என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை வீழ்ச்சி"

    • பரமத்தி வேலூர் தாலு–காவில் பல்வேறு பகுதி–களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டு வந்தது.
    • விலை கட்டுபடி ஆகாத விவசாயிகள் தங்கள் மஞ்சள் மூட்டைகளை அங்குள்ள குடோனில் இருப்பு வைக்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலு–காவில் சோழசிராமணி, ஜமீன்–இளம்பள்ளி, கொத்த–மங்கலம், ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், வடகரையாத்தூர், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, பெரிய–சோளிபாளையம், குரும்ப–லமகாதேவி, சின்னமருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி–களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டு வந்தது.

    இங்கு விளையும் மஞ்சள்கள் ஈரோடு பகுதி–களில் உள்ள தனியார் மற்றும் அரசு மஞ்சள் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது மஞ்சளுக்கு நல்ல விலை இல்லாததால் மஞ்சள் பயிரிட்டு வந்த விவசாயிகள் மஞ்சள் பயிரிடுவதை தவிர்த்து கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்கின்றனர். தற்போது மஞ்சள் பயிர் சுமார் 500 ஏக்கர் வரை மட்டுமே சாகுபடி செய்து

    வருகின்றனர்.

    மஞ்சள் பயிரிட்ட 10-வது மாதத்தில் மஞ்சள் தலையை அறுத்து விடுகின்றனர். பின்னர் சில நாட்கள் கழித்து கூலி ஆட்கள் மூலம் மஞ்சளை வெட்டி எடுக்கின்றனர். பின்னர் விரலி மஞ்சள், கிழங்கு மஞ்சள் என இரண்டாக பிரிக்கின்றனர். அதனை தொடர்ந்து வாகனங்கள் மூலம் ஈரோடு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு மஞ்சள் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    விலை கட்டுபடி ஆகாத விவசாயிகள் தங்கள் மஞ்சள் மூட்டைகளை அங்குள்ள குடோனில் இருப்பு வைக்கின்றனர். மஞ்சளுக்கு நல்ல விலை வரும்போது விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனையானது.தற்போது 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனையாகிறது.மஞ்சள் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மஞ்சள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 2 மடங்காக அதிகரித்து உள்ளது, அதே நேரத்தில் வெண்டைக்காய் விலை பாதியாக குறைந்து உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வேலூர், கந்தம்பாளையம், ஜேடர்பாளையம், சோழசிராமணி ஆகிய பகுதிகளில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது பருவநிலை மாற்றம் வெண்டைக்காய் விளைச்சலுக்கு சாதகமாக இருப்பதால் வெண்டைக்காய் விளைச்சல் 2 மடங்காக அதிகரித்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் வெண்டைக்காய் விலை பாதியாக குறைந்து உள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதங்களில் வியாபாரிகளுக்கு மொத்த விலையில் கிலோ ரூ.20-க்கு விற்ற வெண்டைக்காய், தற்போது கிலோ ரூ.7 ஆக குறைந்து உள்ளது. விலை சரிவால் வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து கந்தம்பாளையம் அருகே வசந்தபுரத்தைச் சேர்ந்த விவசாயி பாப்பாத்தி கூறுகையில், கடந்த பல வருடங்களாக எங்களது விவசாய தோட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறோம். ஒரு கிலோ வெண்டைக்காய் விதை ரூ.7 ஆயிரத்திற்கு வாங்குகிறோம்.

    50 சென்ட் இடத்திற்கு இந்த விதை போதுமானது. 4 மாதத்தில் காய் காய்க்கும். 4 மாதம் மட்டுமே இதை அறுவடை செய்ய முடியும். பிறகு செடி வாடி விடும்.

