search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையர்"

    • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. தரை தளத்தில் உள்ள வீடுகள் முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நின்றதால் பெரும்பாலானோர் வீடுகளை பூட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டனர். மேலும் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் ஹெலிகாப்டர்களிலும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து உள்ளதால் வீடுகளுக்கு மக்கள் திரும்பி உள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

    மழை வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் மற்றும் பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட எலெக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து உரிமையாளர்கள் கண்ணீர் வடித்தனர்.

    இதற்கிடையே முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் வடிந்த பகுதியில் பொதுமக்கள் திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். அப்போது வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    வரதராஜபுரம் பகுதியில் விஷ்னு என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் 17 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கனமழை காரணமாக முடிச்சூர் முழுவதும் மழை நீரால் மூழ்கி போனதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருந்தனர். தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சரத்குமார் என்பவர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், கண்ணண் என்பவரது வீட்டில் 15 நகை, விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், கார்த்திக் என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, அருண் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை என மொத்தம் 60 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை அள்ளிச் சென்று உள்ளனர்.

    சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மற்றும் வாங்கிய நகைகளை மழை வெள்ளத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருப்பதை கண்டு அதனை பறி கொடுத்தவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் செயல்படவில்லை. இதனால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே அதே பகுதியில் 3 மாதத்திற்கு முன்பு 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன நிலையில் குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை தற்போது மீண்டும் கை வரிசை காட்டி உள்ளனர்.

    மழைவெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும் அவசரத்தில் வீட்டில் இருந்த நகை மற்றும் ரொக்கப்பணத்தை பெரும்பாலானோர் அப்படியே விட்டுச்சென்று இருந்தனர்.

    வெள்ளத்தின் போது பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நகை-பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர். மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் முடிச்சூர் பகுதியிலும் சில வீடுகளில் கொள்ளை நடந்து உள்ளது. இது தொடர்பாகபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மழை பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவுவது போல் நடித்து மனிதாபிமானம் இல்லாமல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    • மண்ணடி தனியார் தங்கும் விடுதியில் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.
    • கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    மாதவரம்:

    சென்னை மாதவரத்தை அடுத்த பொன்னியம்மன் மேடு ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா ( 36). கடந்த மாதம் 14-ந் தேதி தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேர் கொண்ட மர்மகும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து, கவிதா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து கவிதா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். 200-க்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சென்னை மண்ணடி தனியார் தங்கும் விடுதியில் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார் மகேந்திரகுமார், என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வட மாநிலத்தினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது அவர்களை பிடிக்க துணை கமிஷனர் சக்திவேல் உத்தரவிட்டார்.

    உதவி கமிஷனர் ஆதி மூலம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ஜெயப்பிரகாஷ் ஆகி யோர் கொண்ட தனிப்படை போலீசார், ராஜஸ்தான் சென்றனர். அங்கு செல்போன் சிக்னலை வைத்து கொள்ளையர்களை 'தீரன்' பட பாணியில் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் மர்வார் கிராமத்தை சேர்ந்த தினேஷ் புஜ்ஜாரா (28), ரமேஷ் பஞ்சாரா (28) ஆகிய 2 கொள்ளையர்கள் மீதும் அந்த மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண் டானா சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் கோபி. கன்னியாகுமரியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    வியாபாரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று காலையில் இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இது பற்றி அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கன்னியா குமரி டி.எஸ்.பி. மகேஷ் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் நோட்டமிட்ட யாரோ சில மர்ம நபர்கள் இந்த வீட்டில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்தி அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது தெரியவந்தது.

    மேலும் அந்த வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தெரிய வந்தது. அந்த பீரோவில் இருந்து 4 பவுன் நகை மற்றும் ரூ.48 ஆயிரம் ரொக்க பணம் போன்றவற்றை அந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற தும் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை நடந்த வீட்டில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.

    மேலும் போலீஸ் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கண்காணிப்பு காமிராவில் ஒரு சில நபர்களுடைய உருவங்கள் தெரிவதால் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீழே விழுந்த ஊழியர்கள் எழுந்து மொபட்டில் இருந்த பணத்தை பார்த்த போது அப்படியே இருந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை சாலையில் வாளவாடி பிரிவு மொடக்குப்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு உடுமலை எஸ்.பி. புரத்தை சேர்ந்த ஜெய ப்பிரகாஷ்(வயது 42), சரவணன் (44) ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு வசூலான பணம் ரூ.3.50 லட்சத்தை பையில் கட்டி மொபட் இருக்கைக்கு அடியில் வைத்தனர். மேலும் வீட்டிற்கு வாங்கிய தக்காளி பையை முன்பக்கம் மாட்டி க்கொண்டு புறப்பட்டனர்.

