என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை கடத்தல்"

    • குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கண்காணிக்கத் தவறிவிட்டனர் என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.
    • இந்த வழக்கு வருகிற 21-ந்தேதி மீண்டும் விசாரிக்கப்படுகிறது.

    உத்தரபிரதேசத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர். இம்மனுக்களை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அப்போது, ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் அலட்சியமாகக் கையாண்டது, இதனால் பல குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளனர். இந்த குற்றவாளிகள் சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளனர். ஜாமின் வழங்கும்போது உயர் நீதிமன்றம் குறைந்தபட்சம் ஒவ்வொரு வாரமும் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கண்காணிக்கத் தவறிவிட்டனர் என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

    மேலும், ஒரு மருத்துவமனையில் இருந்து புதிதாகப் பிறந்த குழந்தை கடத்தப்பட்டால், முதல் படியாக அந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள், குழந்தை கடத்தல் வழக்குகளில் ஆறு மாதங்களுக்குள் விசாரணைகளை முடிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில் ஏதேனும் மெத்தனம் காட்டினால் அது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு வருகிற 21-ந்தேதி மீண்டும் விசாரிக்கப்படுகிறது.

    இதனிடையே, குழந்தை கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு ஜாமின் வழங்கியதற்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தையும் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பச்சிளங்குழந்தையை கடத்தி சென்ற ஆஷிகாவின் கணவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர்.
    • அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீசின் மனிதாபிமான செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆசிகா.

    இவர் கடந்த 22-ந் தேதி சேவயூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கும் கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த கணவர் தனது பச்சிளங்குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகார் தொடர்பாக போலீசார், ஆஷிகாவின் கணவர் ஆதில் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இதில் ஆதில், தனது குழந்தையை கோழிக்கோட்டில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை பிடிக்க ரோந்து போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி ஆதிலை சுல்தான்பத்தேரி என்ற இடத்தில் வைத்து போலீசார் ஆதிலை மடக்கி பிடித்தனர்.

    ஆதிலிடம் இருந்து பச்சிளங்குழந்தையும் மீட்கப்பட்டது. அந்த குழந்தை பிறந்து 2 வாரங்களே ஆகியிருந்ததால் அதன் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

    மேலும் அந்த குழந்தை தாய்ப்பாலுக்கு ஏங்கி அழுதது. அந்த குழந்தையை மீட்க சென்ற குழுவில் பெண் போலீஸ் ரம்யா என்பவரும் இருந்தார். அவருக்கும் குழந்தை உள்ளது. எனவே அவர் மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முன்வந்தார். அவர் தாய்ப்பால் கொடுத்ததும் அந்த குழந்தை அழுகையை நிறுத்தியது.

    பின்னர் அந்த குழந்தை அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீசின் மனிதாபிமான செயலை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • குழந்தையை மீட்க சென்ற குழுவில் இருந்த பெண் போலீஸ் ரம்யா, அதிகாரிகள் அனுமதியுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார்.
    • அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ் ரம்யாவுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது.

    இதுபற்றி அந்த பெண் போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவரே குழந்தையை கடத்தி சென்றதாக கூறினார். உடனே போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கினர். இதில் அந்த குழந்தையை பெண்ணின் கணவர் ரெயிலில் பெங்களூருவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதை அறிந்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று வழியிலேயே பெண்ணின் கணவரை மடக்கி பிடித்து குழந்தையை மீட்டனர்.

    மீட்கப்பட்ட குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு அழுதுகொண்டே இருந்தது. அந்த குழந்தை தாய்ப்பாலுக்கு ஏங்குவதை அறிந்த போலீசார் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றனர்.

    அப்போது குழந்தையை மீட்க சென்ற குழுவில் இருந்த பெண் போலீஸ் ரம்யா, அதிகாரிகள் அனுமதியுடன் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ் ரம்யாவுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    இதற்கிடையே பெண் போலீஸ் ரம்யாவை கேரள ஐகோர்ட்டும் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. ஐகோர்ட்டு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி.க்கு எழுதியுள்ள கடிதத்தில், பெண் போலீஸ் ரம்யா கடமை உணர்வும், தாயுள்ளமும் கொண்டவர். அவரை பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன்.

    மனித நேயத்துடன் நடந்துகொண்ட அவரை எத்தனை முறை பாராட்டினாலும் தகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஐகோர்ட்டின் பாராட்டு சான்றிதழ் குறித்து பெண் போலீஸ் ரம்யா கூறும்போது, சமீபத்தில் தான் மகப்பேறு விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்தேன். அழுத குழந்தையை பார்த்தபோது அதனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு ஏற்பட்டது.

    எனவே தான் வேறு எதை பற்றியும் கவலைப்படாமல் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தேன். இதற்காக எனக்கு கிடைத்த பாராட்டு மகிழ்ச்சியை அளிக்கிறது, என்றார்.

    • கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தங்களது 8 மாத ஆண் குழந்தையுடன் கடந்த 12-ந்தேதி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார்.

    மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்று சிகிச்சை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது புதிய பஸ் நிலையத்தில் கழிவறைக்குச் சென்ற அவர் குழந்தையை முன்புறம் இருந்த இருக்கை ஒன்றில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளார்.

    திரும்பி வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை. யாரோ மர்மநபர் குழந்தையை அங்கிருந்து கடத்தி சென்று விட்டது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி தனது கணவர் வெங்கடேசனுக்கு தெரிவித்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆஸ்பத்திரிக்கு சென்ற சோனி தான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்ததாகவும் டாக்டர்களிடம் தெரிவித்தார்.
    • மெஹபூப் ஜான் குழந்தை பெற்ற வார்டுக்கு சென்ற அவர் குழந்தையை வாங்கி கொஞ்சினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், அக்காயபள்ளியை சேர்ந்தவர் சோனி (வயது 28). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.

    இவரது மைத்துனருக்கு திருமணமான ஒரே ஆண்டில் குழந்தை பிறந்து உள்ளது. இதனால் சோனியின் உறவினர்கள் அவரை ஏளனமாக பேசி வந்தனர்.

    இந்த நிலையில் எப்படியாவது ஒரு குழந்தையை எடுத்து வந்து தனக்கு பிறந்ததாக கூறி உறவினர்களை ஏமாற்ற வேண்டும் என எண்ணினார்.

    இதற்காக அவர் அமேசானில் ரூ.16 ஆயிரம் கொடுத்து பிளாஸ்டிக் தொப்பையை வாங்கி தனது வயிற்றில் கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக உள்ளதாக கூறி வலம் வந்தார்.

    மாதங்கள் செல்ல செல்ல குழந்தை எப்படியாவது வேண்டுமே என்று எண்ணிய அவர் எங்கிருந்தாவது குழந்தையை கடத்தி வரவேண்டும் என்று திட்டமிட்டார்.

    கடப்பா மாவட்டம் சின்ன தெனாலியை சேர்ந்தவர் மகபுஜான் நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். மறுநாள் ஆபரேஷன் மூலம் மெஹபூப் ஜானுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்ற சோனி தான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்ததாகவும் அங்குள்ள டாக்டர்களிடம் தெரிவித்தார்.

    பின்னர் மெஹபூப் ஜான் குழந்தை பெற்ற வார்டுக்கு சென்ற அவர் குழந்தையை வாங்கி கொஞ்சினார். பின்னர் தனது கணவர் ஆஸ்பத்திரிக்கு வெளியே இருப்பதாகவும் குழந்தையை அவரிடம் காண்பித்து விட்டு வருவதாக குழந்தையை வாங்கிச் சென்றார்.

    குழந்தையை வாங்கிச்சென்ற பெண் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மெஹபூப் ஜான் இது குறித்து தனது உறவினர்கள் மற்றும் அங்குள்ள காவலாளிகளிடம் தெரிவித்தார். அவர்கள் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப் பார்த்தனர்.

    ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கடப்பா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கடப்பா ஐ.டி.ஐ சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் வந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த பெண் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார் சோனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனிப்படை போலீசார் இடுவாய் சென்று பாண்டியம்மாளை கைது செய்ததுடன் ஆண் குழந்தையை அவரிடமிருந்து மீட்டனர்.
    • கர்ப்பிணி போல் நடித்து ஆண் குழந்தையை பெண் கடத்தி சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் ரோடு செரங்காட்டை சேர்ந்தவர் கோபி (வயது 34). பனியன் நிறுவனத்தில் அயர்னிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (30). நிறைமாத கர்ப்பிணியான சத்யாவுக்கு, கடந்த 19-ந்தேதி திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த ஒரு வாரமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் நேற்று சத்யாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து சென்ற போது, 2 நாட்களாக சத்யாவுக்கு உதவி செய்து வந்த இளம்பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு போலீசார் மருத்துவ மனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சத்யாவுக்கு உதவி செய்து வந்த பெண், குழந்தையை கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    இதையடுத்து அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அவரை பிடிக்க திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திக்கேயன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் , குழந்தையை கடத்தி சென்ற பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை தேடி வந்தனர்.

    அவர் எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக குழந்தையை கடத்தி சென்றார், குழந்தையை கடத்தி விற்கும் கும்பலை சேர்ந்தவரா? என்று விசாரணை நடத்தி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குழந்தையை கடத்தி சென்ற பெண் திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த முத்துசண்முகம் என்பவரின் மனைவி பாண்டியம்மாள் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் இடுவாய் சென்று பாண்டியம்மாளை கைது செய்ததுடன் ஆண் குழந்தையை அவரிடமிருந்து மீட்டனர்.

    பின்னர் கைதான பாண்டியம்மாளிடம் குழந்தையை கடத்தி சென்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

    பாண்டியம்மாளுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் குழந்தை இல்லாத ஏக்கத்தை போக்க குழந்தையை கடத்த திட்டமிட்டார். இதற்காக தான் கர்ப்பமாக இருப்பதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அவ்வப்போது சென்று அங்கு குழந்தையை கடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த வாரம் சத்யா குழந்தை பெற்றுள்ளதை அறிந்த பாண்டியம்மாள், சத்யாவின் மாமியாருடன் நெருங்கி பழகியுள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினருக்கு உதவி செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை சத்யாவும், அவரது மாமியாரும் நம்பவே, அவர்களுடன் நெருங்கி பழகியுள்ளார்.

    நேற்று மாலை சத்யாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக அழைத்து சென்ற போது பாண்டியம்மாள் குழந்தையை கையில் எடுத்து சென்றுள்ளார். பின்னர் குழந்தையை தான் கொண்டு வந்த பையில் குழந்தையை வைத்துக்கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்று விட்டார்.

    பின்னர் வீட்டிற்கு சென்றதும் உறவினர்களிடம் தனக்கு தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாண்டியம்மாள் கர்ப்பமாக இருந்ததாக கூறியதால் உறவினர்களும் அவர் கூறியதை நம்பியுள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளதாகவும், அதனை கடத்தி சென்ற பாண்டியம்மாளின் உருவப்படத்தை போலீசார் சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். இதனை பார்த்த பாண்டியம்மாளின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்ததுடன் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு போலீசார் இடுவாய் சென்று பாண்டியம்மாளை கைது செய்தனர்.

    நேற்றிரவு 7மணிக்கு குழந்தை கடத்தப்பட்ட நிலையில், இன்று காலை 7மணிக்கு 12 மணி நேரத்தில் போலீசார் குழந்தையை மீட்டனர். இதையடுத்து சிறப்பாக செயல்பட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். கர்ப்பிணி போல் நடித்து ஆண் குழந்தையை பெண் கடத்தி சென்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் குழந்தையை முன்பக்கம் உட்கார வைத்து அழைத்து செல்ல முயன்றார்.
    • அப்பகுதி மக்கள் வாலிபரை விடாமல் விரட்டி சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    திருக்கழுக்குன்றம்:

    செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த அடவிளாகம் கிராம பகுதியில் நேற்று காலை சாலையோரத்தில் 3 வயது பெண் குழந்தை ஒன்று விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டர் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பெண் குழந்தையிடம் சாக்லேட் ஒன்றை காண்பித்து அந்த குழந்தையை கூப்பிட்டு கொடுத்துள்ளார்.

    பின்னர் மோட்டார் சைக்கிளில் அந்த குழந்தையை முன்பக்கம் உட்கார வைத்து அழைத்து செல்ல முயன்றார். உடனே குழந்தை கத்தி அழுதது. குழந்தையின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததும் குழந்தையை அங்கேயே இறக்கி விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் அந்த நபர் வேகமாக சென்றார்.

    உடனே அந்த பகுதி மக்கள் அந்த வாலிபரை விடாமல் மோட்டார்சைக்கிள் மூலம் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு விரட்டி சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் அவர் திருப்போரூர் அடுத்த புங்கேரி கிராமத்தைச் சேர்ந்த சாந்தகுமார் (வயது 26) என்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் இதுபோல வேறு ஏதேனும் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டாரா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மர்ம நபர்கள் குழந்தைக்கு பதிலாக தொட்டிலில் பொம்மையை வைத்து விட்டு குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது.
    • அனுஷா இது குறித்து பாலாஜி நகர் போலீசில் புகார் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குர்ரல மடுகு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அனுஷா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மணிகண்டன் ராய்ப்பூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இதனால் ஒரு சில நாட்கள் சொந்த ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் அனுஷா நேற்று முன்தினம் இரவு தனது மூத்த மகளை அருகில் படுக்க வைத்துக்கொண்டு 1½ வயது மகள் லட்சுமி நிஹாரிக்காவை தொட்டிலில் போட்டு விட்டு தூங்கினார்.