    ஒரு கிலோ விதை வாங்கி சாகுபடி செய்ய மற்றும் மருந்து, உரம் என ரூ.30,000 வரை செலவாகிறது. ஆனால் இந்த வருடம் போட்ட முதலீடு எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தினசரி காய் பறிக்க ஒரு ஆளுக்கு ரூ.300 வரை கூலி கொடுக்க வேண்டி உள்ளது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மிகவும் குறைந்த விலைக்கு கேட்கின்றனர். ஆனால் வியாபாரிகள் வாங்கி கிலோ ரூ.40 வரை விற்பனை செய்கின்றனர். வெண்டைகாய் பயிரிட்ட விவசாயிகளை காக்க அரசு நல்ல தீர்வு காண வேண்டும் என கூறினர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நகப்பாளையம், செல்லப்பம்பாளையம், சின்னமருதூர், பெரிய மருதூர் , அய்யம்பாளையம், தண்ணீர் பந்தல், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, அரளி, செவ்வந்தி காக்கட்டான், சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து வியாபாரிகள் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூ ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பூக்களை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர். வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் குண்டுமல்லிகை கிலோ ரூ.3000- க்கும், காக்கட்டான் ரூ. 1300-க்கும்,சம்பங்கி கிலோ ரூ.150- க்கும், அரளி கிலோ ரூ.300- க்கும், ரோஜா கிலோ ரூ.250- க்கும், முல்லைப் பூ ரூ.2000- க்கும், செவ்வந்திப்பூ ரூ.250- க்கும், வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். நேற்று குண்டு மல்லிகை கிலோ ரூ.1300-க்கும், சம்பங்கி கிலோ ரூ100- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.180- முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும்,செவ்வந்திப்பூ ரூ.120- க்கும், வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தொடர் மலையின் காரணமாகவும் வரத்து அதிகரிப்பாலும் பூக்களின் விலை குறைந்துள்ளது.

    • விதை வெங்காயத்திற்காக பழைய இருப்பு வெங்காயத்தை கொள்முதல் செய்ததால் விலை உச்சத்தில் இருந்தது.
    • அறுவடைக்கு முன் உச்சபட்ச விலைக்கு விற்பனையானதால் ஓரளவு விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

    தாராபுரம் : 

    கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அதிகமான பனிப்பொழிவின் காரணமாக உள்ளூர் விவசாயிகள் தாமதமாக நடவு செய்ததால் திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் அறுவடை துவங்கவில்லை. துறையூர், குருவாரெட்டியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது.

    கடந்த மாதம் கிலோ 100 ரூபாய்க்கு சில்லறை விலையில் விற்பனையானது. விவசாயிகளிடம் 90 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டது. பல விவசாயிகள் விதை வெங்காயத்திற்காக பழைய இருப்பு வெங்காயத்தை கொள்முதல் செய்ததால் விலை உச்சத்தில் இருந்தது.

    கடந்த வாரம் தான் அறுவடை துவங்கியது. புதிய வெங்காயம் சந்தைக்கு வர துவங்கியவுடன் அதிகபட்ச சில்லறை விலை கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது கிலோ 40 ரூபாய்க்கு ரோட்டோர கடைகளில் கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்தாண்டு அபரிமிதமான விளைச்சல் காரணமாக வெங்காயம் கேட்பார் இல்லாமல் இருந்தது. இதனால் ஏராளமான விவசாயிகள் உழவு ஓட்டி அழித்தனர். இதில் வெங்காய விவசாயிகள் பலரும் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த ஆண்டு அறுவடைக்கு முன் உச்சபட்ச விலைக்கு விற்பனையானதால் ஓரளவு விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், உள்ளூர் அறுவடை துவங்கும் முன்பே விலை வீழ்ச்சி அடைந்துள்ளது வெங்காய விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சில்லறை விலையில் 40 ரூபாய்க்கு விற்றால் விவசாயிகளிடம் கிலோ 30 ரூபாய்க்கு தான் கொள்முதல் செய்வர். சீசன் களை கட்டும் பொழுது வரத்து அதிகரிக்கும். கொள்முதல் விலை 30 ரூபாய்க்கும் கீழ் சரிந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றனர். 

    • ராய க்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • விளைச்சல் அமோகமாக உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் காய்கறிகள், கீரை வகைகள் பயிரிட்டு வருகின்றனர்.

    இந்தாண்டு தக்காளி க்கு போதிய விலை கிடைக்கா ததால் விவசாயிகள் மாற்று பயிராக காய்கறிகளை சாகுபடி செய்து வருகி ன்றனா்.

    இவற்றை அறுவடை செய்து ராயக்கோட்டையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் அனுப்பி வருகின்றனர்.

