என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள்"

    • மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
    • திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளரடா பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அந்த மாணவியை பிளஸ்-1 படித்து வந்த மாணவன் ஒருவன் காதலித்துள்ளார்.

    ஆனால் அவரது காதலை 10-ம் வகுப்பு மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. இருந்த போதிலும் மாணவியை பிளஸ்-1 மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவியை மிரட்டி தனக்கு அடிபணிய வைத்துவிடலாம் என்று நினைத்துள்ளார்.

    அவர் மன்னம்கோட்டை பகுதியை சேர்ந்த ஆனந்து (20), சஜின்(30) ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். தனக்கு உதவினால் மதுபானம் மற்றும் விரும்பும் உணவு வாங்கித்தருவதாக பிளஸ்-1 மாணவன் கூறியிருக்கிறான்.

    இதையடுத்து ஆனந்து, சஜின் ஆகிய இருவரும் 10-ம் வகுப்பு மாணவியின் தாயின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பிளஸ்-1 மாணவனை காதலிக்குமாறு 10-ம் வகுப்பு மாணவியை மிரட்டியுள்ளனர்.

    அது மட்டுமின்றி பிளஸ்-1 மாணவனை மாணவிக்கு திருமணம் செய்து வைக்குமாறு மாணவியின் தாயையும் மிரட்டி இருக்கின்றனர்.

    இதுகுறித்து வெள்ளரடா போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி 10-ம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தாய்க்கு மிரட்டல் விடுத்த ஆனந்து, சஜின் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
    • உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்.

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.

    இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    மேலும், உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம்.
    • தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.

    நம்மவர் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எதிர்காலத் தலைமுறையின் நலன்களை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்.

    இதன் ஒரு பகுதியாக தற்போது நம்மவர் படிப்பகங்களில் கோடைகால இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

    தற்போது மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்கள் மூலம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் என ஏராளமானோர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

    கமல் பண்பாட்டு மையம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்களில் புத்தகங்களுடன், இலவச வை-பை வசதியுடன் கூடிய கணினிகளும் நிறுவப்பட்டுள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வருகை புரிகின்றனர்.

    அமெரிக்காவில் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் செயல்படும் லீப் என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து நம்மவர் படிப்பகங்களில் கோடை விடுமுறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 வாரங்களுக்கு நடத்தப்பட உள்ளது.

    அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் அமெரிக்க மற்றும் இந்திய மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக நம்மவர் படிப்பகங்களில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க உள்ளனர்.

    ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தயக்கத்தைப் போக்கி, மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.

    குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் தகுதியை மேம்படுத்தி, அவர்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்கள், மகளிர் ஆகியோரது மேம்பாட்டுக்கானப் பணிகளில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து ஈடுபடும்.

    சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, கல்வியும், திறன் மேம்பாடும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே மக்கள் நீதி மய்யத்தின் பிரதான நோக்கமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், பொது அறிவை மேம்படுத்த நடவடிக்கை
    • இந்த தகவலை சிவகங்ககை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளவகையில், மாவட்ட நூலகத்தில் தொடங்கி வைக்கப்ப ட்டுள்ள, வாசிப்புத்திறன் மற்றும் பொதுஅறிவு மேம்பாடு ஆகியவை தொடர்பான நிகழ்வு நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி இதை நேரடியாக பார்வையிட்டு, பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமன்றி, எதிர்காலத்திற்கு பயனுள்ள வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உண்டு உறைவிட மாதிரிப்பள்ளிகள் போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை ஊக்குவிக்குப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், பள்ளி மாணவர்கள் கலை, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் பல்வேறு வகையான அறிவு சார்ந்த புத்தகங்கள் மற்றும் தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்கள் ஆகியவைகளை ஒரே இடத்தில் படிப்பதற்கு ஏதுவாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களை, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 50 மாணவர்கள் வீதம், விடுமுறை நாட்களை தவிர்த்து, தினந்தோறும் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் துணை யோடு அழைத்து வந்து, காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரை தனியார் பள்ளி மாணவர்களுக்கும் தேவையான புத்தகங்களை படிப்பதற்கான நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 28 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச்சென்று, ஓய்வு நேரங்களில் படிப்பதற்கு ஏதுவாகவும், அவர்களை நூலக உறுப்பினர்களாக இணைப்பதற்கும், அதற்கான சந்தாத்தொகையினை மாவட்ட நிர்வாகம் மற்றும் வாசகர் வட்டத்தின் சார்பில் செலுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    இங்கு வரும் மாணவர்கள் முதலில் நூலகத்தில் எந்தெந்த வகையான புத்தகங்கள் உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். சிவகங்கை மாவட்ட நூலகத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இதில் குடிமைப்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு, அதற்கான புத்தகங்களும், பயனுள்ள வகையில் இடம் பெற்றுள்ளது.

