என் மலர்
நீங்கள் தேடியது "slug 227679"
- பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 26 பேருக்கு ரூ.16.50 லட்சம் வங்கிக்கடனை கலெக்டர் வழங்கினார்.
- இத்திட்டத்தின் மூலம் பயிற்சியுடன் வங்கி கடன் உதவிகள் பெற்று சுயதொழில் துவங்கி, பொருளாதார முன்னேற்றத்துடன் சிறந்து விளங்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியுடன் வங்கிக்கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கும், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கும் சுய தொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் பயிற்சியுடன் கூடிய வங்கி கடனுதவிகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்கி வருகின்றன. அதனடிப்படையில் தற்போது மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு பனைசார்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு ஒரு வார காலம் பயிற்சி வழங்கி சுய தொழில் தொடங்க 26 பேருக்கு ரூ.16.50 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அவர்கள் பனைசார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொருவரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுற்றுலா பகுதிகள் அதிகமுள்ள இடம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வார்கள்.
அவர்களின் விருப்பத்திற்கேற்ப பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற முடிவதுடன் உற்பத்தியும் அதிகரிக்கும். தற்பொழுது இந்த மகளிர் குழுவினர் பனை சார்ந்த பொருட்கள் தயாரிப்பதை கையாளப்பட்டுள்ளார்கள். இதை இவர்கள் நன்கு செயல்படுத்தினால் அதிக அளவில் சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற முடியும்.
அது மட்டுமின்றி ஒவ்வொருவரின் பொருளாதார முன்னேற்றம் பெறவும் மற்றும் வங்கிகளில் பெறப்பட்ட கடன் எளிதாக திருப்பி செலுத்துவதன் மூலமும் அவ்வப்போது கூடுதலாக வங்கியில் கடனுதவிகள் பெற்று பயன்பெறலாம். எனவே சிறப்பாக செயல்பட்டு மற்ற குழுக்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்திட வேண்டும்.
இதே போல் ஆர்வமுள்ள படித்த ஆண்கள், பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயிற்சியுடன் வங்கி கடன் உதவிகள் பெற்று சுயதொழில் துவங்கி, பொருளாதார முன்னேற்றத்துடன் சிறந்து விளங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் ராதிகா, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.8,215 கோடி கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம்களை நடத்தி விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கல்விக் கடன்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மக்களவை உறுப்பினா்கள் கே.சுப்பராயன், கு.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் 2022-23ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.21,530 கோடியாகும். இதில், வேளாண்மைத் துறைக்கு 38 சதவீதமாக ரூ.8,206 கோடியும், சிறு வணிகத் துறைக்கு 60 சதவீதமாக ரூ.12,496 கோடியும், பிற முன்னுரிமைக் கடன்களுக்கான வீட்டுக் கடன், மரபுசாரா எரிசக்தி கடன், கல்விக் கடன் மற்றும் இதர கடன்களுக்காக ரூ.478 கோடியும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.8,215 கோடி கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களை நடத்தி மாணவா்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக கல்விக் கடன்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமலிங்கம், வங்கியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
- மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,
ராமநாதபுரம்
தமிழ்நாடு சிறுபான்மை யினர் (டாம்கோ), பிற்படு த்தப்பட்டோர் (டாப் செட்கோ) பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள் மூலம் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2022--23 ஆண்டுக்குரிய தனி நபர் கடன், சுய உதவிக்குழு, சிறுதொழில் தொடங்கவும், கல்விக்கடன் வழங்கவும் சிறப்பு முகாம் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.
திருவாடானையில் நாளை (8-ந்தேதி), ஆர்.எஸ்.மங்கலத்தில் 9-ந் தேதி, கடலாடியில் 13-ந் தேதி, கமுதியில் 14-ந் தேதி, பரமக்குடியில் 16-ந் தேதி, கீழக்கரை 19-ந் தேதி, ராமேசுவரத்தில் 20-ந் தேதி, முதுகுளத்துாரில் 22-ந் தேதிகளில் முகாம் நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு ராம நாதபுரம் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மை யினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கால்நடை பராமரிப்பு கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- தவணை தவறி செலுத்தும் பட்சத்தில் இந்த கடனுக்கான 7 சதவீதம் வட்டியுடன் அபராத வட்டியும் சோ்த்து செலுத்த வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு விவசாயத்துடன் இணைந்த கால்நடை வளர்ப்பு காரியங்களுக்கு நடைமுறை மூலதன செலவினங்களுக்காக (வளர்ப்பு செலவினங்கள்) ஓராண்டு தவணையில் வட்டியில்லா கடன்கள் வழங்கி வருகின்றது.
