என் மலர்
நீங்கள் தேடியது "அரசு அதிகாரி"
- அரசு அதிகாரி மீது தாக்குதல் நடந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.
மதுரை
மதுரை ஒத்தக்கடை, நகுலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது 54). இவர் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார சுகாதார மேற்பார்வை யாளராக உள்ளார்.
சம்பவத்தன்று காலை திருக்கண்ணன் மருத்துவ குழுவினருடன், ஒத்தக்கடை அய்யப்பன் நகருக்கு சென்றார். அப்போது அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு யானைக்கால் நோய் தொடர் பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இதற்கு ஜகதாரணி குடியிருப்பில் வசிக்கும் சந்தோஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை மருத்துவ அதிகாரி திருக்கண்ணன் சமாதானப்படுத்தி விளக்கி கூற முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அவரை சரமாரியாக தாக்கினார்.
இதில் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பாட்டில்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக திருக்கண்ணன் ஒத்தக்கடை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோசை ைகது செய்தனர்.
- இந்த வழக்கில் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்பட 14 பேர் மீது வழக்கு.
- வழக்கில் சிக்கி அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதற்கான பதிவேட்டில் திருத்தம் செய்து வடபுதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட சில தனியாருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது.
இதுகுறித்து 2021-ம் ஆண்டு பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டாட்சியர்கள் ஆனந்தி, ஜெயப்பிரிதா, வட்டாட்சியர்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் மோகன்ராம், உள்ளிட்ட 14 பேர் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தேனி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரத்தில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை தேனி சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை தேனி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கிருஷ்ணகுமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து தேக்கம்பட்டி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
- தாலுகா அலுவலகத்திற்கு சென்ற ராஷ்மோன், அங்கு தாசில்தாராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
- தாசில்தார் இருக்கையில் அமர்ந்த சில மணி நேரத்தில் ராஷ்மோனுக்கு இன்னொரு உத்தரவு வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த ஆலுவா தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் ராஷ்மோன்.
இவர் கடந்த ஆண்டு தாசில்தாராக பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவரது பதவி உயர்வு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில் இவருக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அரசிடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது. அதில் அவரை அங்கமாலி அலுவலக நிலமெடுப்பு தாசில்தாராக நியமித்து இருப்பதாகவும், உடனே அந்த பதவியை ஏற்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு கிடைத்ததும் ராஷ்மோனுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு புறம் வருத்தமும் ஏற்பட்டது. இதற்கு காரணம், அவரது பணிக்காலம் நேற்றுடன் முடிய இருந்தது. என்றாலும் தனக்கு கிடைத்த பதவி உயர்வை உடனே ஏற்றுக்கொள்ள முடிவு செய்த ராஷ்மோன், நேற்று முன்தினம் இரவே அங்கமாலி சென்றார்.
நேற்று காலை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற ராஷ்மோன், அங்கு தாசில்தாராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர், தாசில்தார் இருக்கையில் அமர்ந்த சில மணி நேரத்தில் அவருக்கு இன்னொரு உத்தரவு வந்தது. அதில் அன்று மாலையே அவர் பணி ஓய்வு பெறுவதாக கூறப்பட்டிருந்தது. இதனை அறிந்த அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும் புதிய தாசில்தாருக்கு வாழ்த்து தெரிவித்த அவர்கள் அன்று மாலை வழியனுப்பு விழா நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
காலையில் தாசில்தார் பொறுப்பேற்று, மாலையில் ஓய்வு பெற்ற ராஷ்மோன் கூறும்போது, ஒரே நேரத்தில் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்த நபர் நான்தான், என்றார்.
- கல்யாணசுந்தரம் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி .
- வாந்தி மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடி சேர்ந்தவர்கல்யாணசுந்தரம் (72),இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ஆவார்.இவர்நீண்ட நாட்களாகவயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்ததாககூறப்படுகிறது. நேற்று காலை வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- போலி ஆவணங்கள்-பொருட்களை மாற்றி செய்து மோசடி
- குமரி மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பு
நாகர்கோவில், ஜூன்.29-
கன்னியாகுமரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலராக முன்பு பணியாற்றியவர் ஜோதீந்தர் கீத் பிரகாஷ். கோவில்பட்டி தச்சு மற்றும் கொல்லு தொழிலாளர் குடிசை தொழில்கள் கூட்டுறவு சங்க முன்னாள் துணைத்தலைவர் கணேசன். பணம் மோசடி
இவர்கள் கடந்த 2005-06-ம் ஆண்டில் குமரி மாவட்டம், கலிங்கராஜபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளிக்கு மரசாமான்கள் அனுப்பியதில் முறைகேடு ஏற்படுத்தியதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜோதீந்தர் கீத் பிரகாஷ் மற்றும் கணேசன் ஆகியோர் கூட்டு சதி செய்து, கலிங்கராஜபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளிக்கு தேக்கு மரத்தால் மேஜை, நாற்காலிகள் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 725-க்கு செய்ததாக போலியான ஆவணம் தயார் செய்துள்ளது தெரியவந்தது. மேலும் மேஜை, நாற்காலிகள் தேக்கு மரத்தால் செய்வற்கு பதிலாக வேப்பமரம் பிளைவுட்டினால் செய்துள்ளதும், இதன்மூலம் அரசுக்கு ரூ.90 ஆயிரத்து 65 நிதி இழப்பு ஏற்படுத்தி பணம் கையாடல் செய்துள்ளதும் தெரியவந்தது.
இது தொடர்பாக 2 பேர் மீதும் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தனி நீதிபதி கோகுலகிருஷ்ணன் வழக்கை விசாரித்து, ஜோதீந்தர் கீத் பிரகாஷ், கணேசன் ஆகியோருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டைனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதம் கட்ட தவறினால் 2 மாதங்கள் சாதாரண சிறைதண்டையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜென்ஸி ஆஜரானார்.
ஜோதீந்தர் கீத் பிரகாஷ் கடந்த 2006-ம் ஆண்டு பணியில் இருந்தபோது தனக்கு கீழ் பணியாற்றிய ஆதிதிராவிட மாணவர் விடுதி சமையல்காரரிடம் பணி மாறுதலுக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில், 3 வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .
தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.
தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .
ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த 2011-ம் ஆண்டு மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா தாசில்தாராக பணியாற்றினார்.
- 12 ஆண்டுகளாக அரசு பணியாற்றி வந்த அவர் தற்போது கூடுதல் கலெக்டராக உள்ள நிலையில், துறவறம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அரசு வேலை என்பது படித்தவர்களிடம் பெரிய கனவாகவே இருந்து வருகிறது. அப்படி இருக்க கிடைத்த வேலையை அதுவும் கலெக்டர் வேலையை ஒருவர் உதறிவிட்டு துறவியாகியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி அரசு பதவியை துறந்து செல்ல இருப்பவர் நாகராஜ். கர்நாடக அரசு அதிகாரியான இவர் தற்போது மண்டியா மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா தாசில்தாராக பணியாற்றினார். அந்த சமயத்திலேயே அவர் நாகமங்களாவில் உள்ள புகழ்பெற்ற ஆதிசுஞ்சனகிரி மடத்தில் துறவறம் மேற்கொள்ள தீட்சை பெற்றார். இதனால் அவருக்கு நிஷ்சலானந்தநாத் சுவாமிஜி என பெயர் சூட்டப்பட்டது.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி, சாமியாராக போக நினைத்த முடிவை கைவிட வைத்தனர். இருப்பினும் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என வேட்கை மட்டும் அவருக்கு குறைந்தபாடில்லை. அதை யாரிடமும் வெளிப்படுத்தாமல் 12 ஆண்டுகளாக அரசு பணியாற்றி வந்த அவர் தற்போது கூடுதல் கலெக்டராக உள்ள நிலையில், துறவறம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவர் தனது கூடுதல் கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுவாழ்வுக்கு குட்பை சொல்லிவிட்டு சாமியாராக மாற உள்ளார். இவர் ஒக்கலிக மகா சமஸ்தான மடத்தின் மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமியின் சீடர் ஆவார்.
துமகூரு மாவட்டத்தில் உள்ள ஒன்னஹள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜ், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவர். நுண்கடன் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பாலகங்காதர்நாத் சுவாமியிடம் கல்வி பயின்றார். இதனால் அவருக்கு ஆன்மிகம் மீது அதிக நாட்டம் ஏற்பட காரணமாகிவிட்டது.
முதலில் கோர்ட்டில் எழுத்தராக பணியாற்றிய அவர் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, ஹாசன், கே.ஆர்.பேட்டை, நாகமங்களா பகுதிகளில் தாசில்தாராக பணியாற்றி வந்துள்ளார். மக்கள் மத்தியில் நேர்மையான, திறமையான அதிகாரி என்ற பெயரும் நாகராஜுக்கு உள்ளது. இந்த நிலையில் அவர் அரசு பதவியை உதறிதள்ளிவிட்டு துறவறம் செல்ல இருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.
கர்நாடகத்தை பொறுத்தவரை கர்நாடக அரசு அதிகாரி ஒருவருக்கு அடிப்படை சம்பளம் ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் ஆகும். இதர படிகள் சேர்த்து மொத்தம் ரூ.2.20 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை ஒரு அதிகாரிக்கு சம்பளம் கிடைக்கும். அதன்படி நாகராஜ் சுமார் ரூ.2¼ லட்சம் ஊதியத்தை உதறிவிட்டு சாமியாராக செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத நிகழ்விற்காக சுமார் 300 பேர் கூடியிருந்தபோது, ஒரு மகேந்திரா தார் மாடல் கார் ஊர்வலத்தில் புகுந்தது
- கண்ணாடியை தனது காலால் உதைத்ததும் பதிவாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு அதிகாரியின் மைனர் மகன் ஓட்டிவந்த கார் சீக்கிய வழிபாட்டு ஊர்வலத்தில் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள ராஜா பார்க் பகுதியில் நேற்று இரவு 8:30 மணியளவில் பஞ்சவடி வட்டம் அருகே கோவிந்த் மார்க் பகுதியை ஊர்வலம் கடக்கும் போது இந்த விபத்து நடந்துள்ளது.
மத நிகழ்விற்காக சுமார் 300 பேர் கூடியிருந்தபோது, ஒரு மகேந்திரா தார் மாடல் கார் ஊர்வலத்தில் புகுந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை கூறிய போதிலும், ஒரு முதியவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது ஆத்திரமடைந்த சீக்கியர் கூட்டம் ஒன்று விபத்து ஏற்படுத்திய கார் மீது தாக்குதல் நடத்தியது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு நபர் கார் பானட்டின் மீது ஏறி அதை தடியால் தாக்குவதும், கண்ணாடியை தனது காலால் உதைத்ததும் பதிவாகி உள்ளது.
அரசு அதிகாரி ஒருவரின் மைனர் மகன் கார் ஒட்டி வர அவனுடன் மேலும் 3 சிறுவர்கள் இருந்துள்ளனர். விபத்தின் பின் அங்கிருந்து அவர்கள் தப்பியுள்ளனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆதர்ஷ் நகர் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்களிடம் போலீசார் உறுதியளித்தனர்.=

அதிகாரியின் மைனர் மகன் போலீசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது. காரின் கண்ணாடியில் எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர், அது சரிபார்க்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
- பதான் கான் பெண் உதவியாளரிடம் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- வீட்டிற்கு வா குளியல் அறையில் நிர்வாணமாக குளிக்கலாம் என அதிகாரி கேட்டுள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் இந்துகுரு வட்டார வளர்ச்சி அலுவலர் பதான் கான். (வயது 50). 30 வயது இளம்பெண் ஒருவர் பதான்கானின் உதவியாளராக அதே அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.
பதான் கான் பெண் உதவியாளரிடம் அடிக்கடி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் வீட்டிற்கு வா குளியல் அறையில் நிர்வாணமாக குளிக்கலாம் என கேட்டுள்ளார்.
அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் அவரது செல்போனுக்கு மெசேஜ் மற்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தார்.
பதான்கானின் தொல்லை எல்லை மீறியதால் விரக்தி அடைந்த இளம்பெண் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார்.
இதனைக் கண்ட அவரது கணவர் மற்றும் உறவினர்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இளம்பெண்ணிடம் எதற்காக தற்கொலை முயற்சி செய்தாய் என கேட்டபோது பதான்கானின் லீலைகள் குறித்து தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பதான்கானிடம் உதவியாளரை ஏன் நிர்வாணமாக குளிக்க அழைத்தாய் எனக் கேட்டபோது அவர் விளையாட்டாக கேட்டேன் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பதான்கானை சரமாரியாக தாக்கினர்.
மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது பதான்கான் தெரியாமல் தவறு நடந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
இது குறித்து இளம் பெண்ணின் கணவர் இந்துகோர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா வருகிற 15 ,16 ஆகிய தேதியில் நடைபெற உள்ளது.
- அரசுத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
உடுமலை :
உடுமலை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா வருகிற 15 ,16 ஆகிய தேதியில் நடைபெற உள்ளது. இதில் 16ந் தேதி நடைபெற உள்ள விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார் . 15-ந்தேதி பொள்ளாச்சி தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு அன்று இரவு உடுமலை வழியாக திருமூர்த்தி மலைக்கு வருகிறார். அன்று இரவு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் 16 ந் தேதி காலை அமராவதி சைனிக் பள்ளியில்நடைபெற உள்ள வைரவிழாவில் கலந்து கொள்கிறார்.
முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் வைரவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்து வரும் நிலையில் முதலமைச்சர் உடுமலை வழியாக திருமூர்த்தி மலை மற்றும் அமராவதி நகர் செல்லும் பகுதிகளில் அரசுத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் நடந்தது.
ஆர்டிஓ., ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கி நடத்தினார் .கூட்டத்தில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர். தேன்மொழி வேல் ,சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு, நீர்வள ஆதார அமைப்பு ,பொதுப்பணித்துறை ,வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம் ,நகராட்சி, உணவு பாதுகாப்பு துறை ,மருத்துவ துறை ,ஊரக வளர்ச்சி துறை ,போக்குவரத்து துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுஅதன்படி பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.