என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜெய்ராம் ரமேஷ்"
- அரியானாவில் பா.ஜ.க. வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
- காங்கிரஸ் அங்கு 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
புதுடெல்லி:
அரியானாவில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. அங்கு காங்கிரஸ் 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பவன் கெரா, அரியானா மாநில தேர்தல் பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
தேர்தல் முடிவு எதிர்பார்க்காதது. ஆச்சர்யமாக உள்ளது. கள நிலவரத்திற்கு எதிராக உள்ளது.
அரியானா மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், ஆட்சி மாற்றம் என்ற விருப்பத்திற்கு எதிராகவும் உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தல் முடிவுகளை ஏற்கமுடியாது என்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.
ஓட்டு எண்ணிக்கை குறித்தும், மின்னணு ஓட்டு எந்திரம் செயல்பாடு குறித்தும் 3 மாவட்டங்களில் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
கட்சி நிர்வாகிகளுடன் பேசி உள்ளோம். புகார்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளோம். எங்களது வேட்பாளர்கள் எழுப்பிய கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க உள்ளோம்.
அரியானா தேர்தல் வெற்றி என்பது முறைகேடான வெற்றி. மக்களின் விருப்பத்திற்கு எதிரான வெற்றி. வெளிப்படையான ஜனநாயகத்திற்கு எதிரான வெற்றி.
காஷ்மீரிலும் காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கக் கூடாது என முயற்சி நடந்தது. ஆனால், மக்கள் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர் என தெரிவித்தார்.
- வன்முறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கமிஷன் அமைப்பு.
- ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், அவகாசம் நீட்டிப்பு
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் கடந்த ஆண்டு மே மாதம் 3-ந்தேதி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை உருவாவதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி 3 பேர் கொண்ட கமிஷன் அறிவிக்கப்பட்டது.
இந்த கமிஷன் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் (தகவல் தொடர்பு பொறுப்பு) ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "3 பேர் கொண்ட கமிஷனுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஆறு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த கமிஷனுக்கு நவம்பர் 24-ந்தேதி வரை கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மணிப்பூர் மக்களின் வேதனை தொடர்கிறது.
இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல பிரதமர் மோடி தொடர்ந்து திட்டம் போட்டு வருகின்ற நிலையில், மிகவும் இன்னல்களை சந்தித்து வரும் மாநிலத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹிமான்சு சேகர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோகா பிரபாகர் உள்ளனர்.
- 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை கொடுத்தோம்- அமித் ஷா
- மாநிலங்களவையில் அமித் ஷா சொன்னது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது- ஜெய்ராம் ரமேஷ்
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 29-ந்தேதி நள்ளிரவு கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் சில கிராமங்கள் மண்ணில் புதைந்தன. தற்போது வரை பலி எண்ணிக்கை 340-ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசும்போது, கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு எச்சரிக்கையை செயல்படுத்தவில்லைத் தெரிவித்திருந்தார்.
இதை கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் மறுத்திருந்தார். 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.
அந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியதை மறுத்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் வழங்கிய நோட்டீஸில் "மத்திய அரசின் முன்னெச்சரிக்கை குறித்த மத்திய உள்துறை மந்திரியின் அறிக்கைகள் பொய் என நிரூபிக்கப்பட்டதன் மூலம் ராஜ்யசபாவை தவறாக வழி நடத்தியது தெளிவாகிறது. ஒரு அமைச்சர் அல்லது உறுப்பினர் சபையை தவறாக வழி நடத்துவது சிறப்புரிமையை மீறுவதாகவும், அவையை அவமதிப்பதாகவும் அமைகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அமித் ஷா மாநிலங்களவையில் "நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக ஜூலை 23-ந்தேதி மத்திய அரசு முன்னெச்சரிக்கை கொடுத்தது. ஜூலை 24 மற்றும் 25-ந்தேதி மீண்டும் எச்சரித்தோம். ஜூலை 26-ந்தேதி 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது" என அமித் ஷா தெரிவித்தார்.
- இந்தியாவில் 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதியன்று எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது.
- அன்றைய தினம் அரசியல் சாசன படுகொலை தினமான அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதியன்று எமர்ஜென்சியை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பத்தரிகை குரல் ஒடுக்கப்பட்டது. அன்றைய தினம் இந்தியாவின் கருப்பு நாள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்த நிலையில் ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் ஜூன் 4 மோடி விடுவிப்பு தினம் என பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
10 வருடங்கள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தியிருந்த பிரதமர் மோடிக்கு இந்திய மக்கள் தீர்க்கமான தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை வழங்கிய 2024 ஜூன் 4-ந்தேதி வரலாற்றில் மோடி விடுவிக்கப்பட்ட தினம்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "ஜூன் 25-ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினம் அனுசரிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போடப்பட்டபோது என்ன நடந்தது என்பதை நினைவூட்டுவதாக அமையும்.
காங்கிரசால் இந்திய வரலாற்றின் இருண்ட கட்டத்தை கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் "1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு சர்வாதிகார மனநிலையில் தேசத்தின் மீது அவசர நிலையை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவின் கழுத்தை நெரித்தார். மற்றும் ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை சம்விதான் ஹத்யா திவாஸ் (அரசியல் சாசன படுகொலை தினம்) என்று அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும்" எனத் தெரிவித்துள்ளார்.
- காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் எழுதினார்.
- அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மோடி மீறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பிரதமரின் உரிமை மீறல் மற்றும் சபையை அவமதிக்கும் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கடந்த 2-ம் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி அளித்த பதிலுரையின் போது, '2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மாநிலங்களவையில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. அவைத்தலைவர் எதிர்ப்புறத்திற்கு ஆதரவாக இருந்தது' என்றார். பிரதமரின் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹமீத் அன்சாரியை பிரதமர் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல.
பிரதமர் மோடி செய்ததைப் போல் வேறு எந்தப் பிரதமரும் மக்களவை சபாநாயகரையோ, மாநிலங்களவை அவைத்தலைவரையோ விமர்சித்துப் பேசியது இல்லை.
அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மீறிவிட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்றத்திற்கு வெளியில் ஒருமித்த கருத்துக்கு அழைப்பு விடுத்தார்.
- ஆனால், பாராளுமன்றத்திற்குள் மோதலை தேர்வு செய்தார்.
பிரதமர் மோடி நாடாளுமன்ற மக்களவையில் நேற்றுமுன்தினம் பேசும்போது தற்போதைய காங்கிரஸ் ஒட்டுண்ணி. கூட்டணி கட்சிகளை ஒட்டி வாழும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஒட்டுண்ணி போல உறிஞ்சுகிறது என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கரஸ் கட்சியின் பொதுசெயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் பாஜக-தான் ஒட்டுண்ணி. பிராந்திய கட்சிகளை சாப்பிட்டது என பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில், அதேபோல் மாநிலங்களவை கூட்டத்தொடரில் இரண்டு குறிப்பிட்ட விசயங்களை பார்த்திருக்க முடியும். ஒன்று இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் புதிய, ஆக்ரோஷம், புத்துயிர் பெற்றது.
அதேவேளையில் பிரதமர் மோடியின் அணுகுமுறை மற்றும் நடத்தையில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியாததையும் காண முடிந்தது.
பாராளுமன்றத்திற்கு வெளியில் ஒருமித்த கருத்துக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பாராளுமன்றத்திற்குள் மோதலை தேர்வு செய்தார். அங்கே மாற்றத்திற்கான எந்த ஆதாரங்கள் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் புதிய மற்றும் ஆக்ரோஷம், செயல்பாட்டிற்கான ஆதாரங்கள் இருந்தன.
இது கூட்டணி ஆட்சிக்கான அதிகாரம் என்பதையும், மக்களை அழைத்துச் செல்வதற்கான அதிகாரம் என்பதையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்காத மற்ற அனைத்துக் கட்சிகளின் பேச்சைக் கேட்பதற்கான ஆணை என்பதையும் அரசாங்கம் உணர்ந்து கொள்ளும் என நம்புகிறோம்.
ஒட்டுண்ணி (பாஜக) மட்டுமே அந்த வார்த்தையை பயன்படுத்த முடியும். நீங்கள் ரெக்கார்டுகளை எடுத்து பார்த்தீர்கள் என்றால், எத்தனை பிராந்திய கட்சிகள் பாஜக-வால் சாப்பிடப்பட்டது என்பது தெரியும்.
இன்று பிஜு ஜனதா தளம். காலநிலை மாற்றத்தை பார்க்க முடியும். மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியுடனே அவர்கள் நின்றார்கள். ஆகவே, யாரேனும் ஒட்டுண்ணி என்றால் அது பாஜக-தான்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியை மூன்று முறை தொடர்ந்து மக்கள் நிராகரித்துள்ளனர். 2029-ம் ஆண்டிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும். 543 தொகுதிகளில் 99-ல் வெற்றிபெற்று 100-க்கு 99 தொகுதிகளை வென்றதுபோல் காங்கிரஸ் மக்களை மக்களை ஏமாற்ற பார்க்கிறது. பாஜக கூட்டணி தோற்றதைபோல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது.
13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்கவில்லை. பாஜகவுக்கு நேர் எதிராக நின்ற இடங்களில் 26 சதவீத இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. 1984-க்குப் பிறகு 10 மக்களவை தேர்தலில் ஒருமுறை கூட 250 இடங்கைள தாண்டியது கிடையாது.
தற்போது இருப்பது ஒட்டுண்ணி காங்கிரஸ். கூட்டணி கட்சிகளை ஒட்டி வாழும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஒட்டுண்ணி போல உறிஞ்சுகிறது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோல்வி, வாக்கு வங்கி குறைவு. கூட்டணி கட்சி பலத்தை தன் பலமாக காட்ட முயலும் ஒட்டுண்ணி காங்கிரஸ்.
தமிழகம், பீகாரில் ஜூனியர் பார்ட்னராக தேர்தலை எதிர்கொண்டது. 13 மாநிலங்களில் ஜீரோவான காங்கிரஸ் தன்னை ஹீரோவாக காட்டுகிறது.
- பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாததை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
- விண்வெளி செல்லும் மனிதர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்புள்ளது என்றார் இஸ்ரோ தலைவர்.
புதுடெல்லி:
இந்தியாவின் சார்பில் முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கான சோதனைகள் ஏறத்தாழ அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்திய மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, விண்வெளிக்குச் செல்லும் வீரர்களையும் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.
இதற்கிடையே, மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே பல மாதமாக நீடித்து வரும் மோதல் போக்கால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அங்கு செல்லாததை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரும் 2025-ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்புள்ளது. பிரதமர் மோடிக்கு பல முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. இருந்தாலும், ககன்யான் விண்வெளித் திட்டத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான விண்வெளி வீரர் பயிற்சித் திட்டத்தில் அவர் இணைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாட்டின் தலைவரை நம்பிக்கையுடன் விண்வெளிக்கு அனுப்பும் திறன் என்பது, நாம் அனைவரும் மிகவும் பெருமைப்படக்கூடிய ஒன்று என தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்த செய்தியை தனது எக்ஸ் வலைத்தளத்தில் டேக் செய்தார். மேலும், விண்வெளி செல்வதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்குச் செல்லவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
- பிரதமர் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடியின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு:
ராகுல் காந்தியின் பேச்சை பிரதமர் திரித்து தவறாகப் புரிந்துகொண்ட விதம், அவர் பாராளுமன்றத்தில் பேசாமல் தேர்தல் உரையை நிகழ்த்துவது போல் இருந்தது.
பிரதமர் மோடி மாநிலங்களவைக்கு வந்தபோது காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மல்லிகார்ஜுன கார்கே எழுந்து நின்றபோது அவருக்கு மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பிரதமர் பொய் சொல்லிக்கொண்டே இருந்தார். பிரதமர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 2024 தேர்தல் அவருக்கு தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக இழப்பாகும். அவருக்கு ஆணை கிடைக்கவில்லை.
எனவே நான் 1/3வது பிரதமர் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். அந்த அறிக்கையையும் திரித்து 1/3-வது அரசாங்கத்தை நான் குறிப்பிடுகிறேன் என்று கூறினார். நாயுடு மற்றும் நிதிஷ் இல்லாமல் அவர் பிரதமராக இருந்திருக்க மாட்டார்.