பால்மாடு வளர்ப்பிற்கு தலா ஒரு மாட்டிற்கு ரூ.14 ஆயிரம் வீதமும், ஆடு வளர்ப்பிற்கு 10+1 ஆடுகளுக்கு ரூ.18ஆயிரம் வீதமும், ரூ.1.60 லட்சம் வரை அடமானம் ஏதுமின்றி வட்டியில்லா கடன்கள் வழங்கப்படுகிறது.
கடன் பெற விரும்பும் விவசாயிகள், விவசாயி மற்றும் மாடு, ஆடு வளர்ப்பதற்கான சான்றுகளுடன் தங்கள் விவகார எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இந்த கடன்களை ஓர் ஆண்டுக்குள் திருப்பி செலுத்தினால் அந்த கடனுக்கான வட்டியை தமிழக அரசு வழங்கும். தவணை தவறி செலுத்தும் பட்சத்தில் இந்த கடனுக்கான 7 சதவீதம் வட்டியுடன் அபராத வட்டியும் சோ்த்து செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டம் தொடங்கியதும், மாவட்ட கலெக்டர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது
- இந்த ஆண்டு இதுவரை 31பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசா யிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் புலவர் செல்லப்பா, வின்ஸ் ஆன்றோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், மாவட்ட கலெக்டர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக விவசாயிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய புலவர் செல்லப்பா, தற்பொழுது தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறந்த நிர்வாகத்திற்கான விருதை கலெக்டருக்கு வழங்கியுள்ளார். இதற்கு விவசாயிகள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இதை தொடர்ந்து விவசா யிகள் சார்பில் கலெக்டர் அரவிந்துக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.பின்னர் கலெக்டர் அரவிந்த் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:-
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் குறுவை தொகுப்பை குமரி மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சி பாறையில் தேனி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் இதுவரை எத்தனை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
வீர நாராயணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.ஒரே மாட்டிற்கு நான்கு முறை கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்டம் வழியாக இரவு நேரங்களில் அதிக அளவு கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி யில் பாதுகாக்கப்பட்ட இடங்களில் கல் குவாரிகள் செயல்படுகிறது.கற்கள் உடைக்கப்படுவதால் வீடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் கூறுகை யில், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த நெல் குறுவை தொகுப்பு திட்டமானது, நடப்பாண்டில் டெல்டா அல்லாத சில மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தும் போது வேளாண் இடு பொருள்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
பேச்சிப்பாறையில் தேனி மகத்துவ மையம் தற்போது செயல்பட்டு வருகிறது. தேனி ஆராய்சி மையம் அமைப்பதற்கான திட்டம் இல்லை. குமரி மாவட்டத்தில் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 31பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
வீர நாராயணசேரி பெண் அதிகாரி மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளதால் அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் கடத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
- தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது.
- முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் நடந்த தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மண்டல மாநாட்டில், தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமச்சீர், ஏற்றுமதி, பொருளாதாரம் போன்றவற்றிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் திட்டமாக தீட்டப்பட்டது. இந்த திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக தொழில்முனைவோர்கள் வங்கி கடன் பெறுவதில் உள்ள சிரமங்களை குறைக்க, இந்தியாவிலேயே முதல் முறையாக நமது முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதியில் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் பெறும் சொத்து பிணயம் இல்லாத வங்கி கடனுக்கு 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதத்தை தமிழக அரசு ஏற்கும். இந்தியாவிலேயே 90 சதவீதம் வரை கடன் உத்தரவாதம் வழங்க உள்ள மாநிலம் தமிழகம் தான். சிறு, குறு நிறுவனங்களின் மூலதன சிக்கலை தீர்க்கும் விதமாக வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்குவார்கள். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து, தொழிலை மீண்டும் அமைக்கவும், தொடங்கவும் இந்த திட்டம் உதவும்.
மேலும் ரூ.25 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல் நிதி நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழிலை அதிகரிக்கவும் முதலீட்டு மானியத்தில் 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. விரைவில் இவர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக ஏற்படும் காலதாமதத்திற்கு தீர்வு காண சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 252 நிறுவனங்களுக்கு ரூ.50 கோடியே 12 லட்சம் தொகை வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் மூலமாக நீட்ஸ் உள்ளிட்ட சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க ஆண்டுக்கு 10 ஆயிரம் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற இந்த குறுகிய காலகட்டத்தில் ரூ.310 கோடியே 33 லட்சம் மானியத்துடன் ரூ.1253 கோடி வங்கி கடன் உதவி வழங்கப்பட்டு, இதுவரை 10 ஆயிரத்து 216 படித்த இளைஞர்கள் புதிய தொழில்முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ரூ.28 கோடியே 38 லட்சம் மானியத்தில், ரூ.113 கோடியே 52 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 322 பேர் புதிய தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இதுபோல் ஈரோடு, கோவை மாவட்டத்தில் ரூ.248 கோடியே 59 லட்சம் மானியத்தில், ரூ.996 கோடியே 34 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு 906 புதிய தொழில்முனைவேர்களை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
- பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மகளிருக்கு நிலம் வாங்குவதற்கு வங்கியுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது.
- அதாவது ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானிய தொகையும், மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களின் கீழ் மகளிருக்கான சுய உதவி குழுக்கள் தொழில் தொடங்குவதற்கு 50 சதவீதம் அதாவது ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மானிய தொகையும், மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும்.
மேலும், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மகளிருக்கு நிலம் வாங்குவதற்கு வங்கியுடன் இணைந்து மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டு வருகிறது. நிலம் வாங்கும் திட்டத்தில் விண்ணப்பதாரர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும், வயது 18-ல் இருந்து 65-க்குள்ளும் இருக்க வேண்டும். நிலம் வாங்கும் திட்டத்தில் அதிகபட்சமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லா தவரிடம் இருந்து நிலம் வாங்க வேண்டும். இந்த திட்டத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்துள்ளது. நிலம் வாங்கும் அரசு மதிப்பீட்டு தொகையில் 30 சதவீதம் அதிகப்பட்சமாக அதாவது ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானிய தொகையும், மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும்.
நில மேம்பாட்டு திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நில வளத்தை மேம்படுத்துதல், ஆழ்குழாய் கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்தல் போன்றவற்றிற்காக 30 சதவீதம் அதாவது ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானிய தொகையும், மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும்.மருத்துவர் பட்டம் பெற்று இந்தியன் மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் சொந்தமாக மருத்துவமனை அமைப்பதற்கும், மருத்துவம் சார்ந்த படிப்புகள் படித்த இளைஞர்களுக்கு முடநீக்கு மையம் மருந்தகம் (Physiotherapy Center), மருந்தகம் (Pharmacy), இரத்த பரிசோதனை நிலையம் (Clinical Laboratory), மற்றும் கண் கண்ணாடியகம் (Opticals) அமைப்பதற்கு 30 சதவீதம் அதாவது அதாவது ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானிய தொகையும் மீதி தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும்.
கடன் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் சாதி சான்று வருமானச்சான்று, குடும்ப அட்டை / இருப்பிடச்சான்று, ஆதார்அட்டை, செய்வி ருக்கும் தொழிலுக்கான விலைப்புள்ளி திட்டஅ றிக்கை (வாகன வாங்கு வதற்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் பேச்ஜ் ) ஆகிய சான்றுகளுடன் விண்ண ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ மேலாளரை அணுகலாம். தொடர்புக்கு. 04362-256679 ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடன் பெறுவதற்கு நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனத்தை தேர்வுசெய்வது முக்கியமானது.
- தேவையை கருத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டிய கடன் தொகையை திட்டமிடுங்கள்.
திடீரென்று வரும் பணத் தேவைகளுக்காக, வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களில் தனி நபர் கடன் வாங்கி சமாளிக்க முற்படுகிறோம். சில நேரங்களில் கடன் பெறுவதிலும், திரும்ப செலுத்துவதிலும் பலர் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். இதனை தவிர்க்க சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். அவை இங்கே….
சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள்: கடன் பெறுவதற்கு நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனத்தை தேர்வுசெய்வது முக்கியமானது. தற்போது பல நிறுவனங்கள் விரைவாகவும், வசதிக்கேற்றவாறும் தனி நபர் கடன் வழங்குகிறார்கள். நீங்கள் யாரிடம் கடன் வாங்கினாலும் அவர்களின் மதிப்புரைகளையும், ஏற்கனவே அவர்களிடம் கடன் பெற்றவர்களின் கருத்துக்களையும் கேட்டு நம்பகத்தன்மையை ஆராய்ந்த பின்னர் அணுகுங்கள்.
தவணைகளை தவறாமல் செலுத்துங்கள்: நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் முறையை வைத்தே, உங்கள் கடன் பெறும் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. தவணைகளை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் கிரெடிட் ஸ்கோர், சிபில் ஸ்கோர் போன்றவை சரியான அளவில் பராமரிக்கப்படும். குறைந்த ஸ்கோர் இருக்கும் பட்சத்தில், உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம், நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்க முடியும்.
கடன் தொகையை தீர்மானியுங்கள்: நீங்கள் பல்வேறு காரணங்களுக்காக கடன் பெற முற்படலாம். உங்கள் தேவையை கருத்தில் கொண்டு உங்களுக்கு வேண்டிய கடன் தொகையை திட்டமிடுங்கள். உங்களால் திரும்ப செலுத்துவதற்கு இயன்ற தொகையை, உங்கள் வருமானத்திற்கு உட்பட்டு முடிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும்.
ஆவணங்களை சரிபாருங்கள்: சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே உங்களால் கடனுக்காக விண்ணப்பிக்க முடியும். அடையாள சான்று, முகவரி ஆதாரம், வருமான ஆதாரம் போன்றவை அடிப்படை ஆவணங்கள். கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் கடன் அளிக்கும் நிறுவனங்கள் உங்களிடம் தெரிவிப்பார்கள். அந்த ஆவணங்களையும் ஒப்படைத்த பின்னரே கடன் பெற முடியும்.
வட்டி விகிதங்களை ஒப்பிடுங்கள்: பல்வேறு நிறுவனங்களின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம், சிறந்த வட்டி விகிதங்களை கண்டறிய முடியும். இது குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனைப் பெறுவதற்கு உதவும்.
கட்டணங்களை மதிப்பிடுங்கள்: தனி நபர் கடனுக்காக விண்ணப்பிக்கும் முன்னரே, அந்த நிறுவனங்கள் வசூலிக்கும் பல்வேறு கட்டணங்களையும் கவனியுங்கள். செயலாக்க கட்டணம், தாமதமாக செலுத்தும் கட்டணம், முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் போன்ற உங்கள் செலவுகளை மதிப்பீடு செய்யுங்கள்.
திரும்ப செலுத்தும் திட்டத்தை கவனியுங்கள்: தனி நபர் கடனுக்காக அணுகுவதற்கு முன்னர், உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் அனைத்து நிதி சார்ந்த கடமைகளையும் கருத்தில் கொள்ளுங்கள். வருமானத்திற்கு அதிகமாக கடன் பெறுதல், உங்களால் திரும்ப செலுத்த முடியாத சூழலை உருவாக்கி விடும். தெளிவான திருப்பி செலுத்தும் திட்டத்தை வைத்திருப்பதன் மூலம் உங்கள் நிதியை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
- தமிழக அரசு கொரோனா நிவாரண திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது.
- இந்த உதவி பெற பயனாளி 55 வயதிற்கு மேற்படாதவராகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் வகையில் தமிழக அரசு கொரோனா நிவாரண திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2 பகுதிகளைக் கொண்டுள்ளது.
பகுதி 1-ன் கீழ் கொரோனா பரவலால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தனி நபர்கள், தனியுரிமை அல்லது பங்குதாரர் நிறுவனங்கள் தங்கள் பழைய நிறுவனத்தை மறு உருவாக்கம் அல்லது ஒரு புதிய நிறுவனத்தினை தாமாகவோ அல்லது தமது சட்டபூர்வ வாரிசுகள் மூலமாகவோ தொடங்குவதற்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 கோடி வரை இருக்கலாம். இதில் நிறுவப்படும் எந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
இந்த உதவி பெற பயனாளி 55 வயதிற்கு மேற்படாதவராகவும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
பகுதி 2-ன் கீழ் மாநிலத்தின் எந்த பகுதியிலும் இயங்கி வந்த கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலை மேற்கொள்ள நிறுவப்படும் எந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
ஆர்வமும், தகுதியும் கொண்ட தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மானிய உதவி பெறுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள்.