    மாணவர்களுக்கு பயனுள்ள வகையில். மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளை, பள்ளி மாணவர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு, பொதுஅறிவுத்திறன் மற்றும் புத்தக வாசிப்புத்திறன் ஆகியவற்றை வளர்த்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.
    • பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு போட்டி கடந்த 17ந் தேதி முதல் நடந்து வருகிறது. குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.

    குறுமைய அளவில் தடகள போட்டி நடத்திய போதும், பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததால் மாவட்ட தடகள போட்டிக்காக தேதி, நடத்துமிடம் முடிவு செய்வதில் இழுபறி நீடித்தது.பிற போட்டிகள் நடக்குமிடம், நாள் முடிவு செய்யப்பட்ட நிலையில், தடகள போட்டி குறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டது.தீபாவளிக்கு முன்பு 27, 28ந்தேதிகளில் அனைத்து பிரிவினருக்கான மாவட்ட தடகள போட்டிகள் அனுப்பர்பாளையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர். ஆனால் அறிவித்தப்படி போட்டி நடக்கவில்லை.

    இது குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி கூறுகையில், தடகள போட்டி நடத்த தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. 2 நாள் மண்டல மேலாண்மை குழு அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு பணி மேற்கொள்ள உள்ளதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனால், தடகள போட்டி தேதி நவம்பர் முதல் வாரத்துக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 3, 4-ந் தேதி அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தடகள போட்டி நடத்தப்படும் என்றார்.

    • திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.
    • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் அதிக அளவிலான தொழிலாளர்கள் நிறைந்த பகுதி இவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலும் அரசு நகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களும் இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளதால் அரசு பேருந்தில் செ ல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் திருப்பூர் ஊத்துக்குளி சாலை வழியாக திருப்பூர் வரும் அரசு நகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் படியில் தோன்றியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதை கண்ட நபர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது பெற்றோர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஒரு சில பேருந்துகள் மட்டுமே இருக்கும் காரணத்தால் அந்த நேரத்தில் பள்ளிக்கு தாமதம் ஏற்படும் என ஒரே பேருந்தில் ஏராளமான மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் பேருந்துகளில் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    பெரும்பாலான வழித்தடத்தில் மாணவர்கள் இதுபோன்று படியில் தொங்கி பயணம் செய்யும் நிலை உள்ளதாகவும் குறிப்பிட்ட பள்ளி நேரத்தில் அதிக அளவிலான அரசு பேருந்துகளை இயக்கி மாணவர்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதுடன் பாதுகாப்பான பயணத்தி னை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.
    • விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு கடலோர காவல் குழுமம் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் குளச்சல் மரைன் காவல் நிலையம் சார்பில் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமூக இணைய தள விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.

    மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் மாணவிகளுக்கு சமூக இணைய தளத்தில் வரும் ஆபாச படங்களை ஷேர் செய்யக்கூடாது, அறிமுகமில்லாத பெண்களிடம் பழக கூடாது, குறிப்பாக காதல் வசப்படக்கூடாது. எவரேனும் காதல் கடிதம் தந்தால் அல்லது காதலிக்கிறேன் என மெசேஜ் அனுப்பினால் வீட்டில் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் பள்ளியில் ஆசிரியர்களிடம் கூற வேண்டும்.தாய் தந்தையை தவிர வேறு யாரையும் நம்பக்கூடாது, படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் எதிர்க்காலத்தை பெற்றோர் அமைத்து தருவர். மாணவர்கள் கஞ்சா போதை பழக்கத்திற்கு ஆளாகி எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கக்கூடாது.விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் கடன் வாங்கி உங்களை படிக்க வைக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகுவது, பெற்றோரை கொலை செய்வதற்கு சமம்.தினமும் நீங்கள் செய்தி தாள்கள் படிக்க வேண்டும்.அதில் வரும் குற்றச்செய்திகளை தெரிந்து கொண்டு, நீங்கள் குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். ஸ்கூட்டி ஓட்டும்போது அதிக வேகத்தில் செல்லக்கூடாது.

    திருப்பம், வளைவுகளில் செல்லும்போது போக்கு வரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விபத்துக்களில் சிக்க கூடாது என அறிவுரை கூறினார். பின்னர் மாணவர்கள் அனைவரும் 'போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம்'என போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பள்ளி ஆசிரியர் கெஜின், உடற்கல்வி ஆசிரியர் ஜூடின் மற்றும் மரைன் போலீசார் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் மொத்தம் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 70 உள்ளது. 92 நடுநிலைப்பள்ளிகள் 119 ஆரம்ப பள்ளிகளும் உள்ளன.
    • திருக்குறளை தவிர மற்றவைகளை ஆங்கிலத்தில் பேசுவதற்காக மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்துவதால் ஆங்கில புலமையும் அதிகரிப்பதாக உதவி கல்வி அலுவலர் முனியன் தெரிவித்தார்.

    சென்னை:

    பொதுவாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என்கிற குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

    இந்த குறையை போக்க சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்கவும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் மொத்தம் உள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 70 உள்ளது. 92 நடுநிலைப்பள்ளிகள் 119 ஆரம்ப பள்ளிகளும் உள்ளன.

    இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்க வகுப்பறையில் ஆங்கில ஆசிரியர் பாடம் எடுப்பதற்கு முன்பாக 2 மாணவ-மாணவிகள் 2 நிமிடம் ஆங்கிலத்தில் பேச சொல்ல வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

    இதற்காக மாணவ-மாணவிகள் நூலகத்திற்கு சென்று குறிப்பு எழுதி வந்து அதன்மூலம் பயிற்சி பெறுகின்றனர்.

    இதன் அடுத்தக்கட்டமாக இப்போது வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் பிரேயரில் வாரம் ஒரு நாள் (புதன்கிழமை) யாராவது ஒருவர் ஆங்கிலத்தில் பேசி நடத்த வேண்டும். சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த பிரேயர் சுமார் 17 நிமிடங்கள் முதல் 18 நிமிடம் வரை நடைபெறும்.

    இதில் திருக்குறளை தவிர மற்றவைகளை ஆங்கிலத்தில் பேசுவதற்காக மாணவ-மாணவிகள் தங்களை தயார்படுத்துவதால் ஆங்கில புலமையும் அதிகரிப்பதாக உதவி கல்வி அலுவலர் முனியன் தெரிவித்தார்.

    சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வழிகாட்டுதலின்படி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஆங்கில புலமையையும் அதிகரிக்க இந்த ஏற்பாடுகளை நடைமுறை படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    குறிப்பாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆங்கில புலமை பயிற்சி முழுமையாக செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    கடந்த 2011-ம் ஆண்டு பின்லாந்து நாட்டுக்கு மாநகராட்சி சார்பில் ஒரு குழுவினர் கல்வி சார்ந்த பயணம் மேற்கொண்டனர். அப்போது பின்லாந்து நாட்டு இந்திய தூதராக தமிழ்நாட்டை சேர்ந்த மாணிக்கம் என்பவர் இருந்தார்.

