என் மலர்
நீங்கள் தேடியது "slug 222654"
- திருமங்கலம் அருகே சிலை எடுப்பு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
- வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கருப்பசாமி கோவில் புரட்டாசி பொங்கல் விழா மிகவும் பிரசிதிபெற்றது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கருப்பசாமி கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் சிலை எடுப்பு திருவிழா பிரசிதிபெற்றது .
பக்தர்கள் தங்களது கஷ்டம் தீர அய்யனார், கருப்ப சாமியை நேர்த்தி கடனாக சிலை செய்வதாக வேண்டி கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம் அரசு பணி வேண்டும் என்றால் அரசுஊழியர், காவல்துறை ஊழியர், ராணுவவீரர் போன்ற சிலைகளும், விவசாயம் செழிக்கவேண்டினால் டிராக்டர், காளைமாடு சிலைகளும், விஷபூச்சிகள் தீண்டாமல் இருக்க நாகர்சிலை உள்ளிட்ட சிலைகளும் நேர்த்திகடனாக செய்வதாக வேண்டி கொள்வர்.
இந்த ஆண்டிற்கான சிலை எடுப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி மாலை 3 மணியளவில் சிலைசெய்யும் வீடுகளிலிருந்து பக்தர்கள்ஆயிரக்கணக்கில் திரண்டு தாங்கள் வேண்டிக் கொண்ட சிலைகளை தலைசுமையாக ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். வாண வேடிக்கைகள் வெடிக்க வும், மேளதாளங்கள் முழங்கவும் சிலை எடுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
குறிப்பாக ஆசிரியர், ராணுவவீரர், அரசியல் தலைவர், டிராக்டர், ஆடு, மாடு சிலைகள், கருப்பணசாமி, அய்யனார் சாமிசிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகளை தலையில் ஏந்தியபடியே ஊர்வலமாகவந்து வயல்வெளிகளை கடந்து கண்மாய் கரையில் உள்ள கோயிலை அடைந்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர்.
இந்த சிலை எடுப்பு திருவிழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கம்பம், திருச்சி, உசிலம்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- 8 பட்டறை பத்திரகாளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
- பூக்குழி விழாவில் திருமங்கலம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜேடி விஜயன் பூக்குழி இறங்கி தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 8 பட்டறை பத்திரகாளி முத்து மாரியம்மன் கோவில் கொல்லர்திடலில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலில் 25-வது ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த 30-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
மாவிளக்கு எடுத்தல், திருவிளக்கு பூஜை, அக்னிச்சட்டி எடுத்தல் போன்றவை விமரிசையாக நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக 12-ம் நாள் திருவிழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் விரதமிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இறங்கினர். பூக்குழி விழாவில் திருமங்கலம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜேடி விஜயன் பூக்குழி இறங்கி தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- இந்த கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.
- விஸ்வரூப தரிசனமும், பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது.
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி பெருமாளை வழிபட்டு செல்வார்கள்.
அந்த வகையில் நடப்பாண்டு புரட்டாசி மாத முதல் மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தனர். இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேவநாதசாமி கோவிலுக்கு திரண்டு வந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மொட்டை அடித்துக் கொண்டு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தேவநாதசாமியை தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 3 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. மேலும் 3-ம் சனிக்கிழமையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர இன்று 3-ம் வார சனிக்கிழமை பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் பகுதி மற்றும் சாலைகளில் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- இந்த கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- இந்த கோவிலில் மிகவும் அபூர்வ மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோச மங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் மிகவும் அபூர்வ மரகத கல்லால் செய்யப்பட்ட நடராஜர் சிலை ஒன்று உள்ளது. இதற்கு தனி சன்னதியும் இந்த கோவிலில் அமைந்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள மிகவும் தொன்மையான மற்றும் பழமையான இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தினமும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடந்த சில நாட்களாக கோவிலின் வளாகத்தில் வீடுகள் அமைப்பு போன்று ஓட்டுக் கற்களை வரிசையாக அடுக்கி வைத்து செல்கின்றனர். இதுபற்றி கோவில் குருக்கள் ஒருவர் கூறியதாவது:-
மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளதால் இங்கு வரக்கூடிய பக்தர்கள் சொந்தமாக வீடுகட்ட வேண்டும்.
தங்களது சொந்த வீடு கனவு இல்லம் ஆசை நிறைவேற மங்களநாதரிடம் பிரார்த்தனை செய்து வளாகத்தில் கற்களால் வீடுகட்டி வேண்டிக்கொள்கின்றனர். பலருக்கு வீடுகட்டும் ஆசையும் நிறைவேறி உள்ளதால் அதன் நம்பிக்கையில் பக்தர்கள் கோவில் வளாகத்தில் கற்களை வீடு போன்று அடுக்கி வைத்து செல்கின்றனர்.
இவர் அவர் கூறினார்.
- அலங்கரிக்கப்பட்ட மாடுகள் தலை மீதும் தேங்காய்கள் உடைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
- திரளான குரும்பர் சமுதாய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
ஓசூர் :
ஓசூர் அருகே அரசனட்டியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஹரியம்மா, ஸ்ரீ கரியம்மா, ஸ்ரீ ஆனகோண்ட்லம்மா தேவி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேக விழா, பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, கோயில் கமிட்டி மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, சம்பன்னி சாமி, அஜ்ஜய்யா சாமி, ஆனேலிங்கேஷ்வரா சாமி, அகதூர் சாமி, முகலூரு வீரபத்திர சாமி, ஒசராய சாமி, சித்தேஸ்வர சாமி, சிக்கம்மா தொட்டம்மா தேவிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளின் சிலைகள் மேள, தாள முழக்கத்துடன், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் முன்னே செல்ல, சாமி சிலைகள் ஊர்வலமாக அருகில் உள்ள மைதானத்திற்கு எடுத்து செல்லப்பட்டன. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் தலை மீதும் தேங்காய்கள் உடைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
இதில், ஓசூர், சூளகிரி பகுதிகளிலிருந்தும், பெங்களூரு பகுதியிலிருந்தும் திரளான குரும்பர் சமுதாய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கமிட்டி தலைவர் காந்தராஜ், செயலாளர் மாதேஷ் என்கிற மகாதேவன், மல்லிகா, வீரபத்திரப்பா, வெங்கடேஷ் மற்றும் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்து அம்மனை தரிசனம் செய்வர்.
- அதிகாலையில் நடை திறந்தவுடன் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த புன்னைநல்லூரில் உலக புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து செல்வர். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது. இதனால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.
இந்த கோவிலில் செவ்வாய் ,வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். அதிலும் ஆவணி மாதங்களில் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த நாட்களில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்து அம்மனை தரிசனம் செய்வர்.
அதன்படி கடந்த ஆவணி மாத முதல் மற்றும் 2-வது ஞாயிற்றுக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இன்று ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலையில் நடை திறப்பதற்கு முன்பே பக்தர்கள் குவிய தொடங்கினர். ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி பாதுகாப்பில் இருந்த போலீசார் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே சென்றது. கோவில் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல் நாள் இரவே வந்து கோவிலில் தங்கி இருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று மூலவர் அம்மனுக்கு தாழம்பூ பாவாடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பலர் முடி காணிக்கை, மாவிளக்கு எடுத்தல் பல்வேறு வகையான நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இதைவிட கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக நலன் வேண்டி பால்குடம், பறவை காவடி எடுத்து இலங்கை தமிழர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருப்பரங்குன்றம்
உலக நலன் வேண்டியும் உலகத்திலுள்ள தமிழர்கள் நலம் பெற வேண்டியும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மதுரை கப்பலூர் அருகே உள்ள உச்சப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றத்தில் இருந்து உச்சப்பட்டி சித்தி விநாயகர் கோவில் வரை பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் 30-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவையொட்டி திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் புனித நீராடி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து பக்தர்கள் காவடி அலகு மற்றும் பறவை காவடி எடுத்து திருப்பரங்குன்றம், தனக்கன்குளம், முல்லை நகர் வழியாக உச்சப்பட்டி முகாமில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு விநாயகருக்கு பாலாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
- பூமாதேவி பூலோகத்தில் உள்ள மக்களின் பிரார்த்தனைகளை வானத்தில் உள்ள லெட்சுமி தேவியிடம் எடுத்துரைக்கிறார்.
- திருமணமான தம்பதியர்கள் நவநீதகிருஷ்ணனிடம் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக நவநீத கிருஷ்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.சத்யபாமா பூமாதேவி அம்சம் ஆகும். ருக்மணி லெட்சுமி அம்சம் ஆகும்.
பூமாதேவி பூலோகத்தில் உள்ள மக்களின் பிரார்த்தனைகளை வானத்தில் உள்ள லெட்சுமி தேவியிடம் எடுத்துரைக்கிறார். அதனை லெட்சுமி தேவி பகவானிடம் சமர்ப்பித்தது பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி தருகிறார்.
இதனை உணர்த்தும் வண்ணம் நவநீத கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு இன்று வெகுவிமரிசையாக நடந்தது. காலை பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இன்று மாலை 6மணிக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு ஆராதனை, தீபாராதனை நடைபெறுகிறது.
இக்கோயிலில் பக்தர்கள் ஐந்து தீபமேற்றி 5முறை வலம் வந்து நவநீதகிருஷ்ணரை வழிபாடு செய்கிறார்கள்.தொடர்ந்து ரோகிணி நட்சத்திரத்தில் நவநீதகிருஷ்ணனை வழிப்பட்டால் குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம்.திருமண தோஷங்கள் நீங்கும்.
கலியுக உபாதைகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் பல்லாண்டுகளாக குருவாயூர் போன்று துலாபாரம் நடைபெற்று வருகிறது.
திருமணம் ஆன தம்பதியர்கள் நவநீதகிருஷ்ணனிடம் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.
குழந்தை பிறந்தவுடன் 5 வயதுக்குள் துலாபாரம் ஆக வெண்ணெய் மற்றும் வாழைப்பழங்கள், வெல்லம், கல்கண்டு என விரும்பும் பொருட்களை கொண்டு துலாபாரம் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருவது தனிச்சிறப்பு ஆகும்.
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- ராமநாதபுரம் அருகே பால்குடம் எடுத்து திருநங்கைகள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- முத்துமாரி அம்மனுக்கு முதன் முறையாக முளைக்கொட்டு திருவிழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் தில்லை நாயகபுரம் கிராமத்தில் முன் மும்தாஜ் என்ற திருநங்கை வீடு உள்ளது. இந்த வீட்டில் 15 திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் நோய் நொடியின்றி வாழவும் தங்களது பகுதியில் மணலில் முத்துமாரியம்மன் கோவில் அமைத்து முளைப்பாரித் திருவிழா நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி முதலாம் ஆண்டாக முளைப்பாரித் திருவிழாவை நடத்தினர். இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். தினமும் கோவில் முன்பு கும்மி கொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
இந்த நிலையில் திருநங்கைகள் மாடக்கொட்டான் பகுதியில் இருந்து 2 கி.மீ. தூரம் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் சென்னை, பெங்களூரு, கோவை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். முளைப்பாரி களை ஊர்வலமாக சுமந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்தனர்.
அதனையடுத்து முளைப்பாரிகளை அங்குள்ள காட்டு ஊரணியில் கரைத்தனர். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு விதமான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் திருநங்கைகள் பல்வேறு அபிஷேக ஆராதனை நடத்தி முத்துமாரி அம்மனுக்கு முதன் முறை யாக முளைக்கொட்டு திரு விழாவை கோலாகலமாக நடத்தி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலூர் அருகே கருங்காலக்குடியில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
- மண்ணால் ஆன சுமார் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளை (புரவிகள்) பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வந்தனர்.
மேலூர்
மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா 21 நாட்களுக்கு முன்பு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதமிருந்து வந்தனர்.
திருவிழாவின் முதல்நாளான நேற்று குயவர் திடலில் இருந்து மந்தை பொட்டலுக்கு மண்ணால் ஆன சுமார் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளை (புரவிகள்) பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வந்தனர்.
2-வது நாளான இன்று மந்தை பொட்டலில் இருந்து 2 கி.மீ தூரமுள்ள சேவுகபெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் புரவிகளை சுமந்து சென்றனர்.
மழை வேண்டி, விவசாயம் செழிக்க இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
- முதுகுளத்தூரில் செல்லியம்மன் கோவில் பூச்சொறிதல் விழா நடந்தது.
- கோவில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் மையப்பகுதியில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு 46 -ம் ஆண்டு பூச்சொறிதல் விழா தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.
9-ம் திருநாளான நேற்று பக்தர்கள் சுப்பிரமணியர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று செல்லியம்மன் கோவில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பூக்குழி திருவிழாவை காண ஆயிரக்கனக்கான பொதுமக்கள் திரண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.
முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் இளவரசு , தீயணைப்புத்துறை அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
- பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எட்டிக்குளத்துபட்டியில் சித்தண்ணன், கசுவம்மாள், மதுரைவீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கோவிலில் திருவிழா நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் கோவிலில் திருவிழா தொடங்கியது. அப்போது கோவில் சன்னதியில் இருந்து மின்னொளி ரதத்தில் சாமிகள் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். உடன் பக்தர்களின் சேர்வையாட்டம், கரகாட்டம், வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைபெற்றது.
இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பூசாரியிடம் பக்தர்கள் சாட்டை அடி வாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலையில் சாமி, அந்த ஊர் குளத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கோவில் முன்பாக நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் வரிசையாக தரையில் அமர வைக்கப்பட்டனர். அப்போது கோவில் பூசாரி 'கோவிந்தா.. கோவிந்தா..' என்ற கோஷத்தை முழங்கியபடி பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்தார். அதன்பின்னர் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு முடி எடுத்தல், காது குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற்றன. மேலும் பெண்கள் தாங்கள் பிறந்த வீட்டில் வாங்கி தந்த கூரை புடவையை கசுவம்மாள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அதனை உடுத்தினர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கிடையே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாட்டு முறையை காண பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலில் குவிந்தனர். திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.