    இதனிடையே ராய க்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இவை தற்போது அறுவடை செய்யப்படுகிறது. விவசாயிகள் மூட்டை, மூட்டையாக காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இதனால் மார்க்கெ ட்டுக்கு முட்டைக்கோஸ் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ரகத்திற்கு ஏற்ப முட்டைக்கோஸ் விற்பனையாகிறது. அந்த வகையில் ஒரு மூட்டை ரூ.200-க்கும், ஒரு கிலோ சிறிய முட்டைக்கோஸ் ரூ.4-க்கும், 2 கிலோ கொண்ட முட்டைக்கோஸ் ரூ.7-க்கும் விற்பனையாகிறது.

    விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் ஏாிகளில் முட்டைக்கோசை கொட்டி செல்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ராய க்கோட்டை பகுதிக ளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் பயிரிட ப்பட்டுள்ளது.

    தற்போது விளைச்சல் அமோகமாக உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதனால் முட்டைக்கோஸ் சாகுபடி செய்த விவசாயிகள் ஏரிகளில் கொட்டி செல்கின்றனர். சிலர் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர் என்று கவலையுடன் தெரிவித்தனர்.

    • விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர்.
    • நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குடிமங்கலம்:

    உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் காய்கறி பயிர்களில் சின்னவெங்காயம் பிரதானமாக உள்ளது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் நாற்று நடவு முறை மற்றும் நேரடியாக காய் நடவு முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதிகளில் பிரதான சாகுபடியாக சின்ன வெங்காயம் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நோய்த்தாக்குதல், விலை சரிவு, சாகுபடி செலவினம் என பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டதால் நடப்பு பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

    இப்பகுதிகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது.சாகுபடியில் விதைப்பு பருவத்தில் மழை குறைந்தது, தொடர்ந்து பெய்த அதிக பனிப்பொழிவு, கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களினாலும், களைக்கொல்லி, பூச்சி மருந்துகள் உள்ளிட்ட இடு பொருட்கள் குறித்து தொழில் நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல், வேதனையடைந்து வருகின்றனர். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 டன் வரை மகசூல் இருக்கும் நிலையில் நடப்பாண்டு 4 டன் மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது.

    ஒரு சில பகுதிகளில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஒட்டுமொத்த வெங்காய பயிரும் கருதி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளை நிலங்களில் 20 முதல் 25 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    சின்ன வெங்காயம் சாகுபடியில் சீதோஷ்ண நிலை மாற்றம், தரமற்ற இடு பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 70 முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில் நடப்பாண்டு கடுமையான பனிப்பொழிவு, வெயில், மழையில்லாதது என சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மகசூல் குறைந்துள்ளதோடு விலையும் குறைவாக உள்ளது. பல இடங்களில் வெங்காயம் பயிர் கருகி வீணாகியுள்ளது. இதனால் நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உடுமலை பகுதிகளில் ஆண்டு தோறும் சின்ன வெங்காயம் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. அதே போல் தக்காளி, புடலங்காய், அவரைக்காய், பாகற்காய் என பந்தல் சாகுபடியிலும், மஞ்சள் தேமல் நோய் உள்ளிட்ட காரணங்களினால் பாதிப்புகள் ஏற்படுவதோடு விளைபொருட்களுக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை.

    மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  

    • கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்பட்டது.
    • தக்காளி வரத்து அதிகம் ஆனதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று ஒரு கிலோ ரூ. 8 முதல் ரூ. 10 வரை விற்பனை ஆனது.

    சேலம்:

    சேலத்தில் உழவர் சந்தைகளில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்பட்டது. நேற்று சேலத்திற்கு பனமரத்துப்பட்டி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி வாழப்பாடி, காரிப்பட்டி, மேச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் பலர் தக்காளியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதை வியாபாரி கள் பெற்று விற்பனை செய்தனர். வழக்கத்தை விட நேற்று தக்காளி வரத்து அதிகம் ஆனதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று ஒரு கிலோ ரூ. 8 முதல் ரூ. 10 வரை விற்பனை ஆனது.

    • கடந்த மாதம் பனி தாக்கம் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது
    • தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்தது

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மொத்தம் - சில்லரை விற்பனையில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பனி தாக்கம் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் காய்கறிகள் விலையும் அதிகரித்து இருந்தது.

