search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தரசன்"

    • பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது.
    • முதிர்ச்சியான அரசியல் போக்கு இல்லை.

    கோவையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈஷா குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசனுக்கு ஈஷா அறக்கட்டளை கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'பெண்களுக்கான அழகுல ஒண்ணு கூந்தல் அழகு' என்று முத்தரசன் கூறியிருக்கிறார். ஒரு கம்யூனிச சித்தாந்த அரசியல் தலைவரிடம் இருந்து இப்படியான பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது.

    பெண்களின் அழகு கூந்தலில் இல்லை. குடும்பம், சமுதாயம், சித்தாந்தம், மதம் உள்ளிட்ட காரணிகளின் கட்டாயங்கள் ஏதும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை சுயமாக அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    உண்மை என்ன என்பதை நேரடியாகவோ அல்லது ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள், அரசின் நேரடி கள ஆய்வு அறிக்கைகள் என பொதுவெளியில் எளிதில் கிடைக்கும் அரசு ஆவணங்களை கூட தேடி படிக்காமல், உண்மையை அறிந்து கொள்ளும் விருப்பமும் இல்லாமல், ஏதோவொரு கட்டாய நிர்பந்தத்தின் பேரில், யாரோ சிலர் எழுதிக் கொடுத்த அவதூறுகளை முத்தரசன் ஊடகங்களுக்கு முன் படித்து காட்டியது முதிர்ச்சியான அரசியல் போக்கு இல்லை. ஒரு தேசிய கட்சியின் மாநில செயலாளரே இப்படி செய்வது வருத்தத்திற்கு உரியது.

    2022-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்ட வருவாய்த்துறை மற்றும் வனத்துறையின் கூட்டு ஆய்வு அறிக்கையில், "ஈஷா யோக மையத்தின் எல்லைகளை அளவீடு மேற்கொண்டதில் அவர்கள் காப்புக்காடு (வனப்பகுதி) பகுதியில் எந்தவிதமான ஆக்கிரமிப்போ, அத்துமீறல்களோ செய்யவில்லை என நில அளவையிலான அடிப்படையில் தெரிய வருகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.

    பழங்குடியினருக்கு சொந்தமானது என்று கூறப்படும் 44.3 ஏக்கர் அளவிலான நிலங்கள் எதனையும் ஈஷா அறக்கட்டளை ஆக்கிரமிக்கவில்லை என்பதை வருவாய்த்துறை ஆவணங்களும், ஆர்.டி.ஐ. தகவல்களும் தெளிவாக கூறுகின்றன.

    ஈஷாவில் பல்வேறு நிலைகளில் இருக்ககூடிய நூற்றுக்கணக்கான பெண்களிடம், காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஈஷா பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவே கூறியுள்ளனர். இதனை காவல்துறையும் அதன் அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

    சமீபத்தில் உச்சநீதிமன்றம், இரு பெண் துறவிகள் குறித்த வழக்கில் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் தான் ஈஷாவில் இருப்பதாக மிகத்தெளிவான தீர்ப்பினை அளித்துள்ளது. மேலும் ஒரு அமைப்பை இழிப்படுத்துவதற்காக மனுக்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியது.

    ஈஷாவின் நற்பணிகளால் தினமும் பல்லாயிரகணக்கான விளிம்பு நிலை மக்கள், பழங்குடியின மற்றும் பட்டியலின மக்கள் பயன்பெற்று வருகின்றனர். சாதி, மத, இன பேதங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் யாதும் இன்றி பல கோடி மக்களுக்கு இந்த மண்ணின் ஆன்மீகத்தை அதன் தூய வடிவில் ஈஷா அறக்கட்டளை வழங்கி வருகிறது.

    ஆகவே உண்மைக்கு புறம்பான, பொய்யான அவதூறு கருத்துக்களை முத்தரசன் பரப்ப வேண்டாம் என ஈஷா அறக்கட்டளை கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
    • ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தப்படுத்த வேண்டும்.

    திருச்சி:

    திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    திமுக கூட்டணியை விட்டு கூட்டணிக் கட்சிகள் வெளியேறி விடுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது, அவரது ஆசை மற்றும் விருப்பம். அதிமுக எரிந்துகொண்டிருக்கிறது; முதலில் அதை எடப்பாடி பழனிசாமி அணைக்க வேண்டும். திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாகவும், ஒற்றுமையுடனும் இருக்கிறோம். இந்த அணி தொடரும். மேலும் பலப்படும்.

    ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தப்படுத்த வேண்டும், குறிப்பாக, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும், மற்றவர்களுக்கு வழங்குவதுபோல இவர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் என சீமான் கூறுகிறார். அவர் ஆட்சிக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அதற்கு முன்னதாக தற்போது தமிழ்தாயை மதிக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா, வேண்டாமா? என்பதை சீமான் முதலில் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இஸ்ரேல் நாட்டில் இன அழிப்பு போர் கண்டனத்துக்கு உரியது.
    • வனத்துறை அமைச்சர் பழங்குடி மக்களையும், வனங்களையும் பாதுகாக்க வேண்டும்.

    கோவை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இஸ்ரேல் நாட்டில் இன அழிப்பு போர் கண்டனத்துக்கு உரியது. இது உலகளவில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை முன்னாள் பிரதமர் நேரு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டார்.

    ஆனால் தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் எதிரானது. எனவே நமது தேசம் இனஅழிப்புக்கு எதிராக செயல்பட வேண்டும். இதை வலியுறுத்தி இடதுசாரிகள் சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றும் 1500 தொழிலாளர்கள் தங்களுக்கென சங்கம் அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். இதற்கு அவர்களுக்கு சட்டரீதியாக உரிமை உண்டு. இந்த விஷயத்தில் தலையிட்டு 3 அமைச்சர்கள் குழுவை அமைத்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி.

    கோவை மாவட்டத்தில் பழங்குடி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களை அபகரித்து ஆக்கிரமிக்கும் போக்கு அதிகளவில் நடந்து வருகிறது. மேலும் வனத்துறையினர் பழங்குடியிருனக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து நவீன விடுதிகளை அமைத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தரப்பட்டு உள்ளது. இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சனை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தனிப்பட்ட உரிமையாளருக்கு ஆதரவாக செயல்படுவது ஆபத்தானது. எனவே வனத்துறை அமைச்சர் பழங்குடி மக்களையும், வனங்களையும் பாதுகாக்க வேண்டும்.

    மின்கட்டண உயர்வு சிறு-குறு தொழில்களை பாதித்து உள்ள விஷயத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று உள்ளோம். தேர்தலுக்கு பிறகு மின்கட்டண உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென சொன்ன மாநில அரசு, மின்கட்டண உயர்வில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ராஜபாளையம் பகுதியில் மூடப்பட்ட நூற்பாலை தொழிலை காப்பாற்ற, மூலப்பொருட்கள் கிடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு இருப்பதாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். ஆனால் அனைத்திலும் அரசியல் செய்கிறீர்கள். கடவுளையாவது விட்டு வையுங்கள் என சுப்ரீம் கோர்ட்டு கண்டித்து விசாரணை குழுவும் அமைத்து உள்ளது. அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து விட்டது. நிறைய பிரச்சனைகள் உள்ள நிலையில் மக்களை திசை திருப்ப அற்பத்தனமாக அரசியல் செய்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய இறையாண்மைக்கு எதிரான பட்ஜெட்.
    • 600-க்கும் மேற்பட்டோர் கைது.

    கோவை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவையில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அரசியல் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    போராட்டத்தில் ஏராளமான இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தையொட்டி அங்கு உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் ஆவேசமான போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரவுண்டனா சாலையில் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை கலைந்து போக சொல்லியும் கேட்கவில்லை.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலரை போலீசார் கைது செய்து குண்டுக்கட்டாக வேனில் ஏற்றினர்.

    தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள் முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாநில குழு உறுப்பினர் ராதிகா, மார்க்சிஸ்ட் லெனின் லிஸ்ட் பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம் மற்றும் 130 பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இந்த போராட்டத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு வாகனங்கள் சென்றன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    முன்னதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் பட்ஜெட். இந்த பட்ஜெட்டினால் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் அல்லாத மற்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இது இந்திய இறையாண்மைக்கு எதிரான பட்ஜெட். இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்.
    • குற்றவியல் சட்டம் குறித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதியிலும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்று இருக்கிறது. இதற்கு தமிழக மக்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

    மாஞ்சோலை தேயிலை தோட்டம், மின்கட்டண உயர்வு, வேலை உறுதித்திட்டம், மத்திய அரசின் குற்றவியல் சட்டம் குறித்து 4 நாள் கூட்டத்தில் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மின்கட்டண உயர்வு என்பது மத்திய அரசின் நிர்பந்தத்தினால் தமிழக அரசு உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் மக்கள் பாதிக்கப்படுவதால், கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி வரும் ஜூலை 29-ந் தேதி அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    குற்றவியல் சட்டம் குறித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆகஸ்ட் 9-ந் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சட்டநகல் எரிப்பு போராட்டம் நடைபெறும்.

    வேலை உறுதி திட்டத்தில் 4 மாத காலமாக வேலையும், ஊதியுமும் வழங்கவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு ஊராட்சி மன்ற தலைவர் களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. வேலை வழங்கப்பட வில்லை என்றால் வேலை உறுதி அளிப்பு சட்டப்படி பாதி ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய அரசு இதற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்காமல், வேலை நாட்களையும், ஊதியத்தையும் அதிகரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை தேயிலை தோட்டம் தனியார் வசம் தான் உள்ளது. 2028-ம் ஆண்டு வரை தனியார் வசம் தான் இருக்கும். ஆனால் அதற்குள் தொழிலா ளர்களை வெளியேற்றும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

    உயர் நீதிமன்றம் மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் வெளியேற்ற கூடாது என்று கூறி உள்ளது. தமிழக அரசு தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.
    • வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குவைத்தில் நடந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், மத்திய அரசு ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. அதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.

    நீட் தேர்வில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கும். தி.மு.க. வெற்றிக்காக பாடுபடுவோம்.

    வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து, தற்பொழுது பட்டுப்போன மூங்கில் மரங்களை வனப்பகுதியில் வாழும் பழங்குடியினரே அதனை எடுத்துச்செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவது நாகரீகம் அல்ல.
    • கர்நாடகவில் தமிழகத்திற்கு வழங்கும் அளவிற்கு தண்ணீர் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகிறது. பிரதமர் மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவது நாகரீகம் அல்ல.

    தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என மக்களிடையே மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. முதற்கட்ட தேர்தல் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ளது. தோல்வி பயத்தால் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பிரதமர் பேசியிருக்கிறார். ஹிட்லரின் வழியை மோடி பின்பற்றுகின்றார்.

    இத்தகைய செயல்பாடு நாட்டிற்கு உகந்தது அல்ல. இனியாவது தேர்தல் ஆணையம் கண்ணை கட்டிக்கொள்ளாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேராசிரியர் நிர்மலாதேவி தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இவர் யாருக்காக மாணவிகளை தவறாக பயன்படுத்த முயற்சித்தார் என்ற கேள்விக்கு பதில் வெளிவரவில்லை.

    உரிய விசாரணை நடத்தி பெரும் புள்ளியை கண்டறிய வேண்டும். நிர்மலா தேவிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது ஒருதலைப்பட்சமான தீர்ப்பு. ஈரோட்டில் அதிக வெப்பநிலை உயர்ந்துள்ளதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து கண்டறிந்து தீர்வு காணப்பட வேண்டும்.

    கர்நாடகவில் தமிழகத்திற்கு வழங்கும் அளவிற்கு தண்ணீர் உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மேகதாதுவில் அணை கட்டுவோம் என டி.கே சிவக்குமார் சொல்வது வாக்கு கேட்பதற்காக சும்மா சொல்கிறார்.

    தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். விருதுநகரில் வெடிமருந்து வெடித்து சிலர் உயிரிழந்த நிலையில் குவாரிகளை முறைப்படுத்த வேண்டும்.

    குவாரிகளில் மேற்கொள்ளபட வேண்டிய பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். இதில் அதிகாரிகள் கவனக்குறைவாக இருக்கின்றனர். இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கேமரா பழுது ஏற்பட்டதை வைத்து ஒன்னும் செய்ய முடியாது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இவற்றில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுவது சரியல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார்.
    • நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    கோவை:

    கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ஆவாரம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டு நபர்களுக்கு இடையே நடக்க கூடிய தேர்தல் அல்ல. இந்த தேர்தல் மூலமாகத்தான் நாம் நாட்டை காக்கப் போகிறோமா, கைவிடப் போகிறோமா என்பதை முடிவு செய்யப் போகிறோம்.

    இந்த தேர்தலில் மோடி மீண்டும் வென்றால் இந்தியாவில் இனி தேர்தல்களே நடக்காது. நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, அ.தி.மு.க. என்ற கட்சி அழிந்து விடும் என்று பேசுகிறார். அப்படி என்றால் தேர்தலுக்கு பிறகு இந்த இரண்டு கட்சிகளையும் இவர்கள் அழித்து விடுவார்களா, அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரிகள் போல் பேசுகிறார்கள்.


    இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவால் பிரச்சனை இல்லை. பாரதிய ஜனதாவால் தான் பிரச்சனை. அதனால் இந்த தேர்தலில் இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மோடி கியாரண்டி என்ற தலைப்பில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் வரும் 5 ஆண்டுகளில் என்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டுள்ளனர். ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லியதை எல்லாம் செய்து விட்டீர்களா என்று கேட்டால் பதில் இல்லை. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத மோடி, நிதி கொடுக்காத மோடி, இப்போது தமிழக மக்களிடம் ஓட்டுக் கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார். இதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார்.
    • அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் அப்பகுதி மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் வெற்றி பெற்றவுடன் பெரியதொகை தருவதாக ஏமாற்றிச் சென்றவர்தான் இங்கு போட்டியிடும் டி.டி.வி. தினகரன்.

    ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார். அவரை வாக்காளர்கள் நம்ப மாட்டார்கள். மத்தியில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டபோதும் சரி தொழிலாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்ட போதும் மத்திய அரசுக்கு துணையாக இருந்தது அ.தி.மு.க. அரசு. தற்போது கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக நாடகமாடி வருகின்றனர்.

    இவர்கள் கபட கூட்டணியை மக்கள் நம்ப மாட்டார்கள். திருவிழாவில் புகுந்து கொள்ளும் திருடன் தான் நகையை திருடி விட்டு திருடன் ஓடுகிறான்... திருடன் ஓடுகிறான்... என்று சத்தம் போடுவான். பொதுமக்கள் அவனை பிடிக்க செல்லும் போது இந்த திருடன் தப்பித்து ஓடி விடுவான். அதே போல்தான் மத்திய மந்திரிகள் இன்று தேர்தலுக்காக வாகன பேரணி, பிரசாரம் போன்றவற்றை செய்து வருகின்றனர்.

    இந்தியாவில் வேலையின்மை, பொருளாதார சீர்கேடுகள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்சினையை மோடி கையில் எடுத்து வருகிறார். அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை. இது போன்ற ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியா அழிவுப்பாதையில் செல்லும். எனவே மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.
    • புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவை உழவர்கரை நகராட்சி ஜவகர் நகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாடுமுழுவதும் 18-வது பொதுத்தேர்தல் நடக்கிறது. சிந்தித்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். இது 2 வேட்பாளர்களுக்கு இடையில் நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய ஜனநாயகத்தையும், மத சார்பின்மையையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் தேர்தல்.

    இது வழக்கமான தேர்தலும் அல்ல. இது தேர்தல் யுத்தம். புதுவைக்கு பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு வேளை வந்தால், அவரிடம் கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறதிகள் என்ன ஆச்சு? என புதுவை மக்கள் கேள்வியாக கேட்க வேண்டும்.

    பாராளுமன்றத்தில் சுப்புராயன் எம்.பி., புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசு மறுத்துவிட்டது. தற்போது எப்படி மாநில அந்தஸ்து கெடுப்போம்? என எதை வைத்து சொல்கின்றனர்.

    புதுவையில் 800 மதுக்கடைகள் இருந்தது. தற்போது கூடுதலாக 250 ரெஸ்டோபார்கள் திறந்துள்ளனர். இளைஞர்களை சீரழிக்கவே ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சா போதையால் சிறுமி பாலியல் வன்கொடு மையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

    புதுவையின் உள்துறை அமைச்சர் யார்? அவருக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் என்ன தொடர்பு என? அவர்தான் விளக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிசயமான மாநிலம் புதுவை. இங்குதான் ரேஷன்கடைகள் இல்லை.


    ரங்கசாமி நல்ல மனிதர்தான். ஆனால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என புலம்புகிறார். சுயமரியாதை இல்லை என புலம்புகிறார். தன் கைகள் கட்டுப் பட்டுள்ளதாகவும், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் கூறுகிறார்.

    சுதந்திரமாக செயல்பட முடியாத முதலமைச்சரால் மாநில மக்களுக்கு என்ன செய்ய முடியும்?இந்தியா கூட்டணி தவிர்த்து தேர்தலில் 2 கூட்டணி நிற்கிறது.

    மோடி தலைமையிலான நள்ளிரவு கூட்டணி ஒன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கள்ளக் கூட்டணி மற்றொன்று. மோடியை பற்றி எந்த இடத்திலும் பழனிசாமி விமர்சிப்பதில்லை. பாராளுமன்ற தேர்தலில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தது அதிமுக. இந்தியா கூட்டணி கட்சிகள் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.

    10 ஆண்டுக்கு மேல் ஒரே கூட்டணியாக செயல்பட்டு வருகிறோம். தேர்தல் அறிக்கை தனித்தனியே விட்டிருந்தாலும், அதில் எந்த முரண்பாடும் கிடையாது.

    நெல்லையில் சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

    ஆனால் நயினார் நாகேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் விதி மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கும் பிற மாநிலங்களில் இருந்து பணம் வந்துள்ளது. எனவே பாஜனதா வேட்பாளர்கள் வீடுகளில் தேர்தல் துறை சோதனையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகமும், புதுச்சேரியையும் சேர்த்து இந்தியா கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்.
    • போதை பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூரில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாக்கு சேகரித்தார்.

    இந்த பாராளுமன்ற தேர்தல் 2-வது சுதந்திர போராட்டம் போன்றது. பாசிசம் தோற்கடிக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி எங்களுக்கும் பா.ஜ.க.வுக்கு தொடர்பில்லை என்று கூறுகிறார்.

    தமிழகத்தில் ஒன்று கள்ள கூட்டணி. மற்றொன்று நள்ளிரவு கூட்டணி உள்ளது. இவர்களுக்கு எதிராக தமிழகமும், புதுச்சேரியையும் சேர்த்து இந்தியா கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் மக்கள் வெற்றியை தருவார்கள்.

    போதை பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதை பொருள் இறக்குமதி செய்யும் தாயிடம் குஜராத் தான்.

    மோடி ஆட்சிக்கு வரும் போது வீட்டு சிலிண்டர் ரூ.410. ஆனால் இப்போது ரூ.1200 ஆக சிலிண்டர் விலை உள்ளது. அண்மையில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இப்போது குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை சம அளவில் உள்ளது.

    கச்சத்தீவை இந்திரா காந்தி தான் இலங்கைக்கு கொடுத்தார். அப்போதைய முதல்வரைகூட கேட்கவில்லை.

    கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்க பயன்படுத்தி வந்தனர். இன்றைக்கு கச்சத்தீவு பற்றி பேசும் மோடி 10 ஆண்டுகளில் அவர் விரும்பி இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்கலாம். ஆனால் மீனவர்களையும் படகுகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை.

    சுங்கசாவடி கட்டனங்களும் உயர்த்தப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.

    தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மோடி கட்டுபாட்டில் உள்ளது.மோடி நிர்ணயித்த தேதியில் தேர்தல் நடக்கிறது. சின்னம் ஒதுக்குவதற்கும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.
    • அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று தி.மு.க. கூட்டணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.

    இதில் பங்கேற்பதற்காக அரியலூரில் இருந்து அமைச்சர் சிவசங்கர் காரில் புறப்பட்டு சென்றார். கார் ஜெயங்கொண்டம் அருகே அசினாபுரம் பகுதியில் சென்ற போது அங்கு பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    இந்த வேளையில் அந்த வழியாக வந்த அமைச்சர் சிவசங்கரின் காரையும் பறக்கும் படையினர் நிறுத்துமாறு கூறினர். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தினார். அதில் அமைச்சர் சிவசங்கர் இருப்பதை பார்த்த அதிகாரிகள் காரை சோதனையிட வேண்டும் என்றனர்.

    அதற்கு தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்றவாறு காரை விட்டு இறங்கினார். சிறிது நேர சோதனைக்கு பின்னர் காரில் எதுவும் இல்லாததால் அமைச்சரின் காரை அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.

    அமைச்சர் சிவசங்கர் கார் சோதனை செய்யப்பட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வழிவிட்டு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் சிவசங்கரை அந்த பகுதியினர் பாராட்டினார்கள்.

    ×