search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியேட்டர்"

    • தியேட்டர் வளாகத்திற்குள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
    • மேலப்பாளையம் பகுதியில் உள்ள தெருக்கள் வழியாக தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. இந்த தியேட்டரில் நேற்று முன்தினம் இரவு காட்சி முடிந்த பின்னர் ரசிகர்கள் வெளியேறிவிட்டனர். தியேட்டர் ஊழியர்கள் அங்கு பணியில் இருந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் 2 பேர் தியேட்டர் வளாகத்திற்குள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து மேலப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சி.சி.டி.வி. காட்சி மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. நேற்று தியேட்டர் அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை தவிர சந்தை முக்கு ரவுண்டானா, குறிச்சி முக்கு செல்லும் மெயின் ரோட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களையும் தனிப்படையினர் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் அந்த நபர்கள் சென்ற காட்சிகள் இல்லை. அதேநேரம் பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் ஒரு வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த நிலையில், ஒருவர் மோட்டார் சைக்கிளை தயார் நிலையில் வைத்துக் கொண்டு நின்றுள்ளார். மற்ற 2 பேரும் பெட்ரோல் குண்டுகளை தியேட்டரில் வீசிவிட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த கும்பல் மெயின்ரோட்டின் வழியாக தப்பித்து சென்றால் சி.சி.டி.வி. கேமராக்களில் சிக்கி கொள்வோம் என்பதை அறிந்தே மேலப்பாளையம் பகுதியில் உள்ள தெருக்கள் வழியாக தப்பி சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    நேற்று இரவு வரை சுமார் 25-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து முடித்துள்ளனர். மெயின் சாலைகளில் அந்த கும்பல் வரவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் இன்று அந்த பகுதியில் உள்ள தெருக்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். ஏற்கனவே அமரன் திரைப்படம் வெளியானபோது அலங்கார் தியேட்டரிலும் பல்வேறு அமைப்பினர் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் நேற்று நெல்லை வந்து முகாமிட்டுள்ளனர்.

    அவர்கள் நேற்று சம்பவம் நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பிரிவின் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் இன்று 2-வது நாளாக தீவிரவாத அமைப்புகள் ஏதேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    • தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டாக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்தன.
    • மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

    ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து அமரன் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானாவில் உள்ள அலங்கார் தியேட்டருக்கு நேற்று நள்ளிரவு 2.30 மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தியேட்டருக்கு வெளியில் நின்றபடியே தியேட்டர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். அடுத்தடுத்து வீசப்பட்ட 3 பெட்ரோல் குண்டுகளும் தியேட்டர் வளாகத்தில் விழுந்து 'டமார்' என்கிற பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் தியேட்டர் வளாகத்தில் தீப்பிளம்பு எழுந்தது. பெட்ரோல் குண்டுகள் விழுந்த இடம் தீப்பற்றி எரிந்தது.

    இதையடுத்து தியேட்டரில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று பார்த்தனர். வளாகத்தில் தீ பற்றிய இடத்தை அவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் தியேட்டரில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் மேலப்பாளையம் போலீசார் தியேட்டருக்கு விரைந்து சென்றனர். நெல்லை போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார், உதவி கமிஷனர் சரவணன், மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோரும் விரைந்து சென்று தியேட்டர் ஊழியர்களிடம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பற்றி கேட்டறிந்தனர்.

    தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டாக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடந்தன. அவைகளை போலீசார் தடயங்களாக சேகரித்தனர்.

    பின்னர் பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர்கள் யார் என்பதை கண்டு பிடிப்பதற்காக அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து ஆய்வு செய்தனர். தியேட்டருக்கு வெளியில் இருந்த ஒரு சி.சி.டி.வி. கேமராவில் 2 பேர் பெட்ரோல் குண்டுகளுடன் வந்து அதில் தீ வைத்து கொளுத்தி தியேட்டர் மீது வீசும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார் அவர்கள் யார்? என்பது பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    பெட்ரோல் குண்டு வீச்சில் இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    அவர்கள் பீர் பாட்டில்களை பெட்ரோல் குண்டுகளாக மாற்றி வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. 2 குண்டுகள் தியேட்டர் வளாகத்திற்குள் வீசப்பட்ட நிலையில் 3-வது குண்டு தவறி கீழே விழுந்து தீ பிடித்த காட்சிகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.

    மர்ம நபர்கள் இருவரும் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தலைமறைவாகி இருக்கிறார்கள். அவர்களை கைது செய்து இருவரின் பின்னணி பற்றியும் முழுமையாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த தியேட்டரில் அமரன் படம் வெளியிடப்பட்ட போதே பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடந்த வாரம் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இயல்பு நிலை திரும்பி இருந்தது. அதை பயன்படுத்தி மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்று உள்ளனர்.

    இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம்

    சினிமாவை அதிகம் விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக பி.வி.ஆர் பாஸ்போர்ட் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பி.வி.ஆர் பாஸ்போர்ட்டின் மூலம் மக்கள் மாதத்திற்கு 4 படங்கள் பார்க்கலாம். திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே இது செல்லுபடியாகும். வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் வைத்து படம் பார்க்க முடியாது.

