என் மலர்
நீங்கள் தேடியது "தீவிபத்து"
- ஆறு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- பல லட்சம் மதிப்பிலான எண்ணெய் வித்து பொருள்கள் எரிந்து நாசமானது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பள்ளி வாசல் தெருவில் வசிப்பவர் சாகுல் (வயது 40).
இவர் அதே பகுதியில் ஆயில் மில் நடத்தி வருகிறார். ஆயில் மில் மேல் தளத்தில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் எண்ணெய் தயாரிப்பதற்கான அட்டைப்பெட்டிகள், எள் மூட்டைகள், கடலை பருப்பு மூட்டைகள் உள்ளிட்ட ஆயில் பொருட்களை வைத்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று இரவு வேலைகளை முடித்துவிட்டு ஆயில் மில்லை வழக்கம் போல் சாகுல் பூட்டிவிட்டு சென்றார்.
இந்த மில்லில் இருந்து நள்ளிரவில் பொருட்கள் வைத்திருத்த தளத்தில் இருந்து புகையுடன் தீ பற்றியது. பின்னர் தீ மளமளவென பரவி ஆயில் மில் மேல் தளத்தில் உள்ள குடோன் முழுவதும் பரவியது இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆலங்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரமாக போராடினர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து இது ஆயில் குடுடோன் என்பதால் இதற்கு என பிரத்தியேகமாக உள்ள தீயணைப்பு வாகனம் புதுக்கோட்டையில் இருந்து வரவழைக்கப்பட்டது.
அவர்கள் ஆறு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள கட்டிடங்களிலும் தண்ணீர் பீச்சியடித்து தீ பரவாமல் தடுத்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்து பொருள்கள் எரிந்து நாசமானது. நள்ளிரவில் நடந்த இந்த தீ விபத்தால் ஆலங்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
லண்டன்:
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் உலகின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடிய துணை மின் நிலையத்தில் நேற்று இரவு 11.23 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் கடுமையான புகை மூட்டமாக இருந்தது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு கருதி அங்கிருந்து 150-க்கும் மேற்பட்ட பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையமும் இன்று இரவு 11.59 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஹீத்ரோ விமானநிலையத்துக்கு வந்த விமானங்கள் மற்ற விமானநிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது.
விமான நிலையத்துக்கு பயணிகள் யாரும் வரவேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விமானம் புறப்படும் நேரத்தை உறுதி செய்து கொள்ளுமாறும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் விமான பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள்.
விமான நிலையம் அருகில் இருந்த 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
- தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. இங்கு பழமையான மரங்கள் அதிகம் உள்ளன. இதில் நேற்று இரவு சுமார் 500 வருடம் பழமையான புளிய மரம் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்தது.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த புளிய மரத்தின் மேல் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்திருப்பார்களா? என சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஒரு பாப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
- சம்பவம் நடந்தபோது கிளப்பில் 1,500 பேர் இருந்தனர்.
தெற்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு நைட் கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. மேலும் 100 பேர் வரை காயமடைந்தனர்.
அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கைப்படி, தலைநகர் ஸ்கோப்ஜிக்கு கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோகானி நகரில் உள்ள 'பல்ஸ்' என்ற நைட் கிளப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
ஒரு பாப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது சில இளைஞர்கள் வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் மேற்கூரை தீப்பிடித்து விபத்தானது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நிகழ்ச்சிக்காக அங்கு கூடியிருந்த ஏராளமனோர் விபத்தில் சிக்கினர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகளில் கிளப் கட்டிடம் தீப்பிழம்புகளால் சூழப்பட்டதையும், இரவு வானத்தில் புகை எழுவதும் காணப்படுகிறது. சம்பவம் நடந்தபோது கிளப்பில் 1,500 பேர் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜ்கோட் 150 ரிங் ரோட்டில் அமைந்துள்ள அட்லான்டிஸ் என்ற 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் 6 ஆவது மாடியில் இன்று காலை தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து அங்கு வசித்த 50 பேரை பத்திரமாக மீட்க்கப்பட்டனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவரை இன்னும் காணவில்லை என்று காவல் கண்காணிப்பாளர் சௌத்ரி தெரிவித்தார். மேலும் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சார்ட் சர்கியூட் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டிடத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறியபடி இருந்தது. தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன
- எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்
பெரம்பலூர்
பெரம்பலூர் நகரம் எளம்பலூர் சாலையில் உள்ள தென்றல் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் கஸ்தூரி (வயது 46), இவரது கணவர் கொளஞ்சிநாதன் இறந்து விட்டார் இந்நிலையில், மகன் கமலேஸ் உடன் தனக்கு சொந்த மான ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஸ் இருவரும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். அப்போது சற்று நேரத்தில் கஸ்தூரியின் வீட்டில் இருந்து அதிகமான புகை வெளியே வந்துள்ளது.
இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஓட்டு வீட்டில் கொழுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்த, தீயை அனைத்தனர். இச்சம்பவத்தில் வீட்டில் உள்ள பீரோ, கட்டில், டேபிள் சேர், பாத்திரங்கள் மற்றும் உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பாலாது.
தகவல் அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இரவு நேரம் என்றும் பாராமல் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயில் சேதமான வீட்டினை பார்வையிட்டு அதன் உரிமையாளர் கஸ்தூரி மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். மேலும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடு கட்டி தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும் எனவும் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
- சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
- தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கொல்கத்தாவை சேர்ந்தவர் பிஜாய் (வயது 35). இவர் கோவை தியாகி குமரன் வீதி பகுதியில் தங்கி தங்க நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார்.
அவர் இன்று காலை வழக்கம்போல வீட்டில் சமைப்பதற்காக கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமானது. அதிர்ஷ்டவசமாக பிஜாய் உயிர் தப்பினர்.
சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அங்கு காயம் அடைந்து கிடந்த பிஜாயை மீட்டனர். அவரை உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிலிண்டரை சரியாக மூடாமல் வைத்திருந்ததால் கியாஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.
- சமையல் செய்த போது எண்ணெய் கடாயில் இருந்து பற்றிய தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பரவியதே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாம்பரம்:
தாம்பரம் முடிச்சூர் சாலையில் முகமது நசீர் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென ஓட்டல் முழுவதும் பரவத்தொடங்கியது,
ஊழியர்கள் மற்றும் சாப்பிட வந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். தாம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்,
ஆனால் அதற்குள் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது. சமையல் செய்த போது எண்ணெய் கடாயில் இருந்து பற்றிய தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பரவியதே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- 100 சதவீதம் கருகி உள்ள நிலையில் விபத்தில் சிக்கிய பெண் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது
- தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
வடக்கு தாமரை குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி ஷீலா (வயது 64). இவர்களது மகன் ஹரிகரன் (30). ஷீலாவும் அவரது மகன் ஹரிகரனும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்கினார்கள்.அப்போது வீட்டில் விளக்கை பற்ற வைத்திருந்தனர். நள்ளிரவு திடீரென விளக்கு சரிந்து எதிர்பாராத விதமாக குடிசை வீட்டில் தீப்பிடித்தது.
தீவிபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்தது.அப்போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஹரிகரன் கண் விழித்தார். தீ எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே ஓடினார். அதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் அவரது தாயார் ஷீலா சிக்கி உடல் கருகினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஷீலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷீலாவின் உடல் 100 சதவீதம் கருகி உள்ள நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள் . இதுகுறித்து தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
- ரூ.25 ஆயிரம் நஷ்டம்
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியை சேர்ந்த கோவிந்தன் மகன் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போர் ஒன்று உள்ளது. இந்த போரில் திடீரென்று தீ பற்றி எரிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த ஆலங்குடி தீயணைப்பு தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வைக்கோல் போர் முற்றிலும் சேதம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- கடைகள் நெரிசலாக இருந்ததால் ஒரு கடையில் பிடித்த தீ மற்ற கடைகளுக்கும் பரவியது.
- மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால் ஒரு கடையில் பிடித்த தீ மற்ற கடைகளுக்கும் பரவியது. இதில் 150 கடைகள் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் 25 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சாலைகள் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இரவில் கடை உரிமையாளர்கள் கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் துணி, மளிகை பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. சேத மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
- விருகம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஏறத்தாழ 3 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
- தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அதிகளவில் வரவழைக்கப்பட்டு குடியிருப்புவாசிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் தனியார் பள்ளி அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் 2 பிளாக், 12 தளங்களுடன் மொத்தம் 134 வீடுகள் உள்ளது.
நேற்று இரவு 11 மணி அளவில் தரை தளத்தில் உள்ள மின்சார பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.
மின்சார ஒயர்கள் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியதால் தீ 12-வது தளம் வரை வேகமாக பரவியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் தங்களது வீட்டை விட்டு வெளியேறி அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக மாறியது. இதில் குடியிருப்பில் வசித்து வரும் வயதானவர்கள் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு 7 ஆம்புலன்ஸ் வாகனங்களும் உடனடியாக வரவழைக்கப்பட்டது. மூச்சு திணறலால் அவதிப்பட்டவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விருகம்பாக்கம், அசோக் நகர், கிண்டி, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ஏறத்தாழ 3 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அதிகளவில் வரவழைக்கப்பட்டு குடியிருப்புவாசிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் மூச்சு திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்ட முதியவர் ராஜ்மோகன் (வயது 79), அவரது மனைவி நீலா ஆகிய இருவரும் சாலிகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்ட விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. துரிதமாக செயல்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.