என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் போராட்டம்"
- ரூ.380 தினக் கூலியாக வழங்க வலியுறுத்தல்
- 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் அருகே மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை, பல ஆண்டுகளாக பணியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக் கூலியாக வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சென்னையில் பாரிமுனையில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
240 நாட்கள் பணி புரிந்தால் பணிநிரந்தரம், ரூ.21 ஆயிரத்திற்கு குறையாத மாத ஊதியம், நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6000-க்கு குறையாத ஓய்வூதியம், நல வாரிய நிதி பயன்களை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
சென்னையில் பாரிமுனையில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடத்த தொழிலாளர்கள் குறளகம் அருகில் திரண்டனர்.
மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
ஆனால் அவர்கள் பேரணியாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
- பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.
- கடந்த 4 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று அவர்களது போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாகவும், நிரந்தர பணியாளர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தொழிற்சாலை முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பணப்பலன்களை வழங்கிட வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை மீண்டும் பணியமர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று அவர்களது போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது. அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
- காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்படும் மதுபான பாட்டில்கள் இங்கிருந்து வாகனங்கள் மூலம் அரசு மதுபானக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
காஞ்சிபுரம் கிழக்கு பகுதியில் மட்டும் சுமார் 110 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் படப்பை, வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் மதுபானங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த டாஸ்மாக் குடோனில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல 15 ஆண்டுகளாக உள்ளூர் நிறுவனம் ஏலம் எடுத்து நடத்தி வந்தது. இந்த ஆண்டு வேறு ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் இன்று முதல் வேலை இருக்காது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென்று வேறு நிறுவனத்துக்கு டெண்டர் மாறியது காரணமாக பணி வழங்கப்படாது என நினைத்து காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டாஸ்மாக் அதிகாரிகள் இன்று அவர்களுக்கு வழக்கம் போல் வேலை வழங்கியதால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
- சுமார் 30 லாரிகள் மது பாட்டில்களை ஏற்றி வந்தன.
- டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபான குடோன் செண்பகராமன் புதூர் பகுதியில் உள்ளது. இந்த குடோனுக்கு பல்வேறு மதுபான கம்பெனிகளில் இருந்து சுமார் 30 லாரிகள் மது பாட்டில்களை ஏற்றி வந்தன. ஆனால் அவற்றை இறக்க முடியாமல் அனைத்து லாரிகளும் குடோன் முன்பு நிறுத்தப்பட்டுள்ளன.
மது பானங்களை லாரிகளில் இருந்து இறக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களில் 44 பேர், சி.ஐ.டி.யூ. பணியாளர்களாக உள்ளனர். அவர்கள் தற்போது கூடுதல் இறக்க கூலி கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாவட்ட பொருளாளர் முருகன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தை பொது செயலாளர் சந்திரபோஸ் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தங்க மோகன், கணேசன், வின்சென்ட், ராஜன், மீரான், ஆறுமுகவேல் உட்பட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டம் காரணமாக லாரிகளில் இருந்து மது பாட்டில்களை இறக்குவதிலும், அதனை டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் மது தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
- மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.
- போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம்.
சென்னை:
அயனாவரம் பணிமனையில் 126 பஸ்கள் உள்ளன. இங்கிருந்து பெசன்ட் நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி, திருவான்மியூர், கோயம்பேடு உள்ளிட்ட சென்னையில் பல இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. 741 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
இந்த தொழிலாளர்கள் பணிக்காக அதிகாலை 3 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணிக்கு வரும் தொழிலாளர்கள் தினமும் காலை 10 பேர், மாலை 10 போ் பேருந்துகள் இல்லை, டிரைவர் இல்லை என திருப்பி அனுப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் கண்டக்டர்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிமனை முன்பு பணி வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது:-
போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம். பஸ்கள் இல்லாமலும் டிரைவர் இல்லாமலும் பணிகள் வழங்காவிட்டால் முந்தைய ஆட்சி காலத்தில் பஸ் நிலையத்தில் பயணிகள் பிக் அப், பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ, மற்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி, யோகா விடுப்புகள் அனுப்பினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
மேலும் பணி வழங்காமல் திருப்பி அனுப்பினால் பணிக்கு வந்ததற்கான வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
- பஸ் தொழிலாளர்கள் கடந்த 29-ந் தேதி திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பதை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்ததை ஏற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக்கூடாது, காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் (ஸ்டிரைக் நோட்டீஸ்) செய்வதாக கூறி போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு ஏப்ரல் மாதம் நோட்டீஸ் வழங்கினர். இது தொடர்பாக இருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 526 டிரைவர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு பணி ஒதுக்க முயற்சி நடந்தது. இதையறிந்த பஸ் தொழிலாளர்கள் கடந்த 29-ந் தேதி திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பதை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்ததை ஏற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.
இதற்கிடையே ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினருடன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் 31-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், தொழிலாளர் நல கூடுதல் கமிஷனர் மாநகர போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகளுக்கான தீர்வு காணப்படவில்லை. இதனால் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4-வது கட்டமாக நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களையும் அழைக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. சங்கம் வலியுறுத்தி உள்ளது.
- தொழிலாளர் நலத்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
- 4-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுவதாக இருந்தது.
சென்னை:
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது , காலி பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களையே நியமிக்க வேண்டும், பஸ்களை தனியார் மயமாக்ககூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருந்தது.
இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை , போக்குவரத்து துறை அதிகாரிகள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து 4-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை (9-ந்தேதி) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த பேச்சுவார்த்தை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதில் அனைத்து கூட்டமைப்பு தொழிற்சங்கங்களும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அன்றையதினம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா? என்பது தெரியவரும்.
- தொழிற்சாலை இடம் மாற்றத்தை கண்டித்து நடந்தது
- போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் தனியார் ஷூ தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இதில் 600-க்கும் மேற்ற பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சம்பளம், நிலுவைத் தொகை மற்றும் தொழிற்சாலை இடம் மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து, 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரம் போராட்டம் நடத்தியும் தொழிற் சாலை நிர்வாகம் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில், உமராபாத் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இன்று வேலை நிறுத்தம் செய்ய போவதாக தொழிலாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தல்
- 2 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள சோலூர் ஊராட்சியில் தனியார் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்தனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தோல் தொழிற்சாலை மூடப்பட்டது.
அப்போது பாதி பேருக்கு சம்பளம் நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மென்ட் வழங்கப்பட்டது. மேலும் பலருக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பலமுறை தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் பலமுறை நிலுவைத் தொகை வழங்க கோரியும், இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பூட்டி கிடந்த தோல் தொழிற்சாலையை கதவுகள் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
சம்பளம் நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மெண்ட் வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- சம்பளம் கொடுக்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளம் கொடுக்காததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாவட்ட கலெக்டரிடம் உங்களது குறைகளை கூறியுள்ளோம்.
மேலும் இன்னும் சில தினங்களில் உங்களுக்கு கொடுக்க வேண்டிய 3 மாத சம்பள பாக்கியினை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
- போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது.
- நாளை மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த டிசம்பர் 19-ந் தேதி தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியது.
இதனையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் ஜனவரி 3-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நாளை மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு 23 தொழிற்சங்கங்களுக்கும், போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் நோட்டீஸ் 'காலக்கெடு' 4-ந்தேதியுடன் முடிவடையும் சூழலில் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.