என் மலர்
நீங்கள் தேடியது "ஆடித்தபசு"
- அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன.
- அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார்.
நினைப்பவர்களுக்கும், தன்னைத் தேடி வருபவர்களுக்கும் அருள் மாரி பொழியும் அம்பிகை, 'கோமதி அம்மன்' என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள சங்கரன்கோவில் திருத்தலத்தில் 1944-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது.
ஆடி மாதம், ஆடித் தபசு திருவிழாவுக்கு உலகில் உள்ள மொத்த பேரும் திரண்டு வந்தது போல, சங்கரன்கோவில் முழுக்க மக்கள் வெள்ளம். இரவு நேரம். தெற்கு ரத வீதியில் இருக்கும் தபசு மண்டபத்தில், பல்லக்கில் எழுந்தருளியிருந்தாள் உற்சவ மூர்த்தியான அம்பிகை. திருக்கல்யாண அலங்காரத்தில் இருந்ததால், அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன.
அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார். சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள அரியூரை சேர்ந்த கணக்குப் பிள்ளை ஒருவர், பட்டரைப் போல வேடம் அணிந்து பல்லக்கை நெருங்கினார். அவர் அந்த கிராமத்து முக்கியஸ்தர். கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர். மனோவசியம் உள்பட பல வித்தைகள் கற்றவர். அவரைப் பார்த்த எவருக்குமே சந்தேகம் ஏற்படவில்லை. 'யாரோ, பூஜை செய்யும் பட்டர்' என்று நினைத்தனர்.

பல்லக்கை நெருங்கிய அவர், அதில் ஏறி அம்மனின் காதுகளை அலங்கரிக்கும் வைரத் தோடுகளை கழற்றிக் கொண்டு, கும்பலோடு கும்பலாக கலந்து மறைந்தார். (அந்த தோடுகளின் அன்றைய மதிப்பு பதினாறாயிரம் ரூபாய்.) அப்போது அசதியுடன் பல்லக்கில் சாய்ந்திருந்த குப்புசாமி பட்டரை, சுமார் எட்டு வயது சிறுமி ஒருத்தியின் மென்மையான கரங்கள் உலுக்கி எழுப்பின. அரக்கப் பரக்க கண் விழித்து எழுந்த குப்புசாமி பட்டரின் எதிரில் ஒளி மயமாக அந்த குழந்தை நின்று கொண்டிருந்தாள்.
'என்ன? ஏது?' என்று கேட்பதற்கு முன், அவளாகவே பரபரப்புடன், 'மாமா... மாமா... எனது தோடுகளை ஒருவன் திருடிக் கொண்டு போகிறான். வா, வந்து அவனைப் பிடி' என்று அவரின் கைகளைப் பிடித்து இழுத்தாள். 'ஏதோ நடந்திருக்கிறது' என்பதை சட்டென்று உணர்ந்த குப்புசாமி பட்டர், மந்திரத்தில் கட்டுண்டவர் போல சிறுமியை பின்தொடர்ந்தார்.
சற்றுத்தூரம் சென்றதும், திருடனை சுட்டி காட்டிய சிறுமி, 'அதோ போகிறானே... அவன்தான் எனது தோடுகளை திருடியவன்' என்றாள். கட்டுமஸ்தான உடம்போடு ஒருவர் போய்க் கொண்டிருந்தார். ஒல்லியான உடல்வாகு கொண்ட பட்டருக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ தெரியவில்லை. விறுவிறுவென்று போய், அந்த நபரின் மூடிய கையை பற்றி இழுத்துக் கடித்தார்.
அந்தநபர், திமிறினாரே தவிர, எதிர்த்து தாக்காமல், பிரமை பிடித்தவர் போல் அப்படியே நின்றார். அவர் கையை பிரித்து பார்த்தால், அம்மனின் ஆபரணம் ஜொலித்தது. 'திருடன் திருடன்' என்று கத்தியபடி சிறுமியை பார்த்தார் குப்புசாமி பட்டர். அவள் மாயமாக மறைந்து விட்டிருந்தாள்!