    அவர் பள்ளிகளின் செயல்பாடுகள், ஆங்கிலத்தில் பாடங்களை சொல்லி கொடுக்கும் முறை, ஸ்மார்ட் வகுப்பறை போன்றவற்றை மாநகராட்சி குழுவினருக்கு எடுத்து கூறினார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆரம்பத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

    இதன்பிறகு ஏற்பட்ட படிப்படியான முன்னேற்றம் இன்று மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தி வருகிறது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை- திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு நாள் தோறும் 43 எண் உள்ள பஸ் 7 முறை சென்று வந்தது. இந்த நிலையில் தற்போது காலை 8.30 மற்றும் மாலை 5.30 ஆகிய இரு நேரங்களில் மட்டுமே இந்த பஸ் இயக்கப்படுகிறது.

    இதனால் வண்ணாரப்பேட்டை, கரம்பை, சிவகாமிபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே கூடுதல் நேரங்களில் பஸ்கள் இயக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகள் இன்று காலை தஞ்சை 8ம் கரம்பை பகுதியில் தஞ்சை-திருவையாறு புறவழி சாலையில் ஒன்று திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழி மறித்து நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்டு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
    • போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நடவடிக்கைகள் குறித்து அவினாசியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். காவல்துறையில் உள்ள நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

    பல்வேறு வகையான குற்றங்கள், கைது நடவடிக்கைகள், சமூகத்தில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் தங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள், போக்குவரத்து விதிகள், அதை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் பற்றி அறிவுரை வழங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
    • போக்குவரத்து காவலர் பணியில் பயணித்த மாணவர்களை இறக்கிவிட்டார் .

    திருப்பூர் : 

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெருமாநல்லூர் சாலை மார்க்கமாக ரெயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், பிச்சம்பாளையம், போயம்பாளையம், பெருமாநல்லூர் வழியாக கணக்கப்பாளையம் வரை செல்லக்கூடிய அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணித்து வந்தனர்.

    நடத்துனர் பின்னால் மற்றொரு பஸ் வருகிறது. அதில் ஏறுங்கள் என்று கூறியும் மாணவர்கள் கேட்காததால் கோபம் அடைந்த நடத்துனர் பெருமாநல்லூரில் பேருந்து நின்றவுடன் அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார். போக்குவரத்து காவலர் பணியில் பயணித்த மாணவர்களை இறக்கிவிட்டார் . இதையடு்தது பேருந்து புறப்பட்ட சென்றது.

    இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், நாங்கள் பெருமாநல்லூர் அரசு பள்ளியில் பயின்று வருகிறோம்.இந்தப் பள்ளியில் கணக்கம்பாளையம் பிரிவு, குருவாயூரப்பன் நகர், போயம்பாளையம், பெருமாநல்லூர், குன்னத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறோம்.

    தினமும் காலை 8.10 மணிக்கு 54-ம் நம்பர் பேருந்தும், 9.05 மணிக்கு 43-ம் நம்பர் பேருந்தும் இயங்கி வருகிறது.இந்த இரு பேருந்துகளை விட்டால் பள்ளிக்கு செல்ல வேறு வழி இல்லை. நான்கு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். பள்ளிக்கு தாமதமாக சென்றால் ஆசிரியர்கள் கண்டிக்கின்றனர். எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

    • மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • 10-ம் வகுப்பு மாணவர் கற்பக மணி பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் 2-வது இடம் பெற்றார் .

    கடையநல்லூர்:

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. போட்டிகளில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் பரதன் பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடத்தையும், இதே மாணவர் காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.

    இப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர் கற்பக மணி அண்ணா பிறந்த தின பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றார் .வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நெல்லை தமிழ் வளர்ச்சித் துறையின் அதிகாரி ஷீலா ஜெபரூபி முதல் பரிசாக ரூ.5000 மற்றும் சான்றிதழும், இரண்டாம் பரிசாக தலா ரூ.3000-ம் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.

    பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் மங்களத்துரை, உதவி தலைமை ஆசிரியர் ராஜன், முதுகலை தமிழாசிரியர் சண்முகசுந்தரம், தமிழாசிரியர் மாரியப்பன், முதுகலை வரலாற்று ஆசிரியர் பசும்பொன் ராஜா, 8-ம் வகுப்பு தமிழாசிரியர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டினர்.

    ×