என் மலர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து ராணி"
- ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல லட்சம் மக்கள் திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- இலங்கை வம்சாவளியான 56 வயது வனேசா நாதகுமாரன் என்ற பெண், வரிசையில் முதல் ஆளாய் இடம்பிடிக்க நேற்று முன்தினம் முதல் காத்து நிற்கிறார்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர்.
அங்கு எலிசபெத் என்ற ஒரு பெண் 7 முறை வரிசையில் மணிக்கணிக்கில் காத்துக்கிடந்து ராணியின் உடலுக்கு மீண்டும் மீண்டும் அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "நான் மீண்டும் மீண்டும் வரிசையில் சென்று ராணிக்கு அஞ்சலி செலுத்தினேன். ஏனென்றால் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. நான் என் மரியாதையை இப்படி செலுத்த விரும்பினேன். ஒவ்வொரு முறையும் தேவாலயத்துக்குள் சென்று, ராணிக்கு அஞ்சலி செலுத்தி வார்த்தைக்கு வராத உணர்வை அனுபவித்தேன்" என தெரிவித்தார்.
அங்கு 24 மணி நேர அஞ்சலிக்கு பின்னர் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, எடின்பரோ விமான நிலையத்துக்கு நேற்று எடுத்துச்செல்லப்பட்டது. அங்கிருந்து ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை அவரது மகள் இளவரசி ஆனி விமானப்படையின் விமானத்தில் நேற்று லண்டன் எடுத்துச்சென்றார்.
லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 'பவ்' அறையில் அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று பிற்பகலில் ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.
வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஒரு மேடையில் ராணி உடல் அடங்கிய சவப்பெட்டி வைக்கப்படுகிறது. சவப்பெட்டியின் மீது கிரீடம் மற்றும் செங்கோல் ஆகியவை வைக்கப்படுகின்றன.
இன்று உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி முதல், இறுதிச்சடங்கு நடைபெறுகிற 19-ந்தேதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியை பார்த்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.
ஆனால் விமான நிலைய சோதனை போன்றதொரு சோதனையை கடந்துதான் பொதுமக்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்குள் நுழைய முடியும். சிறிய அளவிலான பைகளை மட்டுமே பொதுமக்கள் எடுத்துச்செல்ல முடியும்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல லட்சம் மக்கள் திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ராணியின் உடல் நேற்று லண்டன் நகருக்கு வந்து சேருவதற்கு முன்பாகவே அங்குள்ள லாம்பேத் பாலம் அருகில் பொதுமக்கள் வந்து குவியத்தொடங்கி விட்டனர். அவர்கள் தொடர்ந்து வரிசையில் காத்து நிற்கிறார்கள்.
இலங்கை வம்சாவளியான 56 வயது வனேசா நாதகுமாரன் என்ற பெண், வரிசையில் முதல் ஆளாய் இடம்பிடிக்க நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) முதல் காத்து நிற்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, "இது ஒரு தனித்துவமான தருணம். வாழ்நாள் நிகழ்வு. காமன்வெல்த் நாடுகளுக்கும், உலகத்துக்கும் மாபெரும் சேவையாற்றிய ராணிக்கு நாங்கள் இப்படி காத்துக்கிடந்து அஞ்சலி செலுத்த விரும்புகிறோம்" என தெரிவித்தார்.
இப்படி பலர் குடும்பம் குடும்பமாய் வந்து கூடாரம் அமைக்காத குறையாய் தேவையான சாப்பாடு, தண்ணீர், அத்தியாவசிய பொருட்களுடன் வந்து காத்துக்கிடக்கின்றனர்.
- 2006-ம் ஆண்டு, தி குயின் என்ற பெயரில் வெளியான திரைப்படத்தில் ஸ்டீபன் பிரியர்ஸ் இயக்கத்தில், ராணியாக ஹெலன் மிர்ரன் நடித்திருந்தார்.
- 2012-ம் ஆண்டு வாக்கிங் தி டாக்ஸ் என்ற சின்னத்திரை படம் வெளியானது. இதில் ராணி எலிசபெத் வேடத்தில் எம்மா தாம்ப்சன் நடித்திருந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் புகழ் கொடி கட்டிப்பறக்கிறது. அவரது வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டும் வகையில் இணையத்தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வெளியாகியது உண்டு.
