என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசா"

    • கடந்த 11-ந் தேதி, இம்மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
    • வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

    புதுடெல்லி:

    தற்போது, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவகாரங்களை கையாள பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினர் பதிவு சட்டம் உள்பட 4 சட்டங்கள் அமலில் உள்ளன.

    இந்நிலையில், மேற்கண்ட 4 சட்டங்களுக்கு பதிலாக, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா-2025 என்ற புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. கடந்த 11-ந் தேதி, இம்மசோதா பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    இந்த மசோதாவில், தற்போதைய 4 மசோதாக்களில் ஏற்கனவே உள்ள பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், குடியுரிமை தொடர்பான எந்த அம்சமும் இடம்பெறவில்லை.

    இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுதல், அனுமதிக்கப்பட்ட நாட்களை தாண்டி வெளிநாட்டினர் தங்கியிருத்தல் ஆகிய பிரச்சினைகளை கையாள இம்மசோதா பயன்படுகிறது.

    இந்த மசோதா நிறைவேறியவுடன், பழைய 4 மசோதாக்களும் ரத்து செய்யப்படும். சட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கேற்ப இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    இந்தியாவில் நுழைவதற்கும், தங்குவதற்கும், வெளியேறுவதற்கும் போலி பாஸ்போர்ட்டையோ அல்லது போலி விசாவையோ அல்லது முறைகேடாக பெறப்பட்ட பயண ஆவணங்களையோ பயன்படுத்தினால் அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு குறையாமலும், 7 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    அத்துடன், ரூ.1 லட்சத்துக்கு குறையாமலும், ரூ.10 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

    உரிய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டுகள்வரையும், ரூ.5 லட்சம்வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும்.

    வெளிநாட்டினர் தங்கியிருக்கும் தகவலை ஓட்டல்கள், பல்கலைக்கழகங்கள், இதர கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை தெரிவிப்பது கட்டாயம் ஆகும். அதன்மூலம் வெளிநாட்டினர் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும்.

    மேலும், விமானம் மற்றும் கப்பல்களில் வெளிநாட்டினர் வரும் தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும், கப்பல் நிறுவனமும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிப்பது அவசியம்.

    வெளிநாட்டினர் அடிக்கடி நடமாடும் இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
    • 7 பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டிருந்தது.

    அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பெலாரஸ், பூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

     பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு நிர்வாக மட்டத்தில் இருந்து கிடைத்த வரைவு அறிக்கை தகவலின்படி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, முதல் குழுவில் உள்ள நாட்டினரின் விசாவை முழுமையாக ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது குழு பகுதி கட்டுப்பாடுகள் மற்றும் தடையை எதிர்கொள்கிறது. மூன்றாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ராய்ட்டர்ஸ்கு கிடைத்த வரைவின்படி முதல் குழுவில், ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகளின் குடிமக்கள் முழு விசா தடையை எதிர்கொள்ள நேரிடும்.

    இரண்டாவது குழுவில் இடம்பெற்ற எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் மீது சுற்றுலா, மாணவர் விசாக்கள் புலபெயர்வு விசா வழங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மூன்றாவது குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தான் உள்ளிட்டவை தங்கள் குறைபாடுகளை சரி செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    டிரம்ப் 2016-20 பதவிக்காலத்தில், ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதை விட தற்போது விதிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் பெரிய அளவிலிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • சவுதி அரேபியா செல்ல விசா பெற இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
    • போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு

    ரியாத்:

    சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.

    இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற இரு நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக சவுதி விசாவிற்கு போலீஸ் அனுமதி ஆவணம் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் மூலோபாய கூட்டுறவைக் கருத்தில் கொண்டு, போலீஸ் அனுமதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

    • சில விண்ணப்பதாரர்களின் கோரிக்கையான நீட்டிக்கப்பட்ட விசாக்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவது உண்மை தான்.
    • விசாக்களை பெறுவதற்கான நேர்காணலுக்கான காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம்.

    வாஷிங்டன்:

    2022-ம் நிதி ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது என நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

    அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம் இந்திய சுற்றுலாவாசிகளுக்கு விசாக்களை அனுமதிப்பதில் காலதாமதம் ஏற்படுவது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் உள்ள எங்களுடைய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், 2022-ம் ஒற்றை நிதியாண்டில் மாணவர்களுக்கு விசா வழங்கியதில் இதுவரை இல்லாத வகையில் சாதனை படைத்து உள்ளது. ஏறக்குறைய 1.25 இந்திய மாணவர்களுக்கு விசா அனுமதி வழங்கி இருக்கிறோம்.

    சில விண்ணப்பதாரர்களின் கோரிக்கையான நீட்டிக்கப்பட்ட விசாக்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவது உண்மை தான். இருப்பினும், விசாக்களை பெறுவதற்கான நேர்காணலுக்கான காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம்.

    தேச பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பை மேற்கொள்வதுடன், நேர்மையான கோரிக்கைகளுடன் கூடிய அமெரிக்கர் அல்லாத நபர்களுக்கு பயண வசதிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

    சரியான தருணத்தில் விசா வழங்குவது என்பது அமெரிக்க பொருளாதாரத்திற்கு முக்கியம் வாய்ந்தது மற்றும் அதுவே நிர்வாகத்தின் இலக்கும் ஆகும்.

    மேலும் விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் குறைவதற்காக, எச் மற்றும் எல் பணியாளர் விசாக்களை பெறும் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக 1 லட்சம் வாய்ப்பிடங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு நவம்பரில் மூத்த அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் 2023-ம் ஆண்டுக்குள் விசாக்களை பெறுவதில் சீனாவை இந்தியா மிஞ்சி விடும். மெக்சிகோவுக்கு அடுத்து அதிக விசாக்களை பெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2-வது இடம் பிடிக்க கூடும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
    • வரும் மே 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

    உலகம் முழுவதிலும் உள்ள விசாக்கள் மற்றும் பிற சேவைகளை வழங்குவது தொடர்பான செலவினங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை தூதரக கட்டணங்களுக்கான செலவு அட்டவணையை திருத்தி உள்ளது.

    அமெரிக்காவிற்கான மாணவர் விசாக்கள் இப்போது கூடுதலாக 25 டாலர் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்ட புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா செயலாக்கக் கட்டணங்களின் அதிகரிப்பின் படி, வணிகம் அல்லது சுற்றுலா (பி1/பி2எஸ் மற்றும் பிசிசிகள்) வருகைக்கான விசாக்களின் செலவு, அத்துடன் மாணவர் போன்ற பிற மனு-அடிப்படையிலான என்IVகள் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் விசாக்கள், 160 டாலரில் இருந்து 185 டாலராக ஆக அதிகரிக்கவுள்ளது.

    தற்காலிக பணியாளர்களுக்கான (எச், எல், ஒ, பி, கியூ மற்றும் ஆர்பிரிவுகள்) குறிப்பிட்ட மனு அடிப்படையிலான குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கான கட்டணம் 190 டாலரில் இருந்து 205 டாலராக ஆக உயரும் என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

    ஒப்பந்த வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஒரு சிறப்புத் தொழிலுக்கான (இ வகை) பயணிகள் 205 டாலரிருந்து 315 டாலராக அதிகரித்த செலவைச் செலுத்த வேண்டும். மேலும், இந்த ஆண்டு 1 மில்லியன் விசாக்களை வழங்க வெளியுறவுத்துறை விரும்புவதாக விசா சேவைகளுக்கான துணை உதவி செயலாளரான ஜூலி ஸ்டப்ட்டின் கூறியுள்ளார். இது வரும் மே 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த மாதம் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது
    • மார்ச் மாதத்தில் இருந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தது சீனா

    இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மற்றும் துணை தூதரகம் மூலமாக சீனா செல்வதற்காக இந்த ஆண்டு இதுவரை 71,600 இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் ஜியாவ்ஜியான் தெரிவித்துள்ளார்.

    தொழில், படிப்பு, சுற்றுலா, வேலை, குடும்ப சந்திப்பு உள்ளிட்ட காரணத்திற்காக இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

    சீன மக்களுக்கான விசா கட்டுப்பாடுகள் விரைவில் நீக்குவதையும், இரு நாடுகளுக்கு இடையிலான மக்கள் பயணம் மீண்டும் தொடங்குவதையும் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

    முதல் ஐந்து மாதங்களில் 60 ஆயிரம் விசா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. ஜூன் மாதத்தில மட்டும் 11,600 பேருக்கு விசா வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என சீனா அறிவித்திருந்தது. இந்தியாவில் இருந்து சுமார் மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு அனுமதிக்கும் என்று தெரிவித்திருந்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 28-ந்தேதிக்குள் வழங்கப்பட்ட விசாக்கள் மற்றும் செல்லுபடியாகும் காலத்திற்குள் இருக்கும் விசாக்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

    • எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.
    • நமது இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டை அதாவது பாஸ்போர்ட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் இருந்த ஜப்பானை மூன்றாம் இடத்திற்கு பின் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது

    எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.

    சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருந்தால்192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

    அடுத்து ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    மூன்றாவதாக ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்சு, ஜப்பான், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    இங்கிலாந்து, அயர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    பெல்ஜியம், மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, செச்ரிபப்ளிக் நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    ஆஸ்திரேலியா, ஹங்கேரி, போலந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 186 நாடுகளுக்கு செல்லலாம்.

    கனடா, கிரீஸ் - 185 நாடுகள்.

    8வது இடத்தில் உள்ள அமெரிக்கா , லிதுவேனியா- 184 நாடுகள்.

    லேத்வியா, சுலோவாக்கியா, சுலோவேனியா- 183 நாடுகள்.

    10வது இடத்தில் உள்ள எஸ்டோனியா, ஐஸ்லாந்து - 182 நாடுகள்.

    மலேஷியா 11 ஆம் இடம் 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

    தாய்லாந்து 64 ஆம் இடம் - 79 நாடுகள்.

    80வது இடத்தில் உள்ள நமது இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    இலங்கை 95 ஆம் இடம் - 41 நாடுகள்.

    100 வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் - 33 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

    -தனுராஜன்

    • சுற்றுலா விசா இல்லாமல் பயணிகளை இலங்கைக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு ஆலோசித்து வந்தது.
    • அதிகாரப் பூர்வ அறிவிப்பை இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்வதற்கு அந்த நாட்டின் விசா கட்டாயம் இருக்க வேண்டும்.

    இந்நிலையில் இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 7 நாடுகளில் இருந்தும் சுற்றுலா விசா இல்லாமல் பயணிகளை இலங்கைக்கு அனுமதிப்பது தொடர்பாக அந்த நாட்டு அரசு ஆலோசித்து வந்தது.

    நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எனவே இனி இந்த 7 நாடுகளில் இருந்தும் இலங்கை செல்ல விசா தேவையில்லை.

    பரீட்சார்த்தமாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் வருகிற மார்ச் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் மூலம் இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

    • அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு துவங்கி இருக்கிறது.
    • இலங்கை நாட்டிற்கு விசா எடுக்காமல் பயணம் செய்ய முடியும்.

    ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு விசா எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். சில நாடுகளில் விசா எடுப்பதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையாகவும், சில நாடுகளில் இந்த வழிமுறைகள் மிகவும் கடுமையாகவும் இருக்கின்றன.

    அந்த வகையில், இந்தியாவில் இருந்து இலங்கை செல்வதற்கு இந்தியர்கள் இனி விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் இந்தியர்கள் விசா எடுக்காமலேயே இலங்கைக்கு சென்றுவர முடியும். விசா இன்றி வெளிநாட்டவரை அனுமதிக்கும் திட்டத்தை இலங்கை அரசு சோதனை முறையில் துவங்கி இருக்கிறது.

    அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை இந்தியர்கள் மட்டுமின்றி சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா என ஆறு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் இலங்கை நாட்டிற்கு விசா எடுக்காமல் பயணம் செய்ய முடியும். இலங்கை அமைச்சரவையில் ஒப்புதலை பெற்ற பிறகே, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக தெரிகிறது.

    இலங்கை அரசின் இந்த அறிவிப்பு காரணமாக அடுத்த ஐந்து மாத காலத்திற்கு இந்தியா உள்பட உலகின் ஏழு நாடுகளை சேர்ந்த குடிமக்கள், இலங்கைக்கு விசா எடுக்காமலேயே பயணம் செய்ய முடியும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகும், இந்த நடைமுறை அமலில் இருக்குமா என்ற கேள்விக்கு தற்போது வரை இந்த பதிலும் இல்லை.

    • இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது.
    • 5 ஐரோப்பிய நாடுகள், மலேசியாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நுழைய சீனா அனுமதி அளித்தது.

    பீஜிங்:

    சீனாவில் இருந்து 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் அடுத்த சில ஆண்டுகள் உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் ஆட்டம் காண வைத்தது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.

    இதற்கிடையே சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

    இந்நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டிசம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்களது நாட்டில் தங்க விசா தேவையில்லை
    • மலேசியாவின் 5-வது மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. இங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த வகையில் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருவதற்கு விசா தேவையில்லை என மலேசியா அறிவித்துள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இந்தியாவை சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசாயின்றி தங்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தன்னுடைய மக்கள் நீதி கட்சியின் கூட்டத்தில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எவ்வளவு நாட்களுக்கு அனுமதிக்கப்படும் என்பதை அவர் அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.

    இருந்தபோதிலும், சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் டிசம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்கியிருக்க விசா தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலோசியாவின் 5-வது மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. சீனா 4-வது இடத்தில் உள்ளது.

    மலேசியாவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 9.16 மில்லியன் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். சீனால் இருந்து 4,98,540 பேரும், இந்தியாவில் இருந்து 2,83,885 பேரும் சென்றுள்ளனர்.

    முன்னதாக, தாய்லாந்து இந்தியா மற்றும் தைவான் குடிமக்கள் தங்களது நாட்டிற்று வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    • 33 நாடுகளின் சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை.
    • இதில் இந்தியாவும் அடங்கும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி எஸதுல்லாஹ் சர்காமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது.

    ×