இதற்கான விண்ணப்–பத்தினை இணையவழியாக msmeonline.tn.gov.in –ல் பதிவிடலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சேலம் ஐந்து ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உரிய காலத்தில் விவசாய கடன்களை பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகள் வெளி நபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- விவசாயிகள் வேளாண் கடனை உரிய காலத்தில் பெற்று, சாகுபடி உள்ளிட்ட பணிகளை தொடங்க விவசாய நிலங்களை அளவிட்டு, உரிமையாளர்களுக்கோ, குத்தகைதாரர்களுக்கோ தாமதமின்றி உடனடியாக கடன் பெற சான்றிதழ் வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
திருச்சி :
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மா.பிரதீப்குமார் கலந்துகொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் எஸ்.செல்வம் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வேளாண்மை சார்ந்த கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விவசாயிகளுக்கு அந்தநத பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலத்தின் அளவு, சாகுபடி செய்யும் பயிர்கள் என்னென்ன, சொந்த நிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறதா அல்லது அது குத்தகை நிலமா என்பது உள்ளிட்ட விபரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கடன் பெறும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்களால் முறையான ஆய்வு செய்து சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் உரிய காலத்தில் விவசாய கடன்களை பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகள் வெளி நபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் குறிப்பிட்ட காலத்தில் விவசாய பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை நேரடியாக அணுகும்போது, உரிய சான்றிதழ் இல்லாமல் வேளாண் கடன் வழங்க முடியாது என்று கூறி அதிகாரிகள் மறுத்து விடுகிறார்கள். இதுபோன்ற நெருக்கடியான நிலையை தவிர்க்கும் வகையில், விவசாயிகள் வேளாண் கடனை உரிய காலத்தில் பெற்று, சாகுபடி உள்ளிட்ட பணிகளை தொடங்க விவசாய நிலங்களை அளவிட்டு, உரிமையாளர்களுக்கோ, குத்தகைதாரர்களுக்கோ தாமதமின்றி உடனடியாக கடன் பெற சான்றிதழ் வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
- 5000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
- ஜனவரி மாதம் வரை, பயிர் கடன், நகை கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்டவற்றில் சுமார் ரூபாய் 3 கோடியே 52 லட்சம் முறைகேடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளரி வெள்ளி ஊராட்சி பகுதியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த 5000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.இதன் தலைவராக அதே பகுதியை சேர்ந்த சத்தியபானு இருந்து வருகிறார்.
இந்த சங்கத்தில் செயலாளராக இருந்த வேப்பமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 55), கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டுறவு சங்கத்தில் நிதி முறை கேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் விசாரணையில் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்த மோகன் கடந்த ஜனவரி மாதம் வரை, பயிர் கடன், நகை கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்டவற்றில் சுமார் ரூபாய் 3 கோடியே 52 லட்சம் முறைகேடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர் மீது தொடர் புகார்கள் எழுந்து வந்து வரும் நிலையில், மோகன் மற்றும் முறைகேட்டில் தொடர்புடைய பிற அலுவலர்கள் குறித்து கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தில் முன் திரண்ட அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்திருந்த நகை, மற்றும் ஈட்டு வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாக தங்களுக்கு திருப்பித் தரக் கூறி கூட்டுறவு சங்கத்தின் பிரதான கதவினை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சங்கத்தின் பொறுப்பு செயலாளர் மணி மற்றும் பூலாம்பட்டி போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
- தொழில் செய்ய விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கும் முகாம் நடந்தது.
- வருகின்ற 16-ந்ேததி காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண்.12-ல் நடைபெற உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது- மாற்றுத்திறனாளி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம் (PMEGP), வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), சிறுதொழில் மற்றும் பெட்டி கடை வைப்பதற்கான வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டம், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (NHFDC) மூலமாக கடன் வழங்கும் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களால் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் "வங்கி கடன் முகாம் வருகின்ற 16-ந்ேததி காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண்.12-ல் நடைபெற உள்ளது.எனவே, வங்கி கடன் பெற்று தொழில் செய்ய விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.