* தி குரோன் என்ற பெயரில் நெட்பிளிக்ஸ்சில் பீட்டர் மோர்க்கன் உருவாக்கி வெளியிட்ட நிகழ்ச்சி 4 சீசன்கள் தொடர்ந்தது. ராணியின் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியது. இதில் முதல் 2 சீசன்களில் ராணி எலிசபெத் பாத்திரத்தில் கிளாரி போய்யும், எஞ்சிய 2 சீசன்களில் ஆஸ்கார் விருது வென்ற ஒலிவியா கோல்மனும் நடித்து இருந்தனர். 5-வது சீசன் வரும் நவம்பரில் தொடங்குகிறது. இதில் ராணி எலிசபெத்தாக இமெல்டா ஸ்டான்டன் நடிக்கிறார்.
* 2006-ம் ஆண்டு, தி குயின் என்ற பெயரில் வெளியான திரைப்படத்தில் ஸ்டீபன் பிரியர்ஸ் இயக்கத்தில், ராணியாக ஹெலன் மிர்ரன் நடித்திருந்தார். இதில் இளவரசி டயானா மறைவுக்கு பிந்தைய நிகழ்வுகளும் இடம் பிடித்தன. இதில் ஹெலன் மிர்ரனுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
* 2012-ம் ஆண்டு வாக்கிங் தி டாக்ஸ் என்ற சின்னத்திரை படம் வெளியானது. இதில் ராணி எலிசபெத் வேடத்தில் எம்மா தாம்ப்சன் நடித்திருந்தார்.
* 2015-ம் ஆண்டு 'எ ராயல் நைட் அவுட்' என்ற படம் வெளியானது. இதில் ராணி எலிசபெத்தாக கனடா நடிகை சாரா காடன் நடித்திருந்தார்.
பல அரச குடும்பங்களைப் பற்றிய படங்களிலும் ராணி எலிசபெத் பாத்திரம் இடம் பெற்றிருந்தது.
2010-ல் வெளியான தி கிங்ஸ் ஸ்பீச், 2004-ல் சர்ச்சில் தி ஹாலிவுட் இயர்ஸ், 1969-ம் ஆண்டு ராயல் பேமிலி, 2012-ல் தி மெஜஸ்டிக் லைப் ஆப் குயின் எலிசபெத், 2020-ல் எலிசபெத் அண்ட் மார்கரெட்: லவ் அண்ட் ராயல்டி, இந்த ஆண்டும்கூட எலிசபெத் போர்ட்ரெயிட் இன் பாரிஸ் என படங்கள் ராணி கதாபாத்திரத்துடன் வெளிவந்தன. இவையெல்லாமே நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல, திரையிலும் ராணி எலிசபெத் மின்னியதைக் காட்டுகின்றன.
- இளவரசர் வில்லியம், அரியணைக்கான அடுத்த இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
- அரியணை வாரிசுகளாக இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லட், இளவரசர் லூயிஸ், இளவரசர் ஹாரி, ஆர்ச்சி உள்ளனர்.
லண்டன்:
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியரின் மகன் ஆர்ச்சி மவுண்ட் பேட்டனுக்கு இளவரசர் பட்டத்தையும், மகள் லில்லிபெட்டுக்கு இளவரசி பட்டத்தையும் ராணியின் மறைவு கொண்டு வந்து சேர்த்துள்ளது.
இளவரசர் வில்லியம், அரியணைக்கான அடுத்த இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவரைத் தொடர்ந்து அரியணை வாரிசுகளாக இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லட், இளவரசர் லூயிஸ், இளவரசர் ஹாரி, ஆர்ச்சி உள்ளனர்.
- ராணி எலிசபெத் தனது வெள்ளிவிழா, பொன்விழா, வைர விழாக்களை 1977, 2002, 2012 ஆண்டுகளில் கண்டிருக்கிறார்.
- காமன்வெல்த் நாடுகளின் தலைவராக அவரது முகம் 33 நாடுகளின் நாணயங்களில் இடம் பெற்றிருப்பது தனிப்பெரும் சாதனை.
லண்டன்:
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் எண்ணற்ற சாதனைகளை படைத்துவிட்டு, மரணத்தை தழுவி இருக்கிறார். சாதனைகளின் மறுபக்கமாக அவர் விளங்கி இருக்கிறார். அதுபற்றிய ஒரு அலசல்:-
* ராணி இரண்டாம் எலிசபெத் உலகளவில் மிக நீண்டகாலம் ஆட்சி நடத்தி சாதனை படைத்திருக்கிறார். அவர் 1952-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி தொடங்கி 2022 செப்டம்பர் 8-ந் தேதி வரையில் 70 ஆண்டுகள், 214 நாட்கள் அரசாட்சி நடத்தி இருப்பது அபூர்வ சாதனை.
* உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியாக, ஆப்பிரிக்காவின் காலனித்துவ அகற்றம், இங்கிலாந்தின் அதிகாரப்பகிர்வு, ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்குதல் மற்றும் அதில் இருந்து வெளியேறுதல் என பல அரசியல் மாற்றங்களுக்கு தலைமை தாங்கி இருக்கிறார்.
* ராணி எலிசபெத் தனது வெள்ளிவிழா, பொன்விழா, வைர விழாக்களை 1977, 2002, 2012 ஆண்டுகளில் கண்டிருக்கிறார். 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி பவள விழா கண்டது இவர் மட்டும்தான்.
* உலகின் மிகப்பெரிய பணக்கார மகாராணி இவர்தான் இவரது சொத்து மதிப்பு 370 மில்லியன் பவுண்ட், நமது பணமதிப்பில் சுமார் ரூ.3,441 கோடி ஆகும்.
* காமன்வெல்த் நாடுகளின் தலைவராக அவரது முகம் 33 நாடுகளின் நாணயங்களில் இடம் பெற்றிருப்பது தனிப்பெரும் சாதனை.
* ஒன்றுக்கு மேற்பட்ட கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைத்து சாதனை படைத்திருக்கிறார். 1976-ல் மாண்டிரியால் ஒலிம்பிக் போட்டியையும், 2012-ல் லண்டன் ஒலிம்பிக் போட்டியையும் இவர்தான் தொடங்கி வைத்தார்.
* இளவரசர் பிலிப்புடனான ராணி எலிசபெத்தின் திருமண வாழ்க்கை, பிலிப் மரணம் அடைகிற வரையில் 73 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருப்பது சாதனை.
* இங்கிலாந்து மன்னராக சார்லஸ் மகுடம் சூட 70 வருடங்கள், 214 நாட்கள் காக்க வைத்ததும் ஒரு சாதனை.
* வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. எல்லோருக்கும் பாஸ்போர்ட் வழங்கியவர் அவர். ஓட்டுனர் உரிமமும் அவரிடம் கிடையாது.
* ராணி இரண்டாம் எலிசபெத் தனது 89 வயதில் 2015-ம் ஆண்டு தனது வெளிநாட்டு பயணங்களை நிறுத்தும்வரையில், உலகம் முழுவதும் 42 முறை பயணம் செய்திருக்கிறார். மிக நீண்ட வெளிநாட்டு பயணத்தையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். 1953 நவம்பர் முதல் 1954 மே வரையில் 168 நாட்கள் 13 நாடுகளுக்கு தொடர்ந்து பயணம் செய்துள்ளார்.
* ராணி எலிசபெத் மரணம் வரையில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1 கோடியே 11 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்திருப்பதும் சாதனையே.
* 1953-ல் ராணி எலிசபெத் முடிசூட்டிக்கொண்ட ஊர்வலத்தில் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஊர்வலம் 2 மைல் நீளம் கொண்டது. ராணியின் கிரீடத்தில் 1,333 வைரங்கள் பதித்திருப்பதும் சாதனை.
* ராணி எலிசபெத் 600 அறக்கட்டளைகளுக்கும், அமைப்புகளுக்கும் புரவலர்.
* 30 செல்ல நாய்களை ராணி எலிசபெத் வளர்த்திருக்கிறார். 18 வயதில் முதல் செல்ல நாய் சூசனை வைத்திருந்தார்.
சாதனைகளின் மகாராணியாக ராணி இரண்டாம் எலிசபெத் திகழ்ந்திருக்கிறார்.
- ராணி எலிசபெத் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் கார் ஓட்டலாம்.
- சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கவில்லை.
ராணி எலிசபெத் உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் கார் ஓட்டலாம். லைசென்சு தேவையில்லை. பாஸ்போர்ட்டும் தேவையில்லை. ஒரு முறை சவுதி மன்னரை விருந்துக்காக ராணி அழைத்து இருக்கிறார். அப்போது மன்னரை ஏற்றிக்கொண்டு ராணியே கார் ஓட்டி சென்றிருக்கிறார். அவரது எளிமையை பார்த்து சவுதி மன்னரும் வியந்து இருக்கிறார்.
ஆனால் அவர் கார் ஓட்டி சென்றது வேறு காரணத்துக்காக, அப்போது சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கவில்லை. அதை இடித்துரைப்பதற்காக ராணி கார் டிரைவராக செயல்பட்டு இடித்துரைக்கத்தான்.
- இங்கிலாந்து ராணிக்கு ஆண்டுதோறும் இரண்டு பிறந்த நாட்கள் கொண்டாடுவது வழக்கம்.
- இங்கிலாந்து பாராளுமன்றம் அறிமுகப்படுத்தும் புதிய சட்டங்களில், ராணி தான் கையெழுத்திட வேண்டும்.
* இங்கிலாந்து ராணிக்கு ஆண்டுதோறும் இரண்டு பிறந்த நாட்கள் கொண்டாடுவது வழக்கம். ஒன்று அவருடைய உண்மையான பிறந்தநாள். மற்றொன்று அரசு எடுக்கும் விழா. இது ஜூன் மாதம் ஏதாவது ஒரு சனிக்கிழமை கொண்டாடப்படும். அதன்படி, ஜூன் 5, 2021-ல் எளிமையாக கொண்டாடப்பட்டது.
* உண்மையான பிறந்தநாள் அன்று மூன்று இடங்களில் 41, 21, 62 என துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை உண்டு.
* ராணியாக பதவி ஏற்று 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 70 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதை நான்கு நாள் விழாவாக, பக்கிங்ஹாம் அரண்மனை கொண்டாடியது.
* ராணி எலிசபெத்தால் முன் போல், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள இயலவில்லை என்பதால் கடந்த சில ஆண்டுகளாக நேரடி பங்கேற்பை குறைத்துக்கொண்டே வந்தார்.
* அவருடைய மகன் சார்லஸ், ராணியின் பணிகளில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.
* ராணி ஆண்டுக்கு 2,000-த்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். உடல்நலம் குறைந்ததால் திருமண வரவேற்பு, அரச குடும்பத்து நிகழ்வுகள், தோட்ட பார்டிகள் நடக்கும்போது இவற்றில் ராணி சார்பாக அவரது குடும்பத்தினர் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
* காமன்வெல்த் மற்றும் பல நாடுகளில் நடக்கும் தேசிய நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்கள், ராணி சார்பாக குடும்பத்தினர் பங்கேற்பர். குறைந்தது 3,000 பொது நிகழ்ச்சி இயக்கங்களுக்கு தலைவராகவோ அல்லது போஷகராகவோ இருந்தார் ராணி.
* அரண்மனைக்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் கடிதங்கள் வரும். அவை அனைத்துக்கும் ராணி சார்பில் பதில் எழுதி அனுப்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளை அழைத்து, ராணிதான் பரிசு வழங்குவார்.
* ராணியின் அரண்மனையில் அவர் புழக்கத்துக்கென்று, தனி ஏ.டி.எம். உண்டு.
* ராணிக்கென தனியாக கவிஞரை நியமித்துக் கொள்ளலாம்.
* இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தும் புதிய சட்டங்களில், ராணி தான் கையெழுத்திட வேண்டும்.
* மேல் சபையின், லார்ட்ஸ் என்ற கவுரவம் மிக்க பதவிக்கு, வியாபாரம், கலை மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் சாதித்தவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பர். அதற்கு ராணியின் ஒப்புதல் பெற வேண்டும்.
* அரசு அமைக்க, உத்தரவிட ராணிக்கு முழு அதிகாரம் உள்ளது. அதேபோல் கலைக்கவும் முழு அதிகாரம் உண்டு.
* மதத்தின் தலைவி. சர்ச் ஆப் இங்கிலாந்தின் தலைவியான ராணிதான் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டரின்போது தன் வயதுக்கு ஏற்ப சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்பு வெள்ளி காசுகளை வழங்கி கவுரவிப்பார்.
* ராணியை கைது செய்ய முடியாது. வழக்கு போட முடியாது. அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்.
* ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. எந்த நாட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் போகலாம். ஆனால், ராணியின் குடும்பத்தினருக்கு பாஸ்போர்ட் தேவை.
* எதற்கும் வரி கட்ட வேண்டாம். ஆனால் 1992-ம் ஆண்டு முதல் ராணி சொந்த விருப்பத்தின்படி வரி கட்டி வந்தார்.
* தேம்ஸ் நதியில் குறிப்பிட்ட தூரத்திற்குள் நீந்தும் வாத்துகள் அனைத்தும் ராணிக்கு சொந்தம்.
* கடலின் கரையை ஒட்டிய 5 கி.மீ. தூரத்தில் பிடிபடும் கடற்பன்றிகள், உணவுக்கு பயன்படும் பெரிய மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் ராணிக்கு சொந்தமாகும்.
* ஆண்டிகுவா, படுவா, திபகாமாஸ், பார்புடா, பெலிஸ், கனடா, க்ரேனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, பப்பா நியூகயானா, செயின்ட் கீட்ஸ், நெவிஸ், க்ரேனாடைன்ஸ், காலமன் தீவுகள் மற்றும் துவலு நாடுகளுக்கும், எலிசபெத் தான் ராணியாக இருந்தார். இனி அவரது மகன் சார்லஸ் ராஜாவாக இருப்பார்.
- காமராஜரின் மக்கள் சேவையும், எளிமையும் ராணியை வெகுவாக கவர்ந்ததால் மரபை மீறி விருந்து கொடுத்து உபசரித்தார்.
- முதல்முறையாக ராணி எலிசபெத் 1961-ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது பிரதமர் நேருவை சந்தித்தார்.
மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் என்றதும் அந்த மகராசியின் மறையாத நினைவுகளை உலகமே அசைபோடுகிறது.
உலக தலைவர்கள் முதல் நம்மூர் கமல்ஹாசன் வரை பலரது உள்ளங்களில் ராணியாக இருப்பவர்.
இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் நாட்டின் முதல் பிரதமராக நேரு இருந்த போதுதான் அதாவது 1953-ம் ஆண்டு எலிசபெத் ராணியாக முடி சூடினார்.
அந்த விழாவுக்காக நேருவும் சென்றுள்ளார். அந்த விழாவில் தான் நேரு முதல் முறையாக டி.வி.க்கு பேட்டி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பி.பி.சி. தொலைக்காட்சி அவரை பேட்டி எடுத்து ஒளிபரப்பி இருக்கிறது. அந்த பேட்டியில் நேரு கூறியதாவது:-
தொலைக்காட்சியை பற்றி நான் கேள்விப்பட்டதை தவிர அதுகுறித்து கொஞ்சம் தான் தெரியும். மகாராணியின் முடிசூட்டு விழாவுக்கு நான் வந்த போதே விமர்சனம் இருந்தது. திரும்பி செல்லும் போதும் இருக்கும். அதில் சந்தேகம் இல்லை.
ஆனால் அதிக அளவு விமர்சனம் இருக்கும் என்று தோன்றவில்லை. இதுதான் அவரது முதல் தொலைக்காட்சி பேட்டி.
முதல்முறையாக ராணி எலிசபெத் 1961-ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது பிரதமர் நேருவை சந்தித்தார். மேலும் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களுக்கும் வந்தார். ஆக்ராவில் தாஜ்மஹால் அழகை ரசித்தார். ராஜ்கோட்டில் காந்தி நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அழைப்பின் பேரில் குடியரசு தின விழா வில் கலந்துகொண்ட ராணி எலிசபெத் தம்பதிகள் கவுரவிக்கப்பட்டார்கள். அப்போது சென்னையில் தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரையும் சந்தித்தார். அவரது எளிமையும், மக்கள் சேவையும் ராணியை மிகவும் கவர்ந்தது.
சென்னையில் காமராஜர் முன்னிலையிலேயே தனது மகன் ஆண்ட்ரூவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். காமராஜர் இங்கிலாந்து சென்றபோது ராணியின் அரண்மனையில் விருந்து கொடுக்கப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் மரபை மீறி ராணி எலிசபெத்தே காமராஜருக்கு உணவு பரிமாறி இருக்கிறார்.