    ஆனால் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் காய்கறிகள் வரத்தும் அதிகரித்து காய்கறிகள் விலை குறைந்து விட்டது. பொதுவாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு 20 முதல் 25 டன் காய்கறிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று 30 டன் காய்கறிகள் வரத்தாகி இருந்தது. இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-

    கத்தரிக்காய் - 30, வெண்டைக்காய் - 60, பாவக்காய் - 50, புடலங்காய் - 40, பட்ட அவரை - 60, கருப்பு அவரை - 40, முள்ளங்கி - 25, பீர்க்கங்காய்-70, பீட்ரூட்-40, கேரட் - 50, பீன்ஸ் - 70, சவ்சவ்-20, சேனக்கிழங்கு - 50, முட்டைகோஸ் - 20, குடைமிளகா-60, பச்சை மிளகாய் - 60, உருளைக்கிழங்கு -20.

    கடந்த வாரம் 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி ஒரு கிலோ இன்று ரூ.10 முதல் 15 -க்கு குறைந்து விட்டது. தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்தது. ஒட்டன்சத்திரம், தாளவாடி, தாராபுரம் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிகள் வரத்தாகி இருந்தது. இதேப்போல் முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாயாக குறைந்து விட்டது.

    அதே நேரம் வரத்து குறைவு காரணமாக பச்சை பட்டாணி இன்று ஒரு கிலோ 100 ரூபாயாக அதிகரித்து விற்கப்பட்டது. இதேப்போல் கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட இஞ்சி இன்று ஒரு கிலோ 140 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது.

    • இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது என தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 15 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ. 6 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ. 7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ. 3 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும் கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.

    இதை குறித்து விவசாயிகள் கூறிகையில், அதிக அளவில் விஷேச நிகழ்ச்சிகள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது என தெரிவித்தனர்.

    • பரமத்திவேலூர் பகுதி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் செய்துள்ளனர்.
    • இங்கு விளையும் வாழைத்தார்களை பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, குச்சிபாளையம், குப்புச்சிபாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிபாளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன், கற்பூரவள்ளி, பச்சநாடன், ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்களை ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் செய்துள்ளனர்.

    இங்கு விளையும் வாழைத்தார்களை பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.380-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.320-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.320-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.300-க்கும் விற்பனையானது.

    வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்துள்ளனர்.
    • இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வட்டத்தில் ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு, பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், கண்டிப்பா ளையம் ,வடகரையாத்தூர், கொத்தமங்கலம், தி.கவுண்டம்பாளையம் திடுமல், கபிலக்குறிச்சி, பெரிய சோளிபாளையம், சின்ன சோளி பாளையம், பெரிய மருதூர் , சின்ன மருதூர், சிறு நல்லிக்கோவில் கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்துள்ளனர். இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.

    பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை உரிமையா ளர்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 2900 வரை விற்பனை செய்கின்றனர்.

    வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் ஊற்றி சூடேற்றி பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமை களில் வெல்லம் ஏலச் சந்தையில் உள்ள 13 ஏல மண்டியில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமா நிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,275 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,330 வரையிலும் ஏலம் போனது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,240 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,270 வரையிலும் ஏலம் போனது.

    வெல்லம் வரத்து அதிகரித்ததால் விலை சரி வடைந்துள்ளது. வெல்லம் விலை வீழ்ச்சியால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.
    • மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும்.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

    கோத்தகிரி சுற்றியுள்ள கூக்கல்தெரை, கக்குச்சி ,கூக்கல், கட்டப்பெட்டு, பில்லிக்கம்பை , தீனட்டி, மானியடா, நெடுகுளா போன்ற பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது பண்படுத்தி மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர், முள்ளங்கி, நூல் கோல், பீன்ஸ், பூண்டு, பட்டாணி, அவரை போன்ற மலை காய்கறிகளை விளைவித்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

    மேலும் ஒரு சில விவசாயிகள் வெளிநாட்டு காய்கறிகளை சாகுபடி செய்து வருமானம் பெற்று வருகின்றனர். தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பீட்ரூட் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். பீட்ரூட் விளைந்து அறுவடைக்கு தயாரானதை அடுத்து விவசாயிகள் அதனை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் மார்க்கெட்டில் பீட்ரூட்டுக்கான ெகாள்முதல் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பீட்ரூட் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.இதனால் எங்களுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ×