என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
    • நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் தியாகராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் 15 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் ஆழி தேரோட்டம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.

    இந்தநிலையில் பங்குனித் திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்வான தியாகராஜர் இடதுபாத தரிசனம் அருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, மகாஅபிசேகம், நடராஜன் அபிசேகம் ஆகியவை நடைபெற்றது. பாத தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்: கருண் கரட் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இன்று பங்குனி உத்திரம்.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-28 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: சதுர்த்தசி நாளை விடியற்காலை 4.12 மணி வரை. பிறகு பவுர்ணமி.

    நட்சத்திரம்: உத்திரம் மாலை 4.11 மணி வரை. பிறகு அஸ்தம்.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பங்குனி உத்திரம். சுபமுகூர்த்த தினம். திருப்புல்லாணி ஸ்ரீஜெகந்நாதப் பெருமாள் ரதோற்சவம். திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் திருக்கல்யாணம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி விடையாற்று. மதுரை சமீபம் சோலைமலை ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பதினாறு வகையான அபிஷேக காட்சி. பழனி ஸ்ரீஆண்டவர் ரதோற்சவம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி பாகம்பிரியாள் வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-நட்பு

    கடகம்-தனம்

    சிம்மம்-அமைதி

    கன்னி-உயர்வு

    துலாம்- மேன்மை

    விருச்சிகம்- போட்டி

    தனுசு- வெற்றி

    மகரம்-செலவு

    கும்பம்-வரவு

    மீனம்-தியாகம்

    • வசந்த உற்சவம் இன்றுமுதல் 3 நாட்கள் நடக்கிறது.
    • நாளை தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் இன்றுமுதல் 3 நாட்கள் நடக்கிறது. கோவிலின் பின்புறம் அமைந்துள்ள வசந்தமண்டபத்தில் வசந்த உற்சவங்கள் இன்று காலை தொடங்கியது. காலை 6.30 மணிக்கு ஏழுமலையான் மாடவீதியில் வீதி உலா நடந்தது.

    வசந்த உற்சவத்தில் 2-வது நாளாக நாளை தங்க தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமதராக ஏழுமலையான் தங்கத்தேரில் எழுந்தருளுகிறார். இதற்கிடையில், வசந்தோற்சவ விழாவையொட்டி 3 நாட்களுக்கு பல்வேறு சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    திருப்பதி கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. நேற்று 62,076 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 23 ஆயிரத்து 699 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபடுங்கள்.
    • சித்திர குப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக் கோவில் உள்ளது.

    ஜோதிட சாஸ்திரத்தில், சந்திரனை 'மனதுகாரகன்' என்பார்கள். அவரை 'மதி' என்றும் குறிப்பிடுவர். அந்த மதி நிறைந்த நன்னாளில் நாம் இறைவழிபாட்டை மேற்கொண்டால், நமது மதிப்பும், மரியாதையும் உயரும்.

    மக்கள் போற்றும் வாழ்வும் அமையும், மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரை மாதம் வரும் பவுர்ணமியை மட்டும், 'சித்ரா பவுர்ணமி' என்று பெயரிட்டு அழைப்பார்கள். சித்திரை மாதத்தில் சூரியன் உச் சம் பெறுவதும், அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியில் சந்திரன் முழுமை அடைவதும்தான் இதற்குக் காரணம்.

    எனவே ராஜ கிரகங்களாக விளங்கும் சூரியனும், சந்திரனும் உச்சம் பெற்றும், பலம் பெற்றும் திகழும் சித்திரை மாதத்திற்கு நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்து சித்ரா பவுர்ணமிக்கு விழா எடுத்தனர். இந்த வருடத்திற்கான சித்ரா பவுர்ணமி தினம், சித்திரை மாதம் 29-ம் நாள் (12.5.2025) திங்கட்கிழமை வருகிறது.


    சோழர்களும் சித்ரா பவுர்ணமி விழாவைக் கொண்டாடினர். மதுரையிலும் சித்ரா பவுர்ணமி விழாக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருள்வார். சொக்கநாதப் பெருமானும், மீனாட்சி அம்மனும் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் வைபவம் நடைபெறும்.

    மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் வருவதன் மூலம் நல்ல வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். கிரிவலத்தின் மூலம் நலம்பெற விரும்புவோர் சித்ரா பவுர்ணமி அன்று இரவு மலை வலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

    அன்றைய தினம் விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபடுங்கள். பாவ புண்ணியங்களை பதிந்துவைப்பவர் சித்ரகுப்தன் ஆவார். அவரை நினைத்து வழிபட்டு 'வருங்காலங் களில் புண்ணியம் அதிகமாக நான் என்ன செய்ய வேண்டும். பாவம் ஏதும் செய்யாமல் இருக்க வழி வகுத்துக் கொடு இறைவா!" என்று பிரார்த்திக்க வேண்டிய நாள் சித்ரா பவுர்ணமி ஆகும்.


