என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமுக கூட்டணி"
- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வலிமையாக, உறுதியாக உள்ளது.
- அடுத்த தேர்தலிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். அதில் சந்தேகம் வேண்டாம்.
காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வலிமையாக, உறுதியாக உள்ளது. அதனை யாரும் உடைக்க முடியாது. கலைக்க முடியாது.
அடுத்த தேர்தலிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். அதில் சந்தேகம் வேண்டாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும்.
அரசியல் சாசனத்தை திருத்தாமல் அதைப்போன்று ஒரு சட்டம் நிறைவேற்ற முடியாது. இதனை திருத்த ஒவ்வொரு அவையிலும் அதாவது மக்களவை, மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்.
பா.ஜ.க.விற்கு மக்களவையிலும் பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இல்லை. அரசியல் சாசனத்தை திருத்தும் சட்ட மசோதவை கொண்டுவந்தால் அதை நிச்சயம் நாங்கள் தோற்கடிப்போம். ஒரேநாடு ஒரே தேர்தல் நடைபெறாது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- அதிமுக அணி தற்போது பல்வேறு அணியாக பிரிந்துள்ளது.
- திமுக கூட்டணியில் விரிசல் விழாத என அதிமுக, பாஜக துண்டை விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சைக்கு சென்றுள்ளார். அங்கு
தஞ்சை மத்திய மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு அவர்களின் மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் சிறிது நேரம் உரையாற்றினார். அதில் திமுக-வை அழிப்பேன் என்று பலர் கிளம்பி உள்ளனர். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உள்ளனர். இதுதான் நம் எதிரிகளுக்கு எரிச்சலை தருகிறது. தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாம் பெருகின்ற தொடர் வெற்றிதான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை தருகிறது.
அதிமுக அணி தற்போது பல்வேறு அணியாக பிரிந்துள்ளது. இப்படி தனித்தனியாக நிற்கும் அதிமுகவும் யாருமே சீண்டாத பாஜவும், எப்படியாவது திமுக கூட்டணியில் விரிசல் விழாத என துண்டை விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்று நம் தலைவரும் கூட்டணி கட்சி தலைவர்களும் கூறியுள்ளனர்.
2026-ல் கழகம் மீண்டும் வென்றது. கழக தலைவர் 2-வது முறையாக முதலமைச்சர் ஆனார். திமுக 7-வது முறையாக ஆட்சியை அமைக்கிறது என்ற வரலாற்றை உருவாக்குவோம் என கூறினார்.
- முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.
- யார் போராட்டம் நடத்தினாலும் முறையாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: தி.மு.க. அமைச்சர் மீது 400 கோடி ரூபாய் ஊழல் புகார் வெளியாகி இருப்பது குறித்து?
பதில்: முழுமையாக இந்த விபரம் பற்றி தெரியவில்லை. எந்த அமைச்சர்? எந்த துறை? என்ன மாதிரி ஊழல் என தெரிந்தால் தான் அது பற்றி சொல்ல முடியும்.
தி.மு.க. ஆட்சியில் ஒரு துறையில் மட்டுமல்ல பெருபான்மையான துறைகளில் அமைச்சர்கள் மிகப்பெரிய ஊழல் செய்கின்றனர். 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு எந்த எந்த துறைகளில் எல்லாம் ஊழல் நடந்திருக்கிறது என கண்டுபிடித்து வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும்.
கே: சென்னையில் வெள்ளம் நிவாரணம் குறித்த வெள்ளை அறிக்கை கேட்டு இருப்பது பற்றி?
ப: ஏற்கனவே இது பற்றி நான் சொல்லிவிட்டேன். வெள்ள நிவாரணம் குறித்து நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் என்ன என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது குறித்து தெளிவாக அறிக்கை வெளியிட்டோம். சென்னையில் வெள்ள நீர் வேகமாக வடிந்தது. வேகமாக வெளியேற்றப்பட்டது. ஆனால் தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் கொஞ்சம் மழைக்கே தாக்குபிடிக்கவில்லை.
கே: தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை குறித்து?
ப: தி.மு.க. கூட்டணி இன்றைக்கு வலிமையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்போது கம்யூனிஸ்ட்டு கட்சி என்னவாயிற்று? கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. அதுபோல் காங்கிரசில் இருக்கிற திருச்சி வேலுசாமி, தி.மு.க.வினர் போற்றுதலுக்குரிய பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும்போது இப்படியே தொடர்ந்தால் நாங்களும் பேசுவோம் என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார். இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க.விடம் கோரிக்கை வைத்து எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டணி இருக்குமா? இல்லையா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்பான கூட்டணி அ.தி.மு.க. அமைக்கும். பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெறுவோம். நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். மக்களுக்கு விஜய்யும் பொதுசேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் அதன் விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடத்தும் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 36ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றது. யார் போராட்டம் நடத்தினாலும் முறையாக நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி மட்டுமில்லாமல் மற்ற கட்சிகளுக்கும் அனுமதி கொடுப்பதில்லை.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் கனவு கண்டு கொண்டிருக்கிறது எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் அனைவரின் விருப்பம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மக்களுடைய கையில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
- 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி என்றால் அ.தி.மு.க. தான்.
சேலம்:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
நீங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை வீடு வீடாக ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து எடுத்து சொன்னதின் விளைவு 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். அதேபோல் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளில் நாம் வென்றோம்.
இன்றைக்கு துணை முதலமைச்சர் பேசுகிறார். இது பைனல் மேட்ச் இல்ல என அவர் சொன்னார். அடுத்து வரும் தேர்தல்தான் உண்மையான தேர்தல் என்றார். அந்த பைனல் மேட்ச்-ல் நாம் தான் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். விளையாட்டை ஆரம்பிச்சுட்டீங்க. அந்த விளையாட்டு வெற்றியினுடைய கோப்பையை அ.தி.மு.க. தான் பெறும்.
வலிமையான அ.தி.மு.க.வை வேண்டும் என்றே திட்டமிட்டு தி.மு.க. இன்றைக்கு நம்மை வீழ்த்த நினைக்கின்றார்கள். ஒருபோதும் நடக்காது. ஏனென்று சொன்னால் மக்கள் சக்தி எங்களிடம் உள்ளது. அவர்கள் கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். தி.மு.க. பலமில்லை. கூட்டணி பலத்தை தான் தி.மு.க. நம்புகிறது.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் தி.மு.க.வில் நிறைய கூட்டணி கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தி.மு.க.வை பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் மேலே இருக்கிற கூட்டணி கட்சி தலைவர் கையை விட்டால் கடைசியில் இருக்கிற தி.மு.க.வின் கதி என்னாவது? அப்படித்தான் தி.மு.க.வின் நிலை இன்றைக்கு நிலவுகிறது.
கூட்டணி கட்சிகாரர் கைவிட்டால் தி.மு.க. வீழ்ந்து போய் விடும். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. வெற்றி, தோல்வி மாறி மாறி சந்தித்த கட்சி அ.தி.மு.க. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர வெற்றி கிடையாது. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தோல்வி கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வெற்றி, தோல்வி அமைவது இயற்கை. அதை நாம் தமிழகத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
அ.தி.மு.க. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை 11 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. அதில் 7 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருக்கின்றது.
அ.தி.மு.க. எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். 7 சட்டமன்ற தேர்தல்கள் வெற்றி பெற்ற காரணத்தினால் தான் இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பதற்கு அடித்தளம் அமைத்தது அ.தி.மு.க. அரசாங்கம்.
அதுமட்டுமல்ல 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி என்றால் அ.தி.மு.க. தான். 30 ஆண்டு கால ஆட்சியில் அ.தி.மு.க. ஆண்ட காரணத்தில் தான் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்தி அதனால் மக்களுக்கு நன்மை கிடைத்தது. அதனால் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற பெயரை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியது அ.தி.மு.க. அரசாங்கம்.
தி.மு.க. அப்படி ஏதாவது சொல்ல முடியுமா? தி.மு.க. என்றால் ஊழல். ஊழல் என்றால் தி.மு.க. அதுதான் தி.மு.க.வுக்கு அடையாளம். 41 மாத ஆட்சி காலத்தில் என்ன சாதனை செய்தீர்கள்?
அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியும். உயர்ந்த பதவிக்கு தொண்டன் வரக்கூடிய கட்சி அ.தி.மு.க. வேறு எந்த கட்சியிலாவது முடியுமா?. உங்களுடன் கிளை கழக செயலாளராக பணியை தொடங்கி உங்களுடைய பேராதரவினால் படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு கழகத்தின் பொதுச் செயலாளராக உங்கள் முன் நிற்கிறேன் என்று சொன்னால் உங்களுடைய உழைப்பு, ஆதரவு. அத்தனை பேரும் எந்தஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தீர்கள். அதனால் இன்றைக்கு எடப்பாடி தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டையாக, எக்கு கோட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும்.
திருச்சி:
திருச்சி மாவட்டம், திருச்செந்துறை கோவிலுக்கு தமிழக பாஜகவை வழி நடத்தும் குழு ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா வந்தார்.
சாமி தரிசனத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்துள்ளது என்ற ஆளுநரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சோ்ந்து கொள்வதாக முன்னாள் தலைமைச்செயலர் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். இப்போது, பின் வாங்குகின்றனா்.
பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இத்திட்டத்தில் இணைந்தால்தான் மத்திய அரசால் நிதி வழங்க முடியும்.
கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். கோவில் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்த வேண்டும். ஸ்ரீரங்கம் அடிமனைப் பிரச்சனை விவகாரத்தில் அத்தகைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும். தி.மு.க. கூட்டணியில் தற்போது கொந்தளிப்பான சூழல் இருப்பதை காண முடிகிறது. தி.மு.க. கூட்டணியில் எது நடந்தாலும் அது பா.ஜ.க.வுக்கு தேவையற்றது. மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை திட்டங்களையும், பா.ஜ.க. தொண்டர்களையும் நம்பியே நாங்கள் தோ்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து எப்போதும் நான் கருத்து கூறுவது இல்லை என்றார்.
- நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது.
- தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சுமார் 20 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்குபெற்ற தி.மு.க. தற்போதும் கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்திருக்கும் தி.மு.க., மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்காமல், நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது.
'ஒரே வார்த்தையில் அழைத்தோம் மத்திய ராணுவ மந்திரி நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன்? தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய மந்திரிகளை வருந்தி அழைத்து, பா.ஜ.க.வுடன் சமரசம் செய்துகொண்ட ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?
'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையும், 'கல்வி உரிமைச் சட்டம்' (ஆர்.இ.டி.) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென்றும்; தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2019-2024 காலக் கட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்ததுபோல் இல்லாமல், உரத்த குரலில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை போராடிப் பெற வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தி.மு.க.வால் நாங்களும், எங்களால் தி.மு.க.வும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
- சின்ன சின்ன பதவிகளை யாவது எங்களுக்கும் கொடுத்தால்தானே நாங்களும் கட்சியை வளர்க்க முடியும் என்றனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றது. வெற்றி பெற்ற எம்.பி.க்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.
அதற்குள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோம் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுக் குழுவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உசுப்பி விட்டார்.
அதை கேட்டதும் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சூடாகி விட்டார்கள். தி.மு.க. தயவால்தான் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அந்த நன்றியை மறந்து விடக்கூடாது என்றார்கள். இதனால் பொதுக்குழு கூட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.
தி.மு.க. மீது காங்கிரசுக்கு ஏன் இந்த திடீர் ஊடல்? என்பது பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
இதை தி.மு.க.வுடன் ஊடல் என்பதை விட எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஊடல் என்பது தான் சரியாக இருக்கும். காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே இருக்கும் மனக்குமுறல்தான் இது.
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 96 இடங்களை மட்டுமே பிடித்தது. காங்கிரஸ் 34 இடங்களை பிடித்தது. பெரும்பான்மை இல்லாமல் இருந்தும் காங்கிரஸ் தயவில் தி.மு.க. ஆட்சி நடத்தியது. அப்போதும் ஆட்சியில் பங்கு தரவில்லை.
இப்போதும் சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் எங்கள் பலத்தையும் சேர்த்துதான் தி.மு.க. வென்றது. இப்போதும் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.
எந்த மாவட்டத்திலும் எந்த மட்டத்திலும் காங்கிரசாருக்கு உரிய மரியாதையை தி.மு.க.வினர் தரவில்லை.
ஆட்சியில் பங்கு கேட்காவிட்டாலும் 10 வாாரியங்களில் பொறுப்பு தர கேட்டோம். அதிலும் காங்கிரசாரை கண்டு கொள்ளவில்லை.
உள்ளாட்சி தேர்தலிலும் சரியான பங்கீடு கிடைக்க வில்லை. கட்சி மேலிடம் முடிவு செய்யாமல் மாவட்ட அளவில் பேசி முடிக்கும்படி கூறி விட்டார்கள். ஆனால் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எங்களை மதிக்கவில்லை. கொடுத்த இடங்களில் கூட போட்டி வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரசாரை தோற்கடித்தார்கள். இப்படி இருந்தால் காங்கிரசை வளர்ப்பது எப்படி?
கட்சியை இப்படியே கண்டு கொள்ளாமல் விட்டால் ஒரு கட்டத்தில் காங்கிரசை காண முடியாது. எனவேதான் எம்.பி., எம்.எல்.ஏ. பதவி சிலருக்கு கிடைத்து விட்டதால் கட்சி பலவீனப்பட்டு போவதை தலைவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதுதான் தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நாங்கள் 10 வாரியங்கள் கேட்டதில் பீட்டர் அல்போன்சுக்கு மட்டும் தி.மு.க. தன்னிச்சையாக பதவி கொடுத்தது. அறங்காவலர் பதவிகள் கேட்டோம். தரவில்லை. அரசு வக்கீல்கள் பதவி தரவில்லை. வாரிய தலைவர்கள் பதவி விரைவில் முடிய இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலும் விரைவில் வரப்போகிறது.
தி.மு.க.வால் நாங்களும், எங்களால் தி.மு.க.வும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அமைச்சர் பதவிகள் எதையும் நாங்கள் கேட்கவில்லை. சின்ன சின்ன பதவிகளை யாவது எங்களுக்கும் கொடுத்தால்தானே நாங்களும் கட்சியை வளர்க்க முடியும் என்றனர்.
வரப்போகும் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும், காலியாக போகும் வாரிய தலைவர்கள் பதவியிலும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் முரண்டு பிடிப்பதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் மேற்கு மண்டல சட்டமன்ற தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் அதிமுக வாக்கு வங்கி குறைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது
அதிமுக 8 தொகுதிகளிலும் பாமக 3 தொகுதிகளிலும் தேமுதிக 2 தொகுதிகளிலும் மட்டும் தான் அதிக வாக்கு வாங்கியுள்ளது.
எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய 3 தொகுதிகளில் பாமக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
திருமங்கலம், அருப்புக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் தேமுதிக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள பாஜக 1 தொகுத்தியில் கூட அதிக வாக்குகளைப் பெறவில்லை.
கோவை தெற்கு, நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்நிலையில், நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ உள்ள இந்த 4 இடங்களிலும் கூட பாஜகவால் அதிக வாக்குகள் பெற முடியவில்லை.
பாஜக எம்.எல்.ஏ.க்கள் உள்ள தொகுதியிலேயே பாஜக அதிக வாக்குகள் பெறாத நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என அக்கட்சியினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் தற்போது முன்னிலையில் உள்ளது.
- விஜய பிரபாகரனை விட சொற்ப வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் தற்போது முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சொற்ப வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் தனது மகன் விஜய பிரபாகரன் வெற்றிபெற வேண்டி, விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார்.
- பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முடிந்துள்ளது.
- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 33 முதல் 37 இடங்களில் வெற்றி பெறும் என தகவல் வெளியானது.
நியூஸ் 18 கருத்துக் கணிப்பு
தமிழகத்தில் திமுக 20 முதல் 22 இடங்கள் கைப்பற்றும்
காங்கிரஸ் 6-8 இடம்
பாஜக 1-3
அதிமுக 0-2
இந்தியா டுடே
தமிழகத்தில் திமுக 20-22
காங்கிரஸ் 6-8
அ.தி.மு.க. 2
இந்தியா கூட்டணி 33-37
ஏபிபி- சி வோட்டர் (ABP - C Voter)
தி.மு.க. கூட்டணி 37-39
அ.தி.மு.க. 1
பா.ஜ.க. 1
- டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்றார்.
- விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலாவது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வலுவாக இருந்தது. தொகுதிகள் பங்கீடு தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே உடன்பாடானது.
இந்தநிலையில் தேர்தலுக்காகத்தான் கூட்டணி. முதலில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த பாருங்கள் என்று ராகுல்காந்தி கூறி இருக்கிறார்.
இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாவட்ட வாரியாக சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில்தான், கொடுக்கும் நிலையில் இருந்த காங்கிரஸ் இடங்களை கெஞ்சி கேட்டு வாங்கும் நிலையில் உள்ளது. 57 ஆண்டுகளை வீணடித்து விட்டோம் என்று செல்வப் பெருந்தகை கூறினார்
இதுபற்றி தி.மு.க. தரப்பில் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, "காங்கிரசுக்கு புதிய தலைவர்கள் வரும் போது இந்த மாதிரி தங்கள் கருத்துக்களை பேசுவது வழக்கமானதுதான் என்று குறிப்பிட்டார்.
இந்த சூழலில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. நல்லாட்சி நடத்துகிறது. அதுவும் காமராஜர் ஆட்சிதான் என்றார்.
தலைவர்கள் வெளியிட்ட மாறுபட்ட கருத்துக்கள் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்றார்.
இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, தலைவர்கள் மட்டத்தில் இந்த கூட்டணி வலிமையான கூட்டணி. இப்படியே தொடர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதேநேரம் கீழ் மட்டத்தில் தங்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என்ற ஆதங்கமும் நிலவி வருகிறது.
எனவே விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலாவது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்றார்.
- மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.
- இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டனர்.
ராமநாபுரம் பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் மண்டபம் பகுதியில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தபோது பெண்கள் திரண்டு குலவையிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என்று உறுதியளித்தனர். அப்போது வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பேசியதாவது:-
நான் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்தவன். கிராம மக்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவேன்.
கடந்த முறை பொய் வாக்குறுதி கூறி வெற்றிபெற்ற எம்.பி.யை அடையாளம் தெரியுமா, பார்த்திருக்கிறீர்களா? மக்களை ஏமாற்றி ஓட்டுக்களைப் பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்கின்றவர்கள் மீண்டும் ஓட்டுகேட்டு வந்தால் விரட்டி அடியுங்கள். மக்களின் பிரதிநிதிதான் எம்.பி., அதனை மறந்து மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு உங்களிடமே மீண்டும் ஓட்டுகேட்டு வருகிறார். மக்களை ஏமாற்றிய தி.மு.க. கூட்டணிக்கு தக்கபாடம் புகட்ட இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலனில் அதிக கவனம் செலுத்துவேன். இங்கு மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.
கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கும் முன்பு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மீன்பிடி தொழில் நடைபெற்றது. இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டனர். பாராளுமன்ற முதல் கூட்டத்திலேயே தச்சத்தீவு பிரச்சனையை எழுப்புவேன். மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கையாக இருந்தாலும், ஆசிரியர்களின் போராட்டமாக இருந்தாலும் கோரிக்கையை நிறைவேற்ற உடனிருப்பேன். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் இவ்வாறு பேசினர்.
வேட்பாளருடன் ஜெயபெருமாளுடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்