என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணம் பண்டிகை"

    • காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
    • செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடல்நலம் பாதித்து கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சி புதுப்பள்ளி வேட்பாளரை அறிவித்தது. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். மற்ற கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இடைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோட்டயம், மணற்காடு தேவாலயங்களில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம் என்பதால் இடைத்தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது.

    புதுப்பள்ளிக்கு விரைவாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு இடதுசாரி ஜனநாயக முன்னனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓணம் பண்டிகை, அய்யன்காளி-ஸ்ரீநாாயணகுரு ஜெயந்தி, மணற்காடு பெருநாள் போன்ற கொண்டாட்டங்களை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இடதுசாரி ஜனநாயக முன்னனியின் தொகுதி பொறுப்பாளரும், கேரள மந்திரியுமான வி.என். வாசவன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனால் புதுப்பள்ளி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற தேர்தல் ஆணைத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கேரள மாநிலத்தின் இரு பிரதான கட்சிகளும் புதுப்பள்ளி இடைத்தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று வலுயுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும்.
    • கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில லாட்டரி துறையின் சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இங்கு முக்கிய பண்டிகை காலங்களில் அதிக பரிசுதொகையுடன் கூடிய லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன.

    அதன்படி கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு விற்பனை கடந்த 27-ந் தேதி மாநிலத்தில் தொடங்கியது. முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும். அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி குலுக்கல் நடக்கிறது.

    நாட்டிலேயே இதுதான் அதிகபட்ச பரிசுத் தொகை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. விற்பனை தொடங்கிய நாளில் இருந்து கடந்த 15-ந் தேதி வரை 20 லட்சத்து 50 ஆயிரம் சீட்டுகள் விற்பனையாகி உள்ளது. டிக்கெட் விற்பனையில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்திலும் திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

    கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி லாட்டரி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 30 லட்சம் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட அனுமதி உள்ளது. முதல் பரிசு பெறுபவர் 30 சதவீத வருமானவரிக்கு பிறகு சுமார் ரூ.17.5 கோடியை பெறுவார் என்றார்.

    • இன்று ஆவணி மாதப்பிறப்பையொட்டி அதிகளவு பூக்கள் வரத்து இருந்தது.
    • திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அதிகளவு வாடாமல்லி வந்த நிலையில் விலை ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.30ஆக உயர்ந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணாவணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளான நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்தே காணப்பட்டது. இன்று ஆவணி மாதப்பிறப்பையொட்டி அதிகளவு பூக்கள் வரத்து இருந்தது. 40 டன் பூக்கள் வந்தநிலையில் வாடாமல்லி மட்டும் 30 டன் வந்துள்ளது. கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகிற 28-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கேரள மக்கள் அத்தப்பூ கோலம் போட்டு விருந்தினர்களை வரவேற்பார்கள். இதற்காக 9 நாட்கள் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது. இதில் வாடாமல்லி பூ முக்கிய பங்கு வகிக்கிறது.

    இன்று திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அதிகளவு வாடாமல்லி வந்த நிலையில் விலை ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.30ஆக உயர்ந்தது. இருந்தபோதும் அதிகளவு பூக்கள் லாரி மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மல்லிகை ஒரு கிலோ ரூ.600, முல்லை ரூ.200, கனகாம்பரம் ரூ.300, ஜாதிப்பூ ரூ.200, செண்டுமல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.50, அரளி ரூ.150, ரோஸ் ரூ.150 என்ற விலையில் விற்பனையானது.

    அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழாக்கள் வர உள்ளதால் பூக்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 23ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிப்பு.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

    29.08.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23.09.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881-ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 29.08.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.
    • வருகிற 29-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    உலகின் பல பகுதிகளில இருக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த பண்டிகை ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திர நாளில் தொடங்கி சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்காண ஓணம் பண்டிகை கொண்டாட்டம், ஆவணி அஸ்தம் நட்சத்திர நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இதையொட்டி கேரளாவில் ஓணம் பண்டிகை தொடக்கம் கோலாகலமாக நடைபெற்றது. பெண்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

    இன்று முதல் இனி வரும் 10 நாட்களுக்கு ஓணம் கொண்டாட்டமாக மகாபலி ராஜாவை பூவுலகுக்கு வரவேற்கும் விதமாக பூக்களால் வீடுகளில் தோரணம் கட்டி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். வருகிற 29-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்று ஓணம் விருந்து மிகச் சிறப்பாக நடைபெறும்.

    ஓணம் பண்டிகை இன்று தொடங்கியதையடுத்து பூக்களின் விலை அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை தொடக்க நாளான இன்று மக்கள் மகிழ்ச்சியுடன் விழாவை வரவேற்றனர். தோவாளை பூ மார்க்கெட்டிலும் இன்று பூக்கள் வாங்க ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கும் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

    • தாமரை பூ ரூ.15-க்கு விற்பனை
    • மரிக்கொழுந்து ரூ.120-க்கு விற்பனையானது.

    கன்னியாகுமரி :

    கேரளாவில் கொண்டா டப்படும் முக்கிய பண்டிகை களில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டா டப்படுகிறது. வழக்கமாக ஓணம் பண்டிகையை 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    வீடுகள் முன்பு அத்த பூ கோலமிட்டு பெண்கள் ஓணம் பண்டிகையை வரவேற்பார்கள். ஓணம் பண்டிகை இன்று தொடங்கி யதையடுத்து குமரி மாவட் டத்தில் உள்ள தோவாளை பூ மார்க்கெட்டில் கேரள வியாபாரிகள் ஏராளமா னோர் குவிந்திருந்தனர். மேலும் திருமண சீசன் தொடங்கியுள்ள நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும் ஏரா ளமானோர் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு இன்று வந்திருந்தனர். இதனால் காலையிலேயே தோவாளை பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

    பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகளும் பொதுமக்க ளும் போட்டி போட்டு வாங்கினார்கள். இதனால் வியாபாரம் களை கட்டி இருந்தது.

    கேரள வியாபாரிகள் கலர் பூக்களை விரும்பி வாங்கி சென்றனர். கேந்தி, அரளி, வாடாமல்லி, கொழுந்து, மரிக்கொழுந்து, பட்டன் ரோஸ், தாமரை, துளசி உள்ளிட்ட பூக்களை வாங்கி சென்றனர். இதனால் வழக்கத்தை விட பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சி பூ கிலோ ரூ.500-க்கும் மல்லிகை ரூ. 700-க்கும் விற்கப்பட்டது. தோ வாளை அரளி ரூ.150, சேலம் அரளி ரூ.150, கோழிப்பூ ரூ.60,

    மஞ்சள் கேந்தி ரூ.50, சிவப்பு கேந்தி ரூ.60, வாடாமல்லி ரூ.70, செவ்வந்தி ரூ.300, சம்பங்கி ரூ.700, கொழுந்து ரூ.100, மரிக்கொழுந்து ரூ.120-க்கு விற்பனையானது.

    தாமரை பூவின் விலை கணிசமான அளவு உயர்ந் துள்ளது. ஒரு தாமரைப்பூ 15-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை குறைந்து காணப் பட்ட நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓணம் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினத்தை யொட்டி இந்த மாதம் முழுவதும் பூக்கள் விலை வழக்கத்தை விட சற்று உயர்ந்திருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள் ளனர். ஓணம் பண்டிகை தொடங்கியதையடுத்து இன்னும் கேரளாவில் இருந்து ஏராளமான வியா பாரிகள் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு வரு வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மேலும் குமரி மாவட் டத்தில் உள்ள பல்வேறு வீடுகளிலும் ஓணம் பண்டி கையையொட்டி தினமும் அத்தப்பூ கோலம் போடப் படும். பள்ளி, கல்லூரிகளி லும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டா டப்படுவதை யடுத்து பூக்கள் வியாபாரம் இன்னும் ஒரு வாரத்திற்கு சூடு பிடித்திருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
    • மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டுக்காண ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. ஜாதி, மதம், மொழி, இன பாகுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. வருகிற 29-ந்தேதி திருவோணம் பண்டிகை வருகிறது. அன்றைய தினம் மன்னர் மகாபலியை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, விருந்து படைத்து, புத்தாடை உடுத்தி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

    இதற்காக வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

    மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்றுபெறும் மாணவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கான அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறை, அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும் எனவும், வருகிற 24-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு அரிசி வழங்கும் பணியை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

    ஓணம் பண்டிகைக்காக கேரள மாநிலத்தில் பள்ளி கள் வருகிற 25-ந்தேதி மூடப்பட்டு, செப்டம்பர் 4-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஓணம் பண்டிகையின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று 'திருவோணதோணி'.
    • விருந்தில் பட்டாத்திரி கொண்டு வந்த பலகாரங்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களால் தெய்வத்திற்கு பிரசாதம் வழங்கப்படும்.

    ஓணம் என்பது பல்வேறு சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களை உள்ளடக்கிய கொண்டாட்டமாகும். கேரளாவில் ஓணம் பண்டிகையின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று 'திருவோணதோணி'. இது காட்டூர் மாங்காடு இல்லத்தில் இருந்து ஓணம் விருந்து உணவுகளுடன் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலுக்கு வரும் தோணியை குறிக்கிறது.

    இந்த பாரம்பரியத்தின் பின்னால் ஒரு சுவாரசியமான புராணக்கதை உள்ளது. காட்டூர் மாங்காடு இல்லம் பட்டாத்திரிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இறுதியாக ஒரு குழந்தை பிறந்ததும், அதை ஆரன்முலா கோவிலில் உள்ள பார்த்தசாரதியின் ஆசிர்வாதம் என்று கருதினார். ஒவ்வொரு ஆண்டும், பட்டத்திரி தனது திருவோண மதிய உணவுக்கு முன் ஒரு பிரம்மச்சாரிக்கு உணவளிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

    ஒரு சமயம், அப்படிப்பட்ட பிரம்மச்சாரி அவர் வீட்டிற்கு வரவில்லை. ஒரு பிரம்மச்சாரி வந்து உணவு அருந்தாவிட்டால் மதிய உணவு சாப்பிட மாட்டேன் என்று பட்டாத்திரி வலியுறுத்தினார். இறுதியில் ஒரு குழந்தை வந்து மதிய உணவு சாப்பிட்டது. பட்டத்திரியின் பக்தியாலும் நம்பிக்கையாலும் கவரப்பட்ட பகவான் கிருஷ்ணர், அவரது கனவில் தோன்றி, ஆரண்முலா கோவிலுக்கு விருந்து அளிக்கச்சொன்னார்.

    அடுத்த ஆண்டு முதல் பட்டாத்திரி மாங்காடு இல்லத்தில் இருந்து ஆரன்முலா கோவிலுக்கு படகில் விருந்தை கொண்டு வருவார். இந்த படகு (மலையாளத்தில் தோணி என்று அழைக்கப்படுகிறது) இறுதியில் 'திருவோணதோணி' என்று அழைக்கப்பட்டது.

    இந்த பயணங்களில் ஒன்றில், பட்டாத்திரி கோவிலுக்கு செல்லும் வழியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் படகுகளில் சம்பவ இடத்திற்கு வந்து திருவோணத்தோணி மற்றும் பட்டாத்திரிக்கு பாதுகாப்பு அளித்தனர். அந்த ஆண்டு முதல், போர் படகுகளாக செயல்படும் சுண்டன் வல்லம்கள் (பாம்புப் படகுகள்) திருவோணத்தோணியுடன் வரத்தொடங்கின. காலப்போக்கில் இந்த படகுகள் 'ஆரண்முலா பள்ளியோடங்கள்' என்று குறிப்பிடத் தொடங்கின.

