என் மலர்
நீங்கள் தேடியது "காற்றாலை"
+2
- சர்வீஸ் சாலையில் வாகனங்கள் எதிரும் புதிருமாக வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- வெளியூர் செல்ல வேண்டியவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
வாணியம்பாடி:
சென்னையில் இருந்து காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் இறக்கையை ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று இன்று காலை வாணியம்பாடி வழியாக சென்று கொண்டு இருந்தது.
வாணியம்பாடி வளையாம்பட்டு சென்னை-பெங்களூர் 6 வழிச்சாலையில் மேம்பாலத்தில் கனரக லாரி வந்து கொண்டு இருந்தபோது திடீரென வாகனத்தில் என்ஜின் பழுதானது. இதனால் லாரி சாலையை மறித்தபடி மேம்பாலத்தில் நின்றதால் மற்ற எந்த வாகனமும் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் சிக்கி திணறினர். நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மேம்பாலம் வழியாக சென்ற வாகனங்களை சர்வீஸ் சாலை வழியாக மாற்றிவிட்டனர்.
சர்வீஸ் சாலையில் வாகனங்கள் எதிரும் புதிருமாக வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் லாரி டிரைவர் என்ஜீனில் ஏற்பட்ட பழுதை சரி செய்தார்.
இதையடுத்து லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. 6 வழிச் சாலையில் லாரி பழுதாகி நின்றதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் வெளியூர் செல்ல வேண்டியவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
- காற்றாலை மின் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
- இந்த ஆண்டுக்கான காற்று சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை,
அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
இதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் காற்றாலை கட்டமைப்பு வசதி 10 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்துள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
காற்றாலை மின் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்த மின் உற்பத்திக்கான கட்டமைப்பு 8,500 மெகாவாட்டாக இருந்தது. மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் காரணமாக உள்கட்டமைப்பு வசதி படிப்படியாக உயர்ந்து 9 ஆயிரத்தை கடந்தது.
தற்போது 10 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. தற்போது காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் நிலையாக இல்லை. இந்த ஆண்டுக்கான காற்று சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் வரை நீடிக்கும். எனவே கோடை காலத்தில் தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரிதும் உதவும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காற்றாலைகளில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போனது
- போலீசார் வழக்கு பதிவு செய்து வயர்களை திருடிச் சென்றது யார் என விசாரணை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் ஆரல் வாய்மொழி, குமாரபுரம், செண்பகராமன்புதூர், முப்பந்தல் பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான காற்றாலைகள் உள்ளன.
கடந்த சில மாதங்களாக இங்குள்ள சில காற்றாலைகளில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போனது. இது பற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலை யில் ஆரல்வாய்மொழி-குமாரபுரம் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான 2 காற்றாலைகள் இரவு முழுவதும் ஓடியது.
அதிகாலையில் மேலாளர் ராபர்ட் ஜான், காற்றாலையை சுற்றிப் பார்த்தபோது காற்றாலை ஓட வில்லை. இது தொடர்பாக அவர் விசாரித்த போது காற்றாலை கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதும் உள்ளே இருந்த விலை உயர்ந்த கேபிள் வயர்களை திருட்டு போயிருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து வயர்களை திருடிச் சென்றது யார் என விசாரணை நடத்தினர். இதில் திருட்டில் ஈடுபட்டது ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்டு யேசுவடியான் மகன் ஜெகன் மற்றும் பாபு என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார், ஜெகனை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான பாபுவை போலீசார் தேடி வருகிறார்கள். காற்றாலை திருட்டு சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வருகிறது.
- தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டம் உடுமலை போன்ற பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன.
- காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியின் அளவு உயர்ந்துள்ளது.
கோவை:
ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த 17-ந் தேதி ஆடி மாதம் தொடங்கியது. ஆடி தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் காற்று வேகமாக வீசி வருகிறது.
