என் மலர்
நீங்கள் தேடியது "காட்டு யானை"
- தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.
- மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஊட்டி:
தமிழ்நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து 2,637 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைசிகரம் விளங்குகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.
இந்த மலைசிகரத்தில் இருந்து பசுமை தவிழும் அடர்ந்த காடுகள், ஊட்டி நகரின் அழகை பார்வையிடலாம்.
தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.
நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்தது. யானை வந்ததை பார்த்ததும் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியாகினர்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உடனடியாக அங்கிருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். கடைக்காரர்களையும் கடைகளை பூட்டி விட்டு வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து கடைகளும் மூடப்பட்டன.
பின்னர் அங்கு சுற்றிய யானையை அங்கிருந்து விரட்டி விட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்தது. அந்த யானை தான் வழிதவறி வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இதுகுறித்து அங்கு கடை வைத்திருப்பவர்கள் கூறியதாவது:-
10 ஆண்டுகாலமாக இந்த பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். இதுவரை காட்டு யானை வந்தது இல்லை. முதல்முறையாக இந்த பகுதிக்கு காட்டு யானை வந்துள்ளது.
காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தொட்டபெட்டா மலைசிகர பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால், இன்று ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை கழிக்க வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதேபோல் நெலாக்கோ ட்டை பகுதியிலும் காட்டு யானை புகுந்தது.
அந்த யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தாக்கியதுடன், வீடுகளையும் சேதப்படுத்தியது. அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார்.
இதை பார்த்த யானை, வாலிபரை துரத்த ஆரம்பித்தது. யானையிடம் இருந்து தப்பிக்க அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது.
- வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி சுற்றித்திரிகின்றன.
அந்த வகையில் அய்யூர் வனப்பகுதியில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை தாகத்திற்கு தண்ணீர் குடிக்க அருகிலுள்ள மூர்க் கண்கரை கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
அப்போது அந்த கிராமத்தின் அருகே விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றபோது யானை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது.
அந்த குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது. நீண்ட நேரம் போராடியும் யானையால் குட்டையில் இருந்து வெளியேற முடியவில்லை.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு ஜே.சி.பி. வாகனத்தோடு சென்று குட்டையில் தவறி விழுந்த யானையை மீட்டனர்.
அதனைத்தொடர்ந்து குட்டையில் இருந்து வெளியேறிய யானை அந்த பகுதி வழியாக நடந்து சென்றது. அப்போது ஜே.சி.பி. வாகனத்தின் மீதும் அப்பகுதி பொதுமக்கள் மீதும் யானை ஆக்ரோசத்துடன் கத்தியது.
தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது.
- யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட மக்கள் கோரிக்கை
- கூலி வேலைக்கு சென்ற பெண்ணை தாக்கிக் கொன்றது.
ஊட்டி,
ஊட்டி அருகே மாவனல்லா மற்றும் வாழைத்தோட்டம் கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி திரிந்து வருகிறது.
இந்த யானை கடந்த சில வாரங்களுக்கு முன் மாவனல்லா அருகே கூலி வேலைக்கு சென்ற மங்கலி என்ற பெண்ணை தாக்கிக் கொன்றது. அதனைத் தொடா்ந்து வாழைத்தோட்டம் கிராமத்தையொட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெருமாள் என்ற முதியவரையும் தாக்கிக் கொன்றது.
இந்த யானை தொடா்ந்து கிராமப் பகுதிகளை ஒட்டியே சுற்றித் திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். சாலையில் செல்லும் வாகனங்களையும் இந்த யானை துரத்துவதால் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக யானை நடமாட்டம் காணப்படுகிறது. யானை தொடர்ந்து குடியிருப்பையொட்டி சுற்றுவதால் நாங்கள் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது. எனவே இங்கு சுற்றி திரியும் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- சத்திய மங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் பண்ணாரி கோவிலின் அருகே ஒரு காட்டு யானை குட்டியுடன் ரோட்டில் நடந்து சென்றது.
- இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கடா மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
மைசூர் தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக அடி க்கடி வனப்பகுதியை விட்டு வெளிேயறி வருகிறது. தொடர்ந்து யானைகள் ரோட்டில் உலாவி வருகிறது.
அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் துரத்துவது, வழி மறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக கரும்புகள் ஏற்றி வரும் லாரிகளையும் வழி மறித்து அதில் இருந்து கரும்புகளை ருசித்து வரு வது அடிக்கடி நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சத்திய மங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் பண்ணாரி கோவிலின் அருகே ஒரு காட்டு யானை குட்டியுடன் ரோட்டில் நடந்து சென்றது.
தொடர்ந்து குட்டியுடன் வந்த காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி மைசூர் தேசிய நெடுஞ் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ரோட்டில் ஒய்யாரமாக நடந்து சென்றது.
இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அவர்கள் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தினர். தொடர்ந்து நீண்ட நேரத்துக்கு பிறகு அந்த யானைகள் வனப்பகுதிக்கு சென்றது. அதன் பிறகு வாகன ஓட்டிகள் சென்றனர்.
இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, ஆசனூர், தலமலை வனப் பகுதிகளில் இருந்து யானை கள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே வனப் பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகை ப்படம் எடுக்க கூடாது.
வாகன ஓட்டிகள் வன பகுதி ரோடுகளில் அதிக ஒலி எழுப்பும் ஆரன்களை பயன்படுத்தாமல் செல்ல வேணடும். யானை களுக்கு தொந்தரவு செய்யும் வண்ணம் வாகனத்தை நிறுத்துவதும் செல்பி எடுப்பதும் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வன த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில வாரங்களாக முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறியது.
- சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் பொதுமக்கள், விவசாயிகள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறி தொரப்பள்ளி, குனில் வயல், புத்தூர் வயல் உள்ளிட்ட சுற்று வட்டார விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று அதிகாலை 3 மணிக்கு குனில் வயல் பகுதியில் காட்டு யானை நுழைந்தது. பின்னர் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த மரவள்ளிக் கிழங்கு செடிகளை மிதித்து நாசம் செய்தது. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த அப்துல் முத்தலிப் என்பவரது கார் கதவு மற்றும் கண்ணாடியை உடைத்தது. இதை அறிந்த பொதுமக்கள், விவசாயிகள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கேரட்டுகளை தின்றது இதனால் அங்கிருந்து முக்கிய சாலை வழியாக சென்ற காட்டு யானை தொரப்பள்ளி பஜாருக்குள் சென்றது. அப்போது ஊட்டியில் இருந்து கர்நாடகா செல்வதற்காக கேரட் மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரியை யானை மறித்தது. தொடர்ந்து லாரியில் இருந்த மூட்டைகளை சேதப்படுத்தி கேரட்டுகளை தின்றது. இதில் கேரட்டுகள் நாசமானது. பின்னர் டிரைவர் லாரியை வேகமாக ஓட்டி சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் வனத்துறையினர் விரைந்து வந்து சேதமடைந்த பயிர்கள், காரை பார்வையிட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.
- கேரளா மாநிலம் வயநாடு அருகே சுல்தான்பத்தேரி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
- வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் வயநாடு அருகே சுல்தான்பத்தேரி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை இங்குள்ள தொழிலாளர்கள் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த காட்டு யானை ஒன்று தம்பியை தாக்கியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக தம்பி யானையிடம் இருந்து தப்பி சென்றார். எனினும் இவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருடன் சென்ற தொழிலாளர்கள் தம்பியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த யானை தமிழகத்தின் கூடலூர் வழியாக கேரளா நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது.
- பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆதிமதையனூர், கட்டாஞ்சி மலை பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே யானை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று புங்கம்பாளையம் பகுதிக்குள் ஒற்றை யானை ஒன்று குட்டியுடன் புகுந்தது. குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்த யானை அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் சென்றது.
அங்கு ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான 50 தென்னை மரங்களையும், பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான 250 வாழை மரங்களையும் பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது.
மேலும் வாழைகளை தின்றும், காலால் மிதித்து சேதப்படுத்தியது. தொடர்ந்து யானை இதுபோன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்து மேற்கொண்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- யானை புகுந்ததை அறிந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
- யானை வருவதை சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் பார்த்ததும் அதிர்ச்சியாகினர்.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது ஊருக்குள் புகும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
யானை நடமாட்டம் இருப்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை ஒன்று வெளியேறியது. வனத்தை விட்டு நேராக குடியிருப்புக்குள் புகுந்தது.
பின்னர் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சென்று தண்ணீர் குடித்தது. தொடர்ந்து அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது. இதனிடையே குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடிக்கும் யானையை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.