வழக்கமாக எந்த தலைவருக்கும் ராணி நேரடியாக உணவு பரிமாறுவது கிடையாது. இதுதான் மரபு. ஆனால் காமராஜரின் மக்கள் சேவையும், எளிமையும் ராணியை வெகுவாக கவர்ந்ததால் மரபை மீறி விருந்து கொடுத்து உபசரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது முறையாக இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1983-ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது அன்னை தெரசாவை சந்தித்தார். 3-வதாக ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தபோது 1997-ம் ஆண்டு இந்தியா வந்தார்.
அப்போது சென்னை வந்த ராணி தரமணியில் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் கமல்ஹாசனின் மருதநாயகம் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுமார் 20 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதுமை தொடர்பான உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த ராணி இரண்டாம் எலிசபெத், ஊன்றுகோல் உதவியுடனே நடமாடினார்.
- ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து, அவரது மகனான 73 வயது இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்க உள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்தவர் ராணி இரண்டாம் எலிசபெத்.
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாம் எலிசபெத். முதுமை தொடர்பான உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அவர், ஊன்றுகோல் உதவியுடனே நடமாடினார். இதனால் தனது பயணங்களையும் ரத்து செய்திருந்தார்.
கோடை காலத்தை கழிப்பதற்காக ஸ்காட்லாந்தின் பால்மோரல் பண்ணை வீட்டில் தங்கியிருந்த அவர், அங்கிருந்தவாறே சமீபத்தில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரசையும் நியமனம் செய்தார்.
இந்த நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதுமை தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டுவந்த அவரை பால்மோரல் பண்ணை வீட்டிலேயே டாக்டர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது மகன்களான இளவரசர்கள் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட், மகளும் இளவரசியுமான ஆன் ஆகியோர் பால்மோரல் விரைந்தனர். சார்லசின் மனைவி கமிலாவும் உடன் சென்றார்.
அதைப்போல சார்லசின் மகன் வில்லியமும் தனது பாட்டியை பார்ப்பதற்காக பால்மோரல் சென்றார். அதேநேரம் அவரது மனைவி கேத், தனது 3 குழந்தைகளை பார்ப்பதற்காக கென்சிங்டன் அரண்மனையிலேயே தங்கினார்.
ராணியின் உடல்நலக்குறைவுக்கு கவலை வெளியிட்ட இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ், தனது எண்ணங்கள் அனைத்தும் ராணி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றியே இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உயிர் அமைதியாக பிரிந்தது. அந்த தகவலை லண்டன் பக்கிங்காம் அரண்மனை உறுதி செய்தது.
தகவல் அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கொட்டும் மழையிலும் ஏராளமானோர் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் கடந்த 6-ந்தேதி பால்மோரல் அரண்மனையில் ராணி எலிசபெத்தை சந்தித்து தான் பிரதமராக தேர்வு பெற்றதை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரை இங்கிலாந்து பிரதமராக ராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார்.
வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது இங்கிலாந்து ராணியாக பதவி ஏற்ற ராணி எலிசபெத், தனது பதவி காலத்தில் 17 பிரதமர்களை சந்தித்தவர் என்ற பெருமை பெற்றவர்.
இங்கிலாந்து ராணி மறைவுக்கு அந்நாட்டு பிரதமர் லிஸ் டிரஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து, அவரது மகனான 73 வயது இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்க உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- இங்கிலாந்து மகாராணி எலிசெபத் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
- அவரது மறைவுக்கு பிரதம்ர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.
ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார்.
இங்கிலாந்து மகாராணியின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து மகாராணியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இங்கிலாந்து மகாராணி நம் காலத்தின் தலைசிறந்த வீராங்கனையாக நினைவு கூரப்படுவார். அவர் தனது தேசத்திற்கும் மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கினார். பொது வாழ்வில் கண்ணியத்தை வெளிப்படுத்தினார் என பதிவிட்டுள்ளார்.
- இங்கிலாந்து மகாராணி எலிசெபத் (96) இன்று காலமானார்.
- அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லண்டன்:
இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார்.
இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.