இதனால் மாநிலம் முழுவதும் உள்ள காற்றாலைகளில் தற்போது மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 106 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டம் உடுமலை போன்ற பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. அங்கு மின் உற்பத்தி அதிகரித்துள்ளால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. இதனால் காற்றின் வேகம் சற்று குறைந்து உள்ளது. இருந்தபோதிலும் நாட்கள் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று காற்றாலை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து கோவையைச் சேர்ந்தவரும், இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கஸ்தூரி ரங்கன் கூறியதாவது:-
காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியின் அளவு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காற்றாலைகள் மூலம் முறையே 12 ஆயிரம் மில்லியன் யூனிட் வீதம் ஒட்டுமொத்தமாக 24 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் இதனை அரசு போதிய அளவில் கொள்முதல் செய்வது இல்லை. அனல் மின்நிலையங்கள் மூலம் போதியஅளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது.
எனவே அரசாங்கம் காற்றாலை மின்சாரத்தை கண்டுகொள்வது இல்லை. மத்திய மாநில அரசுகள் காற்றாலைகள் தயாரிக்கும் மின்சாரத்தை போதிய அளவில் கொள்முதல் செய்ய வேண்டும், எங்களுக்கான சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும், பழைய காற்றாலைகளின் இயக்கத்துக்கு தடை விதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார்.
- காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தர்ராஜ். பின்னர் அவர் அ.ம.மு.க.வில் இணைந்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.
பின்னர் நடந்த இடைத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டபோது அவர் தோல்வியடைந்தார். தற்போது அக்கட்சியில் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான கல் மற்றும் சரள் குவாரி ஓட்டப்பிடாரம்-பாளை சாலையில் உள்ளது. தற்போது செயல்படாமல் இருக்கிறது. அதில் தோட்டம் அமைத்துள்ளார். அந்த தோட்டத்தினையும், அதன் நீர்வழிபாதையையும் ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் ஒன்று காற்றாலை அமைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டதை அறிந்த சுந்தர்ராஜ் அங்கு சென்று பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காற்றாலை ஊழியர்கள் சுந்தர்ராஜை கீழ தள்ளி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் காற்றாலை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காற்றாலை தரப்பில் ஊழியர் ஹரி, தன்னை சுந்தர்ராஜ் தாக்கியதாக கூறி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த 10-ந்தேதி மாலை 6.40 மணி அளவில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 414 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்தன.
- இதுதவிர சோலார் மூலம் கடந்த 10-ந்தேதி 4 ஆயிரத்து 672 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு மின்சார நுகர்வோர்களுக்கு அனல் மின்சார உற்பத்தி நிலையம், அணு மின்சார உற்பத்தி நிலையம், நீர் மற்றும் கியாஸ் மின்சார நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர சீசன் காலங்களில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அத்துடன் சோலார் தகடுகள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த 10-ந்தேதி மாலை 6.40 மணி அளவில் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 414 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்தன. தொடர்ந்து நேற்று அதிகாலை 3.20 மணிக்கு 3 ஆயிரத்து 794 மெகாவாட், காலை 7.50 மணிக்கு 4 ஆயிரத்து 314 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்தது.
தற்போதைய நிலையில் காற்றாலைகள் மின்சார உற்பத்தியில் உச்சநிலையில் இருக்கிறது. இதுதவிர சோலார் மூலம் கடந்த 10-ந்தேதி 4 ஆயிரத்து 672 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மற்றும் சோலார் மூலம் சராசரியாக 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல் மின்நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது.
நேற்று காலை 7.50 மணி அளவில் அனல் மின்நிலையங்களில் உற்பத்தி பாதியாக அதாவது 1,599 மெகாவாட் என்ற அளவில் குறைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை 7.50 மணி நிலவரப்படி தேவை 15 ஆயிரத்து 331 மெகாவாட் என்ற அளவில் இருந்தது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்.
- ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது
- பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நாகர்கோவில் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தலைவர் 170 படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாலை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.
ரசிகர்களை பார்த்து அவர் கை அசைத்தார். ரஜினிகாந்துடன் சில ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படப்பிடிப்பு முடித்த பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கன்னியாகுமரியில் உள்ள விடுதிக்கு சென்றார். கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசி னார். அவருக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன் சில நிமிடங்கள் பேசினார். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரும் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்தியாவில் உள்ள மின் உற்பத்தியில் காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் காற்றாலைகள் மூலமே சுற்றுசூழலுக்கு எந்தவகையிலும் மாசு இல்லாமல் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றலைகள் தமிழகத்தில் தான் செயல்படுகின்றன.