அதற்குள் அங்கிருந்த மக்கள் அந்தத் திருடனைப் பிடித்து அடிக்கத் தொடங்கினர். திருவிழாக்கும்பல். கேட்கவா வேண்டும்? ஆளாளுக்கு அடித்தார்கள். ஆனால், அந்த நபரோ, 'அடியுங்கள்... நன்றாக அடியுங்கள். அப்போதுதான் நான் செய்த பாவம் தீரும்' என்று சொன்னாரே தவிர கலங்கவில்லை. அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதிகாச, புராண காலத்தில் மட்டுமின்றி எப்போதும் தெய்வம் தனது திருவிளையாடலை நிறுத்தியதில்லை. அடியாருக்கு அருள்புரிவதன் மூலம் அது எப்போதும் தன்னை வெளிப்படுத்தவே செய்கிறது. அனுபவத்தால் இதை உணர்ந்தவர்கள், அடுத்தவர்களுக்கு சொல்கிறார்கள். அனுபவம் பெற துடிப்பவர்கள் அதை நம்புகிறார்கள். தெய்வத்தின் அருளை தாங்களும் அனுபவிக்கிறார்கள்.
- கல்யாண வரம் கிடைக்கும், சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.
- ஆடித் தபசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள்.
ஒருமுறை 'சிவன் பெரியவரா?... விஷ்ணு பெரியவரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த சக்திகள் இரண்டும் ஒன்றே என்பதை உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும்' என்று எண்ணினாள் அம்பிகை.
தனது எண்ணத்தை சிவபெருமானிடம் கூறி, 'சுவாமி... சங்கரரும் நாராயணரும் பேதம் இல்லாமல் பொருந்தி இருக்கும் திருக்காட்சியைக் காட்டியருள வேண்டும்' என வேண்டினாள். உடனே சிவபெருமான், 'தேவி உனது எண்ணம் நிறைவேறும்.
பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகில் உள்ள புன்னை வனத்தலத்துக்கு (சங்கரன்கோவில்) சென்று தவமியற்று. அங்கு நீ விரும்பியபடியே, யாம் சங்கர நாராயணராக காட்சி கொடுப்போம். மகாசக்தியான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்' என்றார்.
அதன்படியே பூலோகத்தில் உள்ள புன்னை வனத்தலத்தை அடைந்தாள் அம்பிகை. அங்கே, முனிவர்கள் - புன்னை மரங்களாகி நிழல்தர, அந்த நிழலில் பெரும் தவத்தை மேற்கொண்டாள் அம்பிகை.
தேவ மாதர்கள் பசுக் கூட்டமாக தோன்றி அன்னையின் தவத்துக்கு உதவினர். அதனால் மகிழ்ந்த அம்பிகை, அந்த பசுக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்த, 'ஆவுடையாள்' எனும் திருநாமம் கொண்டாள் (ஆ-பசு). மேலும், 'கோ'(பசு)க்களின் பெயரை இணைத்து 'கோமதி' எனும் மற்றொரு திருநாமத்தையும் ஏற்றாள். அம்பிகையின் தவத்தால் அங்கே ஆவினங்களும் பெருமை பெற்றன.
எந்த திருக்காட்சியைக் காண அங்கே அன்னை தவம் செய்தாலோ, அந்த காட்சியைக் காணும் பாக்கியத்தை இரு பாம்புகளுக்கும் அளித்து அருள் புரிந்தாள் அம்பிகை. சங்கன், பதுமன் என்று இரு சர்ப்பங்கள், சங்கன் - சிவபக்தன். பதுமன் - விஷ்ணு பக்தன். இவர்களுக்கிடையே பெரும் போட்டி.
'சிவன் தான் பெரியவர்' என்று சங்கன் சொல்ல, 'இல்லை, விஷ்ணுவே பெரியவர்' என்று பதுமன் கூற, இருவருக்கும் இடையே சண்டை மூண்டது.
இருவரும் முனிவர்கள் பலரை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தேடினார்கள். அப்போது குருபகவான், 'அறியாமை கடலில் மூழ்கிக் கிடக்கும் உங்களுக்கு, ஞான விளக்கம் கிடைக்க வேண்டுமெனில், நீங்கள் புன்னை வனம் செல்லுங்கள். அங்கு உங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும்' என்றார்.
அதன்படி இருவரும் அருள் செழிக்கும் புன்னை வனம் வந்து தவமியற்றினர். அவர்களின் தவம் சங்கரரையும் நாராயணரையும் மகிழச் செய்தது. வீண்வாதம் செய்யும் அவர்களுக்காக மட்டுமல்லாமல், உலகிலுள்ள மற்றவர்களுக்கும் உண்மையை உணர்த்த, பாதித்திருமேனி சங்கரர், பாதி திருமேனி நாராயணராக கோலம் கொண்டு சங்கரநாராயணராகத் திருக்காட்சி கொடுத்தனர்.

அம்பிகைக்கு இறைவன் சங்கரநாராயணராக காட்சி தந்த வைபவமே இங்கே ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த திருவிழாவில் உத்திராட நட்சத்திரத்தன்று, ஆடித் தபசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள்.
அன்று மாலை ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறும். ஆடித்தபசு திருவிழாவில் கலந்து கொண்டு தரிசித்தால் கல்யாண வரம் கிடைக்கும், சர்ப்ப தோஷங்கள் நீங்கும், வாழ்வில் தடைகள்யாவும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பது பக்தர்களது நம்பிக்கை.
- ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது.
- பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று.
ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று.
சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயண சுவாமி, கோமதி அம்மன் முதலிய சன்னதிகளை உள்ளடக்கிய கோவில் வெளிப்பிரகாரத்தை 108 முறை சுற்றுவதே ஆடிச்சுற்று ஆகும்.
சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவிலில் ஆடித்தபசு கொடி ஏறிய பின் ஆடிச்சுற்று எனும் பெயரில் பக்தர்கள் கோவிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையுடன் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள்.
ஆடிச்சுற்று சுற்றுவதால் ஒரு காலில் நின்று தபசு காட்சியருளும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அம்பாளும் இப்படி தனது கால் வலியை ஏற்கும் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் அகற்றுகிறாள்.

பக்தர்கள் தங்களின் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்து, கோமதி அம்மனை வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள். மாணவ-மாணவிகள், வாலிபர்கள், கன்னிப்பெண்கள், வயதான ஆண்-பெண் என அனைத்து வயதினரும் ஆடிச்சுற்று சுற்றுகிறார்கள்.
மாணவ-மாணவிகள் நன்கு படிக்க வேண்டும், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும், எதிர்காலத்தில் மருத்துவர், என்ஜினீயர், கலெக்டர், போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள்.
கன்னிப்பெண்கள் தனக்கு நல்ல கணவர் அமைய வேண்டும், நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், குழந்தை பேறு வேண்டும் என பல வேண்டுதல்களை மனதில் வைத்து ஆடிச்சுற்று செல்கின்றனர். இதேபோல் வாலிபர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வேண்டி ஆடிச்சுற்று செல்கின்றனர்.
நடுத்தர வயது ஆண் மற்றும் பெண்கள் தங்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தங்களது குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டுகிறார்கள். வயதானவர்கள் நோய்நொடியால் அவதிப்படாமல் வாழ வேண்டும் என வேண்டி செல்கிறார்கள்.
இப்படியாக அனைத்து வயதினருமே தங்களுக்கு தகுந்தா ற்போல் கோமதி அம்மனை மனதில் நினைத்தப்படி ஆடிச்சுற்று சுற்றுகிறார்கள். ஆடிச்சுற்று சுற்றுவதன் மூலம் கோமதி அம்மன் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டமே சாட்சி.
தொடக்க காலத்தில் ஆடிச்சுற்று செல்பவர்களின் எண்ணிக்கை 100 முதல் 200 வரையே இருக்கும். ஆனால் இன்றோ பல்லாயிரக் கணக்கானோர் ஆடிச்சுற்று செல்கிறார்கள்.
ஆடிச்சுற்று ஒரே நாளில் முடித்து விட முடியாது என்பதால் பல பக்தர்கள் சங்கரன் கோவிலில் பல நாட்கள் தங்கி ஆடிச்சுற்று செல்கிறார்கள். ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடந்த பிறகே பக்தர்கள் ஆடிச்சுற்று செல்ல தொடங்குவார்கள்.
ஆடித்தபசு திருவிழாவிற்குள் ஆடிச்சுற்று முடித்துவிட வேண்டும். இதனால் கொடியேற்றப்பட்ட நாளில் இருந்தே பக்தர்கள் ஆடிச்சுற்று நடக்க தொடங்குவர். இதனால் கொடியேற்றபட்டதில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
வெளி பிரகாரத்தில் பக்தர்கள் ஆடிச்சுற்று சென்றபடியே இருப்பார்கள். விடுமுறை நாட்களில் கோவிலில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காணப்படுவர். ஆடிச்சுற்று செல்லும் பக்தர்களின் நியாயமான அனைத்து வேண்டுதல்களையும் கோமதி அம்மன் நிறைவேற்றுவதாக ஐதீகம்.
