என் மலர்
நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்புத்துறை"
- லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முறைகேடாக பணம் பெற்றுக்கொண்டு விதிகளை மீறி பத்திரப்பதிவு நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமா, ஜான் பெஞ்சமின் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகத்துக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சார்பதிவாளர் பொறுப்பு ஆண்ட்ரோ மெஸ் மாலின் மற்றும் ஊழியர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது. சார்பதிவாளர் அலுவலரின் மோட்டார் சைக்கிளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு லட்சத்து 21 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாலை 4.40 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11.50 மணி வரை நடந்தது.
சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பணம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளது. அவற்றின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக சார்பதிவாளர் பொறுப்பு ஆன்றோ மெஸ் மாலின் கேமரா ஆபரேட்டர் ரெஜினா, இளநிலை உதவியாளர் ரேஷ்மா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் கல்குளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சோதனையில் பெண் துணை தாசில்தார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சத்திரரெட்டியப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.25 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.
விருதுநகர்:
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசுவரன் (வயது59). விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைப்பதிவாளராக உள்ளார். இவர் நேற்று பணி முடிந்து அங்கு கேமரா ஆபரேட்டராக வேலை பார்க்கும் தனது உதவியாளர் முத்துகாசியுடன் மதுரைக்கு காரில் புறப்பட்டார்.
சத்திரரெட்டியப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுந்தரேசுவரனின் காரை நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.25 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.
அதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2 நாட்கள் வசூலித்த பணம் என கூறி உள்ளார். ஆனால் சந்தேகமடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது அலுவலகத்தில் சோதனையிட முடிவு செய்தனர். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சால்வன்துரை, பூமிநாதன் ஆகியோரின் தலைமையில் விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரவு 8 மணியளவில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு பணம் எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து சுந்தேரசுவரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் பணம் வைத்திருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து மதுரையில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.11 லட்சம் பணம் சிக்கியது.
இதுகுறித்து விசாரித்தபோது பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தலா ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்று வந்ததும், தினமும் ரூ.1,200 வாடகை கொடுத்து காரில் மதுரையில் இருந்து விருதுநகருக்கு வந்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சுந்தரேசுவரன், முத்துகாசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆலோசனைபடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் ராமநாதபுரம் சார்பதிவாளர் பெத்துலட்சுமி பஸ் நிலையத்தில் லஞ்ச பணம் வாங்கும்போது கையும், களவுமாக சிக்கினார். அவர் வேலை பார்க்கும் அலுவலகங்களில் சோதனை செய்தபோது ரூ.12 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விருதுநகர் இணைப்பதிவாளர் கார், வீட்டில் இருந்து ரூ.12¼ லட்சம் சிக்கி உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு பத்திரப்பதிவு அலுவலங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ளும்போது கட்டு கட்டாக பணம், ஆவணங்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
லஞ்சம் பெறும் அதிகாரிகளும் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். ஆனாலும் லஞ்சம் பெறுவதும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவில் முறைகேடாக பணம் புழங்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பத்திரப்பதிவு அலுவலங்களில் முறைகேடாக பண பரிமாற்றம் நடப்பதை முழுமையாக தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.க்கள், தலையாரிகள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
தமிழகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு வார விழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டி.எஸ்.பி. பால்சுதர் தலைமையில் சங்கரன் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது.
இதில் சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய வட்டங்களில் பணி புரியும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.எஸ்.பி. பால்சுதர் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் குறிப்பாக சங்கரன்கோவில் பகுதியில் இருந்து வருவாய்த் துறை, நில அளவை துறை, மின்வாரியத்துறை ஆகிய துறைகளின் மீது லஞ்ச புகார் தெரிவித்து அதிகமான போன் கால்கள் வந்த வண்ணம் உள்ளது.
என்னுடைய தனிப்பட்ட என்னை கண்டுபிடித்து புகார் கூறுகின்றனர்.அதனால் தான் சங்கரன் கோவிலில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தோம். இதன் மூலம் 100 பேரில் 5 பேராவது மாறுவார்கள் என்கிற நோக்கம் மட்டும்தான் காரணம்.