    நமது இல்லத்திலேயே முழுமையாக விரதம் இருந்து சித்ரகுப்தனை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் எற்படும். ஆதாயமும், ஆதரவும் கிடைக்கும்.

    செட்டிநாட்டுப் பகுதிகளில் இந்த சித்ரா பவுர்ணமியை சிறப்பாகக் கொண்டாடி, வீடு தோறும் விழா எடுப்பது வழக்கம். பூஜை அறையில் மூல முதற்கடவுளான விநாயகப்பெருமானை மையத்தில் வைத்து, அருகில் வெள்ளி ஏடும், எழுத்தாணியும் வைத்து, 'சித்திர குப்தன் படியளப்பு என்று அதில் எழுதி வைப்பர்.

    சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து, பொங்கல் பொங்கி வடியும் பொழுது சித்ர குப்தனை சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும்.

    சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசி கொழுக்கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை இலையில் பரப்பி வைத்து, பழங்களில் பலாச்சுளை, திராட்சை, மாம்பழம். முழு நுங்கு போன்றவற்றை வைத்துப் படைக்க வேண்டும்.

    அன்றைய தினம் வைக்கும் குழம்பில் தட்டைப்பயிறும், மாங்காயும் சேர்த்து வைப்பது நல்லது. ஜவ்வரிசி பாயசம் வைத்து, அப்பளம் சுட்டு, இளநீர், பானகம் போன்றவற்றை அருகில் பரப்பி எல்லாவற்றிற்கும் நடுவில் கரகம் வைக்க வேண்டும்

    பவுர்ணமி விரதம் இருப்பவர்கள், விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பவுர்ணமிதான். விரதத்தை முழமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இரவு நிலவு பார்த்து வழிபட்ட பின் உணவு அருந்த வேண்டும்.

    நமக்கு எப்பொழுதும் உணவையும், உறைவிடத்தையும், செல்வத்தையும் வழங்குவ தோடு நமது பாவ - புண்ணியத்தையும் பதிந்து வைத்து அடுத்தப் பிறவியிலும் அனுகூலம் தரும் சித்ரகுப்தனை வழிபட்டு செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ள வழிவகுப்பதுதான் இந்தப் பவுர்ணமி வழிபாடாகும்.

    சித்திர குப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக் கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலிலும் தனி சன்னிதி உள்ளது. பிள்ளையார்பட்டி அருகிலும் தனிக் கோவில் உள்ளது. இந்த ஆலயங்களுக்குச் சென்று சித்ர குப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

    • பஞ்சமி திதி என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.
    • விரலி மஞ்சளில் மாலை கட்டி வாராஹி அம்மனுக்கு சாற்றலாம்.

    தேய்பிறை பஞ்சமி அன்று உக்கிர தெய்வங்களான வாராஹி அம்மன், பிரத்தியங்கரா தேவி, மகாகாளி, உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் ஏற்படக்கூடிய இன்னல்களை போக்கும், எதிர்மறையாற்றல், கண் திருஷ்டி, போன்றவை விலகும் என்பதோடு மட்டுமல்லாமல் ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய தோஷங்களையும் போக்கும்.

    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு பிறகு வரும் ஐந்தாவது நாள், தேய்பிறை பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. பஞ்சமி திதி என்பது பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.


    பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் வழிபாடு நிலம் கடன் மற்றும் எதிரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க உதவும். நீண்ட காலமாக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பஞ்சமி அன்று வாராகி அம்மனை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

    ஆலயங்களில் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி அன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் பொதுவாகவே மாலை 6 மணிக்கு மேல் அதாவது சூரிய அஸ்தமனமான பிறகு தான் நடக்கும்.


    வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்று மாதுளை பழம், செவ்வரளி பூக்கள் ஆகியவற்றை அம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கு ஏற்றலாம்.

    ஒற்றைப்படை எண்ணிக்கையில் விரலி மஞ்சளில் மாலை கட்டி, அதை கோவிலில் உள்ள வாராஹி அம்மனுக்கு சாற்றலாம்.

    கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வராகி அம்மன் படத்திற்கு முன்பு, புதிய அகல் விளக்குகளை வாங்கி நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றலாம்.

    வீட்டில் எந்த வழிபாடு செய்தாலும், தீபம் ஏற்றுவதோடு மட்டுமில்லாமல், ஏதேனும் ஒரு உணவை அல்லது இனிப்பை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.