யானை புகுந்ததை அறிந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை கண்காணித்து வனத்திற்கு விரட்டினர்.
இந்நிலையில் இன்று காலை அதே ஒற்றை காட்டு யானை கணுவாய் மெயின் ரோட்டில் ஒய்யார நடைபோட்டு நடந்து வந்தது. யானை வருவதை சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் பார்த்ததும் அதிர்ச்சியாகினர். பயத்தில் அங்கிருந்த மக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்த யானை சாலைகளில் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது யானை சாலையில் சுற்றி திரியும் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடியிருப்புகளுக்குள் புகுந்த யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி யானைகள் சுற்றி திரிகின்றன.
- நீண்ட நேரத்திற்கு பிறகு தானாகவே காட்டுக்குள் யானை சென்று விட்டது.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
இங்கு காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகிறது.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி யானைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஒற்றை யானை ஒன்று கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை சுற்றி திரிந்தது.
சாலையில் வெகுநேரம் நின்று சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இதனால் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீண்ட நேரத்திற்கு பிறகு தானாகவே காட்டுக்குள் யானை சென்று விட்டது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன.
இதுபோன்ற ஒற்றை காட்டு யானை அடிக்கடி சாலையில் நின்று வருவதால் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறி வருகிறார்கள்.
- பொதுமக்கள் நவ்ஷாத் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காட்டு யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சீ போர்த் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத்(வயது38). தொழிலாளி.
இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜமால்(28) என்பவரும் தனியார் எஸ்டேட் காபி தோட்ட பகுதியில் நடந்து வந்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை திடீரென 2 பேரையும் துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க 2 பேரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து 2 பேரையும் தாக்கியது. இதில் நவ்ஷாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜமால் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் யானையை விரட்டி காயம் அடைந்த ஜமாலை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நவ்ஷாத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார், வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தும் அவர்கள் எடுக்கவிடவில்லை. யானையை இந்த பகுதியை விட்டு விரட்ட வேண்டும், யானையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டம் விடிய, விடிய நீடித்தது.
தொடர்ந்து இன்று 2-வது நாளாக யானை தாக்கி இறந்த நவ்ஷாத்தின் உடலை எடுக்க விடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சுற்றி திரியும் யானையை உடனே பிடிக்க வேண்டும்.
இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கிகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு யானையின் நடமாடத்தை கண்காணித்து வருகின்றனர்.
- 9 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிந்தன.
- இதன் காரணமாக வாகனத்தில் பயணித்தவா்கள் அச்சம் அடைந்தனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூா் மரப்பாலம், மல்லனூா் எஸ்டேட் பகுதியில் 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிந்தன. இவை குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்போது வந்து சென்றதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
இந்நிலையில் குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பா கிராமம் செல்லும் சாலையைக் கடந்து 9 காட்டு யானைகளும் பா்லியாறு பகுதியை ஒட்டியுள்ள வனப் பகுதிக்குள் சென்றன. இதன் காரணமாக வாகனத்தில் பயணித்தவா்கள் நிம்மதி அடைந்தனா்.
- சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர்.
- யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூா், கெத்தை, முள்ளி வழியாக ஊட்டி செல்லக்கூடிய சாலை அடா்ந்த வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் காணப்படுவது வழக்கம்.
இந்நிலையில், காரமடை வழியாக ஊட்டிக்கு இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த சுற்றுலா பயணிகள் கெத்தை மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த 5 காட்டு யானைகளை தொந்தரவு செய்ததுடன், ஆபத்தை உணராமல் அவற்றுடன் விளையாட்டில் ஈடுபட்டனா்.
சாலையை கடக்க நின்ற அந்த யானைகளை கடக்க விடாமல் காரை விட்டு மறித்து அதில் இருந்தவர்கள் புகைப்படம் எடுத்தனர். இதேபோல அந்த வழியாக ஜீப்பில் வந்தவர்களும் இவ்வாறு புகைப்படம் எடுத்தனர்.
இதனால் யானைகள் அச்சம் அடைந்து அங்கும் இங்குமாக சென்று மிரண்டன. யானைகள் ஆவேசப்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதை உணராமல் அந்த வாகன ஓட்டிகள் இவ்வாறு யானைகளை தொந்தரவு செய்து படம் பிடித்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனர்.