search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனல்மின் நிலையம்"

    • மின்சாரம் வெளியில் கொண்டு செல்வதற்கு உயர்மட்ட மின்சாரகோபுரம் அமைக்கும் பணியும் நடந்தது.
    • 80 சதவீத பணிகள் முடிந்து 2025-ம் ஆண்டு இதை திறப்பதற்காக அனைத்து வேலைகளும் முழு வீச்சில் நடந்து வந்தது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் உடன்குடி அனல் மின் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிமிக மிக வேகமாக நடந்து வந்தது

    உடன்குடியில் ரூ.9,250 கோடி மதிப்பீட்டில் 1,301 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்நிலையம் அமைக்கும் பணிக்காக கல்லா மொழி கடற்கரையில் நிலக்கரி இறங்கு தளம் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து முடிவடை யும் நிலையில் இருந்தது.

    கடலில் அமைக்கப்பட்டிருக்கும் பாலம், கட்டிடங்கள் கட்டும் பணிகள் வேகமாக நடந்தன. கப்பலில் வரும் நிலக்கரியை அப்படியே எதிர்புறம் உள்ள அனல்மின் நிலையத்திற்கு நேரடியாக கொண்டு வருவதற்கு உயர்ந்த பாலம் ரோட்டில் குறுக்கே சுமார் 60 அடி உயரத்தில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடந்தது.

    மேலும் இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் வெளியில் கொண்டு செல்வதற்கு உயர்மட்ட மின்சாரகோபுரம் அமைக்கும் பணியும் நடந்தது.

    80 சதவீத பணிகள் முடிந்து 2025-ம் ஆண்டு இதை திறப்பதற்காக அனைத்து வேலைகளும் முழு வீச்சில் நடந்து வந்தது.


    இதை போல குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு முதல் கட்டமாக 2500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக ரூ.6 கோடியே 24 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டு ஆரம்பகட்ட பணியும் தொடங்கியது.

    உடன்குடி அருகில் உள்ள கூடல்நகர் கிராமத்தில் 40 குடும்பங்களை இடம் மாற்றம் செய்ய உடன்குடி அய்யா நகரில் ரூ.4.5 கோடியில் வீடு கட்டும் பணியும் தொடங்கியது. 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் அனல் மின் நிலையத்தை தொடங்கி வைப்பதாகவும், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுவதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக அணுமின் நிலையம் மற்றும் ராக்கெட் ஏவுதளத்திற்கு வர வேண்டிய முக்கியமான மூலப்பொருட்கள் வெளியில் இருந்து கொண்டு வர முடியவில்லை என்பதால் பணிகள் தாமதம் ஆவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறும் போது, பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கும் முன் இந்த இரு திட்ட விழாக்களும் நடைபெறும் என்றனர்.

    • அனல்மின் நிலையம் 500 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகளை கொண்டுள்ளது.
    • சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க இந்த வசதிகள் நிறுவப்படுகின்றன.

    மீஞ்சூர் அருகேயுள்ள அத்திப்பட்டு புது நகரில் வல்லூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அனல்மின் நிலையம் தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. மேலும் இது தேசிய அனல் மின் நிலையம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கூட்டு முயற்சியாகும். இந்த அனல் மின் நிலையம் 500 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகளை கொண்டுள்ளது.

    இந்நிலையில் வல்லூர் அனல்மின் நிலையத்தில் ரூ.876 கோடி செலவில் மாசு கட்டுப்பாட்டு வசதிகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அனல் மின் நிலையங்களில் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க இந்த வசதிகள் நிறுவப்படுகின்றன.

    தேசிய தலைநகர் அல்லது 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 10 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அனல்மின் நிலையங்கள் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் கடந்த 2022-ம் ஆண்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வல்லூர் அனல் மின் நிலையத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த அனல் மின் நிலையம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கூடுதலாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கூடுதல் கட்டுமான பணிகளை கருத்தில் கொண்டு செலவு தொகை சற்று அதிகமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது.
    • ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    கடலூர்:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் நேற்று 20 நாட்களாக நடைபெற்றது.

    இப்போராட்டத்தில் சங்கத் தலைவர் அந்தோணி செல்வராஜ், சிறப்பு தலைவர் சேகர், பொதுச் செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

    பேச்சுவார்த்தைக்கு பின் வெளியே வந்த ஜிவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறும்போது, போராட்டத்தை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி தீர்ப்பு வரஉள்ளது. அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்.

    பேராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளபடாது என என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்துள்ளது. எனவே போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றார்.

    அதன்படி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    • என்.எல்.சி. அனல்மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
    • நிலக்கரி தூசி மாசுபாடுகளை தடுக்க சுரங்கத்தை சுற்றி பசுமை பட்டையை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவன நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி.2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக விளைநிலங்கள் அழிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் என்.எல்.சி. அனல்மின் நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பூவுலக நண்பர்கள் மற்றும் மந்தன் அத்யாயன் கேந்திரா சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அனல்மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் அதிக அளவு பாதரசம், செலினியம் மற்றும் புளோரைடு இருப்பது தெரியவந்தது. வடக்கு வேலூர் தொல்காப்பியர் நகரில் உள்ள ஒரு ஆழ்துளை கிணறு நீரில் பாதரசத்தின் அளவு அனுமதிக்கபட்ட வரம்பை விட 250 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதே கிராமத்தில் குடிநீரில் அதிகஅளவு கொந்தளிப்பு மற்றும் செலினியம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக பொதுமக்களுக்கு சீறுநீரக பிரச்சனைகள், சுவாச மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படுவது தெரியவந்தது. மேலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. நிலக்கரி தூசி மற்றும் சாம்பலின் மாசுபாடுகள் வீடுகளில் இருப்பதை ஆய்வு கண்டிறியப்பட்டுள்ளது.