    வாராஹி அம்மனுக்கு அவல், வெல்லம், பானகம், சர்க்கரை பொங்கல், கரும்புச் சாறு, தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மாதுளை, போன்றவற்றை நைவேத்தியமாக வைக்கலாம்.

    • ஆண்டின் தொடக்கத்தில் குரு - சுக்ர பரிவர்த்தனை, யோகம் தரும் விதத்தில் உள்ளது.
    • சனி கும்பத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார்.

    இந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினமானது, சித்திரை மாதம் 1-ந் தேதி (14.4.2025) திங்கட்கிழமை அன்று வருகிறது. இந்த தமிழ் வருடத்தின் பெயர் 'விசுவாவசு' ஆகும். பங்குனி 30-ந் தேதி (13.4.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் இரவு 2.22 மணிக்கு மங்களகரமான விசுவாவசு வருடம் பிறக்கிறது.


    விசுவாவசு ஆண்டின் தொடக்கத்தில் குரு - சுக்ர பரிவர்த்தனை, யோகம் தரும் விதத்தில் உள்ளது. புதன் நீச்சம் பெற்று, உச்சம் பெற்ற சுக்ரனோடு இணைந்து நீச்ச பங்க ராஜயோகத்தை தருகிறார். ராஜகிரகமான சூரியனும், சந்திரனும் சப்தம பார்வையாகப் பார்க்கிறார்கள்.

    சனி கும்பத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். சனி - செவ்வாய் பார்வைக் காலத்திலும், சனி - செவ்வாய் சேர்க்கை காலத்திலும் கவனமாக செயல்பட வேண்டும்.

    ஆண்டின் தொடக்கத்தில் சுக்ரன் உச்சம் பெறுவதால், கலைத்துறை, நாட்டியத்துறை, இசைத்துறை, கல்வித்துறை, விஞ்ஞானத்துறை, ஜவுளித்துறை, ஜோதிடத்துறை, பத்திரிகைத்துறைகளில் வளர்ச்சி ஏற்படும்.

    குருவின் பார்வையால் கன்னி ராசி, விருச்சிக ராசி, மகர ராசி ஆகிய மூன்று ராசிகளும் புனிதமடைகின்றன. 11.5.2025 அன்று குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மிதுன குருவின் சஞ்சாரத்தால் துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் புனிதமடைகின்றன.

    மேற்கண்ட ராசிக்காரர் களுக்கு இந்த ஆண்டு முழுவதும் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். குருபகவான் 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார்.

    ஆண்டின் தொடக்கத்தில் கடக ராசிக்கு அஷ்டமத்துச் சனியும், சிம்ம ராசிக்கு கண்டகச் சனியும். மகர ராசிக்கு பாதச் சனியும், கும்ப ராசிக்கு ஜென்மச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மீன ராசிக்கு விரயச் சனியும் நடைபெறுகிறது.

    வருட கடைசியில் வாக்கிய கணித ரீதியாக 6.3.2026 அன்று சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. அது நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்கள் முன்பாகவே நற்பலன்கள் வரத்தொடங்கும். இருப்பினும் சுய ஜாதக அடிப் படையில் யோக பலம் பெற்ற நாளில் தெய்வ வழிபாடு செய்தால் வரும் விரயங்கள் வாசலோடு நிற்கும்.

    தமிழ் ஆண்டின் தொடக்க நாளில் விநாயகர், சிவன், அம்பிகை, விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி, அனுமன், பைரவர், நவக்கிரகம் மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வம் ஆகியோரை வழிபட்டால், இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையும்.

    • இன்று பிரதோஷம்.
    • பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-27 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி பின்னிரவு 2.33 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: பூரம் பிற்பகல் 2.06 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்த / மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பிரதோஷம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பழனி ஸ்ரீ ஆண்டவர் திருக்கல்யாணம். திருச்சுழி திருமேனிநாதர் ரதோற்சவம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மைசூர் மண்டபம் எழுந்தருளல். திரும்பிலை திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங் களில் மாலை அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-மகிழ்ச்சி

    மிதுனம்-இன்பம்

    கடகம்-சாதனை

    சிம்மம்-மகிழ்ச்சி

    கன்னி-நேர்மை

    துலாம்- தேர்ச்சி

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- ஆசை

    மகரம்-உறுதி

    கும்பம்-நற்செய்தி

    மீனம்-உழைப்பு

    • இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து
    • தேரோட்டம் நாளை மறு நாள் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 6-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருவிழாவின் சிறப்பு அம்சமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நாளை (10-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருஆவினன்குடியில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மறு நாள் 11-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

    பக்தர்கள் தங்கள் கைகளால் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 10-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு கவுண்டரில் அனுமதிக்கப்படுகிறது.

