search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருஷாபிஷேகம்"

    • வருஷாபிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
    • இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிசேகம் இன்று நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமான் தேவசேனா அம்பாள் தனித்தனி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வருஷா பிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • அருணாசல ஈஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம் நடந்தது.
    • ரிஷப வாகனத்தில் அம்பாள், சுவாமி சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பழையபாளையம், புதுப்பாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக பொதுநல பண்டிற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில் உள்ள அருணாச்சல ஈஸ்வரர் உண்ணாமலை அம்பாள் சாது அருணாச்சல சுவாமி ஆவணி மூலம் மற்றும் வருடாபிஷேக திருவிழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. கும்ப பூஜை, அபிஷேக பூஜை, அலங்கார தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாணம் நடந்தது. ரிஷப வாகனத்தில் அம்பாள், சுவாமி சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.

    சப்பர வீதி உலாவை காவல் துணை கண்காணிப்பாளர் பிரீத்தி தொடங்கி வைத்தார். வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுநலப் பண்டு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • இந்த கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • சன்னதிகளில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி வருகிற 7-ந்தேதி வருஷாபிஷேக விழா (கும்பாபிஷேக தினம்) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை சீனிவாச பெருமாள் சன்னதிக்கு பின்புறம் உள்ள யாகசாலையில் காலை 7 மணி முதல் கடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேஷ ஹோமங்கள் நடக்கிறது.

    காலை 9 மணி அளவில் ஸ்ரீவலம்புரி மகா கணபதி, ஸ்ரீசீதா சமேத பட்டாபிஷேக ராமர், ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயரமுள்ள விஸ்வரூப ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோருக்கு பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கல திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து கடம் புறப்பாடுடன் அனைத்து சன்னதிகளிலும் புனிதநீர் தெளிக்கப்படும். பகல் 11 மணிக்கு அலங்காரத்துடன் சன்னதிகளில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு தேவதா அனுஞ்ஞை, எஜமானர் அனுஞ்ஞை, மகா கணபதி பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்யபூஜை, வேதிகா அர்ச்சனை, கும்பூஜை, மகா கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தர்மஸம்வர்த்தினி அம்பாள், குலசேகரநாத சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு பக்தி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பத்தர்கள் குழுவினர் செய்திருந்தனர். 

    • விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
    • இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடக்காது.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேகம் இன்று நடைபெற்றது.

    வருசாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விமான கலசங்களுக்கு கும்பம் எடுத்து வரப்பட்டு காலை 9.40 மணிக்கு மேல் தளத்தில் அமைந்துள்ள மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் சந்நிதிகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. இரவு மூலவருக்கு அபிசேகம் நடக்காது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
    • இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இ்ந்தநிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) ஆனி வருசாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் கோவில் மகாமண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டு காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு வருசாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருசாபிஷேகம் நடக்கின்றது.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து சுவாமி, அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறும்.
    • மாலையில் ‘லட்சதீப விழா’ நடக்கிறது.

    108 வைணவத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தமிழ் மாதமான ஆனி மாத உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் அதை கணக்கில் கொண்டு, ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான இன்று (திங்கட்கிழமை) வருஷாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி நேற்று 'சாக்கியார் கூத்து' எனப்படும் நகைச்சுவை நாட்டிய நாடக நிகழ்ச்சி நடந்தது. இந்தநிகழ்ச்சி கேரளாவுடன் குமரி இணைந்திருந்த போது நடைபெற்று வந்தது. பின்னர் குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த பின்னர் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. பாரம்பரியம் மிக்க இந்த கலையை தற்போது 67 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சூரை சேர்ந்த கலா மண்டலம் சங்கீத் சாக்கியார் நிகழ்த்தினார்.

    மேலும், வருஷாபிஷேக விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து சாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம் போன்றவை நடக்கிறது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது.

    பின்னர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சாமி, அய்யப்ப சாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறும். மாலையில் அலங்கார தீபாராதனையை தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் 'லட்சதீப விழா' நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றுகின்றனர்.

    வருஷாபிஷேகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

    • இக்கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    • ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி கிராமத்தில் மங்களாம்பிகா சமேத ஆகாசபுரீஸ்வரர் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

    இன்று காலை கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூல மந்திர , காயத்திரி மந்திர ஹோமங்கள், பூர்ணாஹூதி, மங்களாம்பிகை சமேத ஆகாசபுரீஸ்வரருக்கு ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை திருக்கல்யாணம் உற்சவம் , சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    • பெரம்பலூர் ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    • சாய்பாபாவுக்கு பால், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் இரவு மகாதீபாராதனையும் நடந்தது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் எதிரே அமைந்துள்ள ஸ்ரீஷீரடி மதுரம் சாய்பாபா கோவில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருடாபிஷேக விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 9-வது வருடாபிஷேக விழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை மகாகணபதி ஹோமம், சாய்பாபா சிலைக்கு புனிதநீர் அபிஷேகம், வண்ணமலர் அலங்காரம் மற்றும் மகாதீப ஆரத்தி நடந்தது. மாலையில் பெரம்பலூர் பிரம்மபுரீசுவரர் கோவிலில் இருந்து முளைப்பாரி, பால்குடம் மற்றும் பாபா திருவுருவ ஊர்வலம் புறப்பட்டது.

    ஊர்வலத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து சாய்பாபாவுக்கு பால், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் இரவு மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபா திருவுருவத்தையும், துவாரகாமயி பாதுகைகளையும் வழிபட்டனர். காலையில் தொடங்கி இரவு வரை அன்னதானம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • கோவிலில் ஜெனரேட்டர் அமைக்கப்படவில்லை.
    • மின்தடை ஏற்படும்போது கோவில் இருளில் மூழ்குகிறது.

    திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி 418 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அதை கணக்கில் கொண்டு ஆனி மாத உத்திரம் நட்சத்திர நாளான வருகிற 26-ந்தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்றைய தினம் அதிகாலை கோவில் நடை திறப்பு, நிர்மால்ய தரிசனம், சாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதிஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து ஆதிகேசவபெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ணசாமி, அய்யப்பசாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவகலச அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, மதியம் அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது. கும்பாபிஷேகத்தின் போது ரூ.17 லட்சத்தில் வெளிப்புறத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. ஆனால், கோவிலில் ஜெனரேட்டர் அமைக்கப்படவில்லை. இதனால் திடீரென மின்தடை ஏற்படும்போது கோவில் இருளில் மூழ்குகிறது. கோவிலில் பூஜைகளின்போது தவில், நாதஸ்வரம் இசைக்காமல் நடைபெறுவது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

    எனவே தவில், நாதஸ்வரக்கலைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும், 25-க்கும் மேற்பட்ட பூசாரிகள் வேலை பார்த்த இடத்தில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் பக்தர்கள் வெகுநேரம் வழிபாட்டுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கருவறையை சுற்றி மியூரல் ஓவியங்கள் ரூ.75 லட்சத்தில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் அரைகுறையாக நடைபெற்று கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆதிகேசவப்பெருமாளின் மூலவர் விக்கிரகத்தின் மீது அணிவிக்க புதியதாக தங்க அங்கி செய்து சார்த்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் வருஷாபிஷேகம் நடைபெறுதற்கு முன்பு கிடப்பில் போடப்பட்ட புனரமைப்பு பணிகளை முழமையாக முடித்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது.
    • சுவாமி வீதி உலா நடந்தது.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இதில் முதலாவது திருப்பதியான கள்ளபிரான் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கும்பாபிசேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு வைகாசி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்த ஆண்டு கள்ளபிரான் சுவாமி கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது.

    இவ்விழாவை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம் , காலை 8 மணிக்கு கும்ப தீர்த்தம் வைக்கப்பட்டு காலை 9 மணிக்கு ஹோமம், காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி, காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்கனம், காலை 11 மணிக்கு தீபாராதனை நாலாயிர திவ்ய கோஷ்டி, பகல் 12 மணிக்கு சாத்துமுறை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் சுவாமி வாகனத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் கள்ளபிரான் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு சுவாமி வீதி உலா நடந்தது. முக்கியவீதிகள் வழியாக சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், வாசு, நாராயணன், ராமானுசம், சீனு, ஸ்தலத்தார்கள்ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜீத் உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • மாலையில் தங்கத்தேர் வீதி உலாவும் நடைபெற்றது.

    கடையநல்லூர்:

    பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 108 கலசபூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், அஸ்திர ஹோமம், மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து விமான அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை ரமேஷ் பட்டர் செய்தார். பிற்பகல் 2 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம், மாலையில் தங்கத்தேர் வீதி உலாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அருணாசலம் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×