நீங்கள் பார்க்கிற துறையில் பல பிரச்சினைகள் உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு நாம் சரியாக இருந்தால் போதும். முடியாது என்று சொன்னால் இடமாற்றம் செய்வார்கள். வேறு இடத்தில் போய் பணி செய்யுங்கள் அவ்வளவு தான்.
அதற்காக வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்தில் ஏறி அலைய வேண்டுமா? உங்கள் குடும்பத்தை எண்ணி பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பால் சுதர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ் பெக்டர் ரவி, தலைமை காவலர்கள் வேணுகோபால், கணேசன் ஆகியோர் சங்கரன்கோவில் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பொதுமக்கள் மற்றும் டிரை வர்களிடம் 'லஞ்சம் கொடுப் பதும் குற்றம் லஞ்சம் வாங்குவதும் குற்றம்' என்ற துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரியிடம், அந்த அரசு ஊழியர் வழங்கியுள்ளார்.
- மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை:
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத்திய அரசின் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வரும் அங்கிட் திவாரி என்பவர், கடந்த அக்டோபர் 29-ந்தேதி திண்டுக்கல்லை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை தொடர்புகொண்டு, அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு முடிந்து போன வழக்கை சுட்டிக்காட்டி, அந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், மறுநாளே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி அந்த அரசு ஊழியர் மதுரைக்கு சென்றபோது, அங்கிட் திவாரி அரசு ஊழியரின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயர் அதிகாரிகளுடன் பேசுவதாக தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார்.
இதையடுத்து கடந்த மாதம் 1-ந்தேதி முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரியிடம், அந்த அரசு ஊழியர் வழங்கியுள்ளார். பின்னர் மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டியுள்ளதால் முழுத்தொகையான ரூ.51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், தொடர்ந்து வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமும் மிரட்டியுள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்த அரசு ஊழியர் கடந்த மாதம் 30-ந்தேதி திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில் அங்கிட் திவாரி அமலாக்கத்துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து அங்கித் திவாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2-வது தவணையாக நேற்று காலை 10.30 மணியளவில் ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டபோது அவர் கையும், களவுமாக பிடிபட்டார். விசாரணையில் இவர், இதுபோல பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதுதொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன. இவர் மட்டுமன்றி, மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் அங்கித் திவாரியின் வீடு, அவருக்கு தொடர்புடைய இதர இடங்கள் மட்டுமன்றி மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்ட விவகாரத்தில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தப்போவதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் நேற்று இரவு சாஸ்திரி பவன் வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் மூடப்பட்டது. மத்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனால் சாஸ்திரி பவன் வளாகம் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
- மதுரையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரியான அங்கிட் திவாரி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2½ ஆண்டுகளாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் தமிழக அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சட்ட விரோத பண பரிமாற்றங்கள் தொடர்பாக தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி கட்டு கட்டாக பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்து உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே சோதனை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தமிழகத்தில் மணல் குவாரிகளில் போலியாக ரசீதுகளை தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரை குறி வைத்து அமலாக்கத்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது மணல் குவாரி முறைகேடு தொடர்பாக யார்-யார் தலையிட்டு பேசியுள்ளனர்? என்கிற விவாதங்களையும் அமலாக்கத்துறையினர் கோர்ட்டில் தகவல் தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் இதுபோன்ற சோதனைகள் மற்றும் நடவடிக்கைகள் அந்த அமைப்பின் மீது மாநிலங்கள் அளவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த போதிலும் அது சுதந்திரமான அமைப்பாகவே நேர்மையான முறையில் செயல்படுவதாகவே பலரும் கூறிவந்தனர்.

இந்த நிலையில் அமலாக்கத்துறையின் நேர்மைக்கு பெரிய களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் மதுரையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரியான அங்கிட் திவாரி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி துணை சூப்பிரண்டாக உள்ள டாக்டர் சுரேஷ்பாபு என்பவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரியான அங்கிட் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்பிச் சென்றபோது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக அவரை விரட்டிச் சென்று பிடித்துள்ளனர்.
ரூ.3 கோடி வரை லஞ்சம் கேட்டு கடைசியாக ரூ.50 லட்சத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்த அதிகாரி அங்கிட் திவாரி முதல்கட்டமாக ரூ.20 லட்சத்தை வாங்கியபோதுதான் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டு உள்ளார். இந்த சம்பவம் தமிழக அரசியல் அரங்கிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.
இதையடுத்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.
சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தப் போவதாக நேற்று இரவு 10 மணி அளவில் தகவல் பரவியது.
இதனால் அங்கு ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி, போட்டோ மற்றும் வீடியோ கிராபர்கள் திரண்டனர். இரவில் எந்த நேரத்திலும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபடலாம் என்கிற தகவல் காட்டுத்தீயாக பரவியது. இதனால் சாஸ்திரி பவன் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை போன்று சென்னை அலுவலகத்திலும் புகுந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவிடக்கூடாதே என்கிற கலக்கம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டு கடும் பீதியாகவே மாறியது.
இதனால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் தனியார் காவலர்கள் தவிக்கும் சூழலும் ஏற்பட் டது. இதையடுத்து உஷாரான அமலாக்கத்துறை அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்காக வந்தால் அதனை தடுத்து நிறுத்துவது என்பது பற்றி ஆலோசித்தனர்.
இதையடுத்து துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரை நுழைவு வாயிலில் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி மத்திய பாதுகாப்புப் படையினர் சாஸ்திரி பவன் வளாகத்துக்கு நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் விரைந்து வந்தனர்.
தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்புக்காக நின்ற இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளை ஏற்றுக்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாஸ்திரி பவன் நுழைவு வாயிலில் உள்ள கதவும் உள்பக்கமாக இழுத்து பூட்டப்பட்டது. ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செல்லவே இல்லை.
மதுரையை தொடர்ந்து சென்னையிலும் சோதனை நடத்தப்போவதாக வெளியான தகவலால் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், அமலாக்கத்துறை அதிகாரிகளை தெறிக்க விட்டுள்ளனர் என்றே கூறலாம். நேற்று இரவு போடப்பட்ட மத்திய படை பாதுகாப்பு இன்று காலையிலும் நீடித்து வருகிறது.
சாஸ்திரி பவன் வளாகத்தில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் இன்று காலையிலும் சாஸ்திரி பவன் வளாகம் பரபரப்பாகவே காணப்பட்டது.
- சில உயர் அதிகாரிகள் அங்கிட் திவாரி லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
- அங்கிட் திவாரியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
மதுரை:
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அங்கிட் திவாரி (வயது 32). இவர், கடந்த 2018-ம் ஆண்டு உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அதாவது, விசாரணை அதிகாரி அந்தஸ்தில் இவர் இருந்துள்ளார்.
காலங்கரை பகுதியில் எம்.என்.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அங்கிட் திவாரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் சுரேஷ்பாபுவிடம் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக மேல்விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக முதல் தவணையாக கடந்த நவம்பர் 1-ந் தேதி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றார். 2-வது தவணையாக ரூ.20 லட்சம் பெறும்போது கையும், களவுமாக அவரை கைது செய்தனர். பின்னர் அங்கிட் திவாரி, நீதிமன்ற காவலில் 15 நாள் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடனடியாக அங்கிட் திவாரி பணிபுரியும் மதுரை அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலும், மதுரையில் உள்ள அவரது வீட்டிலும் அதிரடியாக சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவு வந்தது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருந்தது. பெண் ஊழியர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை 7 மணி வரை என விடிய விடிய கிட்டத்தட்ட 13 மணி நேரம் தொடர்ச்சியாக சோதனை நடந்தது. பின்னர் அமலாக்கத்துறை அலுவலகம் மூடப்பட்டது.
சோதனை குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியது வருமாறு:-
ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பியபோது, போலீசாரிடம் சிக்கிய அங்கிட் திவாரியிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
சில உயர் அதிகாரிகள் அவர் லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். பெரும் தொகையை குறி வைத்து லஞ்ச பேரம் பேசுவது இந்த அதிகாரிகளுக்கு வாடிக்கையாக இருந்துள்ளது.
தாங்கள் லட்சக்கணக்கில் லஞ்சமாக வாங்கும் பணத்தை 7 அதிகாரிகள் பங்கு போட்டுக்கொண்டு உள்ளனர். எனவே அவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கவும் இந்த சோதனை உதவி இருக்கிறது.
