது ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    சென்னை:

    நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு 3 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இதில் 2-வது சுரங்கத்தை விரிவாக்கும் பணியை நிர்வாகம் தொடங்கி உள்ளது.

    இந்த விரிவாக்கத்தால் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அந்த பகுதியில் நிலங்களை சமன்படுத்தும் பணியை தொடங்கி உள்ளார்கள்.

    பொதுமக்களுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க. அழைப்பு விடுத்தது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

    நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம். கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் நெய்வேலி சுரங்கங்களால் இப்போது ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    என்.எல்.சி.யால் காற்று மாசடைந்து ஆஸ்துமா போன்ற வியாதிகள் அதிகரித்துள்ளது. ஏற்கனவே என்.எல்.சி.க்கு நிலம் வழங்கியவர்கள் குடும்பத்தினருக்கு வேலை வழங்கவில்லை.

    கடலூரில் இன்று நடந்து வரும் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தாலும் அதனால் மகிழ்ச்சி அடையவில்லை. மக்கள் பாதிப்படைய வேண்டும் என்பதற்காக பா.ம.க. இந்த போராட்டத்தை நடத்தவில்லை. மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கவே இந்த போராட்டம்.

    இந்த பகுதியில் உள்ள விவசாயத்துறை அமைச்சரும், கடலூர் மாவட்ட கலெக்டரும் என்.எல்.சி.க்கு ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள்.

    எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்க்கும் தி.மு.க. இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன்? விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பிடுங்கி தனியாருக்கு கொடுக்க துடிப்பது ஏன்? இன்னும் ஒரு வருடத்தில் என்.எல்.சி. தனியார் மயம் ஆக்கப்படும் என்று அறிவித்துவிட்டார்கள். அதற்குள் ஏன் இந்த அவசரம்.

    இது பா.ம.க.வின் பிரச்சினை அல்ல. எல்லா கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். சில கட்சியினர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். இந்த பிரச்சினை கடலூர் மாவட்ட பிரச்சினை மட்டுமல்ல. கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

    இன்று நடப்பது ஒரு அடையாள போராட்டம் தான். இன்னும் போராட்டம் தீவிரமாகும். இதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்.
    • வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்.

    புதுடெல்லி :

    ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீட்டு மனு தொடர்பாக வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்.

    அப்போது அவர், ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறாமல் உள்ளது. எனவே, நவம்பர் 30-ந்தேதி நடைபெறும் விசாரணை தேதியை எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என முறையிட்டார்.

    அதை ஏற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திட்டமிட்டபடி வருகிற 30-ந்தேதி எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    • ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தசரா பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஸ்டெர்லைட் நிறுவன முதன்மை செயலர் சுமதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பக்தர்களுக்கு 50 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்டெர்லைட் நிறுவன முதன்மை செயலர் சுமதி தலைமை தாங்கினார். நிறுவன பொதுமேலாளர்கள் சக்திவேல், சுந்தர்ராஜ், சமூக நலப்பணித் தலைவர் சுந்தர்ராஜ், உதவி மேலாளர் ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 50 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதில் நிறுவன பணியாளர்கள் தியாகராஜன், சோமசுந்தரம், பாலசுப்பிரமணியன், ஜிந்தா, சுடலை, அருண்ராம்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #SterliteProtest #NGT

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுப்படுவதால் ஆலையை மூடக்கோரி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெரும் கலவரம் மூண்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலையில் இருந்து ரசாயனங்கள் அகற்றப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது.

    இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். தூத்துக்குடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்டனர். இதன்பிறகு ஆய்வு அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அதில் 25 நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு தூத்துக்குடி மக்களிடைய கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு சார்பிலும் இதை எதிர்த்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    நேற்று பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், தருண் அகர்வால் குழு அறிக்கையில் கூறிய பரிந்துரைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் அமல்படுத்த வேண்டும், ஆலையின் கழிவுகளை வெளியேற்ற மத்திய மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து நெறிமுறைகள் உருவாக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதியை புதுப்பித்து 3 வாரங்களுக்குள் அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது.

     


    மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் பணிகள் தொடரும் வகையில் மீண்டும் மின் இணைப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

    பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு தூத்துக்குடி மக்களிடையே கடும் அதிர்ச்சி மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதட்டமான நிலை உருவாகி உள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், நகர மத்திய வியாபாரிகள் சங்கம், மாவட்ட நாட்டுபடகு கட்டுமர மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய அ.குமரெட்டியாபுரம், பண்டாரபுரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார்கள்.

    இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தூத்துக்குடி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    எதிர்ப்பாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டால் அதனை தடுத்து கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வஜ்ரா, தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிக்கும் வருண் போன்ற கலவர தடுப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1800 போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். தேவைப்பட்டால் வெளி மாவட்ட போலீசாரும் வர வழைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் போலீஸ் அதிகாரிகள் தூத்துக்குடி நகர் பகுதியில் ரோந்து சுற்றிவந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக்கிய வீதிகள் மற்றும் பதட்டமான பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றிவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வேறு பணிகளுக்கு சென்ற போலீசார் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். #SterliteProtest #NGT

    ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். #Sterlite
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. 

    இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா? என்ற சசிகலா புஷ்பா எம்.பி.யின் கேள்விக்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் பதிலளித்துள்ளார். #Sterlite #MansoonSession
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள சிப்காட் வளாகத்தில் நிலத்தடி நீரின் நிலை என்ன?, மாசுபட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய இணை மந்திரி அர்ஜுன் ராம் மேஹ்வால் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார்.

    அதில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில், அங்கு நிலத்தடி நீரில் மத்திய தரக்கட்டுப்பாடு ஆணையம் அங்கீகரித்ததை விட அதிகளவிலான தனிமங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. லெட், கேட்மியம், குரோமியம், மாங்கனீசும் இரும்பு மற்றும் அர்செனிக் ஆகிய தனிமங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட நீரில் உள்ளது. 

    ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வில், நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு தனிமங்கள் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. எனினும், நிலத்தடி நீரில் உள்ள மாசுக்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    பிரிட்டனின் தொழிலாளர் கட்சி கோரிக்கையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரின் வேதாந்தா குழுமம் லண்டன் பங்கு வர்த்தக சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. #Sterlite #Vedanta #LondonStockExchange
    லண்டன்:

    தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இதற்கிடையே, லண்டனில் உள்ள அனில் அகர்வாலின் வீட்டு முன்னர் அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியி வேதாந்தா நிறுவனத்தை நீக்க வேண்டும் என லண்டன் பங்குச்சந்தைக்கு அழுத்தம் கொடுத்து வந்தது.

    இந்நிலையில்,  வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச்சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே, நேரத்தில் அந்நிறுவனத்தின் பங்குகளை வோல்கன் டிரஸ்ட் வாங்குவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ×