என் மலர்
நீங்கள் தேடியது "ஆடிப்பூரம்"
- எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.
- ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகியவற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம். எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.
காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.
வெற்றிலை அலங்காரம்!
ஆடிப்பூரம் அம்மனுக்கு மட்டுமல்ல வீரபத்திரருக்கும் உண்டு. வீரபத்திரருக்குரிய அலங்காரங்களுள் ஒன்று வெற்றிலையைக் கொண்டு செய்யப்படுகிறது. அதாவது வெற்றிலையை அடுக்கடுக்காக தைத்து மாலை போல் சூட்டுவர். சில ஆலயங்களில் வெற்றிலைக்குள் பாக்கு வைத்து சுருட்டி, அந்தச் சுருளை மாலையாக்கி அணிவிப்பர்.
பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர் தெய்வங்களாக, வெற்றிக் கடவுளாகத் திகழ்ந்தாலும் வீரபத்திரருக்கு மட்டுமே வெற்றிலைப்படல் உற்சவம் உண்டு. ஆடிப்பூரமே அதற்குரிய விசேஷ நாள். அன்று, அனுமந்தபுரம் வீரபத்திரருக்கு 12,800 வெற்றிலைகளால் வெற்றிலைப்படல் அணிவித்து வழிபடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது.
தினந்தோறும் அமாவாசை!
மயிலாடுதுறைக்கு அருகில் சிதலப்பதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு அமாவாசை கோவில் என்று ஓர் ஆலயம் உள்ளது. இதில் மனிதமுக விநாயகர் அருள்கிறார். இக்கோவிலில் முக்தீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்கிறார். இவரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.
சூரியன், சந்திரன் இவ்விருவரும் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே இவர்கள் அருகருகே உள்ளதால், இக்கோவில் முன்பு ஓடும் அரசலாற்றில் தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்யலாம். இதை 'நித்ய அமாவாசை' என்பார்கள். இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் பார்க்கத்தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிராத்தம், தர்ப்பணம் செய்யலாம். சூரிய, சந்திர தீர்த்தங்கள் பிராகாரத்தில் உள்ளது. இங்கு ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசைகள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு சிராத்தம் செய்வது, கயாவில் சிராத்தம் செய்ததற்கு ஒப்பாகும்.
ஆடியில் அவதாரம்!
* ஆடிப்பூரம், உமாதேவிக்கு விசேஷமான நாள். தேவியின் ருது சடங்கு நிகழ்ந்த தினம் என்று புராணம் சொல்வதால், அன்று சிவாலயங்களில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று வளைகாப்பு நடத்துவார்கள்.
* சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார். ஆடி மாதத்தில் தான் சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரை மீண்டும் கயிலைக்கு அழைத்து வர வெள்ளை யானையை அனுப்பியதாக புராணம் கூறுகிறது.
* பட்டினத்தார், ஆடி மாத உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். புகழ்ச்சோழர், பெருமழைக்கதும்பர், சேரமான் பெருமான், கழறிற்றறிவார், கோட்புலியார் போன்ற நாயன்மார்களும் ஆடி மாதத்தில் அவதரித்தவர்கள்தாம்.
- வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை.
- ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.
தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.
மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.
ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.
ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச் சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுவதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.
ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்; தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத்தான் இவை). இதை இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் 'ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.
திருக்குற்றாலத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகும். சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது. 'ஆனி முற்சாரல் ஆடி அடைசாரல்' என்பார்கள். குற்றால அருவி நீரில் மூலிகைச் சத்துகள் கலந்து வருவதால் அது மக்களுக்கு அதிக நன்மை தரும். அதனால் குற்றால அருவி நீராடல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
திருச்சியருகேயுள்ள திருநெடுங்களநாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.
ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்'.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.
சேலம் ஏழுபேட்டைகளில் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷம். ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா. இங்குள்ள அன்னதானப் பட்டியில் ஆடிப் பெருவிழாவின் பொங்கல் படையல், அடுத்த நாளில் குகை வண்டி வேடிக்கை ஒரு சிறப்பான விழாவாகும். அந்த ஒருநாள் மட்டும் வேறு எந்த ஊரிலும் இல்லாத விதமாக செருப்படித் திருவிழா நடக்கும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை வைத்து பூசாரியிடம் தர, அவர் அதை பக்தர்கள் தலையில் மூன்று முறை நீவிவிடுவார். இதுதான் செருப்படித் திருவிழாவாகும். உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். இதற்கு சேத்துமுட்டி விழா என்று பெயர். அடுத்த விழா சத்தாபரண விழா. இப்படி பல விழாக்கள் விதம்விதமான மாங்கனிகள் தரும் சேலத்தில் நடைபெறுகின்றன.
திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சளாடை தரித்து பயபக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். மேல்மருவத்தூர் அம்மன் ஆலயத்திலும் இதுபோல் செய்வார்கள். அவ்வாலயம் வரும் பெண்களை அங்குள்ளோர் சக்தி என்றுதான் அழைப்பார்கள்.
கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நடுவே மகாலட்சுமியும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளிபடும். பகல் 12 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளிபடும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம். ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
- நாகப்பட்டினம் சிவன் கோவில் 64 சக்திப் பீடங்களுள் ஒன்றாகும்.
- ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது.
அம்மனுக்கு வளைகாப்பு:
ஆடிப்பூர தினத்தில் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள்பாலிப்பாள்.
அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது, வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.
அம்பிகைக்கு வளைகாப்பு:
மனம்போல் மாங்கல்ய பாக்கியமும், பேர் சொல்ல பிள்ளை வரமும் பெற்றுத் தரும் திருநாள்தான் ஆடிப்பூரம். அன்று அம்பிகை பூப்பெய்தினாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அவளுக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தருது சாந்தியும் செய்வார்கள்.
திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளைகாப்பு விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் பெண்கள் கலந்து கொண்டு, அம்மனுக்கு படைக்கப்படும் வளையல்களை வாங்கி அணிந்தால் நினைத்த பிரார்த்தனை நிறைவேறும்.
ஆண்டாளுக்கு கள்ளழகரின் பரிசு:
ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும். அந்த தேரோட்டத்தின் போது, மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து அனுப்பப்படும் பட்டுப் புடவையையே ஆண்டாளுக்கு அணிவிப்பார்கள். திருமணத் தடை உள்ள கன்னிப் பெண்கள் ஆடிப்பூரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.
தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்க...:
ஆடித்திருவிழாவின் 7-ம் நாளான இரவு ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்க மன்னார் காட்சி தருவார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள்.
கன்னிப் பெண்களுக்கு தாம்பூலம்:
நாகப்பட்டினம் சிவன் கோவில் 64 சக்திப் பீடங்களுள் ஒன்றாகும். இங்கு கோவில் கொண்டுள்ள நீலாயதாட்சி அம்மன் கன்னி தெய்வமாக அருள்பாலிக்கிறாள். அன்று 9 கன்னிப் பெண்களை அழைத்து வந்து அமர்த்தி, தாம்பூலத்துடன் சீப்பு, குங்குமச் சிமிழ், கண்ணாடி, வளையல், ரவிக்கைத் துணி போன்றவற்றைக் கொடுத்து, மஞ்சள் கயிறும் கொடுப்பார்கள்.
மஞ்சள் கயிறு பிரசாதம்:
ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்து கொள்கிறார்கள். இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர்.
சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசி கொள்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சிலைக்கு அணிவிக்கப்படும் மாலையை வாங்கி பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு அருகில் இருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வருகிறார்கள்.
தொடர்ந்து கிணற்றை எட்டிப் பார்த்து விட்டு பின் மீண்டும் ஆண்டாளை வழிபடுகிறார்கள். இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கோவில் சார்பில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
- ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு பலவித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.
- குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
1. ஆடி பூரத்தன்று அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு பூஜைகள் முடிந்த பிறகு, அந்த வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால் குழந்தைபாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
2. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு பலவித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.
3. ஆடி பூரம் அன்று கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
4. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரியபாளையம்மன் கோவிலில் தான் ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
5. ஆடி பூரத்தன்று கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.
6. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும். சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
7. ஆடி பூரத்தன்று காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.
8. ஆடி பூரத்தன்று மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
9. ஆடி பூரத்தன்று முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகிவிடும்.
10. ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோவில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அம்மன் அமர்ந்திருப்பாள்.
11. ஆடி பூரத்தன்று குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
- 13-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது.
- ஆடிப்பூர விழா 22-ந்தேதி நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடிப்பூர விழா தொடங்குகிறது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதியில் நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேள வாத்தியங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து வருகிற 13-ந்தேதி கொடியேற்றப்பட்டதும், தினசரி காலை, மாலை நேரத்தில் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. முக்கிய விழாவான ஆடிப்பூர விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிக்ஷங்கள் ஏற்படும்.
- அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும்.
ஆடிப் பூரம் ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள். தன் பக்தர்களை குழந்தைகளாக பார்த்தாலும் அம்மனுக்கு ஒரு கவலை இருந்தது. அதாவது திருமணமான எல்லா பெண்களையும் போல தானும் தாய்மை அடையவில்லையே என்று மனம் ஏங்கினாள். முருகனும், விநாயகனும் மற்றும் உன்னுடைய பக்தர்களும் உனக்கு குழந்தைகள்தான் என்று ஈசன், அம்மனை சமாதானம் செய்தாலும் அம்பாள் ஆறுதல் அடையவில்லை. அதனால் புட்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறைமாத கர்ப்பிணியான வடிவத்தில் காட்சி தந்தாள். இதனால் தேவலோக பெண்கள் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அலங்காரம் செய்தார்கள்.
இதனால் அம்மனின் மனம் குளிர்ந்தது. ஸ்ரீமகாவிஷ்ணு, விநாயகர் முன் தோப்புகரணம் போட்டதால் இன்றுவரை விநாயகர் முன் நாம் தோப்புகரணம் போடுவதுபோல, அம்மனுக்கு தேவலோகத்தினர் வளைகாப்பு நடத்தி, வளையல் அணிவித்து அம்மனை மகிழ்வித்ததால் இன்றுவரை அம்பாளின் பக்தர்களாகிய நாமும் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அம்மனின் மனதை சந்தோஷப்படுத்துகிறோம். அதுபோலவே இன்னும் ஒரு சம்பவமும் இருக்கிறது. வளையல் அணியவே புற்றில் இருந்த வெளியே வந்த அம்மன் பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார்.
பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.
அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். "நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்." என்றாள் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள். வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள்.
அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிக்ஷங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும். அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம். இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம். அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைக்கூடும்.
- 15-ந் தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது.
- 21-ந் தேதி ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
4-ம் திருவிழாவான 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் வீதி உலா வருதல் நடக்கின்றது.
21-ந் தேதி மாலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் அம்பாள் சன்னதி முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அன்று அம்பாள் கர்ப்பிணி போல் அலங்கரிக்கப்பட்டு வயிற்றில் முளைகட்டிய பாசிபயிற்றை கட்டி வைத்து அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சீமந்தம் சீர்வரிசைகள் செய்து அனைத்து வகை பலகாரங்களும் படைக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
இதில் கலந்து கொண்டு அம்பாள் மடியில் கட்டப்பட்ட முளைகட்டிய பாசிப்பயிரை வாங்கி சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
- 23-ந் தேதி வரை ஆடிப்பூர உற்சவம் நடைபெறும்.
- 19-ந் தேதி திருத்தேரில் வீதி உலா நடக்கிறது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆடிப்பூர உற்சவம் வருகிற 12-ந் தேதி இரவு தொடங்குகிறது. மறுநாள் காலையில் கொடியேற்றி 23-ந் தேதி வரை ஆடிப்பூர உற்சவம் நடைபெறும். முக்கிய நிகழ்வாக வருகிற 15-ந் தேதி நந்தி வாகனத்தில் திரிபுரசுந்தரி அம்பாள், வேதகிரீஸ்வரர் கோவில் மலைக்குன்று வழியாக கிரிவலம் செல்கிறார்.
19-ந் தேதி திருத்தேரில் வீதி உலா நடக்கிறது. உத்திர நட்சத்திர நாளான 23-ந்தேதி மூலவருக்கு முழு அபிஷேகத்துடன் வழிபாடு, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
- 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது.
- உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், ஆஸ்தானம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் நடக்கிறது. உற்சவ நாட்களில் ஆண்டாளுக்கு காலை திருமஞ்சனம், மாலை ஆஸ்தானம் நடக்கிறது.
22-ந்தேதி ஆண்டாள் சாத்துமுறை, காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஆண்டாளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கோவிந்தராஜசாமி, ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக அலிபிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஆஸ்தானமும், சிறப்புப்பூஜைகளும் நடத்தப்படுகிறது.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்டு ராம் நகர் குடியிருப்பு, கீதா மந்திரம், ஆர்.எஸ்.மாட வீதியில் உள்ள விக்னசாச்சாரியார் கோவில், சின்னஜீயர் மடம் வழியாக கோவிலுக்கு திரும்புகிறார்கள்.
மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.
- ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
- 20-ந்தேதி பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்தாண்டிற்கான உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடி மரம் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு விதமான பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவ கொடியேற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 20-ந்தேதி(வியாழக்கிழமை) பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
- 15-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நடக்கிறது.
- 21-ந் தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 5.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடக்கிறது.
விழாவின் 4-ம் திருநாளான வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, இரவில் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.
வருகிற 21-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.
தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
- அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம்.
- இந்த கோவிலில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம். நான்கு வேதங்களும் பூஜித்த தலம். இங்குள்ள வேதநாயகி அம்மனின் குரல் இனிமையானதா? சரஸ்வதியின் வீணையின் ஒலி இனிமையானதா? என்ற போட்டி ஏற்பட்டது.
அப்போது வீணையின் ஒலியை விட அம்மனின் குரல் இனிமையானதாக இருந்தது. இதனால் இந்த கோவிலில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதற்கான கொடியேற்றம் நேற்று காலை நடந்தது.
முன்னதாக அம்மன் எழுந்தருளி கொடிமரத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள், வேத மந்திரங்கள், தேவார பாடல்கள் பாடி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அம்மன் வீதியுலா காட்சி நடந்தது. இதில் யாழ்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்னம் மற்றும் கோவில் அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.