    காலை 7 மணிக்கு எழுந்து பார்த்தபோது தொட்டிலில் இருந்த குழந்தை அசைவு இல்லாததால் தொட்டிலில் பார்த்தபோது குழந்தையை காணவில்லை.

    மர்ம நபர்கள் குழந்தைக்கு பதிலாக தொட்டிலில் பொம்மையை வைத்து விட்டு குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அனுஷா இது குறித்து பாலாஜி நகர் போலீசில் புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் சுமன் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • வேலை முடிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் குழந்தையை கேட்டுள்ளார்.
    • திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான உமா கள்ளக்குறிச்சியில் இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

    திருப்பூர்:

    ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். கர்ப்பிணியான கமலினி கடந்த 22-ந் தேதி பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு அன்றைய தினமே ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலியின் அருகில் கருச்சிதைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக எஸ்தர் ராணி என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண் ஒருவரும் இருந்துள்ளார். அருகருகே இருந்ததால் உமா, கமலினியின் குழந்தைகளை கவனித்து வந்து அவருக்கு உதவி செய்துள்ளார்.

    இந்நிலையில் உமா உதவி செய்து வந்ததால், அர்ஜூன்குமார் நேற்று வேலைக்கு சென்றுள்ளார்.

    இதற்கிடையே மாலை வேலை முடிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் குழந்தையை கேட்டுள்ளார். அப்போது உமா இன்குபேட்டரில் சிகிச்சை அளிக்க குழந்தையை கேட்டதாக கூறி வாங்கி சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார். அருகில் சிகிச்சை பெற்று வந்த எஸ்தர் ராணியும் காணவில்லை. இதனால் சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு சென்று அர்ஜூன்குமார் பார்த்தபோது அங்கு உமாவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அர்ஜூன்குமார் இதுகுறித்து செவிலியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் குழந்தையை காணவில்லை எனவும், அருகில் இருந்தவர்கள் கடத்தி சென்று விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அருகில் இருந்தவர்கள் குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவர்கள் கொடுத்திருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்புகொண்டனர். அப்போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    மேலும், விழுப்புரத்தில் அந்த எண் கடைசியாக சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் அவர்கள் தான் குழந்தையை கடத்தி சென்றிருக்க வேண்டும் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே குழந்தை கடத்திச் சென்றதாக பெண் ஒருவர் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்களை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான இரண்டு பெண்களையும் தேடினர்.

    இந்த நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மாயமான உமா கள்ளக்குறிச்சியில் இருப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி விரைந்த தனிப்படை போலீசார், உமாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட உமாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கமலினி கடந்த 22ந் தேதி பிரசவத்திற்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    • எஸ்தர் மற்றும் உமா ஆகிய 2 பெண்கள் கடத்தி சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தின் காரணமாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார். இவரது மனைவி கமலினி (24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். கர்ப்பிணியான கமலினி பிரசவ வலியால் கடந்த 22&ந் தேதி பிரசவத்திற்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கமலினுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் குழந்தை பிறந்து 3 நாளே ஆன நிலையில் நேற்று உதவி செய்வது போல் நடித்து எஸ்தர் மற்றும் உமா ஆகிய 2 பெண்கள் கடத்தி சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களை போலீசார் தேடிய நிலையில் அவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதற்கிடையே திருப்பூர் அரசு மருத்துவமனையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக பலத்த பாதுகாப்பு போடப்படுள்ளது.அரசு மருத்துவமனைக்கு உள்ளே வருகிறவர்கள் விசா ரணை நடத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோல் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்கிறவர்கள் விசாரணை நடத்தப்பட்டு அனுப்பப்படுகிறார்கள். குறிப்பாக குழந்தைகளுடன் வருகிறவர்கள் அவர்களின் விவரங்கள் ஆய்வு செய்ய்பபட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இது குறித்து டீன் முருகேசன் கூறியதாவது:& அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் கமலியிடம், எஸ்தர் மற்றும் உமா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இதனால் அவர்களை நம்பி குழந்தையை கொடு த்துள்ளார். ஏற்கனவே கடந்த மாதம் ஒரு குழந்தை கடத்தப்பட்டதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தினோம். அதன்படி வார்டில் ஒரு நோயாளிகளுக்கு ஒருவர் மட்டுமே இருக்க அனுமதித்து வந்தோம். தற்போது அவர்கள் நெருங்கி பழகி குழந்தையை ஏமாற்றி கடத்தி சென்றுள்ளனர். விரைவாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்போம். என்றார்.

