என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து நெரிசல்"

    • குறுக்கும் நெடுக்குமாக செல்லும் ஆட்டோக்கள்
    • சுரங்க பாதை பணிகளை தொடங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது.

    அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு பொதுமக்கள் ஏராளமானோர் சாலையை கடப்பதால் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    சாலையில் சில ஆட்டோக்கள் குறுக்கும் நெடுக்கமாக திரும்புவதால் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சாலையில் இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர்.அப்போது ஓரளவு வாகனங்கள் சீராக சென்றன.

    ஆனால் என்ன காரணத்திற்காகவோ சாலை நடுவில் இருந்து தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் சாலையில் அனைத்து பகுதிகளிலும் பொது மக்கள் குறுக்கே கடந்து செல்கின்றனர். பல வாகனங்கள் சாலை நடுவில் திரும்புகின்றன.

    தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து தற்போது அதிக பஸ்கள் இயக்கப்படுகிறது‌ இதன் காரணமாகவும் ஆற்காடு சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

    ஆற்காடு சாலையில் நெரிசலை தவிர்க்க சுரங்க நடைபாதை அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் தலைமையில் ஆய்வு நடத்தி தெரிவித்தனர். ஆனால் அதற்கான வேலை எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை.

    மழை பெய்யும் நேரங்களில் ஆற்காடு சாலையை கடப்பது என்பது கடினமாகிவிட்டது.

    இந்த சாலையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை மீண்டும் நடுவில் அமைக்க வேண்டும். ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக சென்று வர சுரங்க பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி.
    • தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    பல்லடம் :

    பல்லடம், சுப முகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி. பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி .தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் நேற்று சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது.இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் திக்குமுக்காடிப் போனது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது நகரின் போக்குவரத்து நெரிசலை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை ஏற்கனவே திட்டமிடப்பட்ட புறவழிச்சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ள பல்லடம் நகரின் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சாலையில் முள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது
    • பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்,

    வேலூர் ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் சாலையில் முள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் சத்துவாச்சாரி சர்க்கிள் சாலை பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவ்வழியாக வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் வேறு வழி பாதையில் அனுப்புகின்றனர்.

    இதனால் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூா் கோட்டம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், குறைகேட்புக் கூட்டம் திருப்பூா் கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் பல்லடம் தாலுகா நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க தலைவா் மணிக்குமாா் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பனப்பாளையம் முதல் அண்ணா நகா் வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும். மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும். பேருந்து நிலையம் எதிரிலும் அரசு மருத்துவமனை பகுதியிலும் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

    பல்லடம் - தாராபுரம் சாலை குண்டடம் வழியாக, மாநில நெடுஞ்சாலை 30 கி.மீ. அளவுக்கு, நான்கு வழிப்பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, புத்தரச்சல் வரை 5 கி.மீ. மட்டுமே பணி நடந்துள்ளது. பணிகள் மந்தமாக நடக்கின்றன. போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரதான ரோடு என்பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
    • திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக கரூர், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் - பல்லடம் ரோடு தென்னம்பாளையம், டி.எம்.சி., காலனி அருகே ரோட்டின் குறுக்கில் சிறுபாலம் கட்டி மழை நீர், கழிவு நீர் ஆகியன அருகேயுள்ள ஓடைக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 20 நாட்களாக நடந்து வருகிறது. பிரதான ரோடு என்பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

    இச்சூழலில் ரோட்டின் ஒரு புறம் இப்பணிகள் முடிந்து, மறுபுறம் நடந்து வருகிறது.

    தற்போது திருப்பூரை நோக்கி செல்லும் ரோடு முழுவதுமாக இப்பணிக்காக பேரிகார்டு தடுப்பு கொண்டு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருப்பூரை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் ஏ.பி.டி., ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து சென்று வருகிறது. மாலை, இரவு நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக கரூர், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. திருப்பூர் - காங்கயம் கிராஸ் ரோட்டிலிருந்து நல்லூர்,விஜயாபுரம் வழியாக இந்த ரோடு அமைந்துள்ளது.இந்த ரோட்டில் தினமும் பல்லாயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் நகரப்பகுதியில், ஏராளமான பஸ் நிறுத்தம், முக்கிய ரோடு பிரிவுகள், நான்கு முனை ரோடு சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்களும் அமைந்துள்ளன.

    இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலையாக உள்ள நிலையிலும், அகலமாக அமைந்துள்ளது. இருப்பினும் முக்கிய சாலை சந்திப்பு மற்றும் சிக்னல் பகுதிகளில் இதன் தற்போதைய அகலம் பயன்பாட்டுக்கு ஏற்ற அளவில் இல்லாத நிலை இருந்தது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த ரோட்டில் வளைவான பகுதி மற்றும் சிக்னல் அமைந்துள்ள இடங்களில் ரோட்டின் இருபுறமும் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் பள்ளக்காட்டு புதூர்,ராக்கியாபாளையம் பிரிவு, காசிபாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ரோடு அகலப்படுத்தப்படுகிறது.இதற்காக ரோடு அமையும் இடத்தில் தார் ரோடு போடும் வகையில் பணி மேற்கொள்ளப்படுகிறது.இதனால், சிக்னல் பகுதிகளில் ப்ரீ லெப்ட் முறையில் வாகனங்கள் கடந்து செல்ல ஏதுவாக அமையும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

    • காலை,மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் வரும் பொழுது போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
    • சரக்கு லாரிகளை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகவும், தென்காசி மாவட்டத்தின் இதயமாகவும் சுரண்டை திகழ்கிறது.

    சுரண்டையை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பள்ளி,கல்லூரி செல்வதற்காகவும், தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவும், மருத்துவ தேவைகளுக்காக வும் சுரண்டைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    சுரண்டை பஸ் நிலை யத்திற்கு ஒரு வழி பாதையில் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் வரும் பொழுது போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகிறது. மேலும் அண்ணா சிலை பகுதியில் வாகனங்கள் திரும்புவதற்கு சிரமமாக இருப்பதால் சங்கரன்கோவில் ரோட்டில் வரும் வாகனங்கள் சாந்தி நர்சிங் ஹோம் முன்பு உள்ள ஒரு வழி பாதையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருகிறது.

    இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நேற்று காலையில் ஒரு வழி பாதையில் வந்த தனியார் பஸ் மோதியதில் சுரண்டை காவல் நிலைய ஆர்ச்(வளைவு) மீது மோதியதால் ஆர்ச் கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.எனவே சுரண்டை பஸ் நிலையம் மற்றும் அண்ணா சிலை அருகிலும் நிரந்தரமாக போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், சுரண்டை பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் வரும் சரக்கு லாரிகளை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும், வியாபாரிகளும் இணைந்து இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையை சூழ்ந்தபடி நிறுத்தி பயணிகளை ஏற்றி மற்றும் இறக்கி வருகின்றனர்.
    • பைபாஸ் சாலையில் மாற்றி அமைத்தால் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    குனியமுத்தூர்

    கோவையில் கடந்த சில ஆண்டுகளாக உக்கடம் மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவது போக்குவரத்து நெருக்கடியில் திணறுகிறது. குறிப்பாக உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிராக பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது.

    பாலக்காடு சாலையில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தான் செல்லும். அதேபோன்று பொள்ளாச்சி ரோட்டில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தான் செல்லும். காருண்யா, ஆலந்துறை, பேரூர் ,செல்வபுரம் போன்ற பகுதியில் இருந்து வரும் பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவது வழக்கம்.

    அனைத்து பேருந்துகளும் சம்பந்தப்பட்ட இந்த ஒரே இடத்தில் குவிந்து வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசலும், மக்களின் சலசலப்பு எந்த நேரமும் இப்பகுதியில் காணப்படும். ஒரே இடத்தில் கட்டுக்கடங்காத மக்கள் குவிந்து வருவதால் பதட்டம் ஏற்படுவது போன்ற சூழ்நிலையை காண முடிகிறது.

    கோவையில் இருந்து உக்கடம் பகுதியை கடந்து செல்லும் பேருந்துகள், உக்கடம் பேருந்து நிலையத்திற்குள் சென்று விடுவதால் சாலையின் வலது பகுதியில் நெருக்கடியை காண முடிவதில்லை.

    ஆனால் சாலையின் இடது பகுதியில் ஒரே நேரத்தில் ஏராளான பேருந்துகள் சாலையை சூழ்ந்தபடி நிறுத்தி பயணிகளை ஏற்றி மற்றும் இறக்கி வருகின்றனர்.

    பயணிகளை ஏற்றி இறக்கும் அந்த நேரத்திற்குள் பின்னால் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சியை காணப்படுகிறது.

    எனவே உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள அந்த பஸ் நிறுத்தத்தை, உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே செல்லும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் மாற்றி அமைத்தால் மட்டுமே இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    பொதுமக்களும் நெருக்கடி இல்லாமல் பஸ்சில் இருந்து இறங்கி செல்ல வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அன்றாடம் உக்கடம் பகுதியை கடந்து வரும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் கடும் அவதி
    • வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூரில் ஆற்காடு சாலையில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. காகிதப் பட்டறையில் சாலையின் ஒரு பகுதியில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி குழாய்கள் பதித்து வருகின்றனர்.

    பணிகள் நடக்கும் இடத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர்.

    இதன் காரணமாக காகிதப்பட்டறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் மற்றும் கனரக வாகனங்கள் வரும் பொழுது அதிக நெரிசல் ஏற்படுகிறது.வாகனங்கள் சிக்கி திணறுகின்றன.

    அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூட சாலையை கடக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

    தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணி ஆற்காடு சாலையில் சைதாப்பேட்டை முருகன் கோவில் வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இங்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.

    தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆற்காடு சாலையில் பஸ் மற்றும் கனகரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும். குறிப்பாக டவுன் பஸ் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சொந்தமான வாகனங்கள் அதிக அளவில் இந்த சாலையில் வருகின்றன. அவற்றை மாற்றுப்பாதையில் திருப்பி விட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
    • திருச்சி- சென்னை, சென்னை- திருச்சி சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்தது.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்திகோவில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் இருமுடி செலுத்தும்விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி செலுத்த வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு இருமுடி செலுத்தும்விழா இன்று (23-ந்தேதி) தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் உள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து விரதம் இருந்து இருமுடி செலுத்த பஸ், வேன், கார்களில் இன்று அதிகாலை முதலே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் குவிந்தனர்.

    இதனால் மேல்மருவத்தூர் பகுதியே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் வந்த வாகனங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களிலும் மற்றும் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களிலும் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதனால் இன்று அதிகாலை 5 மணி முதல் மேல்மருவத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 9 மணிவரை சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேல்மருவத்தூர் முதல் 4 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் நீண்ட வரிசையாக நின்றன. திருச்சி- சென்னை, சென்னை- திருச்சி சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்தது. காலை 9 மணிக்கு பின்னரே வாகனங்கள் மெல்ல மெல்ல சீரானது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, 'மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்களின் வருகையையொட்டி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    40 நாட்களுக்கு மேலாக நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் இனிவரும் நாட்களில் கூடுதலான போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • பொதுமக்களும் தங்கள் மொபைல் போனில் ரோடு ஈசி என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள முடியும்.

    சென்னை:

    சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணி வகுத்து நிற்கின்றன.

    இந்த நெரிசலை குறைக்க நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்த உள்ளனர். அதன்படி போக்குவரத்து நெரிசலை நேரடியாக லைவாக கண்காணிக்கும் கருவிகளை முக்கியமான 300 சாலைகளில் பொருத்தி உள்ளார்கள். இதன் மூலம் 900 முதல் 1000 சாலைகளில் நிலவும் போக்குவரத்து நேரிசலை அறிய முடியும்.

    ஆன்லைன் மூலம் இந்த கருவிகள் வழியாக டேட்பிக்கள் சேகரிக்கப்படும். 5 நிமிடங்களுக்கு ஒருமுறை டேட்பிக்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

    எந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் வாகனங்களை மாற்று பாதைகளில் போக்குவரத்து போலீசார் திருப்பி விட முடியும்.

    இதற்கு முன்பு ஆங்காங்கே பணியில் இருக்கும் போலீசார் சொல்வதை கேட்டு தான் நிலமைக்கு ஏற்ப செயல்படுவார்கள். இனி ஆன்-லைனில் நிலமையை நேரடியாக பார்த்து உடனுக்குடன் போக்குவரத்து மாற்றங்களை செய்ய முடியும்.

    மேலும் இந்த டேட்பிக்களை அந்த கருவிகள் சேமித்தும் வைத்துக் கொள்ளும். இதன் மூலம் எந்தெந்த நாட்களில், நேரங்களில், பண்டிகைகளில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து உள்ளது என்பதை போலீசார் அறிந்து முன் கூட்டியே தகுந்த ஏற்பாடுகளை மேற் கொள்ள முடியும்.

    பொதுமக்களும் தங்கள் மொபைல் போனில் 'ரோடு ஈசி' என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள முடியும். இதுவரை 1000 பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.

    அவசரமாக பயணிக்க வேண்டியவர்கள் நெரிசல் குறைந்த பகுதிகள் வழியாக எளிதாக செல்ல முடியும் போலீசாருக்கும் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் எளிதாக இருக்கும்.

    • ஆக்கிரமிப்பு செய்து தங்களின் கடைக்கு வெளியே இருபுறமும் தங்கள் கடை பொருட்களை வைத்துள்ளனர்.
    • போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக காவேரிப்பட்டணம் நகரம் திகழ்ந்து வருகிறது. இந்நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.

    இந்நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் அலுவ லகங்கள், மருத்துவ மனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள் தொழிற் சாலைகள் என ஏராள மானவை உள்ளன.

    அவற்றிற்கு தினமும் பலதரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் வந்து செல்கின்றனர்.

    காவேரிப்பட்டணம் நகரத்தில் முக்கிய சாலையாக சேலம் மெயின் ரோடு உள்ளது. இந்த மெயின் ரோடில் கடை வைத்திருக்கும் பூக்கடை, பழக்கடை,பூஜைக்கடை புத்தகக் கடை, மளிகைக்கடை, பாத்திர க்கடை செருப்புக்கடை, துணிக்கடை, எலக்ட்ரிக்கல் கடை உள்ளிட்ட ஏராளமான கடைகளை நடத்தி வரும் கடைக்காரர்கள் அவர்களின் கடைக்கு வெளியே சுமார் 5 அடிக்கு நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து தங்களின் கடைக்கு வெளியே இருபுறமும் தங்கள் கடை பொருட்களை வைத்துள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமலும், காலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர வாகளங்களில் செல்ல முடியாமலும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளை ரோட்டிலேயே நிறுத்தி ஏற்றி மற்றும் இறக்கி விடுவதால் முக்கியமான அந்நேரங்களில் பெரும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

    நான்கு ரோட்டில் உள்ள மசூதி முன்பு ரோடு ஓரமாகவே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் அங்கு மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வித்தியாலயம் பகுதியில் இருந்து டி.கே.டி., மில் வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெயரளவுக்கு மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சென்றனர்.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வழியாக பல்லடம் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலையின் வித்தியாலயம் பகுதியில் இருந்து டி.கே.டி., மில் வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

    இதனால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பகுதி உள்ள கடைகளின் முன்பு வாகன நிறுத்துவதும் சாலையை ஆக்கிரமித்து கடைகளையும் வைத்துள்ளனர்.

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெயரளவுக்கு மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சென்றனர். முழுமையாக அகற்றவில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

    இதனால் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் இந்த வழியாகத்தான் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்கின்றன.

    ஆம்புலன்ஸ் வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர் .

    எனவே நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துதுறை,வருவாய்த்துறை, மாநகராட்சி ஆகிய துறைகள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம்,விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×