search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறநிலையத்துறை"

    • மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
    • அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுரம் அருகே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடம் அமைந்துள்ளது.

    இந்த மடத்திற்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் கிராமம் பெரிய தோட்டம் பகுதியில் சுமார் 8.76 ஏக்கர் நிலம் உள்ளது. இதை பல ஆண்டு காலமாக தாமஸ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவரது மகன் பிரின்ஸ் என்பவர் கையகப்படுத்தி வைத்திருந்தார்.

    இந்நிலையில் ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் மடத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும், கோர்ட்டிலும் மடத்தின் சார்பில் வழக்கு தொடுத்திருந்தனர். மடத்துக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தருமாறு கோர்ட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நிலத்தை மீட்டு மடத்தின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அங்கு அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர். கோர்ட்டு உத்தரவின்படி இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளால் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 6 கோடி ஆகும்.

    • தமிழகத்தில் இருந்த பீர்மேடு, தேவிகுளம் உள்ளிட்ட பகுதிகளை கேரளா பறித்துக் கொண்டதைப் போல மேலும் சில பகுதிகளை அபகரிக்கும் முயற்சி என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
    • கண்ணகி கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே வண்ணாத்தி பாறை என்ற பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கண்ணகி கோவில் அமைந்துள்ளது. தமிழக-கேரள எல்லைப்பகுதியில் 4,830 அடி உயரத்தில் இந்த கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு செல்ல கேரள வனப்பாதை பகுதியே உள்ளது. வருடம்தோறும் சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் கேரள அரசு இந்த கோவிலுக்கு செல்ல தமிழர்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. மற்ற நாட்களில் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.

    ஏனெனில் இப்பகுதியை கேரள அரசும் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் கோவிலில் எந்தவித பணிகளும் செய்ய முடியாமலும், பக்தர்கள் செல்ல பாதை வசதி கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனிடையே கடந்த 1 மாதமாக கேரள அரசு டிஜிட்டல் ரீசர்வே என்ற பெயரில் தமிழக கேரள எல்லைப்பகுதியில் டிரோன்களை பறக்க விட்டு ஆய்வு செய்து வருகிறது. சில இடங்களில் எல்லை கற்களையும் நட்டு வைத்ததால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் அதற்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறது.

    ஏற்கனவே தமிழகத்தில் இருந்த பீர்மேடு, தேவிகுளம் உள்ளிட்ட பகுதிகளை கேரளா பறித்துக் கொண்டதைப் போல மேலும் சில பகுதிகளை அபகரிக்கும் முயற்சி என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    கண்ணகி கோவிலுக்கு செல்ல பலியன்குடி வழியாக சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தால் தினந்தோறும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லலாம். இதன் மூலம் தமிழர்களின் பெருமை மேலும் உலகுக்கு தெரிய வரும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இது குறித்த அறிவிப்பில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒரு வாரத்துக்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கூடலூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    இதனிடையே கண்ணகி கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்கு செல்லும் பழியன்குடி மற்றும் நெல்லுக்குடி வனப்பாதைகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தியாகராஜன், கம்பம் காசி விஸ்வநாத பெருமாள் கோவில் நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவில் அறக்கட்டளை செயலாளர் ராஜ கணேசன், பொருளாளர் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர். இக்கோவிலை விரைந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்தி றனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும்.
    • அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி திருக்கோ யிலுக்கு செலுத்தவேண்டிய எவ்விதக் கட்டணமும் இல்லாமல் மாற்றுத்தி றனாளி திருமணம் நேற்று நடைபெற்றது.

    தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

    அதன்படி நேற்று கும்பகோணம் தாலுக்கா, அண்ணலக்கிரஹாரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணப்பெண் தேவி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த பிரபு என்பவருக்கும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.

    அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கோயில் துணை ஆணையர் உமாதேவி மணமக்களுக்கு பட்டுப் புத்தாடைகள், கோயில் பிரசாதங்கள் வழங்கினார்.

    நிகழ்வில் கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவில் உள்விவகாரங்களில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டியளித்தார்.
    • விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சடகோபராமானுஜ ஜீயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்ரீரங்கம் ரங்க நாதர்கோவிலில் ராமானுஜர் ஏற்படுத்திய வழிபாட்டு முறைகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்றி அமைத்துள்ளனர். தென் ஆச்சாரிய சம்பிரதாயம் உள்ள கோவில்களில் மரபு மீறப்பட்டு வருகிறது.

    கோவில் நிர்வாகம் சிறப்பாக நடைபெற அறநிலையத்துறை ஒத்துழைப்பு அளித்தாலும், சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படு கின்றனர். கோவில் உள் விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை.

    ஆனால் ஸ்ரீரங்கம்கோவிலில் உற்சவ நாட்களில் விஸ்வரூப தரிசனம் தடை, பெருமாளுக்கு நைவேத்யம் செய்வதில் மாற்றம் செய்து முன்பு செயல் அலுவலராக இருந்த ஜெயராம், விதிமு றைகளை திருத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்று சில அதிகாரிகள் செய்யும் தவறால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலை யத்துறை தவறுகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 5-ந் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முத்தரையர் சங்க தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தினை குத்தகை அடிப்படையில் நகராட்சிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
    • பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு தீர்மானம் கைவிடப்பட்டது என நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் எனது தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில். என்னால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் எண் 166 படி நகராட்சியில் தற்போது இயங்கி வரும் பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாததால் தினம்தோறும் வந்து செல்லும் வெளியூர் மக்கள் நலன் கருதி பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் நிறுத்தி வைக்கும் நிலையில், போதிய இட வசதிகளுடன் கூடிய அனைத்து அடிப்படை வசதிகளுடன் நவீன பஸ் நிலையம் அமைப்பதற்கு தேவையான இடம், இதற்காக தற்போது இயங்கி வரும் பேருந்து நிலையத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பண்பொழி சாலை அருகில் அமைந்துள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான 8.84 ஏக்கர் பரப்பளவில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய பயன்பாட்டில் உள்ள நிலத்தினை பொது நோக்கத்திற்காக இந்நகராட்சிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் கடையநல்லூர் நகராட்சிக்கு வழங்குவதற்காக தீர்மானத்தினை நகர் மன்றத்தில் நானே கொண்டு வந்தேன். ஆனால் தற்போது நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் வேண்டுகோள் படி பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு மேற்கண்ட விவசாய பயன்பாடு உள்ள நிலத்தினை அறநிலையத்துறையிடம் இருந்து கடையநல்லூர் நகராட்சிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்ற தீர்மானம் கைவிடப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது.
    • சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்வதற்கு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது தடை விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதற்கிடையே, தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. இருப்பினும் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கவில்லை என பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்ட உத்தரவில், ஒவ்வொரு காலபூஜை முடிந்த பிறகும், முதல் 30 நிமிடத்திற்கு தேவார, திருவாசக திருமுறைகளை ஓதி வழிபடலாம். தேவாரம், திருவாசகம் பாட கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது. தேவாரம், திருவாசகம் பாடுவது பிற பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையிலும், திருக்கோவிலின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் அறநிலையத்துறை உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 2 நாட்கள் ஆய்வு செய்ய சென்றனர்.

    இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இந்த நிலையில் கோவில் நிர்வாகம் குறித்து கருத்து தெரிவிக்க ஆலோசனை வழங்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 3 மணிவரை நேரில் தெரிவிக்கலாம். அதோடு மின் அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×