    வாளவாடி பிரிவு அருகே செல்லும் போது, பின்னால் வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் விழுந்தனர்.

    அப்போது காரில் இருந்து இறங்கிய 3பேர் வீச்சரிவாளை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அலறி சத்தம் போட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் நிலைமையை புரிந்து கொண்டு காரின் முன்பாக தனது பைக்கை நிறுத்தினார். உஷாரான கொள்ளையர்கள் பிரகாஷ், சரவணன் வந்த மொபட்டில் இருந்த பையை பறித்து காரில் தப்பினர்.

    இந்நிலையில் கீழே விழுந்த ஊழியர்கள் எழுந்து மொபட்டில் இருந்த பணத்தை பார்த்த போது அப்படியே இருந்தது. மொபட்டின் முன்பக்கம் தொங்கவிடப்பட்டிருந்த தக்காளி பையை காணவில்லை. அதில் பணம் இருக்கிறது என்று எண்ணி கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் பிரகாசும், சரவணனும் நிம்மதி அடைந்தனர்.

    மேலும் காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்கக மருத்துவமனையில் சேர்ந்தனர். மேலும் தளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    தற்போது தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், பணத்திற்கு பதிலாக தக்காளி பையை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சி.சி.டி.வி. கேமராவில் விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் துணைக்கோவிலாக காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு செல்ல பழைய படிக்கட்டு பாதை மற்றும் புதிய படிக்கட்டு பாதை என 2 வழிகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதைத்தொடர்ந்து இரவு கோவிலை பூட்டி சென்றனர்.

    நேற்று காலை கோவிலை திறப்பதற்காக கோவில் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சென்றனர். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

    மேலும் கோவிலுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பூஜை பொருட்கள், பித்தளை வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். யாரோ மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து பொருட்களை திருடி உள்ளனர். அவர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவின் ஹார்டு டிஸ்க்கையும் திருடிச்ெசன்றி ருக்கிறார்கள்.

    மேலும் சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளை சம்பவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் காமிரா மீது விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டியுள்ளனர்.

    கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை திருடிய சம்பவம் திருப்பரங் குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலைக்கு செல்லும் படிக்கட்டு பாதை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். காசி விசுவநாதர் கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு ள்ளது. இந்தநிலையில் தான் கோவிலில் திருட்டு நடந்திருக்கிறது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து சென்று தலைமறைவாகி விட்டனர்.
    • 3 பேரை பிடித்து சென்று தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    பத்மநாபபுரம் ஆர்.சி. தெருவில் பரலோக மாதா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் வந்த மர்ம திருடர்கள் ஆலய வலதுபுற கதவை உடைத்து உள்ளே புகுந்து மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து சென்று தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஊர் தலைவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் அடிப்படையில் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தி கைரேகை நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்தனர்.

    பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மர்ம நபர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீஸ் படையினர் கடந்த 4 நாட்களாக கொள்ளை யர்களை பிடிக்க கன்னியா குமரி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 3 பேர் மீது சந்தேகம் கொண்ட தனிப்படை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனையிட்டு விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக மாறி மாறி பதில் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் தனிப்படையினர் அவர்களை பிடித்து சென்று தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணை அடிப்படை யில் 3 பேரும் சேர்ந்து மாதா சொரூபத்தில் கிடந்த செயினை திருடியதை ஒப்புக்கொண்டனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும் களக்காடு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சதீஷ் (26), தென்காசி வேதகோவில் தெருவை சேர்ந்த நவீன் ஆண்டனி ராஜா (24), ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த வினித் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் திருச்செந்தூர், களக்காடு, சுசீந்திரம், தக்கலை ஆகிய பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    தொடர்ந்து மாதா சொரூபத்திலிருந்து திருடிய 7 பவுன் தங்கச் செயினை போலீசார் அவர்களிடம் இருந்து மீட்டனர். தொடர்ந்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
    • ஆலயத்தில் வைக்கபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவு பெட்டியையும் கொள்ளையர்கள் தூக்கி சென்று விட்டனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் வளாகத்தில் நரசிம்மர் மடம் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு நேற்று காலை அர்ச்ச கர் உண்ணிகிருஷ்ணன் ஷம்புநாத் வந்த போது, உண்டியல் உடைக்கப்ப ட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    ஆலயத்தின் மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரிசி பானையை திறந்து அதில் வைக்கபட்டிருந்த சாவிகளை எடுத்து 2 உண்டியல்களையும் திறந்து கொள்ளை சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஆலயத்தில் வைக்கபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவு பெட்டியையும் கொள்ளையர்கள் தூக்கி சென்று விட்டனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கைரேகை நிபுணர்களை அழைத்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது உண்டியலின் மேற்பகுதியில் 2 பேரின் கைரேகை பதிந்த தடயம் கிடைத்தது. அதை வைத்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். பழைய கொள்ளையர்களின் கைரேகை தடயங்களுடன் ஓப்பிட்டும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொள்ளையர்கள் கோவிலின் பின்பக்கம் வழியாக நடந்து சென்று பக்கத்தில் உள்ள ஆற்றின் கரையோரம் தான் சென்றிருப்பார்கள் என்று தெரிகிறது.

    • வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன்( வயது 38).தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 7-ந் தேதி பிருந்தா குழந்தையுடன் வில்லுக்குறி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். சங்கரநாராயணன் வேலை விஷயமாக நிறுவனத்தில் தங்கியிருந்தார்.அதிகாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 62 பவுன் நகை, ரூ.90 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்தனர். அப்போது இரண்டு கைரேகைகள் சிக்கியது. கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

    அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது .அப்போது கண்காணிப்பு கேமராவில் இரண்டு நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர் .அந்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த ப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • சுசீந்திரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரிடம் நகை பறிக்கப்பட்டது .
    • நிலையில் கொள்ளை வழக்கு தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது .சுசீந்திரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரிடம் நகை பறிக்கப்பட்டது .

    இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கொள்ளை வழக்கு தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட் டது. அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் பெண்ணிடம் நகையை பறித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 2 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்டவர்கள் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த சுதன் (வயது 28) கங்கை கொண்டான் பகுதியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (22) சுடர்மணி (24) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு வேறு வழக்கில் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பீரோவை உடைத்ததால் பரபரப்பு
    • கன்னியாகுமரி போலீசில் புகார்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால் விளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது40).இவர் பஞ்சாபில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இவரது தாயார் சாரதா சிறிய டீ கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை 6 மணிக்கு கடைக்கு வந்து பார்த்த போது அதன் அருகில் உள்ள தனது மகன் ராஜனின் வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்த போது யாரோ மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்தது தெரிய வந்தது. நகைகள் எதுவும் இல்லாததால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்
    • களியக்காவிளை பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள நெடுங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பிரகாஷ். இவருடைய மனைவி உஷாமேரி.

    இவர் பனங்காலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.தினமும் மாலை பள்ளி முடிந்த பிறகு களியக்கா விளை பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம்.

    நேற்று மாலை உஷாமேரி பஸ்சில் களியக்காவிளை பஸ் நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வந்தனர்.

    அவர்கள் உஷாமேரியின் அருகில் வந்து முகவரி கேட்பது போல் ஒரு பேப்பரை காட்டி உள்ளனர். அதனை வாங்கி பார்த்த போது மர்ம நபர்களில் ஒருவன் உஷாமேரியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உஷாமேரி திருடன்....திருடன்... என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் நகையுடன் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் நிலைய த்தில் உஷாமேரி புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த களியக்காவிளை போலீசார் ஆசிரியையிடம் நகை பறித்த மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். களியக்காவிளை பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்க ளால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 48 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
    • சுபா வீட்டில் இருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    ஈத்தாமொழி அருகே காளிச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் வெளிநாட்டில் தையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சுபா (வயது 47). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். மகள் மணவாளக்குறிச்சி பகுதி யில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ராமச்சந்திரனும் அவரது மகனும் வெளியூர்களில் உள்ள நிலையில் வீட்டில் சுபாவும் அவரது மகளும் வசித்து வந்தனர்.

    சுபா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகளுடன் வல்லன்குமாரன் விளையில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றார். நேற்று மாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுபா உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 48 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    வீட்டில் 2 இடங்களில் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி இருந்தது. அந்த கைரேகை களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் சுபா வீட்டில் இருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    எனவே உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்தும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    ×