என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுரை ரெயில் நிலையம்"
- ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.
- பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கும் ரெயில் வசதி கிடையாது.
தென்காசி:
மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்திலும், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. தென்காசி ரெயில் நிலையம் ரூ.21.60 கோடி வருமானத்துடன் 9-வது இடத்தில் உள்ளது.
இதில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ், ஈரோடு எக்ஸ்பிரஸ், நெல்லை-செங்கோட்டை 4 ஜோடி பயணிகள் ரெயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் ஆகியவற்றால் தென்காசி ரெயில் நிலையத்தின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.
மதுரை கோட்டத்தில் மொத்தம் 132 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் நூற்றாண்டு பழமை கொண்ட நெல்லை-தென்காசி வழித்தடம் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை செங்கோட்டையில் இருந்து அம்பை, கல்லிடைக்குறிச்சி, நெல்லை சந்திப்பு வழியாக சென்னைக்கு தினசரி ரெயில் இல்லை. மேலும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கும் ரெயில் வசதி கிடையாது.
எனினும் இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் மதுரை கோட்டத்தின் வருமானத்தில் முதல் 50 இடத்திற்குள் வந்துள்ள நிலையில் இந்த வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை-தென்காசி வழித்தடத்தின் பிரதான கோரிக்கையான சென்னைக்கு தினசரி ரெயிலை மத்தியில் புதிய அரசு அமைந்ததும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது செங்கோட்டை-தாம்பரம் இடையே வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே ரெயில் இயக்கப்படுகிறது. அதனை தினமும் இயக்க வேண்டும். மேலும் மும்பை, பெங்களூரு, மங்களூரு ஆகிய ஊர்களுக்கு தென்காசி வழியாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் அதிகரித்து வருவதால் திருவனந்தபுரம் செல்வதற்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
- ரெயில் நிலையத்தில் பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த தாய்மார்களிடம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என கேட்டபோது அவர்கள் குழந்தைக்கு பால் புகட்ட மறுத்தனர்.
- தொடர்ந்து அழுததால் குழந்தையின் தொண்டை வறண்டு போனது.
மதுரை:
சென்னையில் அருந்து மதுரை வரை இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் 3 மாத கைக்குழந்தையுடன் ஆண் பயணி ஒருவர் ஏறினார். நீண்ட நேரமாக கைக்குழந்தை பசியால் அழுவதை பார்த்த சக பயணிகள் குழந்தையை வைத்திருந்த நபரை சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கினர்.
இதனையடுத்து மதுரை ரெயில் நிலையத்தில் குழந்தையுடன் அந்த நபர் இறங்கியவுடன் அவரை பின்தொடர்ந்து சில பயணிகள் சென்றனர். ஒரு கட்டத்தில் குழந்தை கடத்தலோ என்ற அச்சத்தில் அவரை தாக்க முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் குழந்தையுடன் வந்த பயணியை பிடித்து சக ரெயில் பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதம் காரணமாக குழந்தையை தூக்கி வந்தது தெரிந்தது.
இதனையடுத்து அவருடைய மனைவிக்கு தகவல் கொடுத்து மனைவியிடம் குழந்தையை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனிடையே நள்ளிரவு 2 மணி முதல் பச்சிளங்குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது. பலர் பாட்டில் மூலமாக பால் கொடுத்தபோதும் குழந்தை பால் அருந்தவில்லை. தொடர்ந்து அழுததால் குழந்தையின் தொண்டை வறண்டு போனது.
இதற்கிடையே ரெயில் நிலையத்தில் பச்சிளங்குழந்தைகளுடன் இருந்த தாய்மார்களிடம் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என கேட்டபோது அவர்கள் குழந்தைக்கு பால் புகட்ட மறுத்தனர். அப்போது அங்கு வந்து கோவை செல்வதற்காக மதுரை ரெயில் நிலையத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் குழந்தைக்கு பால் புகட்ட முன்வந்தார்.
கோவை செல்லும் ரெயில் புறப்பட 15 நிமிடங்களே இருந்த நிலையில் குழந்தையின் அழுகையை உணர்ந்து தாயுள்ளத்தோடு வந்து பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி குழந்தையின் பசியாற்றினார். பசியால் பல மணிநேரம் அழுத குழந்தைக்கு கருணையோடு தாய்ப்பால் புகட்டிய பெண்ணை பலரும் பாராட்டினர். மேலும் பயணிகள் சிலரும், ரெயில்வே போலீசாரும் அவருக்கு இனிப்புகளை வாங்கிக் கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.