விரைவில் அந்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். முழுமையான விசாரணைக்குபின்னரே, இதுகுறித்து மற்ற தகவல்களை தெரிவிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே அங்கிட் திவாரியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக நாளை (திங்கட்கிழமை) திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
- அங்கிட் திவாரியிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நாளை திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில் மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு வழக்கு குறித்து பேசினார்.
அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் டாக்டர் சுரேஷ்பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என கூறியுள்ளார். பின்னர் பேரம் பேசி இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என கூறியுள்ளார்.
அவரிடம் ஏற்கனவே ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரி பெற்றுள்ளார். 2-வது தவணையாக திண்டுக்கல்லில் பணம் பெற முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை காரில் துரத்திச்சென்று கைது செய்தனர். அவரிடம் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி மோகனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி வேறு யாரிடமும் இதேபோல் மிரட்டி பணம் பெற்றாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச்சென்றனர். மேலும் அங்கிட் திவாரிக்கு நெருக்கமான அதிகாரிகளிடம், அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அங்கிட் திவாரியிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நாளை திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற போலீசார் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் சிறையில் இருந்த அவர் இன்று மதுரைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- கையும் களவுமாக ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்துடன் அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
- இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா அங்கிட் திவாரி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டாக்டர் சுரேஷ் பாபு மற்றும் அவரது மனைவி ஆகியோர் விடுவிக்கப்பட்ட நிலையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் எடுத்து தாங்கள் விசாரிக்க இருப்பதாகவும், விசாரணை நடத்தாமல் இருக்க வேண்டுமானால் ரூ.51 லட்சம் தர வேண்டும் என மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கிட் திவாரி கூறியுள்ளார்.
அதன்படி 2-வது தவணையாக ரூ.20 லட்சத்தை பெற்றுக் கொண்டு திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு காரில் திரும்பிச் சென்றபோது விரட்டிச்சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிட் திவாரியை கைது செய்தனர். 15 மணி நேர விசாரணைக்கு பின்பு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை வருகிற 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி மோகனா உத்தரவிட்டார். இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கிட் திவாரி தரப்பில் வக்கீல் விவேக் பாரதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அங்கிட் திவாரி சார்பில் வாதிட்ட விவேக் பாரதி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதிவாதிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறினார்.
ஆனால் இதனை எதிர்த்த அரசு தரப்பு வக்கீல் அணுராதா, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி கையும் களவுமாக ரூ.20 லட்சம் லஞ்சப்பணத்துடன் அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா அங்கிட் திவாரி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அங்கிட் திவாரி கடந்த 2018ம் ஆண்டு உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்தார்.
எம்.என். நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த அவர் சில உயர் அதிகாரிகளின் உடந்தையுடன் பல்வேறு வழக்குகளில் பெரும் தொகையை பேரம் பேசி கிடைக்கும் பணத்தை 7 அதிகாரிகளுடன் பங்கிட்டு கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அவருடன் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களை பெறுவதற்காக அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இது தொடர்பாக அவருடன் தொடர்பில் உள்ள அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதுரை மத்திய சிறையில் இருந்து அங்கிட் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது கடந்த 1ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார்.
அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவருக்கு டாக்டர்கள் கவுன்சிலிங் அளித்தனர். தான் வருமானவரி செலுத்தக்கூடிய நபர் என்பதால் தனக்கு முதல் வகுப்பு அறை வேண்டும் என அவர் வைத்த கோரிக்கையை சிறைத்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர்.
நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிகள் வாரம் ஒருமுறை செல்போன் மூலம் தங்கள் குடும்பத்தினரிடம் பேச அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்தி அங்கிட் திவாரி தனது குடும்பத்தினரிடம் பேசியபோது கதறி அழுதார். அப்போது அவர்கள் அங்கிட் திவாரிக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.
இதனிடையே அங்கிட் திவாரி தான் பெற்ற லஞ்ச பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார். எனவே லஞ்ச பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி மனு அளித்திருந்தனர். அந்த மனு இன்று நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து அங்கிட் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவரது சார்பில் வக்கீல் செல்வம் என்பவர் ஆஜரானார்.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் சேகரிக்க உள்ளதால் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு அங்கிட் திவாரியின் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேட்ட 3 நாள் காவலை வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து போலீசார் அவரை தங்கள் பாதுகாப்பில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அழைத்துச் சென்றனர். மீண்டும் 14ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
- லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தெரியாது என பதிலளித்தார்.