    பட்டத்திரி மாங்காடு இல்லத்தில் இருந்து குமரநெல்லூர் கார்த்தியாயனி கோவிலுக்கு அருகில் உள்ள புதிய இடத்திற்கு மாறிய பிறகு, திருவோணத்தோணி தொடங்கும் இடமும் குமரநெல்லூர் மானா என்று அழைக்கப்படும் புதிய இடத்திற்கு மாறியது. சிங்கமாதம் மூலத்தன்று, குடும்பத்தின் மூத்த பட்டாத்திரி சுருளன் படகில் புறப்படுவார். அவர் ஆரன்முலாவில் உள்ள காட்டூர் வந்தடைந்ததும் படகுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட பெரிய தெப்பத்திற்கு திருவோணத்தோணி மாற்றப்படும். கண்கவர் ஊர்வலம், கிடங்கரா, திருவல்லா, ஆறாட்டுப்புழா, கொழஞ்சேரி, காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக சென்று, திருவோணத்தன்று காலை ஆரன்முளா கோவிலின் கரையை வந்தடையும். அப்போது பிரமாண்ட விருந்துக்கான ஏற்பாடுகள் தொடங்கும்.

    இந்த விருந்தில் பட்டாத்திரி கொண்டு வந்த பலகாரங்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களால் தெய்வத்திற்கு பிரசாதம் வழங்கப்படும். அன்றைய தினம் 'அத்தாழ பூஜை' முடிந்ததும், கோவில் பூசாரியிடம் இருந்து பட்டாத்திரி பணப் பையை பெறுகிறார். இது விருந்துக்கு பயன்படுத்தப்பட்ட பிறகு மீதமுள்ள தொகையாக இருக்க வேண்டும். பட்டத்திரி அதையே கோவில் களஞ்சியத்தில் இறக்கிவிட்டு தனது பயணத்தைத் தொடங்குகிறார்.

    • அம்பலப்புழா சங்கம் அம்பலப்புழா பால் பாயசத்துடன் சம்பக்குளத்திற்கு செல்கிறது.
    • ஒரு 'சுருல்லன்' படகில் மாப்பிளச்சேரிக்கு வருகிறார்கள்.

    அம்பலப்புழா குழு அம்பலப்புழாவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் இருந்து பாயசத்துடன் வந்த பிறகு சம்பக்குளம் வல்லம்காளி அல்லது சம்பக்குளம் படகுப் போட்டி தொடங்குகிறது. இது ஒரு புனிதமான உணவுப்பொருளாக கருதப்படுகிறது மற்றும் மலையாளத்தில் பொதுவாக 'பிரசாதம்' என்று அழைக்கப்படுகிறது. இது கடவுளுக்கு பிரசாதமாக தயாரிக்கப்பட்டு அனைத்து சடங்குகளையும் முடித்த பிறகு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த சடங்கின் ஒரு பகுதியாக அம்பலப்புழா சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சம்பக்குளத்தில் காட்சியளிக்கிறது. படகுப் போட்டியின் வரலாறு அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் உள்ள சிலையின் கதையுடன் தொடர்புடையது.

    வில்வமங்கலம் சுவாமிகளின் அறிவுரைப்படி தேவநாராயணன் என்றழைக்கப்படும் செம்பகச்சேரி மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அம்பலப்புழா புறக்காடு என்ற மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. தேவநாராயணன் புறக்காட்டை தோற்கடித்தபோது, வாசுதேவபுரம் புறக்காடு ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் புறக்கணிக்கப்பட்டது. கோவில் இடிபாடுகள் மற்றும் அழிக்கப்பட்ட சிலையை குறிச்சி வல்லிய மாட்டம் குடும்பத்தினர் பாதுகாத்து வந்ததாக கூறப்படுகிறது. இக்கோயில் இடிந்ததை அடுத்து எழுந்துள்ள பிரச்னைகளை தீர்க்கும் வகையில், அம்பலப்புழா ஸ்ரீகிருஷ்ணர் கோயிலை அம்பலப்புழாவில் கட்ட வில்வமங்கலம் சுவாமிகள் அறிவுறுத்தினார். கோவிலில் புதிய சிலை நிறுவப்பட்ட நாளில், அது தூய்மையற்றது என கண்டறியப்பட்டது. எனவே, அரசர் தனது மந்திரி கோழிமுக்குப் பாறையில் மேனனுக்கு வேறு சிலையைத் தேடும்படி கட்டளையிட்டார்.

    மேனன் மற்றும் அவரது குழுவினர் இரவு நேரமாகிவிட்டால் சம்பக்குளம் கோயிக்கேரி மாப்பிளச்சேரி இத்திதாமனின் வீட்டில் சிலையுடன் ஓய்வெடுக்குமாறு மன்னர் அறிவுறுத்தினார். மாப்பிளச்சேரி வீட்டில் சிலையை நிறுவிய குழுவினரை மாப்பிளச்சேரி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் வரவேற்றனர். மறுநாள், செம்பகச்சேரி மன்னர் தேவநாராயணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலையைப் பெறுவதற்காக மாப்பிளச்சேரியின் பரம்பரை வீட்டிற்கு வந்தனர். விழாக்களுக்கு மத்தியில், படகில் மீண்டும் அம்பலப்புழாவுக்குச் சென்றனர். வீடு திரும்பும் வழியில் கல்லூர்காடு தேவாலயத்தில் பட்டாசு வெடித்து வரவேற்றனர். சம்பகுளம் ஆற்றங்கரையில் உள்ள நடுபாகம் மாட்டம் அம்மன் கோயிலிலும் பந்தீரடி பூஜையுடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த மாபெரும் நீர் அணிவகுப்பின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஓணத்தின் போது சம்பகுளம் பாம்பு படகு போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த வரலாற்று விழாவை புதுப்பிக்கவே அம்பலப்புழா சங்கம் அம்பலப்புழா பால் பாயசத்துடன் சம்பக்குளத்திற்கு செல்கிறது. சங்கம், கோவிலை அடைந்ததும், சிலை வைக்கப்பட்டுள்ள மாப்பிளச்சேரி தாராவாடு (வீட்டுக்கு) செல்கிறது. தாராவாடு உள்ள சிலைக்கு பூஜை செய்கிறார்கள். அவர்கள் ஒரு 'சுருல்லன்' படகில் மாப்பிளச்சேரிக்கு வருகிறார்கள். கல்லூர்க்காடு தேவாலயத்தின் வழக்கமான சம்பிரதாய முறைப்படி வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அம்பலப்புழா சங்கம் திரும்பும் பயணத்திற்குப் பிறகுதான் புகழ்பெற்ற சம்பக்குளம் வல்லம்களி அல்லது சம்பக்குளம் வல்லம்களி படகுப் போட்டி தொடங்குகிறது.

    • அத்தச்சமயம் அணிவகுப்பு கேரளாவில் ஓணம் பண்டிகையின் தொடக்கத்தை குறிக்கிறது.
    • அரச அத்தச்சமயம் மூன்று நாள் சடங்குக்கு முன்னதாக உள்ளது.

    எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருப்புனித்துராவில் ஒவ்வொரு ஆண்டும் சிங்கமாதத்தில் நடைபெறும் அத்தச்சமயம் அணிவகுப்பு கேரளாவில் ஓணம் பண்டிகையின் தொடக்கத்தை குறிக்கிறது. சுதந்திரத்திற்கு முன், கொச்சி மாநில மகாராஜாக்களின் தலைமையகமாக இருந்ததால், திருப்புனித்துராவில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நாளில், கொச்சி மகாராஜா தனது பரிவாரங்களுடன் தனது குடிமக்களை சந்தித்தார். நாட்டுப்புற கலை வடிவங்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் யானைகளின் அணிவகுப்பு வண்ணமயமான நிகழ்வாக மாற்றப்பட்டது.

    1949-ல், அத்தச்சமயம் தற்காலிகமாக திருவிதாங்கூர்-கொச்சி ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து குறுகிய கால கொச்சி மாநிலத்தை உருவாக்குவதற்காக நிறுத்தப்பட்டது. 1961-ம் ஆண்டு கேரளாவில் ஓணம் வெகுஜன விழாவாக மாறியபோது அணிவகுப்பு அதன் அனைத்து மகிமையிலும் மீண்டும் தொடங்கியது. ஹில் பேலசில் இருந்து தொடங்கிய ஊர்வலம், தற்போது ஆட்டம் நகரில், மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகே தொடங்கி அங்கு முடிவடைகிறது.

    அரச அத்தச்சமயம் மூன்று நாள் சடங்குக்கு முன்னதாக உள்ளது. அரச நகர அழுகை யானையின் மீது கிராமத்திற்கு வந்து, கிராம மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேளம் அடித்து, சடங்குகளின் தொடக்கத்தை அறிவிக்கிறார். மத நல்லிணக்கத்தின் அடையாளமாக, காக்காட்டு கோவில் பூசாரி, நெட்டூர் தங்கல் மற்றும் கரிங்காச்சிரா பூசாரி ஆகியோர் அணிவகுப்பு நாளில் மன்னரை தரிசிக்கிறார்கள். பார்வையாளர்களை வரவேற்ற பிறகு அணிவகுப்பைத் தொடங்க ராஜா பல்லக்குக்குள் நுழைகிறார். அவர் 'வீரலிப்பாட்டு' எனப்படும் துடிப்பான நகைகளையும், தங்கத்தில் அரச கிரீடத்தையும் அணிந்துள்ளார். ஊர்வலத்திற்குப் பிறகு, ஒரு ஆடம்பரமான சத்யா நடத்தப்படுகிறது, அதைத் தொடர்ந்து சிறந்த உள்ளூர்வாசிகளின் சாதனைகளை அங்கீகரிக்க விருது வழங்கும் விழாவும் நடத்தப்படுகிறது.

    அத்தச்சமயத்தில் நாட்டுப்புறக் கதைகள் ஏராளம். அவற்றில் ஒன்று திருக்காக்கரை வாமன மூர்த்தி கோயிலுடன் தொடர்புடையது. கடைசி சேரமான் பெருமாளுக்குப் பிறகு, 56 மன்னர்களின் கூட்டு முயற்சியால் திருக்ககர உற்சவம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அத்தம் நாளில் திருவிழா கொச்சி மன்னரும் சாமூத்திரியர்களும் இணைந்து நடத்தினார்கள். நாட்டுப்புற வரலாற்றின் படி, முதல் அத்தச்சமய ஊர்வலம் கொச்சி மகாராஜாவால் திருக்ககராவில் நடத்தப்பட்டது. திருக்காக்கரா கோயிலை எடப்பாடியை ஆண்ட மன்னன் கையகப்படுத்தியவுடன் இந்த வழக்கம் நின்றுவிட்டது.

    கொச்சி மகாராஜா வன்னேரி நிலத்தை சாமூத்திரியர்களிடமிருந்து கைப்பற்ற முயன்றபோது ஏற்பட்ட கிளர்ச்சியின் நினைவாக அத்தச்சமய அணிவகுப்பு நடத்தப்பட்டதாக மற்றொரு நாட்டுப்புற கதை கூறுகிறது. அவர் போரில் தோற்ற பிறகு, மன்னர் ஒருபோதும் கிரீடத்தை அணியவில்லை மற்றும் பிற்கால ஊர்வலங்களில் 'குலசேகர' கிரீடத்தை தனது மடியில் வைப்பார். கொச்சிக்கும் வடக்கு பகுதிக்கும் இடையே நடந்த கொச்சி போரில் கொச்சி மன்னர் தனது வெற்றியைக் கவுரவிக்கும் வகையில் தனது ராணுவ வலிமையை வெளிப்படுத்தியதாக மற்றொரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. ஒவ்வொரு ஓணத்தின் போதும் நடைபெறும் அத்தச்சமயம் அணிவகுப்பு, கடந்த கால நினைவுகளை எழுப்புவதுடன், மத ஒற்றுமையின் அடையாளமாகவும் உள்ளது.

    • வல்ல சத்யா என்பது சர்வ வல்லமை உள்ளவருக்கு பிரசாதமாக நடத்தப்படும் ஒரு பெரிய விருந்து.
    • ஆரன்முலா மற்றும் மூர்த்திட்ட கணபதி ஆகிய இரு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    வல்ல சத்யா என்பது சர்வ வல்லமை உள்ளவருக்கு பிரசாதமாக நடத்தப்படும் ஒரு பெரிய விருந்து. அஷ்டமி ரோகினி வல்ல சத்யா ஒரே மாதிரியான விருந்துகளில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது. இந்த நாள் பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஆரண்முலா பார்த்தசாரதி கோவிலில் இதன் ஒரு பகுதியாக பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அன்றைய முதல் சடங்கு பார்த்தசாரதியின் சிலைக்கு சம்பிரதாய ஸ்நானம் கொடுக்கப்பட்டவுடன் தொடங்குகிறது.

    ஆரன்முலா மற்றும் மூர்த்திட்ட கணபதி ஆகிய இரு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. உத்திரட்டாதி படகுப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து 'பள்ளியோடங்களும்' கோவிலில் உள்ள 'மதுக்கடவு'க்கு வந்து சேரும். ஆரன்முலாவில் 50-க்கும் மேற்பட்ட பள்ளியோடங்கள் உள்ளன. இந்த பள்ளியோடங்களுக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    படகோட்டிகள் கோவிலை வட்டமிட்டு, கோயிலின் கிழக்கு நுழைவாயிலை வந்தடைகிறார்கள், அங்கு இறைவனுக்கு 'பரா' வழங்குவது உட்பட சில மத சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன. காலை 11 மணிக்குள் வாழை இலையில் சுவாமிக்கு விருந்து படைக்கப்படும். அதன்பின், கோவிலுக்கு வந்த மக்கள் மற்றும் படகோட்டிகள் அனைவருக்கும் பிரமாண்ட விருந்து அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு வரும் யாரும் விருந்து அனுபவிக்க முடியாமல் திரும்பக்கூடாது என்பது உறுதி.

    விருந்தில் இஞ்சி, கடுமாங்கா, உப்புமா, பச்சடி, கிச்சடி, நாரங்கா, காளான், ஓலன், பரிப்பு, அவியல், சாம்பார், வறுத்த எரிசேரி, ரசம், உரத்தீரு, மோர், நான்கு ரக பிரதமன் என மொத்தம் 36  உணவுகள் பரிமாறப்படுகின்றன. சிப்ஸ், வாழைப்பழம், எள்ளுண்டா, வடை, உன்னியப்பம், கல்கண்டம், வெல்லம், சம்மந்திப்பொடி, சீர தோரன் மற்றும் தகர தோரன். சில சமயங்களில் எண்ணிக்கை 71 ஆக இருக்கும். வெங்காயம் மற்றும் பூண்டு எந்த உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுவதில்லை. விருந்து முடிந்ததும், படகோட்டிகள் திரும்புவார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் இடுக்கி அணையை பார்வையிடலாம்.
    • அணையின் அருகே சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் பொழுதைபோக்க பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    மூணாறு:

    கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையாக இடுக்கி அணை விளங்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இடுக்கி அணையின் துணை அணையாக செருதோணி அணை உள்ளது.

    ஆண்டுதோறும் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் இந்த 2 அணைகளையும் சுற்றுலா பயணிகள் பாா்வையிட அரசு சார்பில் அனுமதி வழங்கப்படும். இதனால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட்டு செல்வார்கள். அதன்படி, இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி இடுக்கி அணையை நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. அதில் வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் இடுக்கி அணையை பார்வையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. அணையை பார்வையிட நுழைவுக் கட்டணமாக முதியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20 வசூல் செய்யப்படுகிறது. அணையின் உள்ளே சுற்றுலா பயணிகள் செல்போன், கேமரா ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். வாரத்தில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட முடியாது. வயது முதிர்ந்தோர் அணையை சுற்றி பார்க்க பேட்டரி கார் இயக்கப்படுகிறது. அந்த காரில் 8 பேர் பயணம் செய்ய ரூ.600 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

    அணையின் அருகே சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் பொழுதைபோக்க பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி இடுக்கி அணையை சுமார் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×