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. இந்த காற்றாலைகள் மொத்தம் 8 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. காற்றின் வேகமும், தாக்கமும் அதிகரிக்கும் சமயங்களில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார அளவும் அதிகரிக்கிறது. அந்த சமயங்களில் அனல், நீர், அணு மற்றும் சூரிய சக்தி மின்சார உற்பத்தி அளவு சற்று குறைக்கப்படுகின்றன.
இந்தநிலையில் கேரளாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதேசமயம் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்திருக்கிறது. முக்கியமாக நெல்லை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழையும் பெய்திருக்கிறது. இதனால் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கிறது.
அந்தவகையில் கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் தினமும் 10 கோடி யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இது காற்றாலை மின் உற்பத்தியின் முக்கிய சாதனையாகவும் பதிவாகி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய காற்றாலைகள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-
எத்தனை வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரமே மாசு இல்லாத மின்சாரம் ஆகும். காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதன் உற்பத்தி மடங்கும் அதிகரிக்கும். வழக்கமாக மே முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும்.
தற்போது மிக அதிக அளவில் காற்று வீசுவதால், அதிக மின்சாரம் உற்பத்தியாகி இருக்கிறது. அந்தவகையில் கடந்த 3 நாட்களாக தினமும் 100 மில்லியன் யூனிட் அதாவது 10 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் ஒட்டுமொத்த மின் பயன்பாட்டில் 35 சதவீதத்தை காற்றலைகள் பூர்த்தி செய்திருக்கின்றன. கடந்த ஆண்டும் ஆகஸ்டு மாதம் இதேபோல 2 நாட்கள் மின் உற்பத்தி 10 கோடி யூனிட்டை தாண்டியது. தற்போது இந்த ஆண்டும் அச்சாதனை நடந்திருக்கிறது.
பொதுவாகவே காற்றின் வேகம், காற்றின் தன்மை உள்ளிட்டவை குறித்து முன்கூட்டியே தேசிய காற்றாலை மின் உற்பத்தி ஆணையத்துக்கும், தமிழக மின் வாரியத்துக்கும் அறிக்கை தெரிவித்து வருகிறோம்.
காற்றாலைகளின் அதீத மின் உற்பத்தி காரணமாக தமிழகத்தின் மின்தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், பிற மாநிலங்களுக்கும் நாம் விற்பனை செய்யும் நிலைக்கு இருக்கிறோம். இதனால் மின்வாரியத்துக்கும் நல்ல பெயர் கிடைப்பதுடன், வருவாயும் பெருகுகிறது.
ஆனால் இந்தமுறை நாங்கள் ஆய்வு செய்ததில் பெரும்பாலான காற்றாலைகள் 6 முதல் 8 மணி நேரம் வரை இயங்கவில்லை என்பதை அறிந்தோம். இதுகுறித்து மின்வாரியத்துக்கும் தகவல் தெரிவித்திருக்கிறோம். ஆனால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிக மின்சாரம் கிடைத்தால் பிற மாநிலங்களுக்கு அதை விற்பனை செய்யலாம். மேலும் சில ஒப்பந்தங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்ட மின்சாரத்தை, தேவைப்படும்போது நாம் பெற்றுக்கொள்ளவும் முடியும். குறிப்பாக தமிழகத்தின் மின் பற்றாக்குறை காலம் எனப்படும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்த ஒப்பந்தம் நமக்கு பெரிதும் கைகொடுக்கும்.
எனவே காற்றாலைகளை முறையாக இயங்க செய்தால், கிடைக்கும் உபரி மின்சாரம் நமக்கு நல்ல வருவாயை ஈட்டும். அதேநேரம் முக்கியமான நேரங்களில் மின்சாரத்துக்காக பிறமாநிலங்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படாது.
தற்போது தென்மாநிலங்களில் மழை பெய்துகொண்டிருப்பதால், மின் தேவை சற்று குறைவு தான். ஆனால் வடமாநிலங்களில் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. அதேவேளையில் இன்னும் ஒரு வார காலத்துக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. எனவே காற்றாலைகளை முழுமையாக பயன்படுத்தினால் தற்போது கிடைப்பதை விட 15 சதவீதம் கூடுதல் மின்சாரத்தைப் நாம் பெற முடியும். இதனால் நமக்கு மேலும் 2 கோடி யூனிட் மின்சாரம் தினமும் உபரியாகவே கிடைக்கும். எனவே காற்றாலைகளை முழுமையாக இயங்க செய்து, கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கேயத்தை அடுத்த ஊதியூர் பகுதியில் நொச்சிபாளையம், ராசிபாளையம், கண்ணான்கோவில், சிறுகிணறு, ஒரம்பபுதூர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊதியூர் அருகே உள்ள ராசிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான காற்றாலையின் மேல் பகுதியில் உள்ள எந்திரத்தில் நேற்று திடீரென்று புகை வந்தது.
சிறிது நேரத்தில் அந்த காற்றாலையில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. 70 மீட்டர் உயரத்தில் உள்ள காற்றாலை எந்திரத்தில் தீ பிடித்து எரிந்ததை பார்த்த அந்தபகுதியினர் உடனடியாக இதுகுறித்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆனால் காற்றாலை எந்திரத்தில் தீ பிடித்த பகுதி அதிக உயரத்தில் இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இந்த தீ விபத்தில் காற்றாலையில் இருந்த எந்திரம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது.
அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் காற்றாலை எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பல இடங்களில் குடியிருப்புகள் அருகில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற விபத்து நேர்ந்தால் எந்திரத்தில் இருந்து கொதிக்கும் ஆயில் சிதறி அந்த பகுதியில் உள்ள மக்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே காற்றாலை பாதுகாப்பு அம்சங்களை நன்கு உறுதி செய்த பின்னர் காற்றாலைகளை நிறுவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி, செங்கோட்டை மற்றும் தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டம் உடுமலைபேட்டை பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் உள்ளன.
காற்றாலைகள் இயங்கத் தொடங்கினால் கணிசமான மின்உற்பத்தியாகும். குறிப்பாக தென்மேற்கு பருவ காற்று வீசும் காலங்களில் காற்றாலைகள் கூடுதல் மின் உற்பத்தியில் ஈடுபடும்.
ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் வரை தென்மேற்கு பருவ காற்று வீசும். இந்த காலங்களில் தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.
அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவ காற்று முன்கூட்டியே வீசத் தொடங்கியதால் காற்றாலை மின் உற்பத்தியும் தொடங்கி விட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல் பகுதிகளில் காற்றாலைகள் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளன.
கடந்த சில மாதங்களாக 250 முதல் 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்த காற்றாலைகள் இப்போது 3 முதல் 5 மடங்கு அதிகமாக மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
இதுபற்றி காற்றாலை என்ஜினீயர்கள் கூறியதாவது:-
பொதுவாக தென்மேற்கு பருவகாற்று காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த 26-ந்தேதி காற்றாலைகள் மூலம் சுமார் 100 மெகாவாட் மின்சாரமே கிடைத்தது. அதன்பிறகு காற்றின் வேகம் அதிகரித்ததால் கடந்த 27, 28-ந்தேதிகளில் 2050 மெகாவாட் முதல் 2100 மெகா வாட்டாக உயர்ந்தது.

ஆரல்வாய்மொழி பகுதியில் 600 மெகாவாட்டும், நெல்லை, தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 1500 மெகாவாட்டும், கோவை மாவட்டத்தில் 1250 மெகாவாட்டும் என தமிழகம் முழுவதும் உள்ள காற்றாலைகள் மூலம் இந்த மின்சாரம் கிடைத்தது.
இது அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். செப்டம்பர் மாதம் வரை நமக்கு காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆண்டிப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்தநகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தில் இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் மே மாத இறுதியில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி விடும். அந்த நேரத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படும் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரிக்கும்.
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி உள்ளது. இதனையடுத்து காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் தொடங்கியது. தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் ஒரு வினாடிக்கு 8 மீட்டர் முதல் 9 மீட்டர் என்ற அளவில் உள்ளதாக காற்றாலை பணியாளர்கள் தெரிவித்தனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது, தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினர்.நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு காற்று வீசத் தொடங்கியதால், காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையில் ஒரு காற்றாலையின் மின்சார உற்பத்தி 16 ஆயிரம் யூனிட் என்ற அளவில் காணப்பட்டது. இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகமும், காற்றாலை மின்சார உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் மின்வாரியத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.