- அங்கிட் திவாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டாக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரியான அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பதாகவும், இதிலிருந்து தப்பிக்க ரூ.51 லட்சம் பணம் தரவேண்டுமென கேட்டுள்ளார்.
அதன்படி கடந்த 1-ம் தேதி திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியபோது போலீசார் அங்கிட் திவாரியை கையும், களவுமாக பிடித்து கைதுசெய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் மனுவை ஏற்றுக்கொண்டு அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
அதன்படி, நேற்று முன்தினம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து அங்கிட் திவாரியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். மதுரையில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 2 லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டது. அந்த லேப்டாப்களை அங்கிட் திவாரியை வைத்து திறக்கச் செய்தனர். அதில் அமலாக்கத்துறை சோதனையின் போது யார் யாரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இருந்தன.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தனக்கு தெரியாது என்று பதிலளித்ததுடன், சில கேள்விகளுக்கு மவுனமாக இருந்துள்ளார். இருந்தபோதும் அமலாக்கத் துறையை காரணம் காட்டி பல்வேறு நபர்களிடம் அங்கிட் திவாரி லஞ்சம் வாங்கி அதை தனது துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கியது தெரிந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் அங்கிட் திவாரி மதுரையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் 3 நாள் காவல் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு அங்கிட் திவாரியை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கிட் திவாரியின் 15 நாள் காவல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிட் திவாரி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தனர்.
அவர் மதுரை சிறையில் சாதாரண கைதிகளை போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், வருமான வரியை கட்டி வருபவர் என்பதால் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்க கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். அரசுத்தரப்பு சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் குற்றவியல் வக்கீல் ஆஜராக வேண்டியிருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கிட் திவாரியை டிசம்பர் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 28-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.
- பொன்முடி மீது போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன.
- பொன்முடி, விசாலாட்சி அகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.
இவரது மனைவி விசாலாட்சி. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2015-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சுந்தரமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.1 கோடியே 36 லட்சத்திற்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. ஆந்திர மாநில பத்திர பதிவுத்துறை தாசில்தார் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட 39 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பொன்முடி மீது போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன.
இதை பொன்முடி தரப்பினர் மறுத்தனர். இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்கிறேன் என்று கூறியிருந்தார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அவர் பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் 4 ஆண்டுகள் தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்து கீழ் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதை ஏற்க முடியாது. இவ்வாறு வருமான வரித்துறைக்கு அளித்த கணக்கின் அடிப்படையில் குற்றவியல் வழக்கில் ஒருவரை விடுதலை செய்ய முடியாது.
மேலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பொன்முடி அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக கணவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவிக்கும்போது, அதற்கு மனைவியும் பொறுப்பாவாரா? என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், அவர் பெயரிலும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதால், அதற்கு அவரும் பொறுப்பாவார் என்று முடிவு செய்கிறேன். லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்து சேர்த்துள்ளனர். அதனால், அவர்களை விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
- டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
- பணத்தை பெற்றுக் கொண்டு காரில் தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
மதுரை:
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் சுரேஷ் பாபு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க தனக்கு ரூ.3 கோடி லஞ்சம் வேண்டும் என மதுரை அமலாக்கத்துறையில் பணிபுரியும் துணை இயக்குனர் அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவை அணுகி உள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து வாட்ஸ்ஆப் மூலமாக அங்கிட் திவாரி, மீதியுள்ள ரூ.31 லட்சத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனையடுத்து டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ரசாயன கலவை தடவிய ரூபாய் நோட்டு கட்டுகளை பேக்கில் வைத்து சுரேஷ் பாபு கொடுத்தார். அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு காரில் தப்பிக்க முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். அங்கிட் திவாரியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த நிலையில் அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி அங்கிட் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று வழக்கை ஒத்தி வைத்திருந்தார்.
இன்று காலை ஜாமீன் வழக்கு குறித்து நீதிபதி சிவஞானம், அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.