    • குழந்தையை திருடி சென்ற உமாவை கைது செய்து விசாரணைக்காக திருப்பூருக்கு அழைத்து வந்தனா்.
    • உமா உதவி செய்வது போல் நடித்து குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

    திருப்பூர்:

    ஒடிசாவை சோ்ந்தவா் அா்ஜுன்குமாா் (வயது 26). இவரது மனைவி கமலினி (24). இந்த தம்பதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கே.அய்யம்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளா்களாக வேலை செய்து வந்தனா். நிறைமாதக் கா்ப்பிணியாக இருந்த கமலினிக்கு கடந்த 22 ந்தேதி திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதன் பின்னா் கமலினியும், அவரது குழந்தையும் பிரசவ வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

    அப்போது அருகில் கருச்சிதைவுக்காக சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு உதவியாக வந்த உமா (24) என்பவா் கமலினியின் குழந்தையை கடத்திச்சென்றார். இதுகுறித்து திருப்பூா் தெற்கு போலீசில் அர்ஜூன்குமார் புகார் தெரிவித்துள்ளாா். இதையடுத்து உமா செல்போன் எண்ணைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினா்.

    அப்போது கள்ளக்குறிச்சியில் உமா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உமாவிடம் இருந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையை சோ்த்தனா். மேலும் குழந்தையை திருடி சென்ற உமாவை கைது செய்து விசாரணைக்காக திருப்பூருக்கு அழைத்து வந்தனா்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்தியதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-

    கைது செய்யப்பட்ட உமா திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் 2 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர். இதில் உமா 2 முறை கர்ப்பமடைந்தார். ஆனால் அவர் கருக்கலைப்பு செய்தார்.

    இந்தநிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு 2பேரும் திருமணம் செய்தனர். அதன்பிறகு உமா கர்ப்பம் அடையவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 6மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    குழந்தை இருந்தால் 2பேரும் சேர்ந்து விடலாம் என உமா எண்ணினார். இதற்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை கடத்த திட்டமிட்டார். அதன்படி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற உமா, எஸ்தர் என்ற பெண்ணுக்கு உதவுவதாக கமலினியிடமும், எஸ்தரிடம் கமலினிக்கு உதவி செய்வதாக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதை 2பேரும் நம்பி உள்ளனர்.

    இந்நிலையில் கமலினிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து அந்த குழந்தையை கடத்தி செல்ல திட்டமிட்டு 2,3 நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளார். 24-ந்தேதி குழந்தையை இன்குபேட்டரில் வைப்பதற்காக கூறி குழந்தையை கடத்தி சென்றுவிட்டார். பின்னர் தனது கணவனிடம் குழந்தை பிறந்திருப்பதாகவும், கள்ளக்குறிச்சியில் உள்ள தனது தோழி ராணி வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் உமாவின் கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதனிடையே கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்ட போது உமா குழந்தையை கடத்தி கள்ளக்குறிச்சியில் இருப்பதை அறிந்து அங்கு போலீசார் சென்றனர். அப்போது உமா, போலீசாரிடம் இது எனது குழந்தை என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் போலீசார் குழந்தையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து உமாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு குழந்தையை பெண் கடத்தி சென்றார். குழந்தை இல்லாத அந்த பெண் பிரசவித்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் நடித்து இந்த செயலில் ஈடுபட்டார். அது போல் உமாவும் உதவி செய்வது போல் நடித்து குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 2குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை தடுக்க ஆஸ்பத்திரியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆஞ்சநேயலு தம்பதியினர் தங்களது குழந்தையுடன் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்றவர்கள் யார் என தேடினர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், மந்திராலயம் துங்கபத்ரா பகுதியில் பழைய ரெயில் நிலையம் உள்ளது.

    இங்குள்ள கட்டிடத்தில் ஆஞ்சநேயுலு அவரது மனைவி அங்கம்மா தம்பதியினர் தங்கியிருந்தனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வைத்து வந்தனர். தம்பதிக்கு ராமு என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது.

    ஆஞ்சநேயலு தம்பதியினர் தங்களது குழந்தையுடன் தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் அப்பகுதிக்கு வந்த 2 மர்ம நபர்கள் குழந்தை ராமுவை கடத்தி சென்று விட்டனர்.

    அதிகாலை எழுந்து பார்த்தபோது தங்களுடன் படுத்து இருந்த குழந்தை காணாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரெயில்வே போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்றவர்கள் யார் என தேடினர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    ×