அவர் மூன்றாவது முறையாக பிரதமரானாலும் அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது உண்மைதான் என பதிவிட்டுள்ளார்.
- 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
- பிரதமர் மோடியால் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக முடியவில்லை.
புதுடெல்லி:
கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜ.க.வுக்கு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை(272 இடங்கள்) கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 240 இடங்களை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியது.
அதே சமயம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவு இல்லாமல் மோடி 3-வது முறையாக பிரதமராகி இருக்க முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
240 தொகுதிகளை வைத்துக்கொண்டு மோடி பிரதமராகிறார். ஜவகர்லால் நேரு தொடர்ந்து 3 முறை தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் ஆனார். இருப்பினும் அவர் ஜனநாயகவாதியாகவே இருந்தார். ஆனால் பிரதமர் மோடியால் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக முடியவில்லை.
மோடியின் நயவஞ்சகத்திற்கு அளவே கிடையாது. அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையில் அவரது ஆட்சி இருந்தது. மோடி அரசு முறைகேடான அரசாக இருந்தது. பணம், அதிகாரம், ஊடகம், மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலை பயன்படுத்தி ஆட்சி செய்தார்கள்.
இந்த புதிய அரசாங்கத்தை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக நான் பார்க்கவில்லை, ஏனெனில் மக்களின் தீர்மானம் மோடிக்கு எதிராகவே உள்ளது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.
- பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி நாளை பதவியேற்க உள்ளார்.
தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்ம்படி பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க இதுவரை அழைப்பு வரவில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு சர்வதேச தலைவர்களுக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைவர்களுக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு வரும்போது அது குறித்து சிந்திப்போம் என தெரிவித்தார்.
- எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற அவையின் மொத்த இடங்களில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டாக பல தோல்விகளைச் சந்தித்து வந்தது. இதனால் நாடுமுழுவதும் காங்கிரஸ்காரர்கள் சோர்வில் இருந்தனர்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு அவையின் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில், அதாவது சுமார் 55 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
நடந்து முடிந்த 18-வது பாராளுமன்ற தேர்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது கொடுமையானது என பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
- காபந்து பிரதமருக்கு கண்ணியமும், தார்மீகமும் இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? அவரை மக்கள் மொத்தமாக நிராகரித்தும் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்.
- ஐக்கிய ஜனதாதளம், பீகாருக்கு சிறப்பு நிதிதொகுப்பு வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிப்பதாக கேள்விப்படுகிறோம்.
புதுடெல்லி:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பதவி விலகப்போகும் பிரதமர் மோடி, இப்போது காபந்து பிரதமர் ஆகிவிட்டார். காபந்து பிரதமர், 1962-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஒரே கட்சி 3-வது தடவையாக ஆட்சி அமைப்பதாக மார் தட்டுகிறார். அவர் வரலாற்றை மாற்றி எழுத பார்க்கிறார்.
ஜவகர்லால் நேரு 1952-ம் ஆண்டு 364 தொகுதிகளிலும், 1957-ம் ஆண்டு தேர்தலில் 371 தொகுதிகளிலும், 1962-ம் ஆண்டு தேர்தலில் 361 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். ஆனால் மோடி 2024-ம் ஆண்டில் வெறும் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இது அவருக்கு எதிரான பெரிய தீர்ப்பு. மக்கள் தீர்ப்பை நாசமாக்குவதை நோக்கமாக கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார்.
கடந்த 1989-ம் ஆண்டு தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி 197 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி நினைத்திருந்தால், ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கலாம். ஆனால், அவர் கண்ணியமும், தார்மீகமும் கருதி, அதை செய்யவில்லை.
காபந்து பிரதமருக்கு கண்ணியமும், தார்மீகமும் இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? அவரை மக்கள் மொத்தமாக நிராகரித்தும் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்.
ஐக்கிய ஜனதாதளம், பீகாருக்கு சிறப்பு நிதிதொகுப்பு வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிப்பதாக கேள்விப்படுகிறோம். சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான முந்தைய நிலைப்பாட்டில் மோடி உறுதியாக இருப்பாரா?" என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்