- தபசு காட்சி வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
- திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 11-ந் தேதி கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் அம்பாள் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் கலையரங்கத்தில் சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி., தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேரோட்டத்தில் அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, கோவில் துணை ஆணையர் கோமதி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான தபசு காட்சி 11-ம் திருவிழாவான வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரலிங்கசுவாமி கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டக படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.
- இறைவனை வேண்டி ஒற்றைக்காலில் கடும் தவமிருந்தாள்.
- தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.
சிவனாரின் திருக்கரத்தைப் பற்றி, அவரின் துணைவியாவதற்காக, உமையவள் தபசு இருந்தது ஆடி மாதத்தில் என்பார்கள்.
அரியும் சிவனும் ஒன்றே என உலகுக்கு உணர்த்த விரும்பிய ஸ்ரீகோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக்காலில் கடும் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.
திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி, ஈரப் புடவையுடன் கோவில் பிராகாரத்தில் படுத்துக்கொள்வார்கள். இரவு நமக்கே தெரியாமல், அம்மன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் ஆடித்தபசு நாளில், அம்பிகையை அபிஷேகிப்பதற்காகவும், அலங்கரிப்பதற்காகவும் நம்மாலான பொருட்களை வழங்கி, தரிசித்தால், தாலி பாக்கியம் நிலைக்கும். நினைத்தபடி வாழ்க்கைத் துணை அமையும் என்கின்றனர் பக்தர்கள்.
- ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.
- தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.
ஆடி பவுர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன் சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திரத்துடன் கூடிய புண்ணிய தினத்தில் காலை வேளையில் ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக்கொடிமரத்தில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடக்கும். ஸ்ரீ கோமதி அம்பாளுக்கான தனிப்பெரும் திருவிழா இது. ஆகையால் அம்பாளுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது.
கொடியேற்றும் அதே வேளையில் ஸ்ரீ அம்பாள் சிவிகையில் (தந்த பல்லக்கில்) எழுந்தருள்கிறாள். தொடர்ந்து 10 நாட்கள் காலையில் ஒவ்வொரு அலங்காரத்திலும், மாலை வேளையில் வெள்ளி சப்பரத்தில் மண்டகப்படி கட்டிடத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள். இரவு வேளையில் சமுதாய மண்டகப்படி கட்டிடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.
அம்பாளுக்கான விழா ஆகையால் 9-ம் நாள் காலையில் அம்பாளுக்கு மட்டும் ரத உற்சவம் நடக்கிறது. 11-ம் நாள் காலையில் யாகசாலை மண்டபத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விஷேச அபிஷேகம், அலங்காரமும், சோடஷ உபசாரனையும் நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீ கோமதி அம்பாள் தபசுகோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.
ஆடி பவுர்ணமி தினத்தில் மாலை உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சங்கர நாராயண மூர்த்தியாக, தபசுகோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின் இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார்.

3-டி அமைப்பில் ஓவியம்
கோவில் கருவறையின் பின்புறம் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் படுத்திருப்பது போன்ற ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கண் அமைப்பு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே 3-டி அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வியப்பான ஒன்று. ஓவியத்தின் வலது மற்றும் இடது புறம், ஓவியத்தின் நடுப்பகுதியில் நின்று பார்த்தாலும் ரங்க நாதர் நம்மையே பார்ப்பது போல அவரது கண்களின் பார்வை அமைக்கப்பட்டு இருக்கும்.
- கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.
- 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா நடைபெற்று வருகிறது.
மேலும் கோவில் உள் மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
ஆடித்தபசு திருவிழா நாட்களில் கோவில் பிரகாரத்தை 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி சுற்று சுற்றி வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்பாளுக்கு விளா பூஜையும், 9 மணிக்கு சங்கர நாராயண சுவாமி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கும், சுவாமி-அம்பாளுக்கும், சந்திரமவுலீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம், பிற்பகல் 1.35 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாளுக்கு ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெற்றது.
மாலை 4.15 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 6.05 மணிக்கு சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கரநாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கிறார்.