    கரிக்குப்ப கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் மாசுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும் உள்ளுர் நீர்நிலைகளில் சாம்பலை கொட்டுவதை நிறுத்தவும் சாம்பலை எடுத்து செல்லும் ஓடைகளை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி. பகுதிகளில் குடியிருப்போருக்கு வருடத்திற்கு 2 முறை இலவச சுகாராத முகாம் நடத்த வேண்டும். சுகாதார பிரச்சனைகள் உள்ள கிராமங்களை என்.எல்.சி. பொதுமருத்துவமனை கண்காணிக்க வேண்டும். நிலக்கரி தூசி மாசுபாடுகளை தடுக்க சுரங்கத்தை சுற்றி பசுமை பட்டையை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.

    மனித நேய மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, மண் வாழ்வியலாளர் சுல்தான் இஸ்மாயில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

    • பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.
    • மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தற்போது புதிய அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .

    இதன் காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

    இது போன்று பழைய அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • பணிக்கு கடந்த 5 வருடங்களாக தனியார் நிறுவனம் ஒன்று மூலப்பொருட்களை சப்ளை செய்து வந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதன் 4-வது நிலை மீஞ்சூரை அடுத்த ஊரணம்பேடு பகுதியில் அமைக்கும் பணி ரூ.9800 கோடி மதிப்பில் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த 4-வது நிலையின் மூலமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி இரண்டு அலகுகளில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த பணிக்கு கடந்த 5 வருடங்களாக தனியார் நிறுவனம் ஒன்று மூலப்பொருட்களை சப்ளை செய்து வந்தது.

    அந்த நிறுவனத்திற்கு மணல், ஜல்லி உள்ளிட்ட மூலப்பொருட்களை சப்-காண்டிராக்டர்கள் வழங்கி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு அந்த நிறுவனம் தங்களால் மூலப் பொருட்களை வழங்க இயலாது என்று கூறி வெளியேறியது. ஆனால் 50-க்கும் மேற்பட்ட சப்-காண்டிராக்டர்களுக்கு நிலுவைத்தொகையை அவர்கள் வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ரூ.10 கோடி வரை நிலுவைத்தொகை இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அனல்மின் நிலைய பணிக்கு மூலப்பொருட்களை சப்ளை செய்த சப்-காண்டிராக்டர்கள் 4-வது நிலை அனல் மின் நிலைய வாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவ்வழியே வேறு வாகனங்களையும் உள்ளே விடாமல் தடுத்தனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து காண்டிராக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
    • தொழில் நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 1-வது நிலையின் 2, 3-ம் அலகுகளில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில் நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • 1-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 1-வது நிலையில் உள்ள 1-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    • அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
    • கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில்1-வது நிலையின் 2-வது அலகில் உள்ள கொதிகலனில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதேபோல் 3-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    • 1-வது யுனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது.
    • பழுது சரி செய்யப்பட்ட பிறகு முதல் யுனிட்டில் இருந்து மின் உற்பத்தி மீண்டும் தொடங்கும்.

    மேட்டூர்:

    மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 யுனிட்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 4 யுனிட்கள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு பழைய அனல்மின் நிலையத்தின் 1-வது யுனிட்டில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.

    மற்ற யுனிட்டுகளில் தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்ட பிறகு முதல் யுனிட்டில் இருந்து மின் உற்பத்தி மீண்டும் தொடங்கும் என்று மேட்டூர் அனல்மின் நிலைய பொறியாளர் தெரிவித்தார்

    • வடசென்னை அனல்மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
    • அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப் பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகத்திற்காக உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் எண்ணூர் கழிமுக பகுதியில் மண் கொட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தை சேர்ந்த 8 மீனவ கிராம மக்கள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு படகுகளில் கருப்பு கொடி கட்டி, மின் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அந்த பணிகள் நிறுத்தப்பட்டு, இரு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்த பிரச்சினை குறித்து தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், 8 மீனவ கிராமங்களை சேர்ந்த எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தினரையும், வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரிகளையும் அழைத்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதில் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சிவன்படை வீதி, எண்ணூர் குப்பம், முகத்துவார குப்பம், காட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆகிய 8 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது வடசென்னை அனல் மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது 3-வது அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால் மின் விநியோகம் செய்ய உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் கழிமுக பகுதியில் மண், கல் உள்ளிட்டவைகளை கொட்டி பணிகள் நடப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால், அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

    இரு தரப்பு கருத்துக்களையும் விசாரித்த தாசில்தார் செல்வகுமார், இன்னும் ஓரிரு தினங்களில் தாம் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.

    • அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகள் இன்று இயங்கவில்லை.
    • மற்ற 3 அலகுகள் இயங்கி வருவதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அனல் மின்நிலையத்தில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகள் இன்று இயங்கவில்லை. இதனால் அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 420 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    எனினும் மற்ற 3 அலகுகள் இயங்கி வருவதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அனல்மின் நிலைய அதிகாரி களிடம் கேட்டபோது காற்றாலை மூலம் தற்போது அதிகளவு மின்சாரம் கிடைத்து வருவதால் அனல்மின் நிலையத்தின் 2 அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ×