என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் உயிரிழப்பு"

    • குந்தன்குமார் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • குந்தன்குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    போரூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குந்தன்குமார் (வயது27). இவர் சென்னை ராமாபுரம் சாந்தி நகரில் நண்பர்களுடன் தங்கி அதே பகுதியில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை குந்தன் குமார் செல்போனில் தனது பெற்றோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி சுருண்டு கீழே விழுந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக குந்தன் குமாரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குந்தன்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குந்தன்குமார் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    இது குறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிடம் கட்டும் பணிக்காக 8 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.
    • 8 அடி பள்ளத்தில் பலகை பொருத்தும் பணிக்காக மண் மீது சரோவர் ஹூசைன் ஏறியுள்ளார்.

    சென்னை:

    மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சரோவர் ஹூசைன் (வயது 20). கட்டிட தொழிலாளி. தி.நகரில் பசுல்லா சாலை வருமான வரித்துறை அதிகாரிகள் குடியிருப்பு எதிரே புதிதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டிட பணியில் சரோவர் ஹூசைன் ஈடுபட்டு வந்தார். கட்டிடம் கட்டும் பணிக்காக 8 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அதன் மண் தரையில் குவிக்கப்பட்டு இருந்தது. 8 அடி பள்ளத்தில் பலகை பொருத்தும் பணிக்காக அந்த மண்மீது சரோவர் ஹூசைன் ஏறியுள்ளார். இதில் மண் சரிந்து அவர் 8 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு முகத்திலும், மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மற்ற தொழிலாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரோவர் ஹூசைன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் கட்டுமான நிறுவன அதிபர் அருண்பாரதி, என்ஜினீயர் தயாநிதி, மேஸ்திரி பழனிவேல் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நள்ளிரவில் கண் விழித்த அவரது மனைவி கணவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை என சந்தேகம் அடைந்தார்.
    • நாட்டறம்பள்ளி போலீசார் தென்னரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி வி.ஐ.பி. நகர் தாயப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் தென்னரசு (வயது 30) மார்க்கெட்டிங் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

    அந்த நேரத்தில் அவரது மனைவி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

    தென்னரசு வீட்டில் உள்ள காலிங்பெல்லை அழுத்தினார். பலமுறை அழுத்தி சத்தம் கேட்டும் அவரது மனைவி கண் விழிக்கவில்லை.

    இதனை தொடர்ந்து அவரது மனைவிக்கு போன் செய்தார். அப்போதும் அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் தென்னரசு 2-வது மாடியில் உள்ள அவரது வீட்டிற்கு சுவர் வழியாக ஏற முயன்றார். அப்போது தவறி வீட்டுக்கு பின்புறம் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதற்கிடையே நள்ளிரவில் கண் விழித்த அவரது மனைவி கணவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை என சந்தேகம் அடைந்தார்.

    இதுகுறித்து அவரது உறவினர் ஒருவருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அவரது உறவினர் அங்கு வந்து தென்னரசுக்கு போன் செய்தார்.

    அப்போது வீட்டின் பின்புறம் இருந்து தென்னரசுவின் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அவர்கள் அங்கே சென்று பார்த்தனர். அப்போது தென்னரசு விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தென்னரசு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    நாட்டறம்பள்ளி போலீசார் தென்னரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • என்ஜினீயர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.
    • சாலையோரத்தில் இரும்பு கம்பி லோடுடன் நிறுத்தப்பட்டு இருந்த டிரெய்லர் லாரி ஒன்றின் மீது சுரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதியது.

    போரூர்:

    சென்னை குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பூந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 26) சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

    வானகரம் அருகே வந்தபோது சாலையோரத்தில் இரும்பு கம்பி லோடுடன் நிறுத்தப்பட்டு இருந்த டிரெய்லர் லாரி ஒன்றின் மீது சுரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ண குமார் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • லாரியின் முன் பகுதி மற்றும் பைக்கில் தீ பரவியதால் இரு வாகனங்களும் நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது.
    • காவேரிப்பாக்கம் போலீசார் கருகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே வழியாக வந்த பைக் வாலாஜா அடுத்த சுமைதாங்கி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியும் பைக்கும் திடீரென தீப்பற்றி எரிந்தது. லாரியின் முன் பகுதி மற்றும் பைக்கில் தீ பரவியதால் இரு வாகனங்களும் நெடுஞ்சாலையில் பற்றி எரிந்தது.

    லாரியின் அடியில் சிக்கிய பைக் தீப்பற்றி எரிந்தது. இதனால் தீயில் சிக்கிய பைக்கில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்து இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டனர்.

    காவேரிப்பாக்கம் போலீசார் கருகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன.
    • காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று அப்பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

    அப்போது காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன. அவ்வாறு வந்த காளைகளை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் சென்றன.

    இந்த மஞ்சுவிரட்டை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் காளைகள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்தநேரம் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    அதில் படுகாயம் அடைந்த காடனேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்ற வாலிபர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீண்ட நேரம் ஆகியும் மணிக்குமார் வெளியே வராததால் அவர் சேற்றில் சிக்கியிருக்கலாம் என எண்ணிய நண்பர்கள் உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர்.
    • மணிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி நடுமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் குத்தாலக்கனி-சுமதி தம்பதியினர். இவர்களது மகன் மணிக்குமார் (வயது 26).

    பி.ஏ. வரலாறு படித்து முடித்துள்ள மணிக்குமார் தளவாய்புரம் பகுதியில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அனைவரிடமும் எளிதில் பழகும் மணிக்குமாருக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர்.

    தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று மாலை 5.30 அளவில் அந்த கிணற்றின் கரையில் சக நண்பர்களுடன் அமர்ந்து மணிக்குமார் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் அமர்ந்திருந்த தனது நண்பர்களிடம் விளையாட்டாக, இப்போது நான் பின்னால் தவறி கிணற்றில் விழுந்தால் என்ன செய்வீர்கள்? என கேட்டவாறு பின்னால் சாய்ந்தவாறு நண்பர்களிடம் நடித்து காட்டியுள்ளார்.

    இதில் நிலைதடுமாறிய மணிக்குமார் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்து சேரும் சகதியுமாக இருந்த கிணற்றுக்குள் விழுந்தார். மணிக்குமாருக்கு நீச்சல் தெரியும் என்பதனால் அவர் எப்படியாவது வெளியே வந்து விடுவார் என அவரது நண்பர்கள் கரையில் காத்திருந்தனர்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மணிக்குமார் வெளியே வராததால் அவர் சேற்றில் சிக்கியிருக்கலாம் என எண்ணிய நண்பர்கள் உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேத்தூர் போலீசார் ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சேரும் சகதியும் நிறைந்த கிணற்றில் நேற்று மாலை முதல் இரவு வரை மணிக்குமார் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் உடலை மீட்க முடியவில்லை. இருள் சூழ்ந்ததால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று காலை முதல் மீண்டும் மீட்பு பணியை தொடங்கிய தீயணைப்புத் துறையினர் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மணிக்குமாரின் உடலை மீட்டனர்.

    அவரது உடலை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கதறித்துடித்தனர். தொடர்ந்து மணிக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விளையாட்டாக கிணற்றில் விழுவது போல் நடித்து காட்டிய வாலிபர், நண்பர்கள் கண் முன்னரே தவறி விழுந்து சேற்றில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காலையில் எழுந்து பார்த்தபோது காண்டீபன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • பரிசோதித்த டாக்டர்கள் காண்டீபன் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சி துலுக்கானத்தம்மன் தெருவில் வசித்து வந்தவர் காண்டீபன் (வயது 36). இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு குடும்பத்துடன் காண்டீபன் தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது காண்டீபன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காண்டீபனை மீடுடு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் காண்டீபன் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து காயார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மீன் பிடிக்க பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.
    • மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் லோகேஷ் (24). விக்கரம் (23). சூர்யா (23). இதில் விக்ரம், சூர்யா ஆகியோர் இரட்டையர்கள் ஆவார்கள். லோகேஷ், சூர்யா ஆகியோர் மரக்காணத்தில் உள்ள பூக்கடையிலும், விக்ரம் முட்டை கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அண்ணன்-தம்பிகள் 3 பேர் மேலும் சிலருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொழுது போக்கிற்காக மீன் பிடிக்க மரக்காணம்-திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.

    அவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மரக்காணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் தத்தளித்த படி கூச்சல் போட்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பிகளான விக்ரம், சூர்யா ஆகியோர் லோகேசை காப்பாற்ற கால்வாயில் குதித்தனர். ஆனால் கால்வாயில் அதிகமாக தண்ணீர் சென்றதால் 3 பேரும் இழுத்து செல்லப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் கால்வாயில் மூழ்கிய அண்ணன், தம்பிகள் 3 பேரையும் தேடினார்கள்.

    மீனவர்களின் பைபர் படகுகளை வரவழைத்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.

    அப்போது லோகேஷ் தண்ணீரில் மூழ்கி பலியாகி கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூர்யா, விக்ரம் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கால்வாயில் மூழ்கி பலியான லோகேஷ் உடலை பார்த்து அவரது தந்தை கணேசன் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விழாவின் முக்கிய நிகழ்வாக எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் நடந்தது.
    • மாடுகளை இழுத்து வந்தோர் மற்றும் வேடிக்கை பார்த்தோர் என 5 பேர் காயமடைந்தனர்.

    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக எருது விடும் விழா பல்வேறு கிராமங்களில் நடந்தது.

    இதில் காரிமங்கலம் அடுத்த ராமாபுரம் மண்டு பகுதியில் மாலை 3 மணி அளவில் எருது விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட எருதுகளை பொதுமக்கள் இளைஞர்கள் அலங்கரித்து இழுத்துச் சென்றனர்.

    இதில் மாடுகள் அங்குமிங்குமாக இழுத்துச் சென்றபோது மாடு ஆக்ரோசமாக ஓடியதில் கெரகோடஅள்ளியை சேர்ந்த சுதர்சன் (வயது25), ராமாபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (30) ஆகியோர் மாடு முட்டியதில் வயிற்றில் பலத்த காயமடைந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இதேபோல் மாடுகளை இழுத்து வந்தோர் மற்றும் வேடிக்கை பார்த்தோர் என 5 பேர் காயமடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாடு முட்டி காயமடைந்த சுதர்சன் மற்றும் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காரிமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சுதர்சனின் உடல் நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அப்போது அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று கும்பார அள்ளி ஊராட்சியில் நடந்த எருது விடும் நிகழ்ச்சியில் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. ஊர் பெரியவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்த நிலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு எருது விடும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

    காரிமங்கலம் ராமசாமி கோவிலில் இன்று மாலை எருது விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • அடையாளம் தெரியாத கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் சென்று விட்டு, வடக்குப்பட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    திருக்கழுக்குன்றம் போலீசார் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மாமல்லபுரத்தில் வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    போரூரில் வசித்து வந்தவர் தினேஷ் (வயது33). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் மாமல்லபுரம் கடற்கரை விடுதி ஒன்றில் நடந்த நண்பரின் குடும்ப விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டார்.

    பின்னர் அருகில் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த கடற்கரை விடுதிக்கு சென்றார். அங்கு தினேஷ், கடற்கரையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே தினேஷ் உயிரிழந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×