இரவு 11 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு, இரவு 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஆடித்தபசு திருவிழாவை காண தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான வர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சங்கரன் கோவிலில் எங்கு பார்த்தாலும் மனிதர்களின் தலையாகவே தெரிகிறது.
தபசு விழாவையொட்டி சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக நகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆடித்தபசு விழாவை யொட்டி 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தீயணைப்பு துறை சார்பில் 4 விதமான தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மின் வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வாசல் அருகில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
- ஆடி மாத பவுர்ணமியான இன்று ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
- சங்கரன்கோவிலில் அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர்.
சங்கரன்கோவில்:
சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக அரியும் சிவனும் ஒண்ணு என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், சங்கரநாராயணராக தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.
இக்கோவிலில் ஆடி மாத பவுர்ணமியான இன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இங்குள்ள கோமதி அம்மன் சன்னிதி முன், நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர்.
சங்கன் சிவபெருமான் மீதும், பதுமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தனர். இருவரும் சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என தங்களுக்குள் வாதம் செய்தனர். இது பற்றி தெரிந்து கொள்ள பார்வதி தேவியிடம் சென்று முறையிட்டனர்.
அம்பாள் ஈசனை வேண்ட, அவர் அம்பாளை பொதிகை மலைப்பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கர நாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்.
அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர்.
சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான்.
அதேபோல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.
இவ்வாறு தவம்செய்த அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த மாதம் ஆடி மாதம் என்கிறது புராணம். இதைத்தான் இன்று ஆடித்தபசு என கொண்டாடுகிறோம்.
- இன்று (வியாழக்கிழமை) சங்கரலிங்க சுவாமி தெப்ப திருவிழா நடக்கிறது.
- நாளை (வெள்ளிக்கிழமை) 10 மணிக்கு சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது.
அம்பை தாமிரபரணி கரையில் அமைந்துள்ள கோமதியம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் தீர்த்தவாரி நடைபெற்றது.
விழாவில் சிகர நிகழ்ச்சியாக தபசுத்திருநாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி தபசு மண்டபத்துக்கு சென்றார்
மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராகவும், 6.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமியாகவும் காட்சி கொடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அம்பை புதுக்கிராமம் தெருவில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி தெப்ப திருவிழாவும், நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்பத் திருவிழாவும், 10 மணிக்கு சுவாமி- அம்பாள் வீதி உலாவும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கரலிங்க சுவாமி கோவில் அறங்காவலர் முருகசுவாமிநாதன், அகஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் சங்கு சபாபதி ஆகியோர் தலைமையில் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.
- இன்று (வியாழக்கிழமை) சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
- இரவு 10 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று.
சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை-மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு திருவிழா இந்த ஆண்டு கடந்த ஜூலை 31-ந் தேதி காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி கோவில் பிரகாரத்தில் சிறப்பு நாதஸ்வர இன்னிசை, தேவார இன்னிசை, பரதநாட்டியம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேரோட்டம் கடந்த 8-ந்தேதி காலை நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி பதினோன்றாம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம், காலை 9 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், காலை 12.30 மணிக்கு மேல் தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 5.15 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டு தெற்கு ரத வீதியில் உள்ள தபசு பந்தலுக்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து தபசு மண்டபத்தில் இருந்த அம்பாள் 6.15 மணிக்கு தபசு பந்தலுக்கு வந்தார். இதையடுத்து சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சுவாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.40 மணிக்கு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுத்தார்.
கோலாகலமாக நடந்த இதை கண்டதும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தில் வீசினர். பக்தர்கள், `சங்கரா, நாராயணா' என பக்தி கோஷம் எழுப்பினர்.
திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுத்தார்.
திருவிழாவையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில், கூடுதல் சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி, சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு சுதீர், டவுன் இன்ஸ்பெக்டர் பவுல் ஜேசுதாஸ், தாலுகா இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆடித்தபசு திருவிழா ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலைய துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
12-வது திருநாளான இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
இரவு 10 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
- சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- இன்று இரவு சுவாமி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சியளிக்கிறார்.
தமிழகத்தில் உள்ள சிறப்பு பெற்ற சிவாலயங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவிலும் ஒன்று.
இங்கு நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் ஆடித்தபசு திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.
விழாவையொட்டி தினமும் கோமதி அம்பாள் காலை மற்றும் இரவில் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்தார். தொடர்ந்து பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் மண்டக படிதாரர்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.
9-ம் திருவிழாவான கடந்த 8-ந்தேதி தேரோட்டம் நடந்தது. 10-ம் திருவிழாவான நேற்று கோமதி அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று 11-ம் திருநாள் சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு சுவாமி காட்சியளிக்கும் தபசு காட்சி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தானம் சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள், சந்திர மவுலீஸ்வரர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பரிவட்டம், திருக்கண் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து பிற்பகல் 11.40 மணிக்கு கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
மாலை 5.30 மணிக்கு தெற்கு ரதவீதியில் சங்கரலிங்க சுவாமி தனது உடலின் ஒரு பாதியை சிவனாகவும் மற்றொறு பகுதியை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயண சுவாமியாக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து கோமதி அம்பாள் தபசு மண்டபத்திற்கு மீண்டும் எழுந்தருளியதும் இரவு சுவாமி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்கு காட்சியளிக்கிறார்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கமான முறையில் தபசு காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இதையொட்டி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் 4 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜபாளையம் சாலை நீதிமன்றம் அருகிலும், நெல்லை சாலை அரசு மருத்துவமனை அருகிலும், திருவேங்கடம் சாலை நகராட்சி அலுவலகம் அருகிலும், தென்காசி சாலை சேர்ந்தமரம் விலக்கிலும் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் கூடுதல் எஸ்.பி. சார்லஸ் கலைமணி, சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதிர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கோமதியன்னையின் கருணையும் கடாக்ஷமும் சொல்லில் அடக்கமுடியாதது.
- ஆடி பெளர்ணமிக்கு முன்னதாக ஆடித்தபசு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
சைவமும் வைஷ்ணவமும் கைகோர்த்துக் காட்சி தரும் திருத்தலம் சங்கரன் கோவில். இங்கே சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் இணைந்து, ஒரே உடலெனக் கொண்டு காட்சி தருகின்றனர். சிவனாரும் பார்வதியும் அர்த்தநாரீஸ்வரராக எப்படிக் காட்சி தருகிறார்களோ... அதேபோல், சிவனாரும் பெருமாளும், ஹரியும் ஹரனுமாகக் காட்சி தரும் ஒப்பற்ற திருத்தலம்.
இந்தக் காட்சியை தரிசிக்க வேண்டி, கடும் தவம் புரிந்தாள் உமையவள். ஊசி முனையில் ஒற்றைக்காலில் நின்றபடி கடும் தவம் இருந்தாள். அவளின் தபஸ் செய்யும் காட்சியே சங்கரன் கோவிலின் இன்னொரு அற்புதமானது. இந்தத் தலத்தில், தவக்கோலத்தில் கோமதியம்மன் காட்சி தருகிறாள். அவளின் தவத்துக்கு இணங்கி, சங்கரநாராயணர் கோலத்தைக் காட்டினர் என்கிறது ஸ்தல புராணம். மேலும் மகா யோகினி சக்தி பீடம் எனப் போற்றுகிறது புராணம்.
கோமதியன்னையின் கருணையும் கடாக்ஷமும் சொல்லில் அடக்கமுடியாதது. அதனால்தான் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில், பெண் குழந்தை பிறந்தால், கோமதி என்றே பெயர் சூட்டினார்கள். இன்றைக்கும் அந்த வழக்கம் இருந்து வருகிறது.
தவம் புரிந்த கோமதியன்னைக்கு, ஆடி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், உத்திராட நட்சத்திர நாளில்தான் சிவனாரும் பெருமாளும் சங்கரநாராயணராகக் காட்சி தந்தருளினர். அதனால்தான் ஒவ்வொரு ஆடி பெளர்ணமிக்கு முன்னதாக, ஆடித்தபசு விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சங்கரன்கோவிலில் பத்து நாள் விழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் கோமதியன்னை, தபசுக் கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு நடைபெற்றது. தவக்கோலத்தில் இருந்து சங்கரநாராயணரை தரிசித்த கோமதி அன்னையின் தவக்கோலத்தை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்வர்..
விரதம் இருந்து கோமதியன்னையின் ஆடித்தபசு விழாவில் கலந்துகொண்டு, கோமதி அன்னையையும் சங்கரநாராயணரையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், வாழ்வில் எல்லா யோகமும் கைகூடி வரும். சகல ஐஸ்வர்யங்களும் தேடி வரும் என்பது ஐதீகம்.