- 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினர் அபிநந்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதனை செய்தனர். இதில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
- அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
மதுரை:
சென்னை வில்லிவாக்கம் லட்சுமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் அபிநந்தனா(வயது15). 10-ம் வகுப்பு மாணவி. கூடைப் பந்து வீராங்கனையான அபிநந்தனா விருதுநகரில் நடந்த கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த 15-ந் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயிலில் விருதுநகர் வந்துள்ளார்.
அவருடன் பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வந்துள்ளனர். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த போதிலும் முழுமையாக குணமடையவில்லை.மேலும் அவரால் விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்ற முடியவில்லை. இந்த நிலையில் விருதுநகரில் நடைபெற்ற போட்டிகள் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து அவர் 4 பயிற்சியாளர்கள் மற்றும் 24 மாணவ-மாணவிகளுடன் விருதுநகரில் இருந்து திருமங்கலத்திற்கு இன்று பஸ்சில் வந்துள்ளார். பின்னர் திருமங்கலத்தில் இருந்து பஸ்சில் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்தார். இதைத்தொடர்ந்து பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுடன் மதுரை ரெயில் நிலையத்திற்கு அபிநந்தனா சென்றார்.
அவர்கள் சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது அபிநந்தனா திடீரென மயங்கி விழுந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினர் அபிநந்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதனை செய்தனர்.
இதில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
- இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்களாக நடந்து வந்தன.
- மதுரை ரெயில் நிலையத்தில் புதிதாக கணிப்பொறி மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்ப நுண்ணறிவு இயக்கிகள் ஆகியவை நிறுவப்பட்டு உள்ளன.
மதுரை:
மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்களாக நடந்து வந்தன. எனவே அந்த வழியாக செல்லும் ஒருசில ரெயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரெயில்கள் அருப்புக் கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து மதுரை ரெயில் நிலையத்தில் புதிய மின்மயமாக்கல், ரெயில் பாதை இணைப்புகள், சைகை மின்னணு கைகாட்டி, காலி ரெயில் பெட்டிகளை ரெயில் நிலையத்தில் இருந்து எடுத்து செல்ல தனிப்பாதை அமைப்பு, ரெயில் என்ஜின்கள் நிறுத்த தனி ரெயில் பாதை, புதிய நடைமேடை, நடைமேடை நீட்டிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடந்தன. அவை நேற்றுடன் முடிந்தன.
எனவே ஏற்கனவே மதுரை வழியாக சென்று வந்த அனைத்து ரெயில்களும் இன்று(8-ந்தேதி) முதல் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ரெயில் நிலையத்தில் தினமும் சராசரியாக 65 பயணிகள் ரெயில், 10 சரக்கு ரெயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.
மதுரை ரெயில் நிலையத்தில் புதிதாக கணிப்பொறி மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்ப நுண்ணறிவு இயக்கிகள் ஆகியவை நிறுவப்பட்டு உள்ளன. அவற்றின் மூலம் ரெயில்கள் பாதுகாப்பாக இயக்கப்பட உள்ளன. இதற்காக அந்தந்த ரெயில் நிலையங்களில் 75 செ.மீ. அகல கணிப்பொறி திரைகள் நிர்மானிக்கப்பட்டு உள்ளன.
இதில் ரெயில் பாதை அமைப்புகள், கலர் விளக்கு சிக்னல், ரெயில் பாதை பாய்ண்ட் இணைப்புகள் ஆகியவை உள்ளன. எனவே நிலைய அதிகாரி கணிப்பொறி "மவுஸ்" மூலம் ரெயில்களின் பாயிண்டுகளை நேர் செய்வது, சிக்னல் விளக்குகளை ஒளிரச் செய்வது போன்றவற்றை எளிதாக செய்யலாம். அதேபோல் எந்தெந்த பாதைகளில் ரெயில்கள் உள்ளன? என்பதையும் தெளிவாக அறிய இயலும்.
தென்னக ரெயில்வேயில் மதுரை ரெயில் நிலையத்தில் தான் அதிக அளவில் 385 ரெயில் பாதைகள், 88 ரெயில் பாதை இணைப்புகள், 100 சிக்னல் வயரிங் அமைப்புகள் ஆகியவை உள்ளன. இந்த மின்னணு தொழில்நுட்பம் கடந்த 2012-ம் ஆண்டு மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு தேனி அகல ரெயில்பாதை தொடக்கத்தின் போது மேலும் மெருகூட்டப்பட்டது.
மதுரை ரெயில் நிலையத்தில் சமீபத்தில் இணைப்பு பணிகள் நடந்தபோது, அதில் மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் நிலைய அதிகாரிகள் விரைவாக முடிவு எடுத்து ரெயில்களை தாமதம் இன்றி பாதுகாப்புடன் இயக்க முடியும்.
திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரெயில் நிலையத்திலும் ரெயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக, புதிய தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் திருச்சி-நெல்லை மற்றும் செங்கோட்டை-புனலூர் ஆகிய பிரிவுகளில் உள்ள ரெயில் நிலையங்களில் புதிய மின்னணு சைகை தொழில்நுட்பம் வாயிலாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- முதலில் சரக்கு ரெயிலின் தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகள் தனியாக இழுத்து செல்லப்பட்டன.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் தினமும் அதிக ரெயில்கள் கடந்து செல்லும் நிலையமாக திகழ்வது வாடிப்பட்டி ரெயில் நிலையம். தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக வெளி மாநிலங்கள், வெளி ஊர்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் இந்த வழியாக தான் சென்று வருகின்றன.
மேலும் இந்த ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடகா, அஸ்ஸாம், மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் டிராக்டர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதே போன்று வடமாநிலத்திற்கு டிராக்டர்கள் ஏற்றி செல்வதற்காக சரக்கு ரெயில் ஒன்று 24 பெட்டிகளுடன் வாடிப்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. நள்ளிரவு 1.20 மணியளவில் மதுரை ரெயில் நிலைய 3-வது நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த ரெயிலின் நடுப்பகுதியில் இருந்த 2 பெட்டிகள் திடீரென தடம்புரண்டன.
மேலும் தடம்புரண்ட பெட்டிகள் நடைமேடையில் மோதியது. இதையடுத்து என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். நடைமேடையில் ரெயில் பெட்டிகள் மோதியதால் பயங்கர சத்தம் எழுந்தது. இதனால் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
முதலில் சரக்கு ரெயிலின் தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகள் தனியாக இழுத்து செல்லப்பட்டன. பின்பு மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் இழுவை என்ஜின் வரவழைக்கப்பட்டு தடம்புரண்ட பெட்டிகள் தண்டவாளத்தில் தூக்கி வைக்கப்பட்டன.
மீட்பு பணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சென்னை மற்றும் வெளியூர்களிலிருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஏராளமான ரெயில்கள் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு பிறகே மதுரையை கடந்து செல்லும்.
மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டதால் அந்த ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
3-வது நடைமேடையை தவிர மீதமுள்ள நடைமேடைகள் வழியாக ஒவ்வொரு ரெயிலாக இயக்கப்பட்டன. இதனால் அனைத்து ரெயில்களும் காலதாமதமாக மதுரையை கடந்து சென்றன.
சென்னை-கொல்லம், பெங்களூரு-நாகர்கோவில், கோவை-நாகர்கோவில், சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக சென்றன.
தடம்புரண்ட ரெயில்பெட்டிகள் பிளாட்பாரத்தில் மோதியதால் அவை சேதமடைந்தன. அதே போல் பெட்டிகள் மோதியதில் பிளாட்பாரமும் சற்று சேதமடைந்தது. நள்ளிரவு 2 மணிக்கு மேல் தொடங்கி மீட்பு பணி இன்று காலை 5.50 மணிக்கு முழுமையாக நிறைவடைந்தது.
மதுரை ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் மதுரை ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் ஊழியர்கள் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சரக்கு ரெயிலின் என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில் நிலைய ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் கூடல்நகர் பகுதியில் இதே போன்று சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறிப்பிடத்தக்கது. * * * தடம்புரண்ட சரக்கு ரெயில் பிளாட்பாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. * * * சேதமடைந்த ரெயில் பெட்டிகள். * * * தடம்புரண்ட ரெயில் பெட்டி நடைமேடையில் மோதி நிற்கும் காட்சி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்