    நாளை முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் வசதிக்காக நெரிசலை தவிர்க்க குடமுழுக்கு நினைவரங்கு வழியாக யானைப்பாதையை இணைத்து ஒரு வழிப்பாதையாகவும், மலைக்கோவிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக படிப்பாதை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்கள் வசதிக்காக கிரி வீதி, குடமுழுக்கு நினைவரங்கு, யானைப்பாதை, இடும்பன் கோவில், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் போதுமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியே நவீன வசதிகளுடன் கூடிய கட்டணமில்லா கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் இரு பாலருக்கும் தனித்தனியாக சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. இடும்பன்குளம், சண்முகாநதியில் பக்தர்கள் நீராடும் போது விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடமாடும் மருத்துவக்குழு வசதி செய்யப்பட்டுள்ளது.

    கிரி வீதியில் 28 பேட்டரி கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பழனி நோக்கி தீர்த்த காவடியுடன் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருச்சுழி திருமேனிநாதர் திருக்கல்யாணம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-26 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி நள்ளிரவு 1.16 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: மகம் நண்பகல் 12.28 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருச்சுழி திருமேனிநாதர் திருக்கல்யாணம். திருக்குற்றாலம் திருக்குற்றாலநாதர் ரதோற்சவம். அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் பூக்குழி விழா. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராமர் திருமஞ்சனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதா ரண்யம் ஸ்ரீ சிவபெருமான் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-உறுதி

    கடகம்-பரிசு

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-நட்பு

    துலாம்- பெருமை

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- திறமை

    மகரம்-இன்பம்

    கும்பம்-நம்பிக்கை

    மீனம்-ஆதரவு

    • கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10-ந் தேதி திருக்கல்யாணம், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா திருஆவினன்குடி கோவிலில் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வருகிற 10-ந் தேதி திருக்கல்யாணமும், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்த வண்ணம் உள்ளனர்.


    குறிப்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து அ திக அளவு பக்தர்கள் வருவதால் கிரிவலப்பாதையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அதிகாலை முதலே தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அவர்களுக்கு மட்டும் மலைக்கோவிலில் ரூ.300 கட்டண தரிசன பாதை வழியாக இலவசமாக சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோவில் சாலை, சன்னதி வீதியில் தேர் உலா வரும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர் வரும் வழியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    பங்குனி உத்திர திருவிழாவுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு அதிக அளவு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழனியில் பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

    பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவார்கள். இதற்காக கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை வாழைப்பழங்கள் இங்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    பழனி அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதியில் சாலையோரங்களில் தற்காலிக வாழைப்பழ கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரத்து குறைவால் விலை அதிகரித்து ஒரு பழம் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பக்தர்கள் மொத்தமாக வாழைப்பழங்களை வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த ஆண்டு வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது 50 டன் வாழைப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது தவிர கோவில் நிர்வாகம் சார்பில் தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்கவும், அனைத்து ஸ்டால்களிலும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    • மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
    • வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான காசி விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மாலையில் சிறப்பு சொற்பொழிவுடன் காசி விஸ்வநாதர் உலகம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலின் உள்பகுதி பிரகாரத்தில் நடைபெற்றது.

    அலங்கரிக்கப்பட்ட நந்தி வாகனத்தில் உலக அம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்ற போது கோவில் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதனைத் தொடர்ந்து உலகம்மன் காசி விஸ்வநாதர் சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து காட்சி அளித்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

    முன்னதாக திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு கோபுர வாயிலின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட அத்த பூக்கோலம் போடப் பட்டிருந்ததை பக்தர்கள் தங்களின் செல்போன்களில் படம் பிடித்து உற்சாக மடைந்தனர்.


    கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்பும் இன்று காலை வரையில் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த னர்.

    அவர்களுக்கு கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் பக்தர்கள் பொதுமக்கள் சார்பில் தங்களின் நன்றியை தெரிவித்தனர். 

    • பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர்.
    • மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், கொங்கு மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒன்றுமாகிய பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, இங்கு வந்து பக்தி பரவ சத்துடன் குண்டம் இறங்கினர்.


    ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர்.

    பிற்பகல் 11 மணிக்கு குண்டம் மூடப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளல், மண்டபக்கட்டளை, மிராசுதாரர்களுக்கு மரியாதை செலுத்துதல், தேங்காய் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

    மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.

    நாளை 9-ந்தேதி முதல் காலை , இரவு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் வீதி உலா, மண்டபக்கட்டளை நடக்கிறது. 12-ந்தேதி காலை 11 மணிக்கு மகாதரிசனம் , அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம், மண்டபக்கட்டளை யுடன் விழா நிறைவடைகிறது.

    ×