    ஒரு நாளுக்கு ஒரு படம் மட்டுமே பார்க்க முடியும். ஒரு படத்தை 2 தடவைக்கு மேலாக பார்க்க முடியாது. பி.வி.ஆர் பாஸ்போர்ட் A-விற்கு மாதம் சந்தாவா 349 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு மாததிற்குள் 4 படம் பார்க்க முடியும். இல்லை என்றால் இது அடுத்த மாதத்திற்கு செல்லுபடி ஆகாது.

    பாஸ்போர்டின் இரண்டாம் B வகை மாதம் சந்தா ரூ.1047 செலுத்த வேண்டும். இதில், 90 நாட்கள் வரை உபயோகிக்கலாம். 90 நாட்களில் 12 படங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

    திங்களில் இருந்து வியாழக்கிழமை வரை மட்டுமே இதை உபயோகிக்க முடியும். வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமையில் புதுபடங்கள் வெளிவருவதால் மக்கள் அந்நாட்களில் பணம் கொடுத்துதான் பார்க்க வேண்டும்.

    பி.வி.ஆர் பாஸ்போர்ட்டை உபயோகித்து படம் பார்த்தால் ஒரு டிக்கெட்டின் விலை 87 ஆகவும், டிக்கெட்டுடன் சேர்ந்து கன்வீனியன்ஸ் ஃபீ செலுத்தி நாம் டிக்கெட்டுகளைப் பெறலாம். ஆன்லைனில் மட்டுமே பாஸ்போர்ட்டை வைத்து டிக்கெட் பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

    பிவிஆர் பாஸ்போர்ட் ஏற்கனவே ஐதராபாத்தில் நடைமுறையில் உள்ளது. இப்போது, தெலுங்கானா, தமிழகத்திலும், கேரளத்திலும் அமலுக்கு வந்து இருக்கிறது. ரசிகர்களுக்கு மத்தியில் பி.வி.ஆர் பாஸ்போர்ட் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
    • பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

    உலகின் மிக நீளமான பிரமாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ராயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. 6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் இருக்கிறது. 3 தியேட்டர்கள், 40 ஓட்டல்கள், பார்கள் இருக்கின்றன.

    இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 10 ஆயிரம் பேருடன் இந்த பிரமாண்ட கப்பல் தனி உலகமாக கடலில் உலா வரும். இந்த கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது.

    • விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
    • விளக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் யூனியன் மில் மெயின் ரோட்டில் பிரபல தியேட்டர் ஒன்று உள்ளது. இங்கு தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவின் அடிப்படையில் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், வருவாய் அதிகாரி தேவி, கிராம நிர்வாக அதிகாரி விஜயராஜ் ஆகியோர் தியேட்டரில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக காலை 7.10, 7.25, 8.10, 8.25 என 6 காட்சிகள் வெளியிட்டு இருப்பது தெரியவந்தது.

    விசாரணைக்கு பின் இது தொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக திரையிட ப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டுள்ளது .அந்த விளக்க த்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    • ஆவேசமாக கூச்சல் போட்டும் இடையூறு செய்து கொண்டிருந்தனர்.
    • தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரனின் மகன், பேரன் உள்பட குடும்பத்தினர் தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தியேட்டருக்கு நேற்று இரவு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்-2 என்ற படம் பார்க்க சென்றுள்ளார்கள்.

    இரவு 10.50 மணிக்கு காட்சி தொடங்கியது. படம் ஓடிக் கொண்டிருந்த போது அவர்களுக்கு பின் இருக்கையில் அமர்ந்து இருந்த 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் காட்சிகளை பார்த்து விசில் அடித்தும், ஆவேசமாக கூச்சல் போட்டும் இடையூறு செய்து கொண்டிருந்தனர். உடனே அமைச்சரின் குடும்பத்தினர் அவர்களிடம் அமைதியாக இருங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

    இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று அமைச்சரின் மகன் ரமேஷ் (50) பேரன் கதிர் ஆகியோர் மீது தாக்கி இருக்கிறார்கள். இதனால் கதிருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

    உடனே தியேட்டர் நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். அந்த தருணத்தை பயன்படுத்தி அவர்கள் 6 பேரும் தியேட்டரில் இருந்து தப்பி சென்றுவிட்டார்கள்.

    காயம் அடைந்த கதிர் உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதிகாலை 4 மணியளவில் அவர் வீடு திரும்பினார்.

    இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட 8 சதவீத வட்டார வரியை ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் எம்.ஓ. சாகுல் ஹமீது, இணைச் செயலாளர் தாமஸ், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் பேசினர்.

    கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நடிகர்-நடிகைகளின் சம்பள உயர்வால் தமிழ் படங்களின் விலை அபரி தமாக உயர்ந்துள்ளது. எனவே சம்பளத்தை குறைக்க வேண்டும்.

    திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்டிருக்கும் 8 சதவீத வட்டார வரி விதிப்பு முழுவதும் ரத்து செய்ய வேண்டும்.

    திரையரங்கு உரிமையாளர்கள்-விநியோகஸ்தர்கள் ஒருங்கிணைந்து கூட்டு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தியேட்டரை துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா திறந்து வைத்தார்.
    • மல்டிபிளக்சின் 3 தியேட்டர்களில் மொத்தம் 520 இருக்கைகள் உள்ளன.

    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் 13 தியேட்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில், பயங்கரவாதம் அவற்றுக்கு மூடுவிழா நடத்தியது. காஷ்மீரில் சினிமாவை திரையிடக்கூடாது என்று 1989-ம் ஆண்டு ஒரு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்ததால் தியேட்டர்கள் இழுத்து பூட்டப்பட்டன.

    கடந்த 1999-ம் ஆண்டு காஷ்மீர் அரசின் ஆதரவுடன் ஸ்ரீநகரில் மீண்டும் 3 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் சினிமா பார்க்க தியேட்டர் சென்ற ஒரு ரசிகர், பயங்கரவாதிகளின் கையெறி குண்டுவீச்சில் கொல்லப்பட்டதால் உடனடியாக மீண்டும் அவற்றுக்கு பூட்டு போடப்பட்டது.

    இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீநகரின் சோனாவார் பகுதியில் முதல் தியேட்டரை துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா நேற்று திறந்துவைத்தார். இந்த மல்டிபிளக்சின் 3 தியேட்டர்களில் மொத்தம் 520 இருக்கைகள் உள்ளன. இந்த மல்டிபிளக்ஸ் வளாகத்தை தார் குடும்பத்தினர், ஐநாக்ஸ் குழுமத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளனர். மல்டிபிளக்ஸ் திறப்புவிழாவின்போது பேசிய துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா, இதன் மூலம் காஷ்மீரின் சாதாரண மக்களுக்கும் பொழுதுபோக்கு வசதி கிடைக்கிறது. காஷ்மீரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 100 இருக்கைகள் கொண்ட தியேட்டர்கள் திறக்கப்படும். காஷ்மீரில் திரைப்பட நகரம் ஒன்றும் அமைக்கப்படும் என்றார்.

    புதிய மல்டிபிளக்சில் முதல் நாளில் சிறப்பு காட்சியாக அமீர்கான், கரீனா கபூர் கான் நடித்த 'லால் சிங் சத்தா' படம் திரையிடப்பட்டது.

    • இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார்.
    • சினிமா திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என சினிமா சங்கம் அறிவித்துள்ளது.

    இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.

    ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும், அமெரிக்க அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் தனி விமானத்தில் புறப்பட்ட அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றடைந்தார். இதேபோல், இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார்.

    ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ள நிலையில், பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் சடங்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகள் மட்டுமின்றி பூங்காக்கள், சதுரங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் சடங்கு நிகழ்வுக்கான காட்சிகளை காண்பிக்க திரைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என சினிமா சங்கம் அறிவித்துள்ளது.

    வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை மூலம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்படும் என்று கலாச்சாரத் துறை அறிவித்துள்ளது.

    1997-ல் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்குகள், 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் அரச திருமணங்கள் உள்பட சமீபத்திய பிரிட்டிஷ் வரலாற்றின் பிற முக்கிய நிகழ்வுகளை விட கூட்டம் அதிகம் இருக்கும் எனவும் இறுதிச்சடங்கிற்கு அரசாங்கம் பொது விடுமுறையை அறிவித்துள்ளது.

    • திரைப்படம் பாா்ப்பதற்காக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்திருந்தாா்.
    • மது அருந்தியதாகக் கூறி மனைவி, மகளை திரையரங்குக்குள் செல்ல விடாமல் ஊழியா்கள் திருப்பி அனுப்பியுள்ளனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள மகாலட்சுமி அபாா்ட்மெண்டில் வசித்து வருபவா் செல்வநாயகம். இவா் திருப்பூா் காட்டன் மில் சாலையில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பாா்ப்பதற்காக ஆன்லைன் மூலமாக ரூ.289.20 செலுத்தி 2019 ம் ஆண்டு நவம்பா் மாதம் முன்பதிவு செய்திருந்தாா்.

    அதன் பின்னா் தனது மனைவி, மகளுடன் திரையரங்குக்குச் சென்றபோது, அவா் மது அருந்தியதாகக் கூறி அவரது மனைவி, மகளை திரையரங்குக்குள் செல்ல விடாமல் ஊழியா்கள் திருப்பி அனுப்பியுள்ளனா்.மேலும், டிக்கெட் தொகைக்கு உண்டான தொகையையும் அவருக்கு வழங்கவில்லை.இது குறித்து திருப்பூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் செல்வநாயகம் வழக்குத் தொடுத்திருந்தாா்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திரையரங்க உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது.மேலும் வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் மற்றும் டிக்கெட் தொகையான ரூ.289.20 ஆகியவற்றை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி தீபா, உறுப்பினா்கள் பாஸ்கா், ராஜேந்திரன் ஆகியோா் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

    ×