search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றை யானை"

    • யானை ஒன்று வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
    • யானை தாக்கியதில் விவசாயியின் வலது கால் முறிவு ஏற்பட்டுள்ளது .

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தொன்ன குட்டஹள்ளி குட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சின்ன ராஜ். இவரது மகன் செல்வகுமார், இவர் அவருடைய விவசாய நிலத்தில் சுமார் 4 ஏக்கரில் வாழை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அடிக்கடி ஒற்றை யானை ஒன்று அவரது விவசாய நிலத்தில் உள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. அதேபோல் நேற்று இரவு ஒற்றை யானை வாழை தோட்டத்தை சேதப்படுத்தி விட்டு விவசாயி தூங்கி கொண்டிருந்த போது விவசாயியை தாக்கியுள்ளது. அருகிலுள்ள விவசாயிகள் இதனைக் கண்டு சத்த மிட்டத்துடன் பட்டாசுகளை வெடித்து அங்கிருந்து யானையை விரட்டி அடித்தனர்.

    பின்னர் காயம் அடைந்த விவசாயியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கியதில் விவசாயியின் வலது கால் முறிவு ஏற்பட்டுள்ளது .

    இந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
    • சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலை அடிவார பகுதியான இந்திரா நகர், ஐ.ஓ.பி.காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாடி வருகின்றன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

    ஐ.ஓ.பி.காலனி பகுதியில் அந்த யானை நடமாடி கொண்டிருந்தது. அப்போது சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு வந்தனர்.

    அந்த பெண்ணின் கணவர் நுழைவு வாயில் வழியாக வெளியே சென்றார். அப்போது அங்கு சுற்றி திரிந்த யானை திடீரென அவரை தாக்க முயன்றது.

    அவர் அங்கிருந்து ஓடி வீட்டிற்குள் நுழைந்தார். அவருடன் அவரது மனைவியும் உள்ளே ஒடியதால் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இருவரும் காட்டு யானையிடம் இருந்து தப்பியோடிய சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை தொடர்ந்து பாரதியார் பல்லைக்கழக வளாகம் மற்றும் நீச்சல் குளம் பகுதியில் யானை முகாமிட்டிருந்தது.

    இதையடுத்து இரவு முழுவதும் அந்த யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    • யானை அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கும் இங்கும் ஓடியது.
    • குடிநீருக்காக அந்த யானை கடந்து சில நாட்களாக பெரும்பள்ளம் மலைப்பகுதியில் சுற்றி வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உட்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு தண்ணீரை தேடி கிராமத்துக்குள் வருவது தொடர்கதை ஆகிவருகிறது.

    குறிப்பாக கடந்த சில நாட்களாகவே யானை கூட்டங்கள், ஒற்றை யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராமம், செலம்பூர் அம்மன் கோவில் வனப்பகுதியொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று அதிகாலை தண்ணீர் மற்றும் உணவை தேடி வெளியேறிய ஒற்றை காட்டு யானை அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கும் இங்கும் ஓடியது.

    இதை கண்ட விவசாயிகள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.

    இதனால் ஆவேசம் அடைந்த அந்த ஒற்றை யானை ஒவ்வொரு விவசாய தோட்டத்துக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. அங்கு விவசாயிகள் மக்காச்சோளம், முட்டைக்கோஸ் அதிக அளவில் பயிரிட்டு இருந்தனர்.

    அந்த தோட்டத்துக்குள் யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. சுமார் 10 மணி நேரம் அந்த ஒற்றை காட்டு யானை வனத்துறையினர் மற்றும் விவசாயிகளுக்கு போக்கு காட்டி அங்கும் இங்கும் ஓடியது.

    பின்னர் ஒரு வழியாக அந்த ஒற்றை காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர்.

    இதேபோல் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட கொண்டப்ப நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பெரும்பள்ளம் அணை அருகே உள்ள தரிசு நிலங்களில் பகல் நேரங்களில் நடமாடி வருகிறது. உடல் நலம் குன்றியதால் தீவனம் ஏதும் உட்கொள்ளாமல் பகல் நேரங்களில் தரிசு நிலைகளில் சுற்றி வருகிறது.

    இதனால் அந்த பகுதியில் கால்நடைகளை மேய்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடிநீருக்காக அந்த யானை கடந்து சில நாட்களாக பெரும்பள்ளம் மலைப்பகுதியில் சுற்றி வருகிறது. எனவே அந்த பகுதியில் செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அப்பைய்யா யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.
    • தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையை கர்நாடகா மாநில வனப்பகுதியில் விரட்டியக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேடுமுத்துகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்பைய்யா (வயது55). விவசாயியான இவருக்கு நாகம்மா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் அப்பைய்யா இன்று அதிகாலை வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் மின்மோட்டாரை ஆன் செய்வதற்காக சென்றார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த ஒற்றை யானை ஒன்று வேகமாக வந்து அப்பைய்யாவை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சத்தம் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த ஒற்றை யானையை விரட்டினர்.

    பின்னர் காயமடைந்த அப்பைய்யாவை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையே அப்பைய்யா யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன் ஆகியோர் யானை தாக்கி உயிரிழந்த அப்பைய்யாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, ஜவளகிரி வனச்சரகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து அப்பைய்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையை கர்நாடகா மாநில வனப்பகுதியில் விரட்டியக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம்.
    • கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான், போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனை சாவடியில் ஆசனூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. சோதனை சாவடி அருகே வந்த ஒற்றை யானை போலீசார் மற்றும் வனத்துறையினரை தாக்குவது போன்று வந்தது.

    இதை கண்ட போலீசார், வனத்துறையினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதியில் சென்றது. அதன் பின்னரே போலீசார், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர். வாகனங்களும் சென்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது.
    • யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர்.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி உணவு, தண்ணீர் தேடி வனத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.

    கோவை பேரூர் அடுத்துள்ளது வேடப்பட்டி பகுதி. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பகுதிக்கு ஒற்றை காட்டு யானை ஒன்று வந்தது. இந்த யானை அந்த பகுதிகளில் சிறிது நேரம் சுற்றி திரிந்தது.

    பின்னர், பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலைக்கு ஒற்றை யானை வந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள நிர்மல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் யானை புகுந்தது. அங்கு சுற்றி திரிந்த யானை, தோட்டத்தில் இருந்த மாமரத்தை பார்த்ததும் குஷியானது. மரத்தின் அருகே சென்று, மரத்தில் கால்வைத்து தனது துதிக்கையால் மாங்காய்களை ஒவ்வொன்றாக பறித்து, ருசித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து மீண்டும் வேடபட்டி சாலைக்கு சென்றது. தொடர்ந்து அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.

    மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது. இந்த இடத்திற்கு எப்படி யானை வந்தது என்பது மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

    யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர். தோட்ட வேலைக்கு செல்வோரும் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் இந்த பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • ஒற்றை யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது.
    • ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது. இந்த யானை காலை நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்வதும், இரவில் கிராமப்புறங்களில் நுழைந்து விவசாய பயிர்களை அழிப்பதுமாக இருந்து வந்துள்ளது.

    இதனை கடந்த 3 நாட்களாக பாலக்கோடு-காரிமங்கலம் இடையில் உள்ள ஆராதஹள்ளி கூட்ரோடு பகுதியில் உள்ள மலைப் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு காரிமங்கலம் பகுதியை நோக்கி யானை சென்றுள்ளது. அப்பொழுது சவுளுக்கொட்டாய் பகுதிகளில் விவசாய நிலங்களில் நுழைந்துள்ளது. இரவு நேரம் என்பதால், வனத்துறையினரால் யானையினை கண்காணித்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் யானை சென்ற திசை தெரியாமல் வனத்துறையினர் அதே பகுதியில் சுற்றி தேடி வந்தனர்.

    இந்நிலையில் அதிகாலை காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் பகுதியில் பெருமாள் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ என்பவர், அதிகாலை 5.30 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வயல் வழி பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென வந்த யானை ஜெயஸ்ரீயை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்து சுயநினைவின்றி அதே இடத்தில் அவர் விழுந்து கிடந்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து இயற்கை உபாதை கழிக்க சென்ற ஜெயஸ்ரீ நீண்ட நேரமாக வராததால், வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்பொழுது சுய நினைவின்றி படுகாயத்துடன் கிடந்துள்ளார். அதன் அருகில் கரும்பு தோட்டத்தில் ஒற்றை யானை இருந்தது தெரிய வந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர், ஜெயஸ்ரீயை உடனடியாக அந்த இடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். அப்பொழுது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது நுரையீரல் பகுதியில் யானை பலமாக தாக்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெயஸ்ரீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பெருமாள் ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு மூன்று மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் ஒற்றை ஆண் யானை தாக்கியதில், படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெயஸ்ரீ சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மலையடி வாரத்தில் கடந்த 3 மாதமாக ஒற்றை யானை முகாமிட்டு, விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன.

    காட்டு பத்து, மேலகாடு விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, நெல், தென்னை, பனை மரங்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் ஒற்றை யானை மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்தது. வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சுதாரித்து கொண்டு விவசாயிகள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைக்கண்ட யானையும் சற்று பின்வாங்கியது. உடனடியாக விவசாயிகள் உயிரை பணயம் வைத்து பட்டாசுகள் வெடித்தும், சத்தங்கள் எழுப்பியும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ஒற்றை யானை தினசரி விளைநிலங்களில் நுழைகிறது. எங்கள் பயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்துள்ளோம். யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யானையிடமிருந்து பயிர்களையும், உடமைகளையும் காப்பாற்ற முடியாமல் திணறி வருகிறோம்.எனவே அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
    • அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை காட்டு யானை கிராமங்களுக்குள் புகுந்து விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. பல நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை விவசாய தோட்டத்தில் காவலில் இருந்த விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (36). விவசாயி. அதே பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் ராகி பயிரிட்டு இருந்தார். அது அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்த பகுதி வனப்பகுதியையொட்டி இருப்பதால் அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

    இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராமுவும் தினமும் இரவில் தனது விவசாய தோட்டத்தில் காவலில் ஈடுபட்டு வந்தார். அவருடன் அவர் வளர்க்கும் நாயும் இரவு நேரத்தில் அவருடன் காவலில் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ராமு தனது விவசாய தோட்டத்தில் காவலில் இருந்துள்ளார். இன்று அதிகாலை நேரம் ராமு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ராமு ராகி தோட்டத்துக்குள் புகுந்தது. யானை தோட்டத்துக்குள் புகுந்ததை பார்த்த அவரது நாய் குரைத்தது.

    இதைக்கேட்டு திடுக்கிட்டு எழுந்த ராமு யானை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த ஒற்றை காட்டு யானை ராமுவை தாக்கி மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் யானை அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. ராமுவின் நாய் நீண்ட நேரம் குரைத்துக் கொண்டிருந்ததால் அக்கம் பக்கத்தில் காவலில் இருந்த விவசாயிகள் அவர் தோட்டத்துக்கு வந்தனர்.

    அப்போது ராமு யானை தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் ராமுவின் உடலை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ராமு வளர்த்த நாயும் அவர் உடல் அருகே சோகத்துடன் நின்று கொண்டிருந்தது.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனப்பகுதியையொட்டி அமைக்கப்பட்டுள்ள அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானை அங்கிருந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் வனப்பகுதியில் சென்று மறைந்தது.
    • யானைகள் அருகில் சென்று புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்வதற்கு 9 /6 செக்போஸ்ட் வழியாக மலைப்பாதை செல்கிறது. கேரள மாநில எல்லையில் உள்ள மறையூர், காந்தளூர் மற்றும் மலையடிவார கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக காய்கறி, பால், முட்டை, மற்றும் கட்டுமான பொருட்கள், கறிக்கோழி, உள்ளிட்டவற்றை வாங்க இந்த வழியாக உடுமலை நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

    உடுமலை- மூணாறு வழித்தடத்தில் ஏழுமலையான் கோவில், காமனூத்து பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. சமீப காலமாக வனப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்திருப்பதால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வருகின்றன.

    கடந்த ஒரு வாரமாக ஐந்துக்கும் மேற்பட்ட குட்டிகளுடன் 15 காட்டு யானைகள் மலைவழிப் பாதையில் சாலையோரம் முகாமிட்டுள்ளன. கூட்டமாக இருக்கும் காட்டு யானைகள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்யாமல் பாதையை விட்டு ஓரமாக இறங்கி வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன.

    இந்நிலையில் ஒற்றை ஆண் யானை ஒன்று சாலை ஓரமாக உலா வருகிறது. மேலும் உடுமலை தமிழக கேரள எல்லையில் உள்ள சின்னாறு சோதனை சாவடி அருகே வந்து நின்றது. அந்த நேரத்தில் கேரளாவில் இருந்து தமிழக நோக்கி கனரக வாகனம் வந்து கொண்டிருந்தது. பனி மூட்டம் காரணமாக சோதனை சாவடி அருகே காட்டு யானை நிற்பது தெரியாமல் வாகன ஓட்டி முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வந்தார்.

    சரக்கு வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டவுடன் காட்டு யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சோதனை சாவடியை முற்றுகை இட்ட காட்டு யானையை கண்டு வனத்துறை ஊழியர்களும் வாகன ஓட்டிகளும் பீதி அடைந்தனர். இருப்பினும் நல்வாய்ப்பாக யானை அங்கிருந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்காமல் வனப்பகுதியில் சென்று மறைந்தது.

    காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் வாகன ஓட்டிகள் உடுமலையிலிருந்து மூணார் செல்லும் போதும் மூணாறில் இருந்து உடுமலை செல்லும் போதும் யானையை படம் பிடிப்பதற்காக நடுவழியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, "செல்பி" என்ற பெயரில் யானைகள் அருகில் சென்று புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    • தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன் குடிசை, குப்பம்மாள்பட்டி, கேசி.பட்டி, பெரியூர், பார்ச்சலூர், ஆடலூர், பன்றிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் காபி, மிளகு வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். வப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் தாண்டிக்குடி முருகன் கோவில் கடுகுதடி பகுதியில், கடந்த 5 நாட்களாக காட்டு யானை ஒன்று உலா வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை 4:15 மணிக்கு தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது. இந்த காட்சி, போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதன் பிறகு கல்லார் காப்பு காட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    இதனால் பொது மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர். தகவல் அறிந்து வத்தலகுண்டு வனவர் முத்துக்குமரன் தலைமையில் வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தண்ணீர் அருந்த வரும் யானை தொட்டியினை தேடி தாகத்துடன் வரும் யானையை சுற்றுலா பயணிகள் துன்புறுத்துவதால் மிரண்டு பிழியபடி சுற்றுலா பணியை தாக்க முயற்சி செய்கிறது.
    • வனப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை ஒகேனக்கல், பென்னாகரம் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

    பென்னாகரம்,

    கர்நாடக மாநிலங்களில் வறட்சி நிலவும் போது, வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக ஆண்டுதோறும் கர்நாடக தமிழக எல்லை பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளுக்குள் இடம்பெயர்கின்றனர்.

    இந்த நிலையில் இந்தான்டில் ஒகேனக்கல் வனப்பகுதிக்குள் ஒற்றை யானை இடம் பெயர்ந்துள்ளது.

    இந்த யானை வனப்பகுதிகளில் உணவு அருந்திவிட்டு குடிநீருக்காக ஒகேனக்கல்லில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பென்னாகரம் செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் குழாயின் வால்வுகளில் இருந்து வெளியேறப்படும் தண்ணீர் தொட்டியில் காலை மற்றும் மாலை வேளையில் நீர் அருந்துவதற்கு வருகிறது.

    தமிழகத்தின் முதன்மை சுற்றுலா தளமாக ஒகேனக்கல் பகுதிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணமாக உள்ள நிலையில் அடர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானையை சாலை ஓரத்தில் நின்று தண்ணீர் குடிப்பதை கண்டதும் அதன் அருகில் வாகனங்களை நிறுத்துவது, வாகனங்களில் அதிக ஒலியை எழுப்புவது, அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் வனப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தாலும், போதுமான குடிநீர் இல்லாததால் வழக்கமாக தண்ணீர் அருந்த வரும் யானை தொட்டியினை தேடி தாகத்துடன் வரும் யானையை சுற்றுலா பயணிகள் துன்புறுத்துவதால் மிரண்டு பிழியபடி சுற்றுலா பணியை தாக்க முயற்சி செய்கிறது.

    வனப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை ஒகேனக்கல், பென்னாகரம் வனத்துறையினர் கண்காணித்து, காலை மற்றும் மாலை வேளையில் சுற்றுலா வரும் பயணிகளின் துன்புறுத்தல் இன்றி எவ்வித இடையூறுகளும் இல்லாத வகையில், நீர் அருந்திய பின்னர் ஒற்றை யானையை வன பகுதிக்குள் இடையூரின்றி செல்ல சுற்றுலா பயணிகளிடம் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